இன்று தீபாவளி. எனக்கு நிலை கொள்ளாத தவிப்பு. அமெரிக்காவில் வாழ்க்கை தொடங்கி இது பதினெட்டாம் தீபாவளி. வருடந்தோறும் மூச்சுக் காட்டாமல் வந்து போகும் தீபாவளிக்கு இந்த வருடம் ஒரு விசேஷமுண்டு. பெண்ணுக்குத் திருமணம் நெருங்குகிறதென்றால் தாய்க்கு மகிழ்ச்சி இருக்காதா? ராகேஷ், ஜானகியின் நண்பன். இன்று டின்னருக்கு வருகிறான். ''நாங்கள் இவனை மாப்பிள்ளையாக்கிக் கொள்ளப் போகிறோம். இது நாங்கள் உனக்குக் கொடுக்கும் தீபாவளிப் பரிசு'' இப்படிச் சொன்னால் ஜானகி ஆச்சரியப்படுவாளா, வெட்கத்தில் சிணுங்குவாளா? என் மனம் தத்தளித்தது.
இம்மாதிரி விசேஷ நாட்களில் மதுரையில் இருந்தால் எத்தனை கலகலப்பாக இருக்கும்? வெடிச் சப்தமும், காகிதக் கூளங்களும், பட்டுப் புடவைகளும், கங்கா ஸ்நானமும், ஹாப்பி தீபாவளியும். இத்தனைக்கும் மேல் கல்யாண சமாசாரமென்றால் எத்தனை உறவினரின் உதவி. ஹம், லக்ஷ்மி எங்கிருக்கிறாளோ?
அப்பா! அவளைப் பார்த்து எத்தனை வருஷங் களாயிற்று! நானும் லட்சுமியும் ஒன்றுவிட்ட சகோதரிகள். ஆனால் சொந்த அக்கா தங்கை கள்கூட அவ்வளவு பிரியமாக இருக்க மாட்டார்கள். எங்களுக்குள் அத்தனை நெருக்கம். என்னைவிட நாலைந்து வயது பெரியவள். சின்ன வயதிலேயே அப்பாவை இழந்ததால் எங்கள் வீட்டில்தான் வளர்ந்தாள். என் பெற்றோர்தான் அவளுக்கு வரன் பார்த்து முடித்து வைத்தனர். கல்யாணமாகிப் பூனாவில் குடியேறியவள் தலைப்பிரசவத்துக்குக்கூட பிறந்தகம் வரவில்லை. அவள் கணவர் ஒரு கறார் பேர்வழி என்று கேள்வி.
பாரி கம்பெனியில் நல்லவேலையில் இருந்த என் கணவர் - சிவா என்ற சிவராமன் - கொலம்பியா யுனிவர்சிடியில் பி.எச்.டி. படிக்க வாய்ப்புக் கிடைத்ததென்று வேலையை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்கா கிளம்பினார். நானும் ஒரு சில மாதங்களில் கிளம்ப வேண்டும். எனக்கும் ஜானுவுக்கும் விசா வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் திடீரென்று லட்சுமி தன் பையன் ரகுவுடன் வந்து இறங்கினாள்.
''எனக்கு மனசு கேக்கலேடி சீதா. உன் கல்யாணத்துக்கே வரமுடியலைன்னு அழுதுண்டே இருந்தேன். நீ அமெரிக்கா போறேன்னு கேள்விப் பட்டதும் இருப்புக் கொள்ளவில்லை. எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி வந்துட்டேன். இன்னும் மூணே நாளில் கிளம்பிடுவேன்'' சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர். எனக்கும் அழுகையை அடக்கிக் கொள்ள முடியவில்லை.
அந்த மூன்று நாட்களில் எத்தனையோ பேசினோம், அழுதோம், சிரித்தோம். முன்பின் ஒருவரை ஒருவர் பார்த்திராத குழந்தைகள் அப்படி ஒரு ஒற்றுமையாக விளையாடியது கொள்ளை அழகு. ரகு ஜானுவைவிட மூன்று வயது பெரியவன். அவள் ''அண்ணா, அண்ணா'' என்று அவனையே சுற்றிக் கொண்டிருந்தாள். அவனும் அவளுக்கு விட்டுக் கொடுத்துப் பெரிய மனுஷன் போல் நடந்து கொண்டான்.
''எனக்குப் பொண்தான் பொறந்திருக்குன்னு ரொம்பக் குறையோடு லெட்டர் எழுதியிருந்தியே, பாரு, ரகு உன் பிள்ளை இல்லைன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டா. அப்படி ஒட்ண்டிருக்கானே'' லட்சுமி சிரித்தாள்.
''என்னிக்கு ஆனாலும் அவா ரெண்டு பேரும் அண்ணா தங்கை உறவுதானே. அவன் என் பிள்ளை யாகவே இருக்கட்டும்.''
