விலாங்கு
கள்ளிவெட்டிப் போட்டு ஒரு மணி நேரமாவது இருக்கும். துண்டு துண்டாக, இரண்டங்குல கனத்தில் திருகுக் கள்ளிகள் குட்டையாகத் தேங்கிக் கிடந்த தண்ணீரில் மிதந்தன. சில துண்டுகள் வெட்டுப்பட்ட வெள்ளை சோற்றுப் பாகத்தைக் காட்டிக் கொண்டு, சில ஜோடி ஜோடியான முள்முனை வரிசைகளை மாட்டுக் கொம்புகள் போல் நீட்டிக் கொண்டு கால்மாடு தலைமாடாக வசமில்லாமல் கிடந்து உறங்கும் பிள்ளைகள் போல் குட்டைத் தண்ணீர் முழுக்க மிதந்தன.

நல்ல நடுமத்தியானம். புன்னை மரக்கிளை களின் ஊடாக நங்கூரம் பாய்ச்சிய சூரியக் கற்றைகள் தண்ணீரைச் சூடாக்கிக் கொண்டிருந்தன. கள்ளிப்பால் பரவலாக தண்ணீர் முழுக்கப் பரந்து தண்ணீருக்கு ஒரு வெளுப்பு நிறத்தைக் கொடுத்தது. கள்ளிப் பாலின் வாடையும் வெக்கையும் சுற்றுப் புறத்தில் காரமாக வீசியது.

வெளியே எங்கும் நல்ல வெயில் காய்ந்தது. வற்றல், வடகம் உணக்குவதற்கு ஏற்ற வெயில். ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லை. நிலம் மழைக்காகக் காய்ந்து கிடப்பதால் வரப்போரப் புல்லை, அவிழ்த்து விடப்பட்ட பசுமாடுகள் கரப்பிக் கொண்டிருந்தன... காளையும் பசுவும், கன்றுமாக... தூரத்துக் கடுக்கா மர மூட்டின் கீழே சகதிபட்டுக்கிடந்த கால்வாயில் இரண்டு எருமைகள் வசமாய்ப் புரண்டு கொடுத்தன. கொம்பில் முன் உச்சி மண்டையில் தொழி அப்புவதை அலங்காரம் நடப்பது போல் கருதிக் கொண்டு சுகம் பெற்றன.

ஒன்றரை மணிக்கூருக்கு ஒரு பஸ் வீதம் வந்து போகும் கீல் ரோடு அது. ரோட்டின் தாழ பதினைந்தடி அகலமுள்ள வாய்க்கால், வாய்க்கால் தண்ணீர் ரோட்டின் அடியோடு பாய்ந்து போவதற்கு, குறுக்காகச் சிறிய பாலம். ஓராள் தலைதட்டாமல் நடந்து போகும் உயரமும் ஐந்தடி அகலமும் கொண்ட சுரங்க வழி போல, சுரங்கத்தில் ஓடிய தண்ணீர் வெளிச்சத்தில் வந்து விழும் இடத்தில் மண் பறிந்து பறிந்து சிறிய குட்டைபோல் பள்ளம் விழுந்திருந்தது. பள்ளத்தில் கரடு முரடான கருங்கல் துண்டுகள், கால்வாய்ப் பாலத்தின் இரண்டு விலாப் பக்கமும் செங்கல் மதில் சிறகுகள் சாய்வாக, எந்த ஆண்டில் கட்டப்பட்ட பாலமோ? செங்கல் வரிசைகளின் ஊடே எத்தனையோ இடுக்குகள்! புடைகள்!
கால்வாயின் இருபுறமும் புன்னைமரம் சரிவாக வளர்ந்து செழித்திருந்தது. குழியின் ஆழமும், கல்இடுக்குகளும் புடைகளும், ஓரங்களில் வளர்ந்திருந்த சேம்பிலைப் புதர்களுமாய் விலங்குகளுக்கும் மற்ற சில்லறை மீன்களுக்கும் நல்ல உறைவிடம் அமைத்துத் தந்தது.
நல்லமழை பெய்யும் மாதங்களானால், 'திமுதிமு' வென கால்வாயில் வெள்ளம் புரண்டு மறியும். கல்லில் மோதும், வெள்ளத்தின் வேகத்தில் பிரிந்த நீர்துளிகள் ரோட்டில் இருந்து குனிந்து பார்ப்பவரின் முகத்தில் 'சில்' லென்று தெறிக்கும்.

