ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் (1907-1979)
தமிழர் வாழ்வியலில் 'சினிமா' முக்கியமான இடத்தை வகிக்கின்றது. தமிழர்களின் சமூக உளவியலில் மட்டுமல்ல அரசியலிலும் செல்வாக்கு செலுத்தும் சக்தியாகவே சினிமா உள்ளது. முக்கியமான தொழில்துறையாகவும் திகழ்கிறது. தமிழ் மக்களின், தமிழகத்தின் சமூகவரலாற்று ஆய்வுகளில் தமிழ்ச் சினிமாவும் தவிர்க்கமுடியாத ஓர் துறையாகவே உள்ளது.

சினிமாத் தொழில் நிலைபெற்று வருமானம் ஈட்டித்தரும் தொழில்சார் நிறுவனமாக மாறும் காலத்தில் பல்வேறு சினிமா தயாரிப்பாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். மெளனப் படங்களின் காலம் தொடக்கம், 1916 முதல் 1931 வரை ஒரு காலகட்டமாக புரிந்து கொள்ளலாம்.

அடுத்து தமிழ் சினிமா பேசும்படமான காலத்தி லிருந்து - 1931 லிருந்து - இன்று வரையான காலம் வரை கருதலாம். இந்தக் காலத்துல் பல்வேறு மாறுநிலைப் பண்புகள் தொழிற்பட்டுள்ளன.

சலனப்படம் தமிழ் பேசி பேசும்படமாக வந்தது தொழில்ரீதியாக ஒரு பெரிய முன்னேற்றகரமான பாய்ச்சல். மேற்கத்திய சலனப்படங்களுடன் ஒரே நேரத்தில் போட்டியிட அவசியம் இல்லை. தமிழ்படங்களுக்கு ஒரு தனியான மூலதன சந்தை கிடைத்தது. இதனால் படத்தயாரிப்பு சீராக பெருக்கம் கொண்டது.

படத்தயாரிப்பு நிறுவனங்கள் ஆங்காங்கு உருவாகி படங்களை உருவாக்கத் தொடங்கின. ஆனாலும் ஆரம்பத்தில் உருவான படத்தயாரிப்பு நிறுவனங்கள் நாலைந்து படங்களோடு மறைந்துவிடும் இயல்பைக் கொண்டிருந்தன. ஓர் தொடர்ச்சி பேணக்கூடிய தொழில்துறையாக தமிழ்படத் தயாரிப்பு இருந்தது. 1931ல் ஆரம்பித்த தமிழ்ப்படத் தயாரிப்பு வேகமாக வளர்ந்தது. 1935இல் மட்டும் 34 படங்கள் சென்னையில் தயாரிக்கப்பட்டன.

1935க்கும் 1942க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் மிக வலுவான ஐந்து சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் உதயமாயின. இந்த நிறுவனங்கள்தான் தமிழ் சினிமாவின் முகத்தை அதன் வளர்ச்சிப் போக்குகளை தீர்மானித்தன.

இந்த தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்கி யவர்கள்தான் தமிழ்சினிமாவின் பெரும் ஜாம் பவான்களாகவும் திகழ்ந்தனர். தமிழ் சினிமாவின் தனித்தன்மைக்கும் அதன் வளர்ச்சிக்கும் முன்னோடி களாகவும்கூட இவர்களே இருந்தனர்.

ஜெமினி - எஸ்.எஸ். வாசன்

ஏவிஎம் - ஏ.வி. மெய்யப்ப செட்டியார்

மார்டன் தியேட்டர்ஸ் - சுந்தரம்

பட்க்ஷ¢ராஜா ஸ்டூடியோ - ஸ்ரீராமுலு

ஜூபிடர் பிக்சர்ஸ் - சோமு, மொகைதீன்

1936 மார்டன் தியேட்டர்ஸ் உருவாக்கப்பட்டு படத்தயாரிப்புகளில் ஈடுபட்டது. 30 ஆண்டுகளுக்கு மேல் இந்நிறுவனம் படத்தயாரிப்பில் ஈடுபட்டது. சுந்தரம் மரணமடைந்த பிறகு அவரது மகன் படத்தயாரிப்பை தொடர்ந்தார். ஆனாலும் இந்நிறுவனம் தொடர்ந்து இயங்க முடியாதநிலை ஏற்பட்டது.