''அமெரிக்காவில் அவருக்குப் படிப்பு முடிஞ்சதும் மறுபடி இந்தியா வந்துடுடீ''
''ஆமாம். இந்தியாவுக்குள்ளேயே இருந்துண்டு உன்னைப் பார்க்க இத்தனை வருஷமாச்சு. நான் எங்கே இருந்தா என்ன?''
''அப்படியெல்லாம் சொல்லாதேடீ. எனக்குக்கூடப் பிறந்தவா கிடையாது. நீதான். நீ என் தங்கைங்கற நினைப்பே எனக்கு எவ்வளவு தன்னம்பிக்கை தரதுன்னு உனக்குத் தெரியாது''. அவள் பேசும் போது எனக்கே கண்ணில் நீர் சுரந்தது.
இத்தனை பேசிப் பிரிந்த நாங்கள் மறுபடி சந்திக்க வாய்ப்பே கிடைக்கவில்லை.
லட்சுமி பூனா கிளம்பிச் சென்ற பத்து நாட்களுக் குள் எங்களுக்கு விசா கிடைத்து விட்டது. விமானத்தில் குழந்தை மிகவும் அவஸ்தைப்பட்டது. காதுவலியும் வயிற்றுப் பிரட்டலும் அவளை வாட்டியது. அமெரிக்கா வந்து சேர்ந்து அந்த ஆரம்ப வருஷங்கள். அப்பா, போதும். வசதியான உத்தியோக வாழ்க்கை யை அனுபவித்தபின் மாணவ வாழ்க்கை மிக்கடினமாக இருந்தது. குழந்தை ஜானு யாரிடமும் பழக மாட்டாள். இங்கிலீஸ் பேசத் தெரியாததால் அமெரிக்கக் குழந்தைகளுடன் விளையாடமாட்டாள். சிவாவின் படிப்பு முடிந்து வேலை கிடைத்தபின் எங்கள் வாழ்க்கை சீராகியது. ஜானுவும் படிப்பில் கெட்டிக்காரியானாள். எல்லோரிடமும் நன்றாகப் பழக ஆரம்பித்தாள்.
ஆறு வருஷத்திற்குப் பின் முதல்முறையாக இந்தியாவுக்குப் போனோம். லட்சுமிக்கும் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது. எத்தனையோ உறவுக்காரர்கள், குழந்தைகள். ஜானுவும் அமெரிக்கக் குளிரில் வெளுத்திருந்தாள். எல்லாக் குழந்தைகளும் அவளை ஆச்சரியமாகப் பார்ப்பதும் சேர்ந்து விளையாடுவதும் பார்க்க வேடிக்கையாக இருந்தது. இத்தனை குழந்தைகள் இருந்தும் ரகு அங்கே இல்லாதது எனக்குக் குறையாகத் தெரிந்தது. ஜானுவுக்கு அந்த நினைப்பெல்லாம் இருப்பதாகத் தோன்றவில்லை.
அதற்குப் பிறகு மூன்றுமுறை இந்தியா வந்தோம். இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள், கூட்டல், கழித்தல், பிறப்பு, இறப்பு என்று. லட்சுமியைப் பார்க்காதததுகூட அத்தனை உறுத்தவில்லை. காலம் செல்லச் செல்ல எதுவும் பழகிவிடும் போலும். அவள் கணவருக்கு எங்கெங் கேயோ மாற்றலாம். ஒரு சமயம் கல்கத்தாவில் இருந்தார்களாம். அவர்களது சரியான விலாசம் யாரிடமும் இல்லை. இப்படித்தான் பந்தங்கள் ஒவ்வொன்றாக விட்டுப் போகுமோ?
எங்கேயோ படித்த ஞாபகம். ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்குமென்று. அல்லது ஒரு கதவு திறந்தால் இன்னொன்று மூடிக்கொள்ளுமோ? பெற்றோரிடம் பாசம், உடன் பிறப்பிடம் பாசம், உறவினரிடம் பாசம்... அது கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறி கணவன், மனைவி, குழந்தைகளென்று ஆகும் போது அந்தப் பாசத்தின் பரிணாமங்களும் மாறுகின்றன. ''அம்மா, நீ எது செய்தாலும் நன்றாயிருக்கிறது'' என்ற நிலை மாறி ''அவருக்கு இது பிடிக்காதம்மா'' என்ற நிலை வருகிறதல்லவா?
