அசோகமித்திரனின் தண்ணீர்
“இன்னிக்கும் வாட்டர் வரலையா? நான் எப்ப குளிச்சு காலேஜுக்குக் கிளம்பறது..”

“இங்க குடிக்க சமைக்கவே தண்ணிய காணும். கார்ப்பரேஷன் பம்புல தண்ணி வந்து மூணு நாள் ஆச்சு. மைனருக்குக் குளிக்கத் தண்ணி கேக்குதோ..? நாலாவது பிளாக்குல தண்ணி லாரி வருது... பிடிச்சுக்கிட்டு வர சொன்னா...”

“அப்பா என்ன பண்ணறாங்க..? எனக்குப் பாடமெல்லாம் இல்லையா..?”

“ஆகா எனக்குத் தெரியாதா? உன் கேர்ள் பிரண்டு.. ஷீலாவோ ஷீனாவோ..”

“அது ஷீபாம்மா..”

“யாரோ ஒருத்தி.. அங்க இருக்குற அவளுக்கு முன்னாடி தண்ணித் தவலையத் தூக்குறது ஐயாக்கு அவமானம். இப்படி டீஸென்ஸி பாத்தா தண்ணி எங்கேயிருந்து கிடைக்கும்?”

- சென்னைவாசிகளாக இருந்தவர்களுக்கு, இன்றும் இருப்பவர்களுக்கு இதெல்லாம் பழகிப்போன அன்றாடம் காதில் விழும் குடும்ப வாக்குவாதங்கள். தண்ணீர் என்பது மிகவும் விலைமதிக்க முடியாத ஒரு சமாச்சாரம் சென்னையைப் பொறுத்தவரை. கோடைக்காலம் மட்டும் என்றில்லாமல் வருடத்தில் பாதிக்கும் மேல் தண்ணீர் தட்டுப்பாடுடன்தான் சென்னை கடந்த பல வருடங்களாக கஷ்டப்படுகிறது. கார்ப்பரேசன் தண்ணீருக்கான தவம், லாரிகளில் வரும் தண்ணீரைப் பிடிக்க நான் நீ என்ற போட்டி, மூன்று நான்கு தெரு தள்ளியிருக்கும் வீட்டின் ஆழமான கிணற்றில் மட்டும் இன்னும் வற்றாத சொற்பமான நீரை கெஞ்சிக் கேட்டு நிரப்பி தூக்கமுடியாமல் தூக்கி நடக்கையில் அழுத்தும் சுமை, “150 அடி போட்டா இங்கலாம் தண்ணி வருமான்னு கேரண்டி கிடையாது ஸார்.. 200 அடி போட்டுக்கிடுங்க.. கொஞ்சம் கூட ஆனாலும் தண்ணிக்கு நான் கேரண்டி ஸார்..” என்று பூமியை ஆழமாய்த் துளைக்கத் தூண்டும் போர்வெல் ஆட்களின் உத்தரவாதம், “தண்ணியா..? மினரல் வாட்டர் தான் இருக்கு.. ட்வெண்டி ருபீஸ்.. வாங்கிக்றீங்களா..?” என்று வேக உணவு (·பாஸ்ட் புட்) கடைகளில் இருந்து ஆரம்பித்துப் பெட்டிக்கடைகள் வரை எங்கும் கிடைக்கும் பதில்.. இந்த கஷ்டங்களுக்கு எல்லாம் நடுவில் ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் சென்னைவாசிகளின் வாழ்க்கையும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இது சாகித்ய அகாதெமி விருது பெற்ற திரு.அசோகமித்திரன் அவர்களின் “தண்ணீர்” என்ற நாவலில் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது.