1941ல் ஜெமினி தொடங்கப்பட்டது. பல வெற்றிப் படங்கள் தயாரிக்கப்பட்டன. வாசனின் மறைவுக்கு பின்னரும் அவரது மகனால் படங்கள் தயாரிக்கப் பட்டன. ஆனால் தொடர்ந்து படத்தயாரிப்பில் ஜெமினி ஈடுபட முடியவில்லை.

மலைக்கள்ளன், கன்னிகா போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த ஸ்ரீராமுலு நாயுடு மறைவுக்கு பின்னர் பட்க்ஷ¢ராஜா ஸ்டுடியோ மூடப்பட்டது. படத்தயாரிப்பில் ஈடுபட முடியவில்லை.

சோமு, முகைதீன் என்ற இரு நண்பர்கள் சேர்ந்து ஜூபிடர் பிக்சர்ஸ் சார்பில் பல வெற்றிப் படங்களை கொடுத்தார்கள். ஆனாலும் பல படங்களின் தோல்வியால் படத்தயாரிப்புகளில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை. சோமுவின் மகன் தயாரிப்பில் சிலகாலம் ஈடுபட்டார். இருந்தும் ஜூபிடர் இன்று இல்லாமல் போய்விட்டது.

இந்த நிறுவனங்களுக்கு எல்லாம் விதிவிலக்காக இன்றுவரை படத்தயாரிப்பில் ஈடுபடக்கூடிய நிறுவனமாக இருப்பது ஏவிஎம் மட்டும்தான்.

1947 முதல் தொடர்ந்து ஏவிஎம் படம் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தை உரு வாக்கிய எ.வி. மெய்யப்பசெட்டியாரின் அறிவும், கடின உழைப்பும் தமிழ்சினிமா வரலாற்றில் படத்தயாரிப்பு தொழிலில் புதுப்பரிமாணம் கண்டது.

காரைக்குடியைச் சார்ந்தவர் மெய்யப்பன். இவரது தந்தை அக்கால நகரத்தார் சமூகத்தில் இருந்து வேறுபட்ட சிந்தனையும் செயல்தன்மையும் கொண்டவராக இருந்தார். நகரத்தாரின் தொழில் பெரும்பாலும் வட்டிக்கு கடன் தரும் லேவா தேவிதான். அவர்களின் முக்கிய வர்த்தகம் இது தான். இவர்கள் பர்மா, மலேயா, இலங்கை போன்ற கிழக்காசிய நாடுகளில் பரந்து வாழ்ந்து வந்தார்கள். இதனால் வெளிநாட்டுப் பணம் மிகுதியாகப் புழங்கியதால் காரைக்குடியில் வாழ்ந்து வந்த நகரத்தார் செல்வந்தர்களாகவே வாழ்ந்து வந்தார்கள்.

கையிலே பணம், கலைகளில் ஈடுபாடு, உதவிக்கு ஆட்கள், தன் வேலைகளைக் கவனிக்க ஒரு காரியதரிசி - இவை நகரத்தாருக்கு இருந்தாக வேண்டிய இன்றியமையாத அம்சங்களாகக் கருதப்பட்டன. இவை பாரம்பரிய மரபாகவேகூட கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. இந்த மரபை உடைத்தவர்தான் ஆவிச்சி செட்டியார். இவர் வட்டித் தொழிலில் கவனம் செலுத்தவில்லை. இங்கேயே இருந்து எவ்வளவோ செய்ய முடியும்; சாதிக்க முடியும் என்ற சிந்தனையில் இருந்து செயற்பட்டார்.

பணத்தேவைக்காக அக்கிரகார வீடுகள் சிலசமயம் விற்பனைக்கு வந்த போது நகரத்தார் அந்த வீடுகளை வாங்குவதில்லை. குருக்கள்மார் வாழ்ந்த வீட்டை வாங்கக்கூடாது என்ற கருத்து நகரத்தாரிடையே ஓர் நம்பிக்கையாகவே இருந்தது.