காலத்தின் மாற்றங்கள் ஜானகியிடமும் புகுந்தன. சிறு குழந்தை வயது பெண்ணானாள். பெண்களுக்கு டீன் ஏஜ்ஜில் எப்படியோ அழகு வந்துவிடுகிறது. ஜானகி ஜானுவாகி, இப்போது அவள் ஜோனி - joni நல்ல எடுப்பான தோற்றம். உயரத்தில் அப்பாவைக் கொண்டிருக்கிறாள். படிப்பில் முதல். இவளுக்கு நிறைய நண்பர்கள், பையன்கள் உட்பட. எங்கள் வீட்டில் சில விதிமுறைகள் உண்டு. ஜானு யாரிடமும் பழகலாம். ஆனால் வரம்பு மீறக் கூடாது. வெளியே எங்கே போனாலும் ராத்திரி வீட்டுக்கு வந்தாக வேண்டும். அவளது சிநேகிதர்கள் யாவரையும் நாங்கள் சந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய குடும்பங்கள் எங்களுக்குப் பரிச்சயமாக வேண்டும். இத்தனை கட்டுப்பாடு களுக்கும் அடங்கித்தான் அவளும் வளர்ந்தாள் என்றாலும் சிவாவுக்குக் கவலை வந்துவிடும்.
''சீதா, ஜானு வரவர ரொம்ப ஆர்க்யூ பண்றா... நீ கவனிச்சியா...''
''நாம இருக்கிற ஊர் அப்படி (Peer pressure) பியர் ப்ரெஷர். நான் அவனை லவ் பண்றேன், இவனை லவ் பண்றேன்னு வந்து சொன்னா என்ன பண்ணுவோம்? பொதுவா நம்ம சொல்லுக்கு அடங்கினவளாத் தான் இருக்கா. நாமும் கொஞ்சம் சுதந்திரம் கொடுக்கத் தான் வேணும். நாம வளந்த மாதிரி இவ வளரணும்னா நாம இந்த நாட்டுக்கே வந்திருக்கக் கூடாது'' சிவா என் பதிலில் திருப்தியடைந்தாரா என்று தெரியாது. ஆனால் மறுபடி அந்தப் பேச்சை எடுக்கவில்லை.
ஜானகி பள்ளிப்படிப்பை முடித்தாள். பட்டப்படிப்புக்கு யுனிவர்சிடியில் சேர்ந்தாள். வீட்டிலிருந்தே காலேஜ் போனாள். அவள் வயதுப் பெண்கள் டார்மில் (DORM) தங்கிப் படித்தனர். ஜானுவுக்கு அதில் விருப்பமில்லை. அவளுக்குத் தன் தாய் தந்தையரின் பாதுகாப்பு வேண்டும்.
அன்று காலேஜிலிருந்து வந்தவள் புதிதாக வந்த ஒரு இந்தியனைப் பற்றிச் சொன்னாள். பெயர் ராகேஷ் கார்க். பிஎச்.டி. படிக்க இந்தியாவிலிருந்து வந்திருப்பவன். ஜானகியின் வகுப்புக்கு T.A. (Teaching assistant) அமெரிக்க யுனிவர்சிடியில் இது வழக்கம். பிஎச்.டி. மாணவர்கள் பட்டவகுப்புப் பாடம் எடுப்பார்கள்.
''ரொம்ப ஸ்மார்ட் லுக்கிங். இண்டலிஜண்டா இருக்கான். ஆனா அவன் பேசற இங்கிலீஷ் எனக்கே கஷ்டமாயிருக்கு. அமெரிக்கன்ஸீக்கு என்ன புரியப் போறது?'' கடகடவென்று சிரித்தாள்.
''இந்தியாவில british styleல இங்கிலீஷ் பேசுவா. இன்னும் கொஞ்ச நாள் போனா இந்த ஊர் ஆக்ஸென்ட் வந்துடும்'' இது சிவா.
இவள் கேலியாக சிரித்தாலும், அவளுக்கு அவன்பால் ஒரு ஈர்ப்பு, மதிப்பு இருப்பது எனக்கு வெட்டவெளிச்சமாகப் புரிந்தது. அதன்பின் அவனைப்பற்றி அடிக்கடி ஏதாவது விமரிசிப்பாள். அது என் ஊகத்தை மேலும் ஊர்ஜிதப் படுத்தியது.
சில நாட்களாக ராகேஷின் பெயர் எங்கள் வீட்டில் கேட்கவில்லை. எனக்கு ஆச்சர்யம், நானே தொடங்கினேன்.
''என்ன ஜானு உன் இண்டியன் T.A. எப்படி யிருக்கான்? அவன் இப்பல்லாம் வரதில்லையோ?''
''வரான். அவனோட ஆக்ஸென்ட் ரொம்ப இம்ப்ரூவ்ட், தெரியுமோ... அவன் நல்ல டைப் போலத் தோன்றது, அம்மா.''
''அவன் எப்படி டைப்புன்னு நான் கேக்கவே இல்லையே'' நான் சிரித்தேன். அவளும் சிரித்தாள்.
அதன்பின் ஒருநாள் ஜானு வீட்டுக்குள் நுழைந்து கொண்டே சொன்னாள்.
