மணற்கோவில்
மாலைப் பொழுதின் மஞ்சள் வெயிலில்
மாண்புற எழுந்தது வைரக் கோபுரங்கள்.
மழலைச் சிறார்களின் மங்களக் கரங்களில்
மிகுந்து சமைத்த மணற்குவை அமைப்புக்கள்.

பிஞ்சு மனங்களின் விஞ்சிய கற்பனைக்
கோவில்கள், குளங்கள், கோபுர மாடங்கள்
குச்சிகளால் எழுப்பிய கொடிகள், தூண்கள்
கற்களில் வலம்வரும் தொண்டர் படைகள்.

வாயிலெ வருகுது நாதஸ்வர மேளங்கள்
'டும்,டும்', 'பீ,பீ'க்கு முன் வேறெது வாத்தியம்?
மலர்கள் வைத்து சிங்கார அலங்காரம்
இலைகள் தழைகள் தேர்களாம், சீர்களாம்.

கோடைக்கு இந்தியா சென்ற சிறுமிக்கு
அதிசயம், ஆனந்தம், அத்தனையும் புதுமை.
பொம்மையும் பந்தும் வேண்டாம் அம்மா
போதும் இந்தியா என்கிறாள் அவள்.

பாகீரதி சேஷப்பன்

© TamilOnline.com