இந்த மரபை ஆவிச்சி செட்டியார் மீறினார். இரண்டு அக்கிரகார வீடுகளை வாங்கினார். அங்கு ஏவி அண்ட் சன்ஸ் என்ற கடையை தொடங்கினார். ராஜாஜி கெஸ்ட் ஹவுஸ், லட்சுமி பஜார் ஆகியவற்றையும் உருவாக்கினார். காரைக்குடியில் அப்படியொரு பலசரக்குக் கடை இதுபோல் இல்லை என்ற நிலையை உருவாக்கினார்.

வியாபாரத்தின் நுணுக்கமும் புதுமையும் காரைக்குடி மக்களின் கவனத்தை ஈர்த்தது. கடை வியாபாரத்தின் நுணுக்கங்கள் மெய்யப்பனுக்கும் ஆழமாக பதிந்தது. எட்டாவது படித்துக் கொண்டிருந்த போது கடைவியாபாரத்தை பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை மெய்யப்பனுக்கு ஏற்பட்டது.

ஏவி அண்ட் சன்ஸ் கடையின் பொறுப்பை மெய்யப்பன் ஏற்றுக் கொண்டார். தந்தை வழியே புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் சாதிக்க வேண்டுமென்ற துடிப்பு மெய்யப்பரிடம் இயல்பாகவே இருந்தது. புதிய வியாபாரங்களை நோக்கி மெய்யப்பன் அக்கறை கொண்டார்.

கிராம·போன் ரிகார்ட் கம்பெனிகளான எச்எம்வி, கொலம்பியா ஆகியவற்றின் இசைத்தட்டு விநியோக உரிமையை ஏவி அண்ட் சன்ஸ் ஏற்கெனவே பெற்றிருந்தது. இதனால் இசைத்தட்டு தயாரிப்பில் ஈடுபடக் கூடிய நம்பிக்கையை கொடுத்தது.

மெய்யப்பன் இசைத்தட்டு தயாரிப்பில் முழுமூச்சுடன் ஈடுபட்டார். கே.எஸ். நாராயண ஐயங்கார், சிவன் செட்டியார் ஆகியோரை பங்குதாரர்களாக இணைத்துக்கொண்டார். ஓடியன் ரிகார்டிங் கம்பெனி என்ற ஜெர்மன் நாட்டு நிறுவனத்துடன் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டார் ஏவிஎம்.

இசைத்தட்டு தயாரிப்பில் புதுமை செய்து, புகழும் விற்பனையில் சாதனையும் காணத் தொடங்கினார். மக்கள் ரசனையை நாடிபிடித்து பல நுணுக்கங்களை கையாளும் தன்மையை ஏவிஎம் கொண்டிருந்தார்.

1934ல் ஏவிஎம் சரஸ்வதி சவுண்ட் புரொடக்ஷன்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். 'அல்லி அர்ஜூனா' என்ற படத்தை 1935ல் தயாரித்தார். சென்னையில் ஸ்டுடியோ வசதி இல்லாததால் கல்கத்தாவில் சென்று படம் எடுத்தார்.

படம் முடிந்தவுடன் போட்டுப் பார்த்தார். ஒரே அதிர்ச்சி. ஒளி பாய்ச்சும் விளக்குகளின் வெளிச்சம் நடிக நடிகையரின் கண்களுக்குப் பரிச்சயமாகாத நாட்கள் அவை. கதாநாயகன் விளக்கு வெளிச்சத்தின் கூச்சம் தாங்காமல் முக்கால்வாசி பாகம் வரை கண்களை மூடிய படியே நடித்திருந்தார். இதனால் ஒருமாத உழைப்பு எண்பதாயிரம் ரூபாய் நஷ்டமாயிற்று.

ஆனாலும் ஏவிஎம் தளர்ந்து போய்விடவில்லை. தோல்விதான் வெற்றிக்கான படிக்கட்டு என்று இரண்டாவது படத் தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கினார். ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் ரத்னாவளி (1936) தயாரிக்கப்பட்டது. படம் பிரமாதமாக வந்துள்ளது என்ற நம்பிக்கையில் ஏவிஎம் இருந்தார்.