''அம்மா. அவனுக்கு பெங்காலி தெரியுமாம். தமிழும் தெரியுமாம்.''
''யாருக்கு?''
''ராகேஷ¥க்கு, அதாம்மா என் T.A."
''எந்த ஊர்க்காரன் அவன்''
''தெரியாது. அதைத் தெரிஞ்சு என்ன பண்ணப் போறே?''
''தமிழ் தெரியுங்கறியே... அதனால ஒரு க்யூரி யாஸிடி.''
அதற்குள் சிவா புகுந்து கொண்டார். ''உங்கம்மா வுக்கு அவன் மதுரைப் பையனோன்னு சந்தேகம்''
''அதெல்லாம் ஒண்ணுமில்லை. ராகேஷ்ங்கற பேர் மதுரையில வெக்கமாட்டா'' என்றேன்.
ஜானகியும் ராகேஷ¤டன் நாளாகநாளாக நெருங்கிய நண்பர்களானார்கள். பல தடவை நானும் சிவாவும் ராகேஷ¤டன் போனில் பேசியிருக்கிறோம். படித்தது, வளர்ந்ததெல்லாம் கல்கத்தாவாம். பெங்காலிப் பையன் தமிழ் பேசுகிறான். எப்படி? அவன் நம் வீட்டுக்கு வரும் போது பேச்சுக் கொடுக்கலாம்.
அதன் பின் ஓரிரு முறை எங்கள் வீட்டிற்கு வந்தான். ஜானகியும் அவனும் பாட சம்பந்தமான விஷயங்களை அலசுவார்கள். சமூக பிரச்சினைகளை விவாதிப் பார்கள். இது ஒரு தூய்மையான சிநேகிதம். ஜானகி அவனைத் தன் குருவாகத்தான் மதிக்கிறாள்.
அவனிடம் சிகரெட், குடி போன்ற ஒரு விதக்கெட்ட பழக்கமும் இல்லை. சிவா அதுப்பற்றிப் பேசி பார்த்தார். ஆனால் அவனோ ''எனக்கு அந்த பார் எல்லாம் தெரியாது. சாம்பார் ஒண்ணுதான் தெரியும்'' என்று கண்சிமிட்டி ச் சிரித்தான். மீன் சாப்பிடாத பெங்காலியைப் பார்க்கவேண்டுமா? ராகேஷ் சுத்தசைவம். படிப்பு, பாங்கு, நிதானம். இதற்கு மேல் என்ன வேண்டும். ஜானகிக்கு இவனை முடிச்சுப் போட்டால்? என் மனம் வேகமாக வேலை செய்தது.
சிவாவின் மூளையும் அதே வேகத்தில் செயல் பட்டிருக்க வேண்டும்.
''மாரேஜ் பத்தி என்ன ஐடியா வெச்சிருக்கே?'' கனிந்த பழங்களைத் தொட்டுப் பார்த்து வாங்கு வோமே. அதுபோல மிருதுவாக ஆழம் பார்த்தார்.
''இப்போதைக்கு சமைக்கத் தெரியும். அதனால் சாப்பாட்டுக்காக ஒரு கல்யாணம் வேண்டாம். பி.எச்டி முடிக்கிற வரை அதைப் பத்தி நினைக் கறதாயில்லை.''
பயல் உண்மையிலேயே ஆழமானவன்தான். இவனை விட்டுப் பிடிக்க வேண்டும். இவனைப் பற்றி அதிகம் தெரியத் தெரிய எங்கள் மதிப்பில் உயர்ந்து கொண்டே போனான். இதுநாள் வரை ஜானு மட்டும்தான் ராகேஷைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள். இப்போது நங்களும் சேர்ந்து கொண்டோம்.
ஒருமுறை அவன் வந்திருந்தபோது, நான் ''கல்கத்தாவில் ராஜாராமன் தெரியுமா? ஒய்ப் பேர் லட்சுமி'' - கேட்வில்லை. கேட்க நினைத்தேன். ராஜாராமன் எங்கே வேலை செய்கிறார், வீடு எங்கே போன்ற ஒரு தகவலும் தெரியாமல் கேள்விகேட்டால் என்ன பதில் கிடைக்கப்போகிறது? அவர்கள் கல்கத்தாவில்தான் இருக்கிறார்களோ அல்லது மறுபடி மாற்றலாகி வேறு ஏதாவது ஊருக்குப் போய்விட்டார்களோ. வாயில் வந்த கேள்வியைக் கனைப்பாக மாற்றித் தொண்டையை செருமினேன்.
அன்றிரவு என் கணவர் தானாகவே அந்தப் பேச்செடுத்தார்.
''என்ன சீதா, என்ன யோசனை? பொண்ணைப் பத்தித் தானே?''
