தனிமரம்
கவி பாடும் 'தனிமையில் இனிமை' இல்லையிது
புவி யாளும் உச்சத்தின் ஒருமையுமில்லையிது
கரையில் தோணி தரையில் ஏணி.

இருளின் உருவுதெரியாமத் தனிமை.
தெருவில் திரிவோரின் தனிமை.
முதுமையின் பிடிப்பில்லாத் தனிமை.
தோல்வியின் துயர் தோய்ந்த தனிமை.

ஏனென்று தெரியாமல் பற்றிழந்த தனிமை.
எப்போதென்று உணராமல் உறவிழந்த தனிமை.
நடைபேச்சினூடே மெளனம் பார்த்துணரும் தனிமை.
எண்ணங்களின் நடுவில் மட்டும் வாழும் தனிமை
மரிக்குமுன் ஒருமுறை பறக்க சிறகு விரிக்கும் தனிமை.

ராஜா

******


முடியாது

தென்றலின் இதத்தில் சிலிர்க்கலாம்.
காற்றதனைக் கையில் பிடிக்கலாகுமோ?
காரிகையர் கை பிடிக்கலாம்.
கற்றாலும் அவர் கனவுகளை படிக்கலாகுமோ?

சந்தனத்தை மேலே பூசலாம்.
அதன் வாசம் போகும் வழி கட்ட இயலுமா?
சந்தனமேனியில் தூங்கலாம்.
அவர் மனப் போக்கை அறியவொட்டுமா?

மகிழதன் சுகந்த முகரலாம்.
மாற்றி இன்னொரு மணந்தர முடியுமா?
மகிழ்ந்து சுகம் பெறலாம்.
மங்கை மனம் மகிழ வைக்க முடியுமா?

தூவும் மழைநீரில் துளையலாம்.
தேவைபோல் அதைப் பெய்யெனக்கூடுமா?
தேவியவள் என் துணையென வாழலாம்.
என்னவள் என்றுடமையாக்கத்தான் முடியுமா?

ராஜா

© TamilOnline.com