தீபாவளி 'வெடி' ஜோக்குகள்
ஏன் உங்க வீட்டு மாப்பிள்ளை எள்ளும் கொள்ளும் வெடிக்க, படபடவென்று பொரிகின்றாரே?

அவர் சிவகாசி மாப்பிள்ளையாச்சே!

******


மாப்பிள்ளை: கமலா, நான் என்ன சொல்லிட்டேன் உன் அம்மாகிட்டே, அவங்க என் மேலே கோபமாக இருக்கிறதுக்கு...

கமலா: பின்ன என்ன? அவங்க பண்ணின அல்வாவை பற்றி 'ஆகா, இது எங்க கம்பெனிலே பண்ற வஜ்ரபசையைக்காட்டிலும் ஸ்டராங்கா இருக்கே' ன்னு சொன்னா எப்படி?

******


ஏம்பா 'தீபாவளிக்கு விலை உயர்ந்த ஜவுளி எடுக்கணும், ஏங்க அது உங்க கடையிலே இருக்குமா என்று நடுராத்திரி என் வீட்டுக்கு போனிலே கூப்பிட்டு கேட்டா எப்படி? நாளைக்கு காலை கடைக்கு வாய்யா, பாத்துக்கலாம்

மன்னிக்கணும். எனக்கு, எப்பவும் நடுநராத்திரிதான் எதையும் 'எடுத்து'ப் பழக்கம். நான் இப்போ உங்க கடைக்கு உள்ளே இருந்துதான் பேசறேன்

******


ஏம்பா இந்த கேப் துப்பாக்கியிலே சப்தமே வரலியே? விலையும் ஜாஸ்தியா இருக்கு?

இந்தத் துப்பாக்கியிலே ஸைலன்ஸர் பொறுத்தி இருக்கு சார், அதனால் தான் விலையும் ஜாஸ்தி

******


எப்படி உங்க ஜவுளிக்கடைக்கு ராத்திரி வந்த திருடனை சுலபமா பிடிச்சீங்க?

அதுவா? தீபாவளிக்கு புடவை திருட தன் மனைவியோட கடைக்கு ராத்திரி வந்திருக்கான். நான் காத்தாலே கடையைத் திறந்து உள்ளே போனால் அவன் மனைவி இன்னும் புடவையே பொறுக்கி முடியலே! பாவம் திருடன், நம்ப மாதிரிதானே? தூங்கியே போயிட்டான்.

******


மாப்பிள்ளை: ஆகா, என் தலை தீபாவளிக்கு நீங்க கொடுத்த இந்த பட்சணங்கள் ரொம்பப் பிரமாதம்!

மாமியார்: இருக்காதா பின்னே? என் தலைதீபாவளிக்கு எங்க அம்மா பண்ணினது... நாங்க சாப்பிட்டது போக மிச்சம்தானே இதெல்லாம்... சாப்பிடுங்க... இன்னும் போடறேன்...

ஹெர்கூலிஸ் சுந்தரம்

© TamilOnline.com