''ஆமாம். அவளுக்கும் வயசு இருபதுக்கு மேல ஆச்சு. அவளா ஒண்ணும் காட்டிக்கலை. ஆனா எனக்கென்னமோ அவ மனசுல தீவிரமா ஏதோ இருக்குன்னு தோன்றது.''
''அவ மனசுல என்ன இருக்கோ தெரியாது. உன் மனசுல நீ ராகேஷ¥க்கு மாமியாராப் போகணும்னு எண்ணம் இருக்கு. ரைட்டா?''
''ஆமாம். அதுல என்ன தப்பு?''
''தப்புன்னு சொல்லை. ஆனா அவன் பெங்காலிக் காரன். ஒத்துவருமா?
''நன்னா யோசிச்சுப் பாருங்கோ. வேற ஜாதிக் காரான்னு மறுப்புச் சொல்றவா நம்மளோட பேரண்ட்ஸ்தான். அவா காலமும் முடிஞ்சாச்சு. நல்ல படிப்பும் குணமும்தான் முக்கியங்க. நாம நாடுவிட்டு நாடு வந்து எதெல்லாமோ மாத்திண்டிருக்கோம். ஒரு சின்னக் காரணத்துக்காக நல்ல மாப்பிள்ளை யைக் கை நழுவ விடலாமா?''
''எனக்கு இதில் சம்மதம்தான். ஆனா அவனோட அம்மா அப்பாவுக்கும் விஷயத்தைத் தெரிவிச்சு அவா சம்மதமும் வாங்கித்தான் காரியத்தில் இறங்கணும்.''
''தெரியும். நானே அதான் பண்றதா இருக்கேன். அவனிடம் அவன் பேரண்டஸ் அட்ரஸை நானே கேட்டு வாங்கறேன்'' என்றேன்.
''ஜானுவை - இது பத்திக் கேட்டியா? அவ என்ன சொல்றா?
''அவளைக் கேக்கலை. ஆனா அதுல ஒரு பிரச்சனையும் இருக்காதுன்னு எனக்கு நம்பிக்கை யிருக்கு'' எனக்குத் தெரியாதா என் பெண்ணப் பற்றி?''
சிவா தொடர்ந்தார். ''அப்பொ ஒண்ணு பண்ண லாம். இந்த வருஷம் தீபவாளியன்னிக்கு ராகேஷை டின்னருக்கு வரவழைப்போம். மெதுவாக ரெண்டுபேரிடமும் பேசி ஒரு முடிவெடுத்துடலாம். அவனுக்கு அதுக்குள்ள பி.எச்டி டிகிரி வாங்கிடுவான்.''
அந்த நாள் இன்று வந்தேவிட்டது. நானும் என் கணவரும் ரகசியமாகத் திட்டம் போட்டோம். இதை ஒரு பெண் பார்க்கும் நிகழ்ச்சியாக்கிவிட எண்ணினோம். நானோ, சிவாவோ ஜானுவிடம் அதுபற்றி மூச்சுவிடவில்லை. டின்னர் முடிந்து கடைசியில் அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டுமென நினைத்தோம். ஆனால் அவளிடம் அவள் எண்ணத்தையும் ஓரளவு கேட்க வேண்டும். எனக்கு ஒரே திகைப்பாக இருந்தது. நான் சொன்னபடியே ஜானு ஒரு புதுப்பட்டுப் புடவை உடுத்திக் கொண்டு வந்தாள்.
மயில் கழுத்துக் கலரில் அவளது நிறம் இன்னும் எடுப்பாக இருந்தது. பாப் தலையை க்ளிப்புகள் போட்டு அடக்கி வைத்திருந்தாள். சிகப்பு ஸ்டிக்கர் பொட்டு அவளுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது.
சந்தோஷம். ஒரே படபடப்பு.
ட்ரிங்... வாசலில் மணி ரீங்கரித்தது. சிவா கதவைத் திறக்க ராகேஷ் பளிரென வெள்ளை ஜிப்பாவில், கையில் ஒரு டப்பாவோடு நுழைந்தான்.
''புஸ்தகத்தைப் பாத்து ஸ்வீட் செய்து பாத்தேன். நல்லா இருக்கான்னு பாருங்க'' என்றவாறு டப்பாவை என் கையில் கொடுத்தான். விதரணை தெரிந்த பையன்.
§க்ஷம நலன் விசாரித்து முடிந்தது. ராகேஷ¥ம் சிவாவும் சாப்பிட உட்கார்ந்தனர். நான் ஜானுவைப் பரிமாறச் சொன்னேன். இது சிவாவுக்கும் எனக்கு மட்டுமே புரிந்த நாடகம். நாங்களே ரசிக்கும் நாடகம். ஜானுவும் ராகேஷ¥ம் தாங்களே அறியாமல் இதில் நடிக்கிறார்கள். அவன் சாப்பாட்டை நன்றாக சுவைத்து உண்டான். ஜானுவையும் ரசித்திருக்க வேண்டும்.
