தீபாவளி மருந்து
தேவையான பொருட்கள்
மிளகு - 50 கிராம்
ஓமம் - 50 கிராம்
சீரகம் - 2 ஸ்பூன்
சுக்கு - 4 அங்குலம் நீளம் (விரல் நீளம்)
அரிசி திப்பிலி - 10 துகள்
ஏலக்காய் - 4
வெல்லம் - 200 கிராம்
தேன் - 2 ஸ்பூன்
இஞ்சி ஜூஸ் - 1 கரண்டி
எலுமிச்சம் பழம் - 1 மூடி
வெண்ணெய் - 1/4 கிலோ
கண்டந்திப்பிலி - 6

முதல்வகை

செய்முறை

மிளகு, ஓமம், சீரகம், சுக்கு, அரிசி திப்பிலி, ஏலக்காய், கண்டந்திப்பிலி இவற்றை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து மிக்ஸியில் பொடித்து மாவு சல்லடையில் சலித்து வைக்கவும்.

கல்சட்டியில் 1/4 டம்ளர் தண்ணீர் விட்டு வெல்லத்தை போட்டு கரைய விடவும்.

வெல்லம் கரைந்ததும் கல்மண் அரித்து வடிகட்டி மறுபடியும் கொதிக்க விடவும்.

சல்லடையில் சலித்து வைத்த மருந்து பவுடரை முக்கால் டம்ளர் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து கொதிக்கும் வெல்ல பாகில் விட்டு கைவிடாமல் கிளறவும். இஞ்சி ஜூஸ் விடவும்.

வெண்ணெயை போட்டு கிளறவும். (அல்லது நெய்யாக காயச்சியும் விடலாம்) கெட்டியானதும் கீழே இறக்கி வைத்து நன்றாக ஆறியதும் தேன்விட்டு எலுமிச்சம் பழம் 1 மூடி பிழியவும்.

இரண்டாம் வகை

மருந்து சாமான்களை பொடி செய்வதற்கு பதிலாக முதல் நாள் இரவு ஊற வைத்து மிக்ஸியில் நன்றாக நைஸாக அரைத்து கரைத்து முதல் வகையில் சொன்னது போல் வெல்லத்தை கரைய விட்டு அரைத்து கரைத்த மருந்து விழுதை போட்டு கிளறி நெய் அல்லது வெண்ணை விட்டு அதே முறையில் செய்யவும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com