கீதாபென்னெட் பக்கம்
தென்றல் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள். சமீபத்தில் திருமணம் ஆகி இங்கே வந்திருக்கும் நடனமணியும் டிவி பெர்சனாலிடியுமான ஸ்வர்ண மால்யா போன்றவர்களுக்கு ஸ்பெஷல் தலைதீபாவளி வாழ்த்துக்கள்.

போன வருடத்து தீபாவளிக்கும் இந்த வருடத்து தீபாவளிக்கும் அமெரிக்காவில் வசிக்கும் நமக்கு என்ன வித்தியாசம்? சற்றே யோசியுங்கள்.

'தனிமையிலே' என்று தலைப்பு கொடுத்து சமீபத்தில் ஒரு தமிழ் பத்திரிகைக்குக் கட்டுரை எழுதினேன். அதை படித்த பலரும் மின்அஞ்சல் வழியாக பாராட்டுக்களைத் தெரிவித்து எழுதியதில் அதன் சாரத்தை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

என் மகன் ஆனந்திற்கு சின்ன வயதிலிருந்தே ஒரு பழக்கம். வீட்டு நடுகூடத்தில் உட்கார்ந்திருப்பான். அவனைச் சுற்றி பல விஷயங்கள் நடந்து கொண்டி ருக்கும். தொலைபேசியில் நான் பேசிக் கொண்டி ருக்கலாம். பென்னேட் பியானோ வாசித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் ஆனந்த் விட்டத்தை வெறித்துக் கொண்டிருப்பான். அவனிடம் அதைப் பற்றி பேசியபோது ''நான் கொஞ்சம் தனிமையில் யோசிக்க வேண்டியிருக்கிறது.'' என்றான். ''இத்தனை சந்தடிக்கு நடுவில் எப்படி தனிமை?'' என்ற போது ''தனிமை என்பது நமக்குள் தான் இருக்கிறது. என்னால் சட்டென்று எந்த கூட்டத்திலும் சத்தத்திலும் தனிமைபடுத்திக் கொள்ள முடியும். அந்த சமயத்தில் தான் என்னால் க்ரியேடிவாக யோசிக்க முடிகிறது.'' என்று பதில் சொன்னான்.

சின்ன வயதில் வெஸ்டர்ன் வயலின் வாசித்துக் கொண்டிருந்தவன் அதே விரல் இடங்களைப் பயன்படுத்தி மான்டசெல்லோ, பேஸ் வாத்தியங் களை உருவாக்கி வாசிக்கறான். அதற்கான கற்பனைகள் அந்த தனிமையில் தான் கிடைக் கிறதோ என்று எண்ணுகிறேன்.

நானும் இப்போதெல்லாம் அடிக்கடி தனிமையில் அமர்ந்து கொள்கிறேன். மண்ணாந்தை மாதிரி ஒன்றும் செய்யாமல் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால் அந்த சமயத்தில்தான் என் மனதிற்குள் கதைகளோ, கட்டுரைகளோ உருவா கின்றன. அத்தோடு நடந்த விஷயங்களை அசை போட்டு என்னையே விமரிசித்துக் கொள்ள முடிகிறது.

நீங்களும் முயன்று பாருங்கள். இந்த தனிமை நிறைய பலன்களை அளிப்பதை உணர்வீர்கள்.

இரண்டாவது பாரா கேள்விக்கு பதில் யோசித்து விட்டீர்களா?

இந்த வருடம் ஒளிபரப்பப்படும் சிறப்பு நிகழ்ச்சி களை இங்கே நம் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து சன் டிவியில் தீபாவளி அன்றே பார்த்துக் கொள்ளலாம்.

© TamilOnline.com