ராகேஷ், "Joni, you really look like a girl in saree."
ஜானுவின் முகம் கோபத்தில் சிவந்ததை உணர்ந்து , "I mean, you are very pretty," என்று சமாளித்தான், புத்திசாலிப் பையன். நெற்றி வரை ஏறிய ஜானுவின் கோபம் வாய்க்கு இறங்கி சிரிப்பாக வெளியேறியது.
சற்றுநேரத்தில் நாங்கள் எல்லோருமே சாப்பிட்டுக் கை கழுவிவிட்டு லிவிங்ரூமில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம். ஜானு அவ்வளவாகப் பேச்சில் கலந்து கொள்ளவில்லை.
சிவா ஆரம்பித்தார். ''பிஎச்.டியும் முடிச்சுட்டே. இப்போ கேக்கலாமா, உன் கல்யாணத்தைப் பத்தி?''
ராகேஷ், ''உண்மையிலே சொல்றேனே. எனக்கு உங்க ப்ரெண்ட்ஷிப் கிடைச்சப்பறம் பாமிலியை மிஸ் பண்ணலை. கல்யாணத்தைப் பத்தி ஸீரியஸ்ஸா யோசிக்கலை. இப்பொ நடக்கிற டிவோர்ஸைப் பாத்தா கல்யாணம்னா ஒரு விதத்துல பயமாவே இருக்கு.''
சிவா, ''சரி. ஜானகி மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா?''
ராகேஷ் ஜானகியைப் பார்த்தான். அவள் பட்டுக் கொள்ளவேயில்லை. வெட்கமோ? அவன் குரலை உயர்த்தினான். ''ஐயோ, ஜோனி மாதிரியா? you scare the hellcut of me" மறுபடி அதே சிரிப்பு. ''No I was kidding. ஜானகி மாதிரிப் பெண் கிடைச்சாப் பரவாயில்லை''
நான் பளிச்சென்று என் கணவர் பக்கம் திரும்பிப் பார்த்தேன். அவர் முகத்தில் நான் மட்டுமே உணரக்கூடிய ஒளி ஒன்று நொடிப்பொழுது வந்து மறைந்தது.
''போற போக்கில நீங்களே ராகேஷ¤க்கு கல்யாணம் முடிச்சு பொண்ணோட ஊருக்கு அனுப்பிடுவேள் போலிருக்கே'' ஜானகி முதல் முறையாக எங்கள் பேச்சில் கலந்து கொண்டாள். இந்தப் பெண் என்ன இப்படி பேசுகிறாள் இது வெகுளித்தனமா, நடிப்பா? முகத்தில் ஒருவிதமான உணர்வும் தெரியவில்லை. மறுபடியும் என் மனம் அசை போட்டது. இவர்கள் நல்ல ஜோடிதான். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டபின் வரும் உண்மையான அன்பு இது. நான்கு வருஷ நட்பாயிற்றே, இது ஒன்றும் கன்றுக்குட்டி காதல் இல்லை.
''நீ எப்படிப்பா தமிழ் படிச்சே?'' எத்தனையோ நாட்களாகக் கேட்க நினைத்த கேள்வி இன்று கேட்டுவிட்டேன்.
''நாங்க தமிழ்க்காராதான். அப்பாவுக்கு சொந்த ஊர் திருநெல்வேலிப் பக்கம். வேலை பார்த்தது நார்த்திலே.''
என்ன, இவன் தமிழ்ப் பையனா? எனக்குத் திக்கு முக்காடியது.
''என்ன, கேட்டேளா, இவன் தமிழ்நாட்டுப் பையன். நம்மூர் பையன்.''
''அன்னிக்கென்னமோ, பெங்காலீஸைப் போலக் கிடையாதுன்னு சொன்னே. இன்னிக்கு இவன் நம்மூர்ப் பையன்னு குதிக்கறியே'' இவருக்கு என்னைக் கிண்டல் செய்யாமல் நேரம் போகாது.
எனக்கு இனம் தெரியாத சந்தோஷம். ''உன் பெயரைப் பார்த்து அசந்து போனேன். நான் நினைக்கவேயில்லை. நீ ஸவுத் இண்டியன்னு''
''என் ஓரிஜனல் பெயர் ராகவன். பெங்காலில் ராகேஷ்ங்கற பேர் ரொம்ப பாபுலராச்சே. நான் ஸ்டூடண்ட்விசா வாங்கும்போது அ·பிஷியலாவே ராகேஷ்னு மாத்திண்டுட்டேன். கார்க்ங்கறது கர்க கோத்ரம்.''
''இந்தியாவில உள்ள உன் பேரண்ட்ஸ் அட்ரஸ் எழுதித் தரயா, இந்த டிசம்பரில் இந்தியா அநேகமாகப் போவோம். அவாளை மீட் பண்றோம்'' என்று சொல்லிக் கொண்டே டேபிளை சுத்தம் செய்துவிட்டு ஜானகியை சமையலறைக்குக் கூட்டிக் கொண்டு போனேன்.
