டிசம்பர் 2002 : வாசகர் கடிதம்
அமெரிக்க மண்ணில்வாழ் தமிழ்மக்கள் மகிழ்ந்திடவே
இரண்டாமாண்டு கடந்து வரும் தென்றலெனும் திங்களுமே
ஆலின் விழுதுபோல் கிளைபரப்பி மணம்பரப்பி
வாழி!வாழி! இதமான இலக்கியக் காற்றாய் என்றும்

டாக்டர்.அலர்மேலு ரிஷி
சென்னை

******


ஆயன் குழலுக்கடங்கும் பசுக்களைப் போல
மாமன் முகத்துக்கு மயங்கும மகளிரைப்போல்
தாயின் குரலுக்குத் தாவி வரும் மக்களைப் போல்
தமிழினில் ஒலி கேட்க சபைநிறைந்த பெரியோரை
என்ற கவிஞரின் (கண்ணதாசன்) கூற்றுப்படி, தமி ஒலிதனை
கடல்கடந்து கேட்க வைத்த (படிக்கவைத்த) உமக்கு நன்றி உரித்தாகுக.

சூரிய ஸ்வாமி

******


TI2002 பற்றிய என்ன ஒரு விரிவான தொகுப்பு! சக பத்திரிகையாளர்கள் செய்வதுபோல இம்மாநாட்டில் இருந்த ஒரு சில குறைகளைப் பெரிதுபடுத்தி ஒட்டு மொத்த மாநாடே தண்டம் என்று கூறியிருக்கலாம். ஆனால் தென்றலோ அவ்வாறு செய்யவில்லை. தமிழ் இணைய மாநாடு பற்றிய உள்ளம் கவரும் வண்ணம் அமைந்த கட்டுரை. தென்றல் உண்மையிலேயே சமுதாய விழிப்புடைய பத்திரிகை தான். இப்பத்திரிகை எங்கள் பகுதியில் வெளியாவது எங்களது அதிர்ஷ்டமே.

இந்தத் தொகுப்பினை வழங்கிய குழுவினர் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

அருண் மகிழ்ணன்

******


நேற்று எனக்கு எதிர்பராத, ஆனால் ஏங்கிக்கொண்டிருந்த இன்ப அதிர்ச்சி நிகழ்ந்தது. சென்னையிலிருந்து கூரியர் மூலம் 'தென்றல்' இதழ் கிடைக்கப் பெற்றேன். சன்னிவேல் நகரில் வாழும் என் மகள் திருமதி கீதா சுந்தர் செய்தது இது (அவளது கடிதம் வாசகர் பகுதியில் வெளியாகியுள்ளது)

சென்ற ஜூன் முதல் செப்டம்பர் முடிய சன்னிவேலில் தங்கியிருந்தபோது தென்றல் கண்டேன். மிக மிகழ்ந்தேன். கடந்த 50 ஆண்டுகளில் நான் கண்ட தலையாய இதழ்களில் தென்றலும் ஒன்று. அமெரிக்காவில் பார்த்து மகிழ்ந்தவைகளை விடப் படித்து மகிழ்ந்த தென்றலே நினைவில் நிலைத்துள்ளது. தாயகம் திரும்பும் போது சந்தா செலுத்த எண்ணியிருந்தேன். தவறிவிட்டது. என் மகள் எனக்களித்த பரிசுகளில் இதை தலையாயதாகக் கருதுகிறேன்.

நேற்று எங்கள் ஊர் கிருஷ்ணர் கோவிலில் சத்யநாராயண பூஜை முடிவில் உங்கள் இதழைப் பற்றிக்கூறி, நாம மகிமை பற்றி வெளியாகியிருந்த கட்டுரையைப் படித்துக் காட்டினேன். அனைவரும் வியந்து வாழ்த்தினர்.

நான் தென்றலுக்காகவே மறுபடியும் அமெரிக்கா வரலாமா என நினைக்கிறேன்.