“தண்ணீர்”-இல் வரும் கதாபாத்திரங்கள் எல்லாமே சாதாரண நடுத்தர வர்க்க மனிதர்கள். நாம் தினம் தினம் பார்த்த அடுத்த வீட்டு, எதிர்வீட்டு மனிதர்கள். எழுத்தாளர் சுஜாதா பெயர்வைத்த ‘மத்யமர்கள்’. அவரவர்க்கான கடமைகளுடன், கஷ்டங்களுடன் (தண்ணீர் கஷ்டமும் அடக்கம்), போராட்டங்களுடன், பலவீனங்களுடன் வாழ்க்கையை ஓட்டும் தனி மனிதர்கள் மற்றும் குடும்பங்கள். வேறுபாடே இல்லாமல் இவர்கள் அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கும் தண்ணீர் பிரச்சனை கூட இந்த நாவலில் ஒரு பாத்திரமாய் மாறி விடுகிறது.

ஜமுனா என்பவளின் வாழ்க்கையில் நாளை என்பதே பெரிய கேள்விக்குறி. அவளது சினிமாவில் நடிக்கும் ஆசைக்கு பாஸ்கரராவ் உதவுவதாக சொல்லிக்கொண்டு வருகிறான். அவன் மூலம் கிடைக்கும் படத் தயாரிப்பாளர்கள் மற்றும் அவர்களுக்கான தரகர்களின் அறிமுகங்களுக்கு அவள் கொடுக்கும் விலை அவளை சமூகத்து சராசரி நிலையிலிருந்து மேலும் கீழே தள்ளுகிறது. கூடத் தங்கியிருந்த அவள் தங்கை சாயாவே இழிவாகப் பேசிவிட்டு ஹாஸ்டலில் போய் தங்குகிறாள். உடல், மற்றும் புத்தி சரியில்லாத அவள் அம்மா மாமா வீட்டில்.. அங்கே ஜமுனாவையும் சாயாவையும் அண்ட விடாமல் வெறுக்கும் பாட்டி... எல்லாம் ஜமுனாவை எங்கோ கொண்டு தள்ளுகின்றன. தீராத தண்ணீர் கஷ்டம் அந்த காலனி வாசிகளையே தவிக்க வைப்பது போல் தவித்துத்தான் போகிறாள்.

ஜமுனாவின் கஷ்டங்கள்தான் பிரதானமாய் சொல்லப்பட்டிருக்கிறது என்றாலும் பட்டாளத்திருந்து மாற்றல் கிடைக்காமல் திரும்பாத புருசனுக்குக் காத்திருக்கும் சாயா, மிகவும் வயதான இருமல் ஆஸ்துமாக்காரரைக் பதினைந்து வயதிலேயே கட்டிக்கொண்ட டீச்சரம்மா, மாமியாருக்கு பயந்துகொண்டு இரண்டு படி பயறை நின்றுகொண்டே சிறிய வயதில் அரைத்தக் கஷ்டத்தை புத்தி சுவாதீனம் இழந்த நேரத்தில் திரும்ப திரும்பச் சொல்லி புலம்பும் ஜமுனாவின் அம்மா இன்னும் பெயர் தெரியத் தேவையே இல்லாத எல்லாப் பெண்களும் அவரவருக்கான கஷ்டங்களுடன் வாழ்ந்துகொண்டிருப்பதும் சமமாய்த்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு சில நிமிடங்களே வந்து நடுத்தெருவில் தண்ணீர்த் தவலையுடன் விழும் அந்த வயதான ஆச்சாரமான தெலுங்கு பிராமணத்தி கூட நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டுத்தான் போகிறாள். யாரோ தொட்டுவிட்டார்கள் என்பதால் தூக்கமுடியாமல் தூக்கி வந்த தண்ணீர்த்தவலையில் கொட்டாமல் மிச்சமிருந்த கொஞ்சம் நீரையும் கொட்டிவிட்டுச் செல்லும் அவளின் வைராக்கியம் அதிரத்தான் வைக்கிறது.