ரகசியமான குரலில் சொன்னேன்.
''இங்கே பாரும்மா ஜானு, இந்த ராகவனை எனக்கும் அப்பாவுக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு. அவனையே உனக்குக் கல்யாணம் பண்ணி வெக்க எங்க ரெண்டு பேருக்கும் ஆசை.''
"No way!"
இந்த பெண்ணுக்கு எல்லாம் விளையாட்டுத்தான்.
''என்ன சொன்னே?''
''நான்தான் சொன்னேனே. ஐ காண்ட் மாரி ஹிம்''
''ஏன்னு கேக்கறேன். வேற யார்கிட்டயாவது இன்டரஸ்டா?''
''அதெல்லாமில்லை. ஆனால் இவன் எனக்கு ப்ரதர் மாதிரி.''
மறுபடியும் அதிர்ச்சி.
''என்ன உளறல்? அவன் எப்படி ப்ரதர் ஆவான்?''
''கடந்த ஆகஸ்ட் மாசம் ஒரு friendship bracelet கட்டிண்டிருந்தேனே, ஞாபகம் இருக்கா? அது ராகேஷ் கட்டிவிட்டது.
இந்த நாட்டில் பள்ளிக்குழந்தைகளிடம் இது ஒரு வழக்கம். ஸ்வெட்டர் பின்னும் நூல்களைக் கையால் பின்னி ஒருவருக்கொருவர் மணிக்கட்டில் கட்டி விடுவார்கள். அவர்களுடைய நட்பின் சின்னம் அது. இப்பொழுது ஞாபகம் வருகிறது. ஜானு கையிலும் அதைப் பார்த்தேன். இதென்ன சிறுபிள்ளைத்தனம் என நினைத்துச் சிரித்ததும் ஞாபகம் வருகிறது.
''இருக்கட்டுமே. ஒரு நல்ல நண்பனைக் கல்யாணம் பண்ணிக்ககூடாதுன்னு யார் சொன்னா?''
''அவன் அதை நட்புக்காகக் கட்டிவிடவில்லை. அவன் சொன்னான், ''இதை ரக்ஷ¡பந்தனாக நினைச்சு உனக்குக் கட்டறேன்.அதே மாதிரி ஒண்ணு நீயும் எனக்குக் கட்டிவிடு. இதன் அர்த்தம் என்னன்னா நீயும் நானும் அண்ணா தங்கை மாதிரி'' கல்கத்தாவில் ராக்கிங்கறது விசேஷமாமே. நானும் அவனுக்கு ஒரு ப்ரேஸ்லெட் கட்டிவிட்டு அவனை ஒரு சகோதரனா நினைச்சேன்''
இதென்ன திருப்பம்? சமாளித்தேன்.
''இதோ பாரு, நாம எல்லாருமே தமிழ் நாட்டுக் காரா. இருக்கறது அமெரிக்காவுல. அதனால அந்தக் கயிறுக்கு அர்த்தமேயில்லை.''
''கயறுன்னு சொல்லாதே. ரக்ஷ¡பந்தன்.''
''உனக்கு சின்ன வயசு. இமோஷனலாப் பேசறே.''
''எனக்கொண்ணும் சின்ன வயசில்லை. இருபதுக்கு மேல ஆறது.''
இவளோடு இப்பொழுது வாதாடிப் பிரயோசன மில்லை.
''சரி, உனக்குப் பிடிக்காததைச் செய்ய மாட்டோம். நீ அவனிடம் ஈடுபாடு காட்டினதாலதான் நானும் அப்பாவும் உனக்கு ஸர்ப்ரைஸ் கொடுக்க நினைச் சோம். ஸாரி''
சுருக்கமாக சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.
ஏதோ அவளுக்கு சமாதானம் சொன்னேனெ ஒழிய என் உள்மனத்தில் அவளை வழிக்குக் கொண்டு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. சொல்லும் விதமாக எடுத்துச் சொன்னால் கேட்காமலா போவாள்?''
லிவிங்ரூமில் வந்து சோபாவில் உட்கார்ந்தேன். எனக்கு ஆயாசமாக இருந்தது. சிவா-ராகேஷ் பேச்சில் என் மனம் லயிக்கவேயில்லை. கயிறுன்னு சொன்னதுக்கு என்னமாய்க் கோபித்துக் கொண் டாள்! இத்தனை அழுத்தமாகப் பேசினாளே, அவள் மனசு மாறுமா? எல்லாம் வயதுக்கோளாறு. இதைவிடத் தீவிரமான கொள்கை கொண்டவர்கள் மாறினதில்லையா? என் தலைக்குள் கடல் கொந் தளிப்பது போல் ஒரு உணர்வு.
