கணையாழி, காலச்சுவடு போன்ற சிற்றிதழ்களைப் படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு எழுத்தாளர் ஜெய மோகனின் 'சொல் புதிது' என்ற சிற்றிதழ் பற்றியும் தெரிந்திருக்கும். 'ரப்பர்', 'விஷ்ணுபுரம்' போன்ற புதினங்களால் பலரால் அறியப் பட்டிருந் தாலும், ஆனந்த விகடனில் அவர் எழுதும் 'சங்க சித்திரங்கள்' அவரைப் பல புதிய வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறது. தீவிர, சீரிய வாசகனின் விரிவான, ஆழமான வாசிப்புக்காக அண்மையில் அவர் www.marutham.com மருதம் என்ற வலையிதழைத் தொடங்கியுள்ளார். இதழின் அறிமுகத்தில் "ஆக்கபூர்வமான இலக்கியப் படைப்புகள் கலை விமரிசனங்கள் வரலாற்றாய்வு, அறிவியல், தத்துவம் ஆகிய தளங்களில் நிகழும் நவீனப்போக்குகள் மீதான அறிமுகம் மற்றும் விமரிசனங்கள் ஆகியவற்றுக்கு இடம் தரக்கூடிய இதழாக இது இருக்கும்" என்கிறார். கூடவே தமிழ் வாசகர்களின் தரக்குறைவைக் கண்டிக்கிறார்.
"தமிழ் வாசகர்களின் கல்வி மற்றும் ரசனை ஆகியவற்றின் தரம் பொதுவாக மிகவும் தாழ்ந்தது. காரணம் இங்கு கல்வி இன்னும் பரவலாகவில்லை. ஆகவே பிரபல இதழ்களால் உலக சிந்தனைகளையும் கலைகளையும் முன்வைக்க முடியவில்லை. தமிழ் இதழ்களின் தரம் இந்திய அளவில் கூட மிக மிக குறைவு என்பதை நீங்கள் இந்திய ஆங்கில நாளிதழ்களின் ஞாயிறு இணைப்பை பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். உலக அளவில் இன்று புதிய சிந்தனைகள் பல புதிய அறிவுத்துறைகளாக முளைத்து பரவி வருகின்றன. நரம்பியல், மரபணுவியல் போன்ற விஞ்ஞானத்துறைகள்கூட தத்துவத்தையும் அறத்தையும் தீவிரமாக பாதித்து வருகின்றன. இத்துறைகள் குறித்து எளிய அறிமுகத்தைக் கூட நாம் பிரபல இதழ்கள் மூலம் பெறமுடியாது" எனக் குற்றம் சாட்டுகிறார்.
"மாணவர்கள் இங்கு தமிழ் இதழ்களை வெறும் பொழுதுபோக்குக்காகவே படிக்கிறார்கள். ஆங்கில இதழ்களையே அறிவார்ந்த ஆர்வத்துக்காக படிக்கிறார்கள்" என்றும் வருந்துகிறார். "எந்த தளத்தில் செயல்பட்டாலும் சரி ஒரு சீரிய வாசகனே வெற்றிகரமாக பணியாற்ற முடியும். சீரிய வாசகன் தரமான, அறிவார்ந்த சிற்றிதழ்களையே நாடுவான்" எனவும் நம்புகிறார். இந்த வாரப் புத்தக விமரிசனப் பகுதியில் அவர் எழுதியுள்ள "புத்தக விரும்பிகளின் புதைகுழி" சுவையான கட்டுரை.
******
ஜெயமோகன் குறிப்பிடுவது போல, தமிழின் அறிவுச் சூழலில் சிற்றிதழ்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. தமிழின் எண்ணற்ற எழுத்தாளர்கள், சிந்தனை யாளர்கள், கவிஞர்கள் ஏன் அரசியல்வாதிகள் கூடச் சிற்றிதழ்களில்தாம் முதலில் வாசகர்களுக்கு அறிமுகமாகி இருக்கிறார்கள். வணிக இதழ்களோடு ஒப்பிடும்போது இவற்றின் வாசகர்கள் மிகக் குறைவு. ஆனால் இவர்கள்தாம் புதிய கருத்துகளைச் சமுதாயத்துக்குள் கொண்டு வருகின்றனர். இணையம் இது போன்ற சிற்றிதழ்களுக்குக் கிடைத்த வரப் பிரசாதம். திண்ணை (www.thinnai.com) மற்றும் தென்றல் இதழின் வலைத் தோழன் ஆறாம்திணை ( ******
சன் டிவி மீண்டும் வந்து விட்டது. காவேரிப் பிரச்சினை பற்றிய பின்புலம் தெரியும் என்று சன் டிவி பார்த்தால், திரைப்பட நடிகர்களின் அற்ப அரசியல் தான் தெரிகிறது. கர்நாடகாவில் தமிழ்ப் படங் களுக்குத் தடை, அங்கே பாதயாத்திரை, இங்கே கதவடைப்பு உண்ணாவிரதம். சிக்கல்களின் அடிப் படையும், உலகமெங்கும் பரவி வரும் தண்ணீர்ப் போர்கள் பற்றிய அறிவும் இருந்தால், யாருக்கு எது உரிமை, யாரை யார் அடிக்க வேண்டும், எங்கு எதைத் தடை செய்யலாம், என்றெல்லாம் அற்பமான சிந்தனைகளில் நேரத்தை வீணடிப்போமா?
******
இது அமெரிக்காவில் தேர்தல் ஆண்டு. நவம்பர் மாதம் முக்கியமான பல தேர்தல்கள். உள்ளூரில் நாய் பிடிப்பவர் பதவியிலிருந்து, மாநிலங்களவை, மக்களவை, ஆளுநர் பதவிகள் வரை தேர்தல்கள். அடுத்த சில ஆண்டுகள் மிகச் சிக்கலான ஆண்டுகள். பொருளாதார மந்த நிலை, தீவிரவாதம், போர் ஆயத்தம் என்று பல சிக்கல்கள். யாரைத் தேர்ந் தெடுத்தாலும் எச்சரிக்கையாகத் தேர்ந்தெடுங்கள். தேர்தலை மட்டும் மறக்காதீர்கள். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நவம்பர் 5, செவ்வாய்க் கிழமை.
மணி.மு.மணிவண்ணன் |