தென் கலிபோர்னியாவில் 'காசு மேல காசு'
கலிபோர்னியா முத்தமிழ் சங்கம் வழங்கிய மற்றும் ஒரு தரமான நிகழ்வு நவம்பர் மாதம் 9ம் தேதி றெசீடா மேல்நிலைப் பாடசாலை அரங்கில் அடாதுமழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்துவோம் என்று முனைப்பாக நின்று நாடகத்தை நடத்தி முடித்தது சங்கம்.

காலநிலையையும் பொருட்படுத்தாது வருகை தந்த 250-300 வரையிலான ரசிகர் கூட்டத்திற்கு, நளினி நடராஜன் வரவேற்புரையும், ஐஸ்வர்யா ரவி தமிழ் தாய் வாழ்த்தும், சங்க தலைவர் ஜேன் டேவிட் தலைமையுரையும் வழங்கி நாடகத்தை தொடங்கி வைத்தனர்.

வடகலிபோர்னியாவின் வளைகுடாப்பகுதியில் வசிக்கும் 25க்கும் மேற்பட்ட அதிஉயர் தொழில் நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுதான் 'நாடக்'. நாடககுழு. மணிராம் - இயக்குனர், நடிகர் என்ற இரட்டை வேடம் தாங்கி ஒரு தரமான நாடகத்தை தயாரித்து வழங்கியது பாராட்டப்பட வேண்டிய விஷயம். மேலை நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் பல இளம்தொழில் வல்லுனர்களின் காசு மேலான அதீத ஆசை அடிப்படை மனிதஉறவுகளையும், மனிதநேயங்களையும், குடும்ப பிணைப்புகளையும் எவ்வாறு பாதிக்க முடியும் என்பதற்கு இந்த நாடக நிகழ்வுகள் ஒரு சாட்சி. 'எப்படியும் வாழலாம்' என்று இல்லாது 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்று இளம் சமுதாயத்திற்கு நகைச்சுவை கலந்து அறிவு போதித்தது இந்த நாடகம்.

ஐந்து நண்பர்கள் அவர்களில் ஒருவர் பெண். வேலைத்தேடி வாழ்க்கை முறையின் பலவீனங்களுக்கூடாக எப்படி கோடி ரூபாய் சேர்ப்பது என்பதே கரு. சட்டதிட்டங்களிற்குள் இருக்கும் பலவீனங்களைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் காசு சேர்க்கும் கதாநாயகன் அதிக பேராசையினால் நண்பர்களை இழந்து, பெற்றோரை பிரிந்து காதலியினால் கைவிடப்பட்டு, இறுதியில் மனச்சாட்சியினால் திருத்தப்படுகிறான். உரையாடல்களில் விவேகம் தெரிந்தது. ஒலி, ஒளி, காட்சி அமைப்புகள் திறம்பட அமைத்திருந்த இயக்குனர் பல யுத்திகளை கையாண்டு நாடக ஓட்டத்திற்கு உயிர் கொடுத்திருந்தார்.

நாட்டுப்புற தமிழ் பேசிய அம்மா, அப்பா. வயோதிக நோயாளி என்று ஒரு புறமும், மேலைத்தேய மோகத்தில் உழன்று திரிந்த சினேகிதன் ஒருவனும் திறம்பட நடித்தனர். நண்பர்கள் ஐவரும் தங்கள் தங்கள் பாத்திரங்களை சொந்தப் பாணியில் திறம்பட நடித்திருந்தார்கள். ஆனந்த் ஒருபடி மேல் சென்று regisஆக வந்தவரை உருட்டி எடுத்தது. நாடகத்தின் உச்சக்கட்டம். ஆனந்தின் காதலியாக வந்த பிரியா 'காசு மேல காசு' என்ற அலையில் அடிபட்டு போகாது உறுதியாக நின்றது ஒரு திருப்பம். அப்பாவாக வந்த மணிராம், தன் மகன் ஆன்ந்த் மதுபோதையின் தாக்கத்தல் தன்னை அவமதித்த போது, உணர்ச்சிப் பிழம்பாக கொதித்தது. பலர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இது வெறுமனே சிரிப்பு நாடகமாக இல்லாமல் நிறையவே செய்திகளை பரப்பி இருப்பது வரவேற்கத் தக்கது.

முரளிதரன் நன்றி கூறி, இசை சங்க நிர்வாகிகள் ஹோல், முரளிகிருஷ்ணன் நாடகக் குழுவிற்கு நினைவு சின்னம் வழங்கி விழாவை நிறைவு செய்தனர். ஒரு தரமான நாடகத்தை தயாரித்த மணிராம், தென் கலிபோர்னியா வாழ் மக்களிற்கு வழங்கிய கலிபோர்னியா முத்தமிழ் சங்கம் இருவரும் பாரட்டப்பட வேண்டியவர்கள்.

அடுத்த தரமான நிகழ்வு எப்போது என்ற கூட்டத்தின் முணுமுணுப்பு மழைத் தூறல்களையும் மீறி ஒலித்தது.

பிரகாசம்

© TamilOnline.com