''என்ன ஸார். நீங்க என் அபார்ட்மெண்டுக்கு எப்போ வரப்போறீங்க? நான் எத்தனையோ தடவை உங்க வீட்டுக்கு வந்தாச்சு.''
''வரோம். இனிமேல் அடிக்கடி வரவேண்டியது தான்'' புன்சிரிப்போடு சொன்ன சிவா என் முகத்தைப் பார்த்துப் புருவத்தை லேசாகச் சுருக்கினார். ''இல்லையா சீதா?''அதுவரையில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்ற பிரக்ஞையே எனக்கு இல்லை இருந்தாலும் இயந்திர கதியில் ''ஆமாம், ஆமாம்'' என்றவாறு என் உள்ளக் கொந்தளிப்பை மறைத்துக் கொண்டேன்.
அதற்கு மேலும் அங்கே உட்கார்ந்திருப்பது தர்மசங்கடமாக இருந்தது. என் கணவரின் பார்வையைத் தவிர்த்துப் பக்கவாட்டில் திரும்பிய என் கண்களில் ராகேஷ் அட்ரஸ் எழுதி வைத்திருந்த துண்டுக்காகிதம் பட்டது. அட்ரஸை எழுதி வைக்கும் சாக்கில் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன். இவனது அட்ரஸ் புக்கை எடுத்தேன். இவனது அப்பா பேரென்ன? ஆர்.கே.என். ராஜாராமன். கேட்டமாதிரி இல்லை? அடுத்த வரியில் அதென்ன பேர்? லட்சுமி ராஜாராமன். என்ன என்னது? எனக்கு ஒரு சில நிமிஷங்கள் ஒன்றுமே புரியவில்லை. தலைசுற்றுவது போலிருக்கிறது. என் அக்கா லட்சுமிதானா இது? மேஜையின் மேல் ராகேஷின் பர்ஸ் சற்றே திறந்து கிடக்கிறது. அதைத் திறக்கிறேன். அந்த போட்டோ, லட்சுமி ராஜராமன், இரண்டு வயதுக் குழந்தை ரகு, எனக்கு அவள் எப்பொழுதோ அனுப்பிய போட்டோ வின் காப்பி. ஒவ்வொன்றாக விளக்குப் போட்டது போல் எனக்குள்ளே ஒரு தெளிவு பிறந்தது. எனக்கு நம்பவே முடியவில்லை. இவன் ரகுதான். ஜானுவுடன் ஓடிப்பிடித்து விளையாடிய அதே ரகுதான்.
ஜானகி ஜானுவாகி ஜோனியானது போல் ராகவன் ரகுவாகி ராகேஷாகியிருக்கிறான்.
''பாரு, ரகு உன் பிள்ளை இல்லைன்னு சொன்னா யாரும் நம்பமாட்டா. அப்படி ஒட்டிண்டிருக்கானே'' என்ற லட்சுமியின் வார்த்தைகளும்,
''என்னிக்கு ஆனாலும் அவா ரெண்டு பேரும் அண்ணா தங்கை உறவுதானே. அவன் என் பிள்ளையாகவே இருக்கட்டும்'' என்ற என் பதிலும் என் நினைவலையில் மிதந்து வந்தன. எவ்வளவு பெரிய தப்புப் பண்ண இருந்தேன், தெய்வமே. எனக்கு மாப்பிள்ளை கை நழுவிய வருத்தமில்லை. பிள்ளை கிடைத்த மகழ்ச்சி. தீபாவளிப் பரிசு ஜானுவுக்குக் கொடுக்க நினைத்த எனக்குத்தான் விலை மதிக்கமுடியாத பரிசு! பரிசுப் பொருளென்னவோ ஒன்றுதான். ஆனால் அதன் பொருள்தான் வெவ்வேறு.
அவசரஅவசரமாக சமையலறையைவிட்டு வெளியே வந்தேன்.
''சிவா இது யாருன்னு தெரியாமப் பேசிண்டிருக் கேளே. என் கஸின் லட்சுமியோட பையன். நமக்கு பிள்ளை கிடைச்சிருக்கான். ஜானு எங்கே இருக்கே? இங்கே வா. இவன் உனக்கு அண்ணா டீ'' எனக்கு ஒரே படபடப்பு.
ஜானு நிதானமாக வந்தாள். ''அதான் நான் அப்பவே சொன்னேன்'' என்றது அந்த நிறை குடம்.
கடவுள் என்னைவிட புத்திசாலிதான். இல்லை யென்றால் நாடக கர்த்தாவான என்னை கதாபாத்திர மாக்கியிருப்பானா? ஜானு ரகுவின் கையில் ரக்ஷ¡பந்தன் கட்டியிருப்பாளா?
கோமதி ஸ்ரீனிவாசன் |