ஆனால் இது மழையற்ற மாதம். அக்கினி நட்சத்திரம் தீட்டிக்கொண்டிருந்தது. பெரிய குளத்தில் இன்னும் கால்குளம் வெள்ளம் கிடந்ததால் கால்வாயில் எப்போதும் ஒரு கசிவு உண்டு. நீர் கலங்கிக் கிடந்தாலும், ஆடுமாடுகள் இறங்கி மேய்ந்து தொழி பறிந்து நாற்றம் எடுத்தாலும் மீன்களின் துள்ளாட்டத் துக்குக் குறைவில்லை. பாலம் முடியும் இடத்தில் இருந்து இருபது முப்பது அடிநீளத்துக்கு இருகரையும் சேம்பு, கோரை, நீர் முள்ளி என ஏகமாய் சப்பும் சவறும் வளர்ந்து கிடந்தது.

பாலத்தின் முன்புறம், கால்வாயின் குறுக்கே முன்னணை கட்டி கசியும் தண்ணீரைத் தேக்கி இருந்தனர் பிலிப்பும் தவசியும். நல்ல திடமான அணை. ஒரு பொட்டுத் தண்ணீரும் கீழே கசியாது. இறை வட்டி கொண்டு வத்து பாலத்துக்குக் கீழிருக்கும் குண்டில் தேக்கிக் கிடந்த தண்ணீரை இறைத்து வெளி யேற்றினர். சுமாராக ஒரு பின்னணையும் போட்டாயிற்று.
தூரத்து வேலிகளில் இருந்து, தொண்டு விழாமல், பாலுள்ள இளம் திருகுக் கள்ளிகளாக வெட்டி கவையால் தூக்கி, கம்பில் வைத்து இருகரையும் தோள் போட்டு தூக்கிக் கொண்டு வந்தார்கள் பிலிப்பும் தவசியும். இடுப்பு வேட்டியில் கொளுவிப் போட்டிருந்த வெட்டுக் கத்தியால் கள்ளிக் கவிர்களைச் சீவிச்சீவி குட்டைத் தண்ணீரில் எறிந்தனர்.

திரட்டு வரப்பின் மேல், புன்னைமர நிழலில் அமர்ந்து உள்ளங் கையில் ஒட்டிக் கறுத்து பிசின்போல் ஆகி இருந்த கள்ளிப்பாலை நகத்தால் சுரண்டி எடுத்தான் தவசி. முந்தியில் இருந்த பீடிக்கட்டையும் தீப்பெட்டியையும் எடுத்து பீடியைப் பற்ற வைத்து ஒரு இழுப்பு புகையும் விட்டபின் ஒரு பீடியையும் தீப்பெட்டியையும் தவசியிடம் எறிந்தான் பிலிப்பு.
பின்னணையை ஒட்டி இறைவட்டி, மண்வெட்டி, வெட்டுக்கத்தி, கவைக்கம்பு எல்லாம் சிதறிக் கிடந்தன.

அந்தப் பக்கமாய் பாலத்தின் மேல் வழி நடந்தவர்கள் இரண்டு நிமிடம் நிழலில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டுப் போயினர். சிலர், ''என்னலே? விலாங்க புடிக்கேளா?" என்று ஒரு கேள்வியை கேட்டுவிட்டுப் போயினர். இரண்டு மாடு மேய்ச்சிப் பையன்கள் கையில் இருக்கும் கம்பை பாலத்துச் சுவரில் தட்டியபடியே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். கோடை விடுமுறை ஆனபடியால் பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுவர்கள் தவசியிடம் இருந்து சற்றுத் தள்ளி குத்த வைத்து உட்கார்ந்து ஆர்வமாய் குட்டைத் தண்ணீரையே கவனித்துக் கொண்டிருந்தனர்.

