அர்ச்சனை இலைகள்
(இந்த இலையுதிர்காலத்தில் உதிர்ந்து விட்ட என் அருமை சகோதரி விஜயலக்ஷ்மிக்கு அர்ப்பணம்)

அமெரிக்கக் கண்டத்தின் வடகிழக்குக் கோடி -
ஆயிரம் ஆயிரம் மக்களை ஈர்க்கும் திருவிழா -
ஆம் - அதுதான் இலையுதிர்கால வண்ணங்காண் திருவிழா.
(Fall colors)

எப்போ, எப்போ என்று ஆளுக்கு ஆள் விசாரிப்புடன்
அந்த நாளும் இதோ வந்தேவிட்டது.

வெண்மலை என்று பெயர் சொன்னார்கள்; நான் கண்டதோ
இந்திரன் வில்லின் வண்ணங்களை வாரி இறைக்கும் மலையை.

வழிநெடுகப் படிப்படியாக விரியும் வண்ணக் கம்பளங்கள்.
வாரிச்சுருட்டி அடைத்தாலும் செயலற்றுப் போயிற்று புகைப்படக்கருவி.
காணக் காணப் பிச்சியைப் போல் கூவி ஆடி அலைந்துவிட்டு
நாற்புறமும் மலைசூழ மரக்கூட்டங்களின் இடையே வியந்து நின்றேன்.

பின்னால் சலசலக்கும் இலைகளால் காதை உரசி ரகசியம் பேசும் கிசுகிசுப்பு;
திரும்பினேன்.
புதுமணப்பெண் போல் சிங்காரித்து நின்ற வண்ணமரம் பேசியது:

இது எங்களின் தொழுகைக் காலம்; ஆனால்
இதனை நீங்கள் அழைப்பதோ விழுகைப் பருவம்.

எங்களை வளர்த்து நிமிர்த்திய மண்மகளுக்கு நாங்கள் நன்றி நவிலும் காலமிது.

மானுடர் நீவிர் வண்ணப் பூங்கொத்துக்களைக் கையிலேந்தி வாழ்த்துவீர்;
ஆனால் நாங்களோ,
பச்சை, அடர்பச்சை, மஞ்சள், அதிலும் பலவனை, சிவப்பிலோ பலவிதம்
ஊதாவில்தான் எத்தனை எத்தனை, என்று
உங்கள் கைதேர்ந்த ஓவியனின் கலவைக்கும் அகப்படாத
எண்ணற்ற வண்ண இலைகளுடன்
பூங்கொத்துகளாகவே மாறி நின்று அணிவகுப்பு நடத்துகிறோமோ!

உங்கள் பூங்கோதை மாலவனுக்குப் பூச்சரம் சூட்டினாள்!;
மனுக்குலத்துக்குப் பாச்சரம் ஈந்தாள்; நாங்கள்
மலையரசனுக்குக் கூடை கூடையாகக்
கதம்பத்தை அள்ளியிறைத்து அலங்கரிக்கிறோம்.
ஒரு சிறு மாறுதல் - அது மலர்க்கதம்பம்; இது இலைக் கதம்பம்.

இந்த அழகும் அணிவகுப்பும் மிகச் சில நாட்களே என்கிறீர்கள்;
வாழும் நாள் சிலவாயினும் வண்ணமிக்கதாயிற்றே!

மிக விரைவிலேயே நாங்கள் இவ்வண்ண இலைகளை பூமித்தாய்க்கு அர்ச்சித்துவிட்டு
கைவறண்டு நிற்போம்; ஆனாலும் இச்சிறு கால அகவையில்
ஆபால கோபாலம் கண்டு வியக்கவும், நெஞ்சிருத்தி அசைபோடவுமாக
நாங்கள் செய்யும் விருந்தோம்பல்தான் என்னே!

அடுத்த ஆண்டும் வரும், அடுத்தடுத்த பல்லாண்டுகளிலும் நாங்கள்
பலமுறை துளிர்த்து வருவோம்; வண்ணம் காட்டுவோம்.
இது எங்களுக்கு இறைவன் வகுத்த நியதி.
நன்றி. மீண்டும் வருக.

(இதுவல்லவோ கர்மயோகம்! நேர்மறை சிந்தனையும் இதேயன்றோ?)
கனவு கலைந்தது; திடுக்கிட்டு நிமிர்ந்தேன்;

நெடுமால் மட்டும்தான் கீதை உபதேசிக்கலாமா? செவி மடுத்துக் கேட்பின்
நெடுமரம் உரைத்த கீதையும் அதற்கிணையானதே!

இருகரம் ஏந்தி அம்மரத்திடம் இரந்தேன்;
உன் வள்ளண்மையில் ஆயிரத்தில் ஒரு கூறு எனக்களியேன்;
என் செயலால் ஓரிரு ஆத்மாக்களையாவது மகிழ்விப்பேன்.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி

© TamilOnline.com