நவம்பர் 2002 : வாசகர் கடிதம்
சமூக அவலங்களை அப்பட்டமாகக் காட்டவும் ஓர் துணிச்சல் வேண்டுமே! அதே போல அழகான பல நல்ல உதாரணங்களை அலங்கரித்துக் காட்டவும் நயமனரசனை வேண்டுமே! இவை இரண்டுமே கொண்ட விசுவாக 'அன்றும்-இன்றும்' அவர் இருக்கத்தான் செய்கிறார். 'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்பதற்கிணங்க, செய்யாத தவற்றுக்கு, இல்லாத பழியைத் தானே தன் மேல் போட்டுக் கொண்டு குற்றவாளி என்று அவர் பூசிக் கொண்ட குழப்பச் சேற்றைக் கழுவும் கங்கைநீர், அவரது தூய்மையான மனத்தினின்றும் வெளிவந்த அவரது வெளிப்படை ஒப்புதம் வாக்குமூலமே.

திரு. விசுவின்பால், என்னுடைய இந்த அபிப் பிராயமே பொதுமக்களாகிய மேல்கோர்ட்டின் மேல் (மறு)விசாரணை இறுதித் தீர்ப்பாக இருக்கும் என நம்புகிறேன்.

பத்மினி ரங்கநாதன்

******


நான் 'Hilpitas' நூலகத்தில் நிறைய தமிழ் புத்தகங்கள் படித்து வருகிறேன். அதில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட எண்ணற்ற சாதாரண இளைஞர்கள், முதியோர்களைப் பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டிராத அவர்கள் தியாகங்களை பற்றி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இம்மாத இதழில் வீராங்கணை லட்சுமிதேவி நாயுடுவை பற்றி வெளியிட்டு நேதாஜி உயிருடன் இருந்து சுதந்திரம் வாங்கித் தந்திருந்தால் நாடு நல்ல முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் என்ற அவரது கருத்து உண்மையாகி இருக்கக்கூடாதா என்கிற ஆதங்கம் தோன்றியது. லட்சுமிதேவி நாயுடு வாழ்கின்ற காலத்தில் நாமும் இருந்து அவரைப்பற்றி தென்றல் மூலம் அறிந்து கொண்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

கீதா ஸ்ரீதரன்

******


தங்கள் தென்றல் இதழினைக் காணும் வாய்ப்பு எனக்கு சமீபத்தில் தமிழ் இணைய மாநாட்டிற்கு வந்தபோது கிடைத்தது. தென்றலின் தரமான கட்டுரைகள் என்னை ஈர்த்ததால் இப்போது எனது ஆண்டுச் சந்தாவை அனுப்புகிறேன்.

சு. அன்புமணி

******


என்னுடைய சென்ற பயணத்தின் போது வீசாத கதம்ப வாசனை இம்முறை வீசிய போது காரணம் புரியாது விழித்த நான், இந்தியன் ஸ்டோரில் தென்றல் பத்திரிகையை பார்த்தபிறகுதான் தீர்மானித்தேன் வாசம் இந்த இதழிலிருந்து என்று. தென்றல் என்றும் இதமாக வீசிக் கொண்டிருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

விமலா பாலசுப்பிரமணியன்

இந்தியாவில் சென்னையில் வசிக்கும் நான் அமெரிக்காவில் இர்விங், டெக்ஸாஸில் உள்ள என் மகன் வீட்டிற்கு கணவருடன் வந்துள்ளேன். 'தென்றல்' பத்திரிகையை பார்த்தவுடன் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்துள்ளேன். 5 டாலரானாலும் இதை 3 மாதம் வாங்கி தந்துவிடுமாறு மகனிடம் கூறினேன். இது இலவச பத்திரிகை அம்மா என்றவுடன் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அமெரிக்காவில் அதுவும் இலவச மாக எல்லா நல்ல விஷயங்களும் அடங்கின ஒரு பத்திரிகையை வெளியிடும் தென்றல் பத்திரிகைக்கு என் மனமார்ந்த நன்றியையும் சந்தோஷத்தையும் தெரிவிக்கிறேன்.

அலர்மேலு ராமகிருஷ்ணன்,
டெக்ஸாஸ்

******


ஆறு மாத விசாவில் எங்களை காண வந்த மாமியாருக்கு நாங்கள் சுற்றி காண்பித்த இடங்களை காட்டிலும் மகிழ்வும், ஆனந்தமும் தந்தது தங்கள் பத்திரிகை என்றால் மிகையாகாது. நன்றி.

காஞ்சனா முரளி,
கலிபோர்னியா

******


எனது தந்தைக்கு, இந்தியாவுக்கு, 'தென்றல்' அனுப்ப வேண்டும். உங்கள் பெரும் முயற்சியை மிகவும் மெச்சுகிறேன். உங்கள் சிறந்த பணி மேலும் தொடர, மேன்மையடைய எனது ஆதமார்த்தமான வாழ்த்துக்கள்.