வெயில் ஏறி தண்ணீர் சுட ஆரம்பித்தது. அசையாது நிற்கும் தண்ணீரில் திட்டாக விழுந்த கற்றைகள் கள்ளிப்பாலின் போதையோடு தகிப்பையும் மீன்களுக்கு ஏற்றிக் கொண்டிருந்தது.
மணி இரண்டுக்கும் மேலிருக்கும். பால் படர்ந்திருந்த தண்ணீர்ப் பரப்பில் சிறுசிறு அசைவுகள், குமிழ்கள் தோன்ற ஆரம்பித்தன. கள்ளிப்பால் கலந்த தண்ணீர் குடித்த போதையில், கிறக்கத்தில் சின்னச் சின்ன மீன்கள் வெளியேறத் துவங்கின. வாயை தண்ணீரின் மேல் மட்டத்துக்கு உயர்த்திப் பிடித்து, மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு, திக்கும், திசையும் இழந்து, கண் பஞ்சடைந்து...

பின்னணையின் கீழே, பிடிக்கும் மீன் களைப் போட்டு வைப்பதற்காக, மண் வெட்டியால் சிறிய குண்டு தோண்டினான் தவசி. தண்ணீர் சிறிது ஊறியது. பிடித்த மீன்கள் செத்துவிடாமல் இருக்க இந்த ஏற்பாடு. வெட்டுக்கத்தியால் இரண்டு புன்னைமரச் சல்லிக்கிளைகளை வெட்டி குண்டின் பக்கத்தில் வைத்தான். பிடிக்கப் பட்ட மீன்கள் துள்ளி விழுந்து வெளியேறாமல் இருக்கவும், அவற்றை வெயில் கண்டமானம் தாக்காமல் இருக்கவும் இது உதவும்.

தண்ணீர்ப் பாம்பு ஒன்று துள்ளி விழுந்து ஓடியது. ''பே'' என்று விளையாட்டாகக் கூச்சலிட்டுச் சாடினான் தவசி. வேடிக்கை பார்த்திருந்தவர்கள் சிரித்தனர்.
கள்ளிப்பால் போதையில் மீன்கள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்தன. தண்ணீர் அதிகம் அலுங்காமல் உடைந்த பானையின் வயிற்றுப் பாகத்தால் தேக்கத்துக்கு பின்புறம் காட்டி கால்களை அகற்றி நின்று குனிந்து பின்னணைக்கு வெளியே தண்ணீரை இறைத்துத் தள்ளினான் பிலிப்பு.

தண்ணீர் வற்ற வற்ற சிறுசிறு மீன்களின் அனக்கங்கள் தெரிந்தன. பெரிய மண்டையும் சூம்பிய உடலுமாக அசிங்கமாய் இளித்துக் கொண்டு வந்தது ஒரு உளுவை.
''கண்டார... நீயா முதமுதல்லவாறே...'' என்று ஏசிக்கொண்டு அதை அப்பிப்பிடித்து குழிக்குள் எறிந்தான் பிலிப்பு. வெளியே இறைத்த தண்ணீரோட சில மீன்கள் விழுந்து மணலில் துடித்தன.

இறவையை நிறுத்திக்கொண்டு மீன்களை அரிக்க ஆரம்பித்தனர். துள்ளத் துடிக்க உளுவை, கயிலி, சிலேபியாக் கெண்டை, ஆராங்கு, சள்ளை, அயிரை, கிளாத்தி...
''தேவ்டியாவுள்ளா..'' என்று காட்டமாய் வைது கொண்டு கிளாத்தி ஒன்றின் சங்கை நெருக்கிப் பிடித்து மீசைபோல் நீட்டி நின்ற முள்ளை முறித்து குழிக்குள் எறிந்தான். இந்த ஆற்று மீன் குளத்து மீன்களிலேயே கிளாத்தி ஒன்றுதான் சண்டாள மூதி, தண்ணீரில் ஆயும் போதே மின்னல்போல் துடித்துக் கொண்டு நிற்கும். அப்பிப் பிடிக்க முயன்றால் முள்ளால் கணிசமாக ஒரு போடு. போதும் மூன்று நாளைக்கு.

