நகுலன்
நவீன தமிழ் இலக்கியத்தில் ரொம்பவும் கனதியுடன் இயங்கி வருபவர் நகுலன். இவரது படைப்புக்களுடன் சாதாரண வாசகர்கள் உறவு கொள்வது என்பதை விட தீவிர வாசகராகவும் படைப்பாளியாகவும் இருக்கும் சிலர் உறவு கொள்வது தான் அதிகமாக உள்ளது. அவர்கள் நகுலன் பற்றி கொண்டுள்ள அபிப்பிராயம், கருத்துக்கள் நகுலனின் படைப்புக்கள் சார்ந்த தேடலைத் நோக்கி முன்னகர்த்தும்.

நகுலன் ஏறக்குறைய அரை நூற்றாண்டிற்கு மேலாக தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதை, சிறுகதை, நாவல் விமர்சனம் மொழி பெயர்ப்பு எனத் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். டி.கே.துரைசாமி என்ற இயற்பெயரைக் கொண்ட நகுலன் 1921 இல் கும்பகோணத்தில் பிறந்தவர். ஆனால் வளர்ந்ததும் வாழ்ந்ததும் திருவனந்தபுரம். அங்கே இவானிவல் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியாராக வேலை பார்த்து விட்டு தற்பொழுது ஓய்வு பெற்றுள்ளார்.

தமிழ் சிறு பத்திரிகை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இதழ்களில் அவ்வப்போது எழுதி வந்தார். நவீனன், நாயர் போன்ற புனைப்பெயர்களில் எழுதி வந்தார். நிழல்கள் (1965), நினைவுப் பாதை (1962), நாய்கள் (1974), நவீனன் டைரி (1978) இவர்கள் (1983) சில அத்தியாயங்கள் (1983) வாக்கு மூலம் (1992) உள்ளிட்ட நாவல்களை எழுதி யுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 1999 இல் ‘நகுலன் கதைகள்ஒ என்ற பெயரில் வெளிவந்தது. மேலும் அவ்வப்பொழுது சிறு சிறு தொகுப்புகளாக வெளிவந்த கவிதைகள் மற்றும் ஏனைய கவிதைகள் யாவும் தொகுக்கப்பட்டு ‘நகுலன் கவிதைகள்ஒ என்ற பெயரில் வெளி வந்துள்ளன. ஆங்கிலத்திலும் சில கவிதைத் தொகுப்புகளை கொண்டு வந்துள்ளார்.

பெரும்பாலும் நகுலன் ஒரு கவிஞராகவே அறியப்பட்டுள்ளார். அவர் தமிழ் நவீனத்துவ கவிதை மரபின் முன்னோர்களில் ஒருவர். தனி மனித அகச்சார்பான அதன் வீச்சு எல்லைக்குள் இயக்கம் கொண்ட கவிதைகள் இவரது. ஆங்கில இலக்கிய பரிட்சயம், அதன் தத்துவார்த்த சிந்தனைகளின் தாக்கம் யாவும் தமிழ் சார்ந்த வாழ்புலத்தின் தனிமனிதக் குரலாக வெளிப்பட்டன. இவை கவிதைத் தளத்திலிருந்து புனைகதைத் தளத்துக்கு பாயும் பொழுது கவிதை சார்ந்த புனைவுத் தன்மை தான் மேலோங்கி நிற்கிறது.

நகுலனால் புறஉலகச் சித்தரிப்பை முழுமையாக உள்வாங்க முடியவில்லை. அவரது வாழ்வும் இருப்பும் ஒரு மட்டுப் படுத்தப்பட்ட குறுகிய வட்டத்துக்குட்பட்டவை. இதனால் சுயஅனுபவக் குறிப்பு மட்டுமே மிகச் சாதாரணமாக பதிவு செய்யப்பட்டவை. இவரது கதைகள் பெரும்பாலும் சிந்தனை வயப்பட்ட தனிமனிதத் தேடல் சார்ந்தவை. இருப்பினும் நவீனத்துவசாயல் கொண்ட படைப்புலகமாக அவை வாசிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் கொண்டிருப்பதையும் மறுக்க முடியாது. இவரது மொழிநடை இவருக்கே யுரிய தனித்தன்மை கொண்டது. இதனால் சாதாரண வாசகர்கள் இவரது படைப்புல குடன் அதிகம் நெருங்கிவிட முடியாது. நவீனத்துவத்தின் தாக்கத்துக்கு உட்பட்டு புதிது புதிதான களங்கள் நோக்கி பயணிக்க எத்தனிக்கும் மனங்கள் தான் நகுலன் படைப்புகளுடன் அதிகமாக உறவாட முடியும். இன்னொரு விதமாகக் கூறுவதாயின் நகுலனின் எழுத்து எப்போதுமே தொல்லை தருவதுதான். இதனையே சிலர் உயர்ந்த கலையின் அம்சமாகவும் கருதுகின்றனர். வாழ்க்கையை வெறுமனே மனம் சார்ந்து மட்டும் பதிவு செய்யத் துடிக்கும் ஒருவித சித்தர் மரபு சார்ந்து வரும் குரலாகவும் நகுலன் படைப்புகளைக் காணலாம். இருப்பினும் இப்பார்வை கூட முழுமையான தல்ல. ஆனால் அத்தகைய ஒரு தோற்றப்பாடு உண்டு.

நகுலனின் அனுபவமும் எழுத்தாக்கமும் கனவும் நனவும் கலந்து மயக்கும் கற்பனை கடந்த நிலையில் உயிர்த்தெழும் அனுபவங்கள் மொழிவழியாக எழுத்துருவம் பெறுகின்ற இரசவாதம் என்று இவரது எழுத்தின் இன்னொரு சிறப்பை டாக்டர் கி. நாச்சிமுத்து குறிப்பிடுவார். எவ்வாறாயினும் இருந்தலியல் அத்வைதம் போன்ற தத்துவ மரபு சார்ந்த அனுபவத்திரட்சிகளின் பதிவுகளாக நகுலன் படைப்புகள் அமைந்துள்ளன.

கவிதை, சிறுகதை நாவல் எதுவானாலும் அவற்றின் மையச்சரடு பழமையும் புதுமையும், கிழக்கும் மேற்கும் இணைகின்ற புள்ளியில் விரிகின்றவையாகவே உள்ளன. அவை தத்துவவிசாரம் செய்யும் தோற்றப்பாட்டையும் வழங்குகின்றன.

தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் நகுலன் கதைகள் வேறுபட்ட பரிசோதனைப் பண்புகளுக்கு எடுத்துக்காட்டு. வித்தியாசம் வித்தியாசமான பன்மைத்துவமிக்க கதையாடல் மரபு சாத்தியம் என்று வந்துவிட்டால் நகுலன் படைப்பு களுடன் பரிச்சயம் கொள்ள முற்படுவது இயல்பானது தவிர்க்க முடியாது.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com