கால் மணி நேரத்தில் தமிழகத்தை வலம் வந்தோம்
பைம்பொழில்களும், தெப்பக்குளங்களும், பஞ்சா யத்து திண்ணையும், பட்டாடையுடுத்தி ஒளி விளக்காய்க் காட்சியளித்த கன்னியும் நம்மை தமிழகத்துக்கே அழைத்துச் செல்கின்றன. 'எங்கே?' என்கிறீர்களா? இந்திய பண்பாட்டையும் கலாச் சாரத்தையும் மெருகூட்டி வளர்த்துவரும் சன்னிவேல் கோயிலில் தான். விரிகுடாப்பகுதித் தமிழ் மன்றம், அண்மையில் கோலாகலம் மிகுந்த இந்த புரட்டாசி மாதத்தில், தாயகத்திலிருந்து தொலை தூரத்தில் உள்ள தமிழ் நெஞ்சங்களின் நினைவை ஒரு போட்டியின் மூலம் உசுப்பியது - போட்டியின் தலைப்பு - 'தமிழ் பண்பாடு'. போட்டியில் பங்கேற்போர், தலைப்பிற்கேற்ப தமிழ் பண்பாட்டை வெளிக்காட்டும் வகையில், கலைத்திறனையும், கற்பனைவளத்தையும் கூட்டி காட்சிப் பொருட்களை 4 x 4 சதுர அடி அளவுள்ள இடத்தில் அமைக்க வேண்டும். இப்போட்டி, குழுவாய்க்கூடி ஒருங்கிணைந்து பணி செயும் திறனை வெளியிடுவதாயும் அமைந்திருந்தது.

இப்போட்டியில் நான்கு குழுக்கள் பங்கேற்றன. முதற்குழு, 'திருவிழா' எனும் தலைப்பைத் தேர்ந்தெடுத்து, மலை, கோயில், முருகன், யானை, கரகாட்டம், பொய்க்கால் குதிரை, காவடி, தோகை மயில், அய்யனார், தமிழருக்கே உண்டான விருந்தோம்பல், பொங்கல் பானை ஆகியவற்றைக் கொண்டு கோலாகலக் காட்சியொன்றை வழங்கியது. மலையும் அதன்மேற்கண்ட செங்கல் தரையும், மலையின் மேல் செல்லும் படிகளும், தமிழர்களுக்கு இயற்கை கண்ட இடமெல்லாம் ஆலயம் தான் என விளக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்தக் குழுவில் பங்கேற்றவர்கள், மாலா பத்மநாபன், சுஜாதா கோபாலன்.

இரண்டாம் குழு எடுத்துக் கொண்ட தலைப்பு 'பொங்கல் பண்டிகை' - தைப் பிறந்ததும் அறுவடை செய்து மூட்டையை சந்தைக்கு வண்டியில் எடுத்துச்செல்லும் தம்பதியினர், பண்டிகைக் காலத்திற்கே உரிய பூ, மற்றும் இதர பொருட்களை விநியோகிக்கும் சந்தை, தெப்பக்குளம், கோயில் ஏர் உழவன், பஞ்சாயத்துத் திண்ணை, ஆரம்பப் பள்ளி இவற்றோடு பொங்கல் பானையில் பொங்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் பிரதிபலிக்கும் பொங்கல் விழாவை நம்முன் வரவழைத்து விட்டனர். இந்தக் குழுவின் உறுப்பினர்கள் கோமதி சங்கர், சத்யா பாஸ்கர், ஜெயந்தி செல்வகுமார், மற்றும் லதா அழகப்பன்.