படத்தை போட்டுப் பார்த்தார். இப்படத்திலும் கோளாறு இருந்தது. காமிராவும் சவுண்டும் சரியான வேகத்தில் இணையாத தொழில் நுட்பக் கோளாறு. 'அம்மா' என்று உதடுகள் அசைந்தால் சில வினாடிகள் கழித்துதான் உச்சரிப்பு கேட்கும். இந்தப் படமும் தோல்வி.

தோல்விக்கான காரணங்கள் என்னவென்பதை தனக்குத்தானே கேட்கத் தொடங்கினார். பம்பாய்க்கும் கல்கத்தாவுக்கும் எத்தனை நாளைக்கு ஓடிக் கொண்டிருக்க முடியும்? நமக்கென்று சொந்தமாக ஸ்டுடியோ இருக்க வேண்டுமென்ற சிந்தனைக்கு வந்து சேர்ந்தார்.

சொந்தமாக ஸ்டுடியோ வேண்டுமென்ற உந்துதல் உருவாகிவர மறுபுறம் மூன்றாவது படத்தயாரிப்பில் ஈடுபட்டார். நந்தகுமார் (1938) என்ற படத்தை தயாரித்தார். இதில் டி.ஆர். மகாலிங்கம் நடித்தார். இது டி.ஆர். மகாலிங்கத்திற்கு முதல் படம்.

இந்தப் படத்தை போட்டுப் பார்த்தார். டி.ஆர். மகாலிங்கத்தின் குரலுக்கும் தேவகி என்ற பாத்திரத்தில் நடித்த பெண்ணின் குரலுக்கும் பொருந்தவே இல்லை. இதனால் ஏவிஎம் சோர்ந்து போய்விடவில்லை. லலிதா வெங்கட்ராமன் என்ற பாடகியை பம்பாயிலிருந்து அழைத்து வந்து பாடலை ஒலிப்பதிவு செய்து அதை தேவகிக்காக பயன்படுத்திக் கொண்டார். அந்தப் பாடல் காட்சி லலிதாவின் பாடலுக்கேற்ப நடிகை வாயசைக்க மீண்டும் படமாக்கப்பட்டது.

பின்னணிப் பாடல் என்கிற அம்சம் தமிழ் திரையுலகில் முதலில் அறிமுகமானது அப்போதுதான். அறிமுகப்படுத்திய பெருமை ஏவிஎம் க்கு உரியது.

தொடர்ந்து மூன்று படங்களும் ஏவிஎம்க்கு பெரும் தோல்வி. ஆனாலும் படத்தயாரிப்பில் இருந்து ஒரேடியாக ஓடமுடியவில்லை. ஒரு சவாலாகவே கருதி படத் தயாரிப்பில் ஈடுபடக்கூடிய உறுதிக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ளத் தொடங்கினார்.

சொந்தமாக ஒரு ஸ்டுடியோ வேண்டும் என்பதில் ஏவிஎம் உறுதியாகவே இருந்தார். அதற்கான முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினார். பெங்களூரில் ஸ்டுடியோ உருவாக்க எண்ணினார். பின்னர் அந்த முடிவு கைவிடப்படடு சென்னையில் உருவாக்க வேண்டுமென்பதில் விடாப்பிடியாகவே இருந்தார்.

படத்தயாரிப்பு முயற்சிகளிலும் விடாது செயற் பட்டார். தெலுங்கு படவுலகிலும் கால் வைத்தார். பூகைலாஸ் (1940) என்ற படத்தை தயாரித்தார். ஆந்திராவில் வெள்ளிவிழா கொண்டாடியது. வெற்றிப் பாதையில் ஏவிஎம் ஐ அழைத்துச் சென்றது. தொடர்ந்து வசந்தசேனா, ஹரிச்சந்திரா, சபாபதி, என்மனைவி போன்ற படங்களை தயாரித்தார். இவற்றில் சபாபதி படத்தை ஏவிஎம் அவர்களே இயக்கியிருந்தார். அவர் இயக்கிய முதல் படம் இதுவாகும்.