சிறுசிறு மீன்கள் எல்லாம் குழியினுள் நிறைந்தன. ஆனால் பிலிப்பும் தவசியும் பதினோரு மணியில் இருந்து மெனக்கெடுவது இவற்றுக்காக அல்ல.

பத்தரை மணிக்கு பாலக்கலுங்கில் உட்கார்ந்து தவசி பல்லைக் கிளைத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த பிலிப்புதான் கேட்டான்.

''என்ன மாப்பிளே? சோலி ஒண்ணும் இல்லையா? சொகமா பல்லு குத்தலு ஆகு...''
'ஒண்ணுங் கோளு இல்லடே...''

''பாக்கியம் பிள்ளைக்கு ஒரு பின்னைமரம் தறிக்கணுமாம். போவமா?''

''அந்த நசுநாறிக்கு சோலிசெய்யதைவிட எங்கிணயாம் தேனை வாங்கீட்டு போலாம்..''

''ஏம்லே? பணம் தரமாட்டாரா?''

''பண்ணிக்குப் பொறந்த பய, மனுசனா அவன்? மூணு ரூவா பேசிக்கிட்டு ரெண்டரைதான் தருவான். மத்தியானம் தாற கஞ்சியை மாடுகூட குடிக்காது... நொளு நொளுண்ணு மொரைச்சுகிட்டு நிக்கும்... கேட்டா நக்கித் தாயளிக்கு வாற கோவத்தைப் பாக்கணுமே...''

''சரி பின்ன விடு. இங்கிண பாலத்துக்குக் கீள கள்ளி வெட்டிப் போட்டா என்னா? மொறட்டு விலாங்கு ஒண்ணு கெடக்கு பாத்துக்கோ... அண்ணைக்கு எனக்க தூண்டி முள்ள அத்துக்கிட்டுப் போயிட்டு...''

''அண்ணைக்கு யாரோ அணை போட்டிருந் தாளே?''

''அதா? மேல தெவக்கம் ஒண்ணு ஒடச்சு வந்து எல்லாம் போச்சி..''

''அப்பம் வெட்டுக்குத்தி, மம்பெட்டி, கவக்கம்பு, எறவட்டி எல்லாம் வேணும்லா?''

''நீ அவுரு முடுக்கு வேலப்பன் கிட்டே போயி மம்பெட்டியும் வெட்டுக்குத்தியும் வாங்கீட்டு வா.. நம்ம ஆவரான் சித்தப்பா கிட்டே எறவட்டி கெடக்காண்ணு பாக்கியேன்...''

மற்ற மீன்களோடு சுண்டுவிரல் கனமும் இளஞ்சிவப்பு நிறமும் உள்ள சில விலாங்குக் குட்டிகளும் நீந்தின.

கரையிலிருந்த பையன்களில் ஒருவன், ''அண்ணா ஓடுகு...'' அண்ணா ஓடுகு... என்று விரல் தூண்டிக் காட்டினான். தவசியும் பிலிப்பும் விலாங்குக் குட்டிகளை கருணையோடு விட்டனர். பருவட்டாகப் பார்த்து மற்ற மீன்களைப் பிடித்த பிறகு, வெள்ளத்தை வேகமாக இறைத்து வெளியேற்றினான் தவசி. கையில் சிறு கம்பினால் சேம்பிலை, நீர் முள்ளிப் புதர்களைக் கலைத்தான் பிலிப்பு.

