இந்திய இசை வரலாற்றில் கடந்த 500 ஆண்டுகளாகத்தான் கர்நாடக இசை முறை மிகவும் சிறப்பானதொரு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த வளர்ச்சியில் பல்வேறு இசை வல்லுநர்களின் இசை ஆளுமைகளின் பங்கு அளப்பரிது. இசையில் பல்வேறு இசைக்கோலங்கள் உருவாக இவர்கள் காரணமாக இருந்துள்ளனர்.
இசையியல் வரலாற்றில் தமிழ்த்திரை இசைக்கு தனியான மவுசை உருவாக்கிக் கொடுப்பதற்கு கர்நாடக இசை வழி வந்த மரபு காரணமாக இருந்தது. இந்த மரபு செழுமையுடன் வீரியமுடன் வருவதற்கு அடித்தளம் அமைத்தவர்களுள் பாபநாசம் சிவன் குறிப்பிடத்தக்கவர். இவரது இசைப்பாணி பல்வேறு இசைக்கோலங்கள் அமைய காரணமாயிற்று.
பாபநாசம் சிவன் தஞ்சை மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் உள்ள போலகம் எனும் கிராமத்தில் 26.09.1890 இல் பிறந்தார். இவரது இயற்பெயர் ராமய்யா. இவரது மூத்த சகோதரர் ராஜகேபாலன். சிவன் தமது ஏழாம் வயதில் தனது தந்தையை இழந்தார். பின்னர் தாயுடனும் தமையனுடனும் திருவனந்தபுரம் சென்றடைந்தார்.
1898 முதல் 1907 வரை மகாராஜா சமஸ்கிருத கலாசாலையில் படித்தார். அங்கு உபாத்யாய, வ்யகரனி போன்ற பட்டங்களைப் பெற்றார். மேலும் ஸ்ரீநீலகண்ட தாசர் என்ற பக்தசிரோன்மணியின் நட்பும் அவரது பக்திப் பஜனையில் பாடும் வாய்ப்பும் பெற்றார். மகாதேவ பாகவதரிடம் சங்கீதத்தின் ஆரம்பப் பாடங்களைப் படித்தார். இசை புலமையை நன்கு வளர்த்துக் கொண்டார். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், அருட்பா, தாயுமானவர் பாடல் என தமிழ் பக்தி இசை மரபிலும் தோய்ந்து வளம் பெற்றார்.
தமிழகம் வந்து திருச்சி பழமார்நேரி எனும் கிராமத்தில் சில காலம் வாழ்ந்தார். இந்நிலையில் எதிர்பாரதவிதமாக தாயார் இறந்தார். இதன் பின்னர் சிவன் சகோதரருடன் தனது சொந்த கிராமத்திற்கு புறப்பட்டார். பின்னர் கும்பகோணத்துக்கு அருகாமையில் உள்ள மருதாநல்லூர் ஸ்ரீசத்குரு சுவாமிகள் மடத்தில் சிறிதுகாலம் இருந்து பக்தி இசை மரபில் பஜனையில் கவனம் செலுத்தி வந்தார். இவரது இசைப்புலமை இசை ஈடுபாடு பலரது கவனத்துக்கும் வந்தது. பாபநாசத்தில் சிவத்தின் தமையனார் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போது சிவன் சில காலம் அங்கு வாழ்ந்து வந்தார். இதனால் பாபநாசம் சிவன் என்று அழைக்கப்பட்டு வந்தார். கோயில் ஒன்றில் தாயுமானவர் பாடலை நெஞ்சுருகிப் பாடிக் கொண்ருந்துவிட்டு வெளியே வந்த ராமய்யா சிவப்பழமாகக் காட்சியளித்தாராம். அன்று முதல் ராமய்யா சிவன் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்.