மூன்றாம் குழு, பொழில்களும், மலையும் குளமும் கொண்ட ஒரு கிராமத்தினை மிக நுட்பமாக அமைத்துள்ளனர். அம்மியும், குழவியும், ஆட்டுக்கல்லும் இக்கால சிறார்களும் கண்டு வியக்கும் வகையில் அழகாய் காட்டப்பெற்றன. அழகிய அந்த கிராமக் குடிசையின் மேல் சேவல் கூவ, ஆசிரியர் தம் மிதி வண்டியை பள்ளியின் வாயிலில் நிறுத்தியிருக்க, ஆசிரியை, 'அம்மா, ஆடு, இலை, ஈ' கற்பிக்க, ஆடும் மாடும் இதமாய் ஒரே தொட்டியினின்று நீர் அருந்த இதமான அந்த கிராமத்திற்குச் செல்ல மனதில் ஏக்கம் ஏற்படுகின்றது. இந்தக் குழுவின் அங்கத்தினர்கள் லாவன்யா தனபால், மற்றும் ரமா ரமேஷ்.

குத்துவிளக்குப் போன்று பிரகாசிக்கும் பெண் என்று, விளக்கை பெண்ணுக்கு உவமானமாகச் சொல்லக் கேட்டிருப்பீர். விளக்கே பெண்ணென நீல ரவிக்கையும், கைவளையும், கருங்கொண்டையும், பட்டாடையும், முத்தாரமும் பூண்டு புன்முருவலுடன் ஒய்யாரமாய் நிற்பதைக் கண்டிருக்கிறீர்களா? தமிழர்கள் முறைப்படியே படிகள் அமைத்து மரப்பாச்சி பொம்மைகளும், பஞ்சாலும் துணியாலும் நன்கலங்கரிக்கப் பெற்ற எழில் பொம்மைகள் கொலுவீற்றிருக்க, அவற்றின் அருகே, எழிலோவிய மாய் நின்றிருந்தாள் விளக்கென்னு அம்மன் ஆம் விளக்கை ஒரு பெண்ணாக அலங்கரித்திருந்தனர், 'நவராத்திரிப் பண்டிகை' இத்தலைப்பைத் தேர்ந் தெடுத்த நான்காம் குழு. இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் சாந்தி கோபால், சரஸ்வதி ராமசேஷன்.

இந்தப் போட்டியில் பரிசை கிராமக் காட்சியை அமைத்திருந்த மூன்றாம் குழுவே தட்டிச் சென்றது. இந்த அலங்காரக் காட்சிகளை நான்கு நடுவர்கள் ஆராய்ந்து இந்த முடிவிற்கு வந்தனர். தீர்ப்பு சொல்வது எளிமையான வேலையில்லை. ஒவ்வொரு குழுவும் மிகவும் தங்கள் காட்சிகளை மிகச் சிறப்பாக செய்து வைத்திருந்தனர். நடுவர்கள் கற்பனை வளம், கைவேலை, படைப்புத் திறன், அமைப்பு போன்ற பல கோணங்களில் தேர்வு செய்து மதிப்பெண்கள் கொடுத்திருந்தார்கள்.

இந்தக் கடினமான வேலையை ஏற்றுக் கொண்ட மணி மணிவண்ணன், மணி ராம், குமார் குமரப்பன் மற்றும் அனுராதா சுரேஷ் அவர்களுக்கு தமிழ் மன்றம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

கோயிலுக்கு வந்திருந்த ஒவ்வொருவரும், வயது, மொழி, பண்பாடு பாகுபாடன்றி 'ஹா', அழகு' என்று அவரவர் மொழியில் வர்ணித்ததைக் கேட்க இன்பமாய் இருந்தது. அதில் வட இந்தியாவையைச் சேர்ந்த ஓரிருவர், 'இக்காட்சிகளில் என்ன எழுதி யிருக்கின்றன என்று விளங்கவில்லையே - எல்லோருக்கும் விளங்கும் வகை ஆங்கிலத்தில் வர்ணனை இருந்திருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும்' என்றபோது ஏற்பட்ட நெருட லினூடே - 'இந்தக் கலைப் பொருட்கள், தமிழரல்லாது மற்றோரையும் மகிழ்வித்துள்ளது' என்ற மகிழ்ச்சியும் விளைந்தது. பங்கேற்ற அனைத் துத் தமிழ் கலையுள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்!!

வித்யா நாராயணன்

© TamilOnline.com