மலேசிய மண்ணில் தீபாவளி
இந்து மாதக் கணக்கீட்டில் ஏழாவது மாதமான ஐப்பசியில் மலேசியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான விழா தீபாவளி.

இந்தியத் தத்துவ மரபில் ஒளி என்பது ஞானத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது. எனவே தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்றப்படும் எண்ணெய் விளக்குகள் மனிதனுக்கு ஞானத்தைக் கொண்டு வருவதாக ஐதீகம்.

வேத காலத்திலிருந்து கொண்டாடப்பட்டு வரும் இந்த விழாவானது மனிதர்களிடையே அன்பையும் நட்புறவையும், ஞானத்தையும் வலியுறுத்துகிறது.

இந்தியத் தத்துவ மரபானது ஐந்தாயிரம் ஆண்டு பாரம்பரியத்தை உடையது. இந்த மரபில் தீபாவளி குறித்து ஏராளமான கதைகள் உலவி வருகின்றன. மலேசியாவில் தீபாவளியின் தோற்றம் குறித்த கதையாக நரகாசுரனைக் கிருஷ்ணனும், சத்தியபாமாவும் சேர்ந்து அழித்த கதை வழங்கப்பட்டு வருகிறது.

அந்தக் கதை...

பூமாதேவியின் புதல்வனான நரகாசுரன் தன் தாயைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் நேரக்கூடாதென்று பிரம்மனிடம் வரம் பெற்றிருந் தான். வரத்தைப் பெற்று சர்வ பலத்துடன் திகழ்ந்த அவன் தேவர்களையும், அவன் நாட்டு மக்களையும் துன்புறுத்தி வந்தான்.

எவர் வீட்டிலும் விளக்கேற்றக் கூடாதென்று அவனுடைய நாட்டு மக்களுக்குத் தடை விதித்திருந்தான். ஏனெனில் நரகாசுரன் இருளை நேசிப்பவன்.

இந்தத் தடையைப் பொருட்படுத்த முடியாத மக்கள், பகவான் கிருஷ்ணனிடம் முறையிட்டனர். கிருஷ்ணனும் நரகனை அழிக்கச் சம்மதம் தெரிவித்தார். அதன்படி பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை எதிர்த்துப் போரிடக் கிளம்பினார். போரின் ஒரு கட்டத்தில் நரகாசுரன் ஏவிய அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைந்தார். இதைக் கண்டு பொறுக்க முடியாத சந்தியபாமா, நரகாசுரனுடன் போரிட்டு அவனை வீழ்த்தினாள். மரணத் தருவாயில் தான் இறந்த நாளை மக்கள் விளக்கேற்றிக் கொண்டாட வேண்டுமென்று சத்தியபாமாவிடம் நரகாசுரன் கேட்டுக் கொண்டான். தேவியும் அதற்குச் சம்மதித்தாள்.

அதனாலேயே நரகாசுரன் இறந்த நாளை விளக்கேற்றி மக்கள் தீபாவளியாகக் கொண்டாடு கின்றனர். தவறு செய்தவர் தன்னுடைய குழந்தை யாகயிருந்தாலும் தண்டிக்க வேண்டும் என்பதாகும்.

சீக்கியர்களிடையே வழங்கி வரும் தீபாவளி குறித்த கதை வேறு வகையானது. அவர்கள், சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான குரு கோவிந்த் சிங், குவாலியர் சிறையிலிருந்து விடுபட்ட நாளை தீபாவளியாகக் கொண்டாடு கின்றனர்.

தீபாவளி குறித்த பிற கதைகள்...

விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமன் 14 ஆண்டு வன வாசத்துக்குப் பிறகு லட்சுமணன், சீதாவோடு அயோத்தி திரும்பிய நாளில், அயோத்தி நகர மக்கள் விளக்கேற்றி விழாக் கொண்டாடினர். அந்த நாளே தீபாவளி என்று கருதப்படுகிறது.

மகாபலியின் அட்டூழியத்தை அடக்க மகாவிஷ்ணு வாமன வடிவமெடுத்து அவனிடம் தனக்கு மூன்றடி நிலம் வேண்டுமெனக் கேட்டார். மகாபலியும் வாமன உருவைக் கண்டு ஏமாந்து அதற்குச் சம்மதித்தான்.

வாமன உருவிலிருந்த மகாவிஷ்ணு முதல் அடியை மண்ணிலும், இரண்டாவது அடியை விண்ணிலும் வைத்து 'மூன்றாவது அடியை எங்கே வைப்பது?' என்று மகாபலியிடம் கேட்டார்.

மகாபலியும் வாக்குத் தவறக்கூடாது என்பத னால் மூன்றாவது அடியைத் தன்னுடைய தலையில் வைக்குமாறு கேட்டுக் கொண்டான். அதன்படி விஷ்ணு மூன்றாவது அடியை அவனது தலையில் வைத்து அழுத்திக் கொன்றார். இந்த நாளே தீபாவளியென்ற கருத்தும் ஒரு சிலரிடம் உண்டு.

ராமன் ராவணனை வதம் செய்த அன்று அயோத்தி நகர மக்கள் வீடுகளில் எண்ணெய் விளக்குகள் ஏற்றிக் கொண்டாடினர். அந்த நாளே தீபாவளி யாகத் தொடர்ந்து வருகிறதென மக்கள் நம்புகின்றனர்.

இரணியனை வதம் செய்து உலகத்தில் உண்மையை நிலை நாட்டிய மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரம் எடுத்த நாள் தீபாவளியாகக் கொண்டாடப் படுகிறது.

துர்கா தேவி மகிஷாசுரனை வதம் செய்த நாள் என அவரவர் தத்தமது பாணியில் தீபாவளி குறித்துப் பல கதைகளை வழங்கி வருகின்றனர். எல்லா கதைகளிலும் விஷ்ணுவின் அவதாரமே முதன்மையாகிறது.

விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கி அவதாரம் கலியுகத்தில் நிலவுமென்ற நம்பிக் கையிருக்கிறது. இப்பொழுது உலகில் கலியுகமே நடந்து கொண்டு வருகிறது எனச் சொல்வாரும் உண்டு.

இந்த உலகம் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு கவலைகள், துன்பங்களில்லாத உலகம் மலர்ந்து, மக்கள் தங்களுக்குள் சந்தோசங்களைப் பகிர்ந்து கொண்டு வாழும் காலத்திற்கு நாம் காத்திருக்க வேண்டும். விரைவில் அந்தக் காலம் மலரும்.

வாணி முத்தையா

© TamilOnline.com