நவம்பர் 9ம் தேதி மெக்ஸிகன் ஹெரிடேஜ் தியேட்டர், சான் ஹோசேவில் நடந்த அபிநயா நாடக கம்பெனியின் நாட்டிய நிகழ்ச்சி குறித்து பாரு பாரு ஆட்டம் பாரு பலேஜோரு..., அபிநயா நாட்டிய குழுவின் ஆட்டம் பாரு..., ஆஷா அணியின் பாட்டு பக்க வாத்யம் கேளு...
ஆட்டத்தின் ஆரம்பம் ஐந்து வித உபசாரம் அருமை, மாளவிகாக்னி மித்ரா மனதை விட்டு மறையவில்லை. கிருஷ்ணனின் விளையாட்டில் மயங்காதார் உண்டோ? தராசு தானே இறங்கியது மிக தத்ரூபம். நாரதர் நளினமுடன் கலகத்தை நல்லபடி தீர்த்து வைத்தது அருமை. பால மீனாக்ஷி பளிச் என அக்னியை விட்டு எழுந்தது பலே பலே! மங்கை மீனாக்ஷி, வீர மீனாக்ஷி, மணமகள் மீனாக்ஷி என மூன்று விதமாய் மயில் நடையுடன் ஒயிலாக வந்து அசத்தியது மதுரை மீனாக்ஷியா, மைதிலி குமாரா? மனதில் எழுந்த ஐயம் நீங்க சில நிமிடங்களாயின.
வாடாமல்லி கலர் உடையில் வலம் வந்தது போக மரகத மீனாக்ஷ¢, பச்சை வண்ண உடையில் பவனி வந்தால் இன்னும் பிரமாதமாயிருக்குமே. மசாலா ராணியின் கதையில் மிக மசாலாக்கள் இருந்ததால் மனம் லயிக்காவிடினும் அபிநயா குழுவின் அபிநயம் மிக அற்புதம். கதைக்கேற்ப கதாபாத்திரத்திற்கேற்ப மெய்குரல் பொய்குரலில் பாடி அசத்திய ஆஷாவிற்கும் ஒத்துழைப்பு தந்த அணியினருக்கும் பாராட்டுக்கள். அபிநயாவின் அடுத்த படைப்பு என்ன அறிய ஆவல்!!
சீதா துரைராஜ் |