கீதா சுந்தர்

******


மே மாத தென்றல் இதழ் தங்களின் விளம்பரதாரர் ஒருவரிடமிருந்து இலவசமாக பெறும் வாய்ப்பு கிடைத்தது. பொது விசா காலம் முடிவடையும் வரையிலும் மாதல் தவறாமல் தென்றல் இதழை படிக்கும் பாக்கியம் பெற்றேன். தங்களின் தென்றல் இதழ் படிக்க படிக்க அலுக்காதது மட்டுமன்றி, மீண்டும் மீண்டும் கையில் எடுத்து படிக்க தோன்றுகிறது. நான், தமிழ்நாடு சென்ற பிறகும் தென்றல் இதழை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற திடமான முடிவோடு தாய்நாடு திரும்புகிறேன்.

தென்றல் இதழ் மேலும் மேலும் மணம் வீசவும், வளர்ச்சியடையவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கெளசல்யா குமாரசாமி,
கலிபோர்னியா

******


திரைக்கடல் ஓடி திரவியம் தேடும் எண்ணமுடன், தங்க அமெரிக்காவிற்கு வருகை புரிந்து தேனுமினிய தமிழ்ஓசை பார் முழக்கும் எண்ணத்துடன் தென்றலை தவழவிட்டுள்ளீர்..

அ.ஜ. ரங்கராஜன்

******


அடையாள சிக்கல்தான் இந்தியர்களை குறிப்பாக தமிழர்களை தனிமைப்படுத்துகிறது. அதைப் போக்க தமிழ் மறைதிருக்குறள் உதவும். உங்கள் இதழ்களில் 10 குறளையாவது ஆங்கில மொழிப்பெயர்புடன் அல்லது பொழிப்புனைவுடன் வெளியிட்டால் நன்மை பயக்கும்.

சீர்காழி நாக. லட்சுமி நாராயணன்

******


சிலிகன் சமவெளியில் சஞ்சரிக்கும் தென்றலே!
தெள்ளு தமிழில் துள்ளுநடை போடுகிறாய்!
மாதம் ஒருமுறை நீ வலம் வருவது போக
ஆரம்ப கவிதை எழுதி அடித்து திருத்துபவர்க்கு
இருமுறை வந்தால் எங்கள் முயற்சியும் முழுமையாகுமே!
வாழ்க நின் புகழ்! வளர்க நின் பணி!!
வாழ்க! நின்னை நடத்தும் பத்திரிகை அணி!!

சீதாதுரைராஜ்

******


அற்புதமான புத்தகத்தை தமிழ் மக்களுக்கு தருவதற்கு முதலில் எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு கிடைக்கும் மற்ற புத்தகங்களெல்லாம் இந்தி மக்களுக்காக வருவதாக எனக்குள் ஒரு உணர்வு. ஆகையால் முதல்முறை உங்களின் தென்றல் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தங்களின் இந்த நற்பணி தொடர என் வாழ்த்துக்கள்.

ஆர். சுஜாதா,
ஜார்ஜியா

******


நான் 6 மாத விசாவில் வந்துள்ளேன். வந்ததிலிருந்து தென்றல் இதழைப் படித்தேன். அப்பொழுது அமெரிக்காவில் தான் இருக்கிறோமா என்று கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன். விசா முடிந்து இந்தியா செல்லும் நான் தென்றலுக்காகவே மறுபடியும் அமெரிக்கா வரலாமா என்று நினைக்கிறேன்.

அக்டோபரில் விசு அவர்கள் எழுதிய கட்டுரையில் (அன்றும் இன்றும்) தன் செயலை உணர்ந்து அவர், மனசாட்சியுடன் எழுதியிருப்பது அவருடைய பெருந்தன்மையை தெரிவிக்கிறது. ஆம் ! அவர் சொல்வது உண்மை. மனிதன் தனக்கென்று வரும்பொழுதுதான், கஷ்டம், சுகத்தின் தன்மையை உணர்கிறான். அட்லாண்டா கணேஷ் நினைப்பது போல், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பெற்றோர்களுடன் அன்பாக இருந்து, அவர்களையும் அமெரிக்கா அழைக்கிறார்கள். நான் பல stateகளில் பார்த்தேன். பல ஆண்டுகளாக அமெரிக்காவில் settle ஆன இந்தியர்கள் கூட dressல் சாப்பாட்டில் மாறியிருக்கிறார்கள். ஆனால் பந்த பாசத்தையும், தாய்நாட்டு பாசத்தையும் விடவில்லை.

வசந்தா ஜம்புநாதன்,
கலிபோர்னியா

© TamilOnline.com