கார்த்திகேயன்

******


வணக்கம். கடந்த சில மாதங்களாக விசிட்டர் என்கிற முறையில் அமெரிக்க மண்ணில் தங்கி, இயற்கையன்னையுடன் உறவாட முடிந்தது என்பாக்கியம். இயற்கையில் கிடைத்த தென்றல் தந்த தாலாட்டு, புறச்சுகமென்றால் இலவசமாய் நான் பெற்ற இலக்கியத் தென்றல் அகத்துக்கு சுகமளித்தது. பிரமித்துவிட்டேன். தமிழகத்தில் நான் காணும் தரத்தினுக்கு மேலாகவே (அதிலும் இலவசமாய் எனும்போது) இருப்பதைக் காணும்போது, ''தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா'' என்ற வரிகள் நெஞ்சை நிமிர்த்துகின்றது.

இந்திரா ராமதுரை

******


கடந்த ஐந்து மாதங்களாக அமெரிக்காவில் மனைவியுடன் சுற்றுப்பயணம் செய்கிறேன். ஹ¥ஸ்டன் நகரத்தில் மூன்று மாதங்களும், டல்லஸ் நகரத்தில் ஒரு மாதமும் தங்கிவிட்டு இங்கு வந்துள்ளோம். ஒரு இந்திய அங்காடியில் 2002, நவம்பர் மாத தென்றலைக் கண்டேன். மகிழ்வுற்றேன். புதையலைக் கண்ட மாதிரி உணர்வு பெற்றேன்.

கஜேந்திரன்

கடந்த ஆறுமாதங்களாக தங்களது இதழைப் படித்து மகிழ்வுற்றேன். நன்றி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

கி.த. ராசன்

******


ஓ தென்றலே...!

பொதிகைத் தென்றலின் வாசத்தில்
திளைத்து வாழ்ந்திடும் நான்
விரிகுடாத் 'தென்றலின்' முகம்
பார்த்து மகிழ்ந்திடும் நேரமிது!

மைல்கள் பலகடந்து வாழ்ந்தாலும்
மனம் பாயுது தமிழின்பால்
கலைகள் பல பயின்று இருந்தாலும்
தினம் நாடுது தமிழர்பால்!

சாதிகள் பலவாக இருந்தாலும்
முகங்கள் தெரிவது மொழியாலன்றோ
பணிகள் மிகவாக அமைந்தாலும்
உணர்வுகள் இதமாவது தமிழாலன்றோ!

தாய்நாட்டு சேதிகள் தெரிந்திடவே
வாழ்நாட்டு சூழல்கள் புரிந்திடவே
திங்கள்தோறும் புறப்படும் தென்றல்
தமிழில்லம்தோறும் வீசிட வாழ்த்துக்கள்!

நெல்லை திருமலை ராஜன்

******


சில மாதங்கள் இங்கே தங்குவதற்கு, இந்தியாவிலிருந்து நான் வரும்போதே எப்படி இங்கே பொழுதைப் போக்கப்போகிறோம், தமிழ் தவிர வேறுபாஷையும் தெரியாதே என்று யோசித்துக் கொண்டே வந்த எனக்கு ஒரு இனிமையான தமிழ் 'தென்றல்' வீசியது.

சந்தோஷம் பிடிபடவில்லை எனக்கு. இரண்டு மாதங்களாக நானும் தென்றல் படித்து அனுபவித்து வருகிறேன்.

குமுதா ஸ்ரீனிவாசன்

******


இந்தியாவில் சென்னையில் அசோக்நகரிலிருந்து என் கணவருடன் sunnyvale உள்ள என் மூத்தமகன் வீட்டுக்கு வந்தேன். அங்கே தென்றல் பத்திரிகையை பார்த்தவுடன் மிக சந்தோஷத்துடன் சொல்லமுடியாத பிரமிப்பு அடைந்தேன். அமெரிக்காவில் இப்படி ஒர் பத்திரிக்கையா? அதுவும் இலவசமாக என்று மிகவும் சந்தோஷப்பட்டேன்.

அலர்மேலு கிருஷ்ணன்

******


தமிழ்நாட்டில் வருகின்ற, சில தரமுள்ள பத்திரிகைகளுக்கு இணையாக தங்கள் தென்றல் எல்லா அம்சங்களையும் கொண்டு படிக்க மிகவும் நன்றாக இருக்கிறது. வடஅமெரிக்காவில் வாழும் எண்ணற்ற தமிழர்களுக்கு தங்களது 'தென்றல்' ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையாகாது.

V.R. சேஷன்

© TamilOnline.com