ராக லக்ஷணங்கள்
ஆனந்தபைரவி

ராகங்களின் சரித்திரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுகையில் இசை இயல் வாயிலாக அறிவதுடன் அவற்றின் தோற்றத்தை உலக இயல் ரீதியாக ஆராய்தறிவது மிக முக்கியமாகும். அவ்வாறு பார்க்கையில் சில மிக்க சுவையான ராகங்கள் அனாதி ஸம்ப்ரதாய காலம் முதல் உருவாகி உள்ளன. இலக்கியம் முன்பும், இலக்கணம் பிற்பாடும் தோன்றின எனலாம். ஆனந்த பைரவி, நாதநாமக்ரியா, நவரோஜ், மோஹனம், அதன் பரிவார ராகங்கள் முராரி, புன்னாகவராளி, நீலாம்பரி போன்ற ராகங்கள் நமது நாட்டுப் பாடல்களின் மூலமே வெளிவந்தன என்று சொன்னால் மிகையாகாது. ஆனால் அந்தப் பண்டைக் காலத்தில் இந்த ராகங்கள் இந்த பெயர்களுடனேயே விளங்கின என்று சொல்லுவதற்கில்லை. ஆனந்த பைரவியின் ராக வடிவம் பழமையானது என்ற அளவிற்குத்தான் சொல்ல இயலும்.

வஸந்தா

இசை வரலாற்றில் வஸந்த. லலித, ராகங்களைப் பற்றிக் கூறாத இசை இலக்கண நூல் எதுவுமில்லையென்று நிச்சயமாகச் சொல்லலாம். எதற்கு இந்த இரண்டு ராகங்களையும் ஜோடிப்டுத்திச் சொல்ல வேண்டுமென்றால் இந்த இரண்டு ராகங்களுக்குமிடையே தீராத குழப்பம் இருந்து வருகிறது. வஸந்தா ராகத்தை லலிதா ராகத்தை வஸந்தா என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். த்யாகராஜ ஸ்வாமிகளுடைய க்ருதி 'ஸீதம்ம மாயம்ம' ஒரு சிலர் வஸந்தா என்றும் மற்றும் சிலர் லலிதா என்றும் கூறுகிறார்கள். ஆனால் தீக்ஷ¢தருடைய க்ருதிகள் விஷயத்தில் இந்த குழப்பம் இல்லை.

சங்கராபரணம்

நமது இசையுலகில் காணும் சில முக்கியமான பெரிய மற்றும் ரக்தி ராகங்கள் நமது இசையில் மட்டுமன்றி உலகில் அனைத்து தேசங்களிலும் பழக்கத்திலுள்ள இசைத்துறைகளிலும் காணலாம். அத்தகைய ராகங்களில் தலைசிறந்தது சங்கராபரணம். சங்கராபரணம் ராகம் இல்லாத இசை மரபே உலகில் எங்கும் இல்லையென்று அழுத்தமாகச் சொல்லலாம். உலகில் பெரும்பான்மையான தேங்களில் ஹார்மானிகல் ஸங்கீதமே நிலவுகிறது. ஹார்மனிகல் சங்கீதத்திற்கு அடிப்படையான ஸ்வர ஸப்தகம் மேஜர் யடானிக் ஸ்கேல் ஆகும். இந்த மேஜர் யடானிக் ஸ்கேல் சங்கராபரண ராகத்தையொட்டிதான் அமைந்துள்ளது. அதுவுமல்லாமல் கிரேக்க நாட்டைச் சேர்ந்த பிதகோரஸ் நியமித்த பிதகோரியன் மேஜர் ஸ்கேலும் சங்கராபரண ஸ்வரங்களைக் கொண்டே அமைந்துள்ளது. இப்படியான நமது சங்கராபரணம் உலக சங்கீதத்தை ஆளும் ராஜ ராகம் என்று சொன்னால் மிகையாகாது.

சங்கராபரண ராகம் பழம் தமிழிசைப் பண்களில் 'பண் பழம் பஞ்சுரம்' என்று அறியப்பட்டது. பைந்தமிழ் பாலைகளில் சங்கராபரணம் ஒன்று. இசை வரலாற்றின் இடைக்காலம் முதல் இன்று வரை எழுதப்பட்ட எல்லா இசை இலக்கண, இலக்கிய நூல்களிலும், சங்கராபரணத்தைக் குறிப்பிடாத நூலே இல்லையென்று திட்ட வட்டமாகக் கூறலாம்.

கல்யாணி

கல்யாணிக்கும், சங்கராபரணத்திற்கும் இடையே ஒரே ஒரு ஸ்வரம் தான் வேறுபடுகிறது. சங்கராபரணத்திற்கு சுத்த மத்யமம், கல்யாணி ராகத்திற்கு ப்ரதி மத்யமம். இந்த மத்யமத்தை கொணறாமலேயே மத்யம வர்ஜ்ய ப்ரயோகங்கள் மூலம் இரண்டு ராகத்தின் வடிவத்தையும் வெளிப்படுத்த இயலும். 'ஸரிக' என்ற ஒரு ப்ரயோகத்தை சங்கராபரண மாகவும், கல்யாணியாகவும் பாடலாம். மேற்படி ப்ரயோகத்தில் ரிஷபத்தை தீர்க்க கம்பிதமாக பாடிவிட்டால் சங்கராபரணம்தான். கல்யாணிக்கு இடமேயில்லை.

முகாரி

இன்று முகாரி ஒரு சுவை மிக்க ரக்தி ராகம். த்யாகராஜ ஸ்வாமிகள், முத்துஸ்வாமி தீக்ஷிதர், ஸுப்பராய சாஸ்திரிகள் முதலானோர் க்ருதிகள் வாயிலாகப் ப்ரகாசிக்கிறது. கிருஷ்ண லீலா தரங்கிணிப் பாடல் 'க்ருஷ்ணம் கலயே ஸகி' தாள்ளப்பாக்க அன்னமாசாரியாருடைய 'பரஹ்ம கடிகின பாதமு' புரந்தரதாஸரின் 'வாஸ¤தேவன நாமாவளிய' என்ற பாடல்கள பாகவத ஸம்ப்ரதாயத்தில் முகாரி ராகத்திலேயே பாடப்படுகின்றன. அன்னமாச்சாரியாருடைய 'நானாடி ப்ரதுகு' மற்றும் 'ஆகடிவேளல' என்ற பாடல்களை செப்புத் தகடுகளில் கொடுக்கப்பட்டுள்ள அசல் ராகப்படி முகாரியில் பாடுவதே பொருத்தம் என்று சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. அக்கீர்த்தனங்களில் ஸாஹித்ய பாவத்திற்கு முகாரி தான் பொருந்தும். அப்பொழுதுதான் முகாரி ஒரு பழமையான ராகமாக வாதிக்கவும் இடம் உண்டு.

- பேராசிரியர் எஸ்.ஆர். ஜானகிராமன் எழுதிய 'ராக லக்ஷணங்கள்' என்ற நூலிலிருந்து....

© TamilOnline.com