ஓர் ஆலமரத்தின் முழுஆற்றல் அதன் விதையினுள் அடக்கம். அதைப்போல நமது ஆற்றல், சிறப்பு, உயர்வு இவையாவுமே நமது எண்ணங்களில் கருவாக அடங்கியுள்ளது. இந்த எண்ணங்கள் வலுவாவதற்கும், வடிவாவதற்கும் உறுதுணையாக இருப்பது உந்துதல்.
உந்துதலை வெளியிலிருந்து பெறுவதைவிட நம்மிடத்தில் நாமே உருவாக்கி ஊக்கிக் கொள்வது தான் இன்றைய காலகட்டத்திற்கு உகந்தது.
வெளியிலிருந்து பெறும் ஊந்துதல் நிரந்தர மானவை அல்ல. அவை ஒருவனை உறக்கத்திலிருந்து விழித்தெழுச் செய்யுமே தவிர, நிமிர்ந்து நிற்பதற்கும் சிகரங்களில் ஏறி உச்சியை அடைவதற்கும் உள்மன உந்துதலே மிக்க தேவையானது. உள் மன உந்தலின் தன்மையை, வலிமையை விளக்குவதற்கு, இந்த யானையின் கதை படிக்கலாமா?
அதோ... அந்த பருத்த யானைக்கு காட்டிலே இருக்கின்ற ஒரு சிறிய குருவி நண்பன். மாலைப் பொழுதினில் பறவை தான் பறந்து, ரசித்த காட்சிகளை யானையிடம் கூறும். இதை கேட்ட யானைக்கு தானும் பறக்க வேண்டும் என்ற ஆசை.
''உன்னைப் போல் நானும் பறக்கவேண்டுமே! உதவி செய்வாயா?'' என்று யானை நச்சரிக்கத் தொடங்கியது. குருவியும் ஒருநாள் தனது இறக்கையிலிருந்து இரு சிறகுகளை எடுத்து இதை காதில் வைத்துக் கொண்டு உனது கால்களை படபடவென்று அடித்துக் கொள், பறந்து விடுவாய்'' என்று கூறிவிட்டுச் சென்றது.
மறுநாள் 'யானை ஏமாந்துபோயிருக்கும். அதற்கு ஆறுதல் கூறவேண்டும்' என்று சோகமுடன் காத்தி ருந்தது குருவி. அங்கே குதித்து குதித்து குதூகலத் துடன் யானை ''நண்பா! உனது இறகுகளால் நான் பல அடிகள் உயரே பறந்து காணாத காட்சிகளை கண்டு ரசித்தேன். நன்றி பலகோடி'' என்றது.
குருவி
''உன்னை பறக்கச் செய்தது எனது இறகுகள் அல்ல!
உன்னால் முடியும் என்ற உன் உள் மன உந்துதலே''
ஆம்!
முடியாது நடவாது என்பதெல்லாம் முடமான வாதங்கள்! இல்லை என்பது இல்லவே இல்லை. ஆனால் உள் மன உந்துதலுக்கு எல்லை இல்லை!!
ராகவன் கண்ணன் |