ஸ்ரீவள்ளி (1945) என்ற பக்திப்படத்தை வெற்றி படமாக்க முடிவு செய்து திட்டமிட்டு தயாரித்தார். படப்பிடிப்பு முடிந்து தியேட்டரில் போட்டுப் பார்த்த போதுதான் குறை தெரிந்தது. மகாலிங்கத்தின் குரலுக்கு ருக்மணியில் குரல் (நடிகை லட்சுமியின் அம்மா) பொருத்தமில்லாமல் இருந்தது. சட்டென ஏவிஎம் ஒரு முடிவு எடுத்தார். சிஏ. பெரியநாயகியின் குரல் பொருந்தி வரும் போலத் தெரிந்தது. அவரைக் கொண்டு வள்ளியின் பாடல்களைப் பாடச் சொல்லி ஒலிப்பதிவு செய்து 'போஸ்ட் சின்கரனைசேஷன்' செய்து பார்க்க முடிவு செய்தார்.

அதாவது ஏற்கெனவே பாடி நடித்து படப்பிடிப்பை முடிந்த நிலையில் அந்த நடிகையின் வாயசைவுக்கு ஏற்ப வேறு ஒருவர் குரலைப் பதிவு செய்யும் முறைதான் இது. போஸ்ட் சின்கரனைசேஷன் என்ற முறையை முதன்முதலாக ஏவிஎம் சோதனை செய்து வெற்றி கண்டார்.

தேவகோட்டையில் சொந்த ஸ்டுடியோ உருவாக்கி னார். இங்கு 'நாம் இருவர்' என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படத்தில் பாரதி பாடல்கள் இடம்பெற பத்தாயிரம் ரூபாய் கொடுத்து உரிமை வாங்கியிருந்தார். இப்படம் 1947ல் வெளியானது. வேதாள உலகம் படத்தை முடித்துக் கொண்டு ஏவிஎம் ஸ்டுடியோ சென்னைக்கு பயணமானது.

தமிழ் சினிமா உலகில் ஏவிஎம் தயாரிப்பு தனித் தன்மை பொருந்தியதாக இருந்தது. ஏவிஎம்மின் கடின உழைப்பு, புதுமைமோகம் மக்கள் ரசனைக் கேற்ப படங்களை தயாரிக்க உதவியது. சென்னையில் தனது சொந்த ஸ்டுடியோவில் - ஏவிஎம்மில் தயாரித்த முதல் படம் வாழ்க்கை (1949). இதுவே மெய்யப்பரின் வாழ்க்கையையும் அடையாளம் காட்டியது. ஏவிஎம் ஸ்டுடியோ தமிழ் சினிமாவில் தன்னிகரற்று பேரும் புகழும் பெறக்கூடிய வாய்ப்பை அமைத்துக் கொடுத்தது. படத்தயாரிப்பு நிறுவனம் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாகவும் ஏவிஎம் அமைந்தது. இந்தச் சிறப்புக்கெல்லாம் மெய்யப்பரின் அபாரத் திறமைகள்தான் காரணம்.

தொடர்ந்து ஓர் இரவு (1950) பராசக்தி, பெண், அந்தநாள், குலதெய்வம், சர்வர்சுந்தரம், களத்தூர் கண்ணம்மா, அன்னை, நானும் ஒரு பெண், உயர்ந்த மனிதன், அன்போ வா உள்ளிட்ட படங்கள் ஏவிஎம் தயாரிப்பு என்பதற்கான தனியான மவுசை அடை யாளத்தை தமிழில் உருவாக்கியது. மெய்யப்பரின் தெளிவான நோக்கமும் திட்டமிடலும் ஏவிஎம் நிறுவனம் தொடர்ந்து இன்றுவரை இயங்குவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

இந்திய அளவிலும் ஏவிஎம் நிறுவனம் தனிமுத்திரை கொண்ட நிறுவனமாக எல்லோரது பாராட்டுக்கும் உரியதாகியது. பல்வேறு விருதுகள் கெளரவங்கள் ஏவிஎம் தயாரிப்பில் உருவான படங்களுக்கு கிடைத்தது. ஏவிஎம் நிறுவனத்தில் பணிபுரிவதை ஒவ்வொரு துறைசார் கலைஞர்களும் பெருமையாக நினைத்தார்கள். கட்டுப்பாடும் ஒழுக்கமும் எங்கும் இருக்க வேண்டுமென்பதில் மெய்யப்பர் உறுதி யாகவே இருந்தார்.