முழுநீளமும் முழங்கைக் கனமும் கொண்ட விலாங்கு ஒன்று தள்ளாட்டம் போட்டு வெளியே வந்தது. கையால் கோரிக் கரையில் எறிந்தான் பிலிப்பு. மணலில் விலாங்கு புரளும் போது மேலும் மணல் புரட்டி தோல் மீதுள்ள வழுவழுப்பைப் போக்கி பழைய பானை ஒன்றில் போட்டு மூடி வைத்தான் தவசி. பிலிப்பு வேறொரு விலாங்கோடு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தான். கையில் அகப்படாமல் வளைந்தும் வழுக்கியும் ஓடியது அது. பிலிப்புக்கு - இந்த வேடிக்கை பார்க்கும் கூட்டத்தின் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தும் விலாங்கின் மீது கேபாம் வந்தது. கேவலமான கெட்டவார்த்தை சொல்லி ஏசிவிட்டு வெட்டுக்குத்தியை கையில் எடுத்தான். வாக்கான இடத்தில் நின்று கொண்டு தண்ணீருக்குள் வெட்டுக்குத்தியை சாய்வாகப் பாய்ச்சிக் கோரி விலாங்கைக் கரையில் எறிந்தான். முழங்கால் பருமனும் இரண்டு முழம் நீளமும் இருக்கும். நல்ல ஏந்தின வெட்டு. சப்பையான வாலை மண்ணில் போட்டு அடித்துக் கொண்டி ருந்தது விலாங்கு. ஒருவேளை பிலிப்பின் தூண்டில் முள்ளைக் கவ்வித் துண்டித்த விலாங்கு இதுவாகக்கூட இருக்கும்.
அன்று நல்ல கணிசமான வேட்டை. இறைவட்டி நிறைய உளுவை, கிளாத்தி, ஆராங்கு, கயலி, சிலேபியாக் கெண்டை... வாட்டமான பத்துப் பன்னிரண்டு விலாங்குகள். வெட்டுப்பட்ட பெரிய விலாங்கு ஒன்றே இரண்டு ரூபாய்க்குப் போகும்.

சாமான்களை எல்லாம் ஒதுக்கிக் கரையேற்றி, மேலணையும் கிழணையும் உடைத்துவிட்டு கை கால்களில் இருந்த தொழியைக் கழுவினர் இருவரும். கழுவிய கையை முகர்ந்து பார்த்து பிலிப்பு முகத்தைச் சுளித்தான்.

சுருட்டி வைத்திருந்த வேட்டியை எடுத்து அன்டர்வேருக்கு மேல் கட்டிக்கொண்டு பீடி பற்ற வைக்கும் போது ஊர்காவல் தேவர் வந்து எட்டிப்பார்த்தார்.

''என்னலே? எல்லாம் உங்க மனம் போலத்தான்... எவன் வேலியையாம் வெட்டிப் பிரிச்சுக் கள்ளி வெட்டி மீது புடிக்கது...''

''இல்லே பாண்டியரே...''

''என்ன இல்லே... சொள்ளமுத்துப் பிள்ளை நாக்கைப் புடுங்குக மாதிரி கேப்பாரே... அம்மா ஆத்தாண்ணு... நீயா வந்து பதிலு சொல்லுவே...?''

''தொண்டு விளாமத்தன் அஞ்சாறு கள்ளி வெட்டினோம் பாத்துக்கிரும்...''

''அஞ்சாறு வெட்டினேயாக்கும்... இனி அவருக்க எளவிலே நிண்ணு முடியாதே... சரி... சரி... ரெண்டு விலாங்கு எடு இப்படி...''

''விலாங்கு மூணோ நாலோதான் கெடச்சு பாண்டியரே... இனி எறவட்டிக்காரனுக்கு குடுக்கணும். மம்பெட்டிக் காரனுக்கு குடுக்கணும்... அஞ்சாறு கயிலி சேம்பிலைலே பொதிஞ்சு தாறேன்...''

''கயிலி ஒங்க அம்மைக்கு கறி வச்சுக் குடு... தாயோளி எனக்கு முன்னால கோமண மில்லாம அலஞ்ச பய எங்கிட்டேயே வேலை வைக்கான்... மீசை வச்சிட்டாலே பெரிய ஆளாயிருவியாலே?''

பாலத்திலிருந்து இறங்கி வந்த ஊர்க்காவல் தேவர், இருந்ததில் பெரியதான இரண்டு விலாங்குகளைத் தேடி எடுத்து வாலைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போனார்.

நாஞ்சில் நாடன்

© TamilOnline.com