இத்தனை கஷ்டங்களுக்கு நடுவிலும், “எதுவும் இன்னையோட முடியல.. நாளைன்னு ஒண்ணு இருக்கு இல்லையா?” என்ற நம்பிக்கையை இந்த புதினம் விதைக்காமல் நிற்கவில்லை. தன் கஷ்டத்தை மட்டும் பார்க்காமல் மற்றவரின் கஷ்டங்களையும் பார்க்கக் தூண்டும் இதன் பாத்திரங்கள், இரு கோடுகள் போல மற்றவரின் கஷ்டங்களைப் பார்த்துத் தம்முடையதைத் தாங்கிக்கொள்ளும் பக்குவத்தை அடைகின்றன. தன்னை மீறி ஒரு கை கொடுத்து வாழ்க்கை என்னும் தண்ணீர் தவலையைத் தூக்க உதவுகின்றன.

1970-இன் தொடக்கத்தில் ஒரு தொடர்கதையாய் கணையாழியில் வெளியிடப்பட்டு பின் நாவலாய்ப் பதிப்பிக்கப்பட்ட படைப்பு இது. அன்றிலிருந்து இன்றும் தொடரும் சென்னையின் தண்ணீர்ப் பிரச்சனை இந்த நாவல் இன்றெழுதப்பட்டது போல் அப்படி பொருந்திப் போக வைக்கிறது. சென்னை என்றில்லாமல் தண்ணீருக்குக் கஷ்டப்படும் எந்த நகரத்து வாழ்க்கையையும் இதனுடன் தொடர்பு படுத்திப் புரிந்துகொள்ளமுடிவது இதன் வீச்சைக் காட்டுகிறது.

அசோகமித்திரன் அவர்களின் எழுத்து மிகவும் எளிமையான எழுத்து. யாருமே எளிதில் படித்துப் புரிந்துகொள்ளக் கூடிய எழுத்து. அந்த எளிமையிலேயே அவருகே உரித்தான நையாண்டியுடன் சாதாரண மனிதர்களின் யதார்த்த வாழ்க்கையினை அவர் படம்பிடித்திருப்பதை எந்த வாசகனும் உணர்ந்துகொள்ள முடியும். இவரின் சிறப்பே இவர் சொல்லாமல் விட்டவற்றில் ஒளிந்துகொண்டிருக்கும் கதையையும், பாத்திரங்கள் பேசுவதை விட அவர்கள் காக்கும் மௌனத்திலேயே நமக்கு அவர்களின் உணர்ச்சிகளையும் உணர்த்திவிடுவதுதான்.

இலக்கியம் என்பது நிஜ வாழ்க்கையைச் சார்ந்து, அதையே பிரதிபலிக்கும் ஒரு கலை. இந்த நாவலில் அந்தப் பிரதிபலிப்பு மிகவும் இயல்பாக அமைந்திருப்பது சிறப்பு எனலாம். நம் காலகட்டத்தில் இருக்கும் சமூகத்தை யதார்த்தமாய்ப் பதித்திருப்பதும் இன்னொரு சிறப்பு எனலாம்.

குறை என்று சொல்லப்போனால் இதன் அத்தியாயங்கள் உதிரிப்பூக்களாய்த் தனித்தே நிற்கின்றதைச் சொல்லலாம். சிறுகதையாக ஆரம்பிக்கப்பட்ட படைப்பு இது என்று அதற்கான காரணத்தையும் ஆசிரியரே சொல்கிறார்.

“தண்ணி முதல்ல சாக்கடைத் தண்ணி மாதிரி வந்தது. ஆனா அதெல்லாம் சரியாயிடும். தண்ணி வந்துடுத்து. அதான் முக்கியம்.” என்ற ஜமுனாவின் நம்பிக்கை கலந்த வாக்கியத்தைப் படிக்கையில் நமக்கும் நம் வாழ்க்கை சம்பந்தமாக ஏதோ நம்பிக்கை பிறப்பதை இதைப் படித்தால் ஒத்துக்கொள்வீர்கள்.

தண்ணீர்
ஆசிரியர் - அசோகமித்திரன்
கலைஞன் பதிப்பகம்.
New Book Lands, T.Nagar
Chennai, +91 44 8232771

மனுபாரதி

© TamilOnline.com