தயாரிப்புத் தொழிலை கெளரவமாக நடத்த வேண்டுமென்பதில் மெய்யப்பர் தெளிவாகவே இருந்தார். இதில் விட்டுக்கொடுப்புக்கும் சமரசத் துக்கும் இடம் கொடாமல் இருந்தார். 'அந்தநாள்' படத்தின் இயக்குநர் வீணை எஸ். பாலசந்தர். இப்படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்த முக்தா சீனிவாசன் ஒரு சம்பவத்தை நினைவுகூறுகிறார்.

''பாலசந்தர் ஒருநாள் செட்டுக்கு டைரக்ட் செய்ய கைலியைக் கட்டிக்கொண்டு அரைக்கை பனியனை போட்டுக் கொண்டு வந்தார். படப்பிடிப்பு தொடங் கியது. செட்டுக்கு வந்த செட்டியார் எஸ்.பாலசந்தரைப் பார்த்துவிட்டு என்னை கைஜாடையாக தன்னை வந்து பார்க்கும்படி சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

சற்று நேரத்தில் நான் அவர் அறைக்குச் சென்றேன். அவருடன் தயாரிப்பு நிர்வாகி வாசுமேனனும் நின்று கொண்டிருந்தார். உள்ளே நுழைந்த என்னைப் பார்த்து செட்டியார் ஏகமாக சத்தம் போடத் தொடங்கினார்.

''இது என்னய்யா... இது! வேலை செய்யற இடத்துக்குப் பனியனையும், கைலியையும் கட்டிக்கொண்டு வந்திருக்கார் உன் டைரக்டர்! கைலி கட்டிக்கிட்டா அசிரத்தையா தெரியுதில்லே? ஓய்வு நேரத்திலே கட்டிக்கிற கைலியை ஒர்க் பண்ணும் போது கட்டலாமா? நாளையிலேர்ந்து அவரை நல்ல உடையிலே வரச் சொல்லுங்க... இல்லேன்னா படத்தை நிறுத்திவிடலாம். இதை நீங்கள் இரண்டு பேருமா போய் சாயங்காலம் சொல்லுங்க'' என்று எங்களை விரட்டிவிட்டார். ஒருவாரு முக்தா சீனிவாசனும் வாசுமேனனும் தயங்கித் தயங்கி டைரக்டர் எஸ்.பாலசந்தரிடம் கூறினார்கள். மறுநாள் செட்டுக்கு வரும்போது பேன்ட், சட்டையுடன் முறையான உடையில் வந்தார். மெய்யப்பன் கூறியதன் உண்மைநிலையை நியாயத்தை எஸ்.பாலசந்தர் புரிந்து கொண்டார்.

இவைத்தான் ஏவிஎம் நிறுவனம் இன்றுவரை தொடர்ந்து அவருக்கு பின்னால் இயங்குவதற்கு காரணம் தமிழ் சினிமா உலகில் ஓர் முன்னோடி என்று கருதுமளவிற்கு பல்வேறு சிறப்புகளுக்கும், தகுதி களுக்கும் சொந்தகாரனாக இருந்துள்ளார். எதிலும் தெளிவும் துணிச்சலும்தான் மெய்யப்பரின் தனித்தன்மைகள். இவை இன்றைய தயாரிப்பாளர் களிடம் தேடியும் காண முடியாதவை. ஐம்பது ஆண்டுகள் அவரது அயராத உழைப்பின் வியர்வையின் அடையாளம் தான் ஏவிஎம்.

1979 ஆக்ஸ்ட் 12ம் தேதி ஏ.வி. மெய்யப்பர் இவ்வுலகை விட்டு நீங்கினார். அவர் உருவாக்கிய ஏவிஎம் நிறுவனமும் அதன் வழி தயாரித்த படங்களும் படத்தயாரிப்பில் அவர் உருவாக்கிய புதுமைகளும் 'ஏ.வி.எம்' தமிழ்த் திரை உலக முன்னோடி வரிசையில் தனித்தன்மை பொருந்தியவராக உள்ளார் என்பதை பறைசாற்றுகிறது.

தெ.மதுசூதனன்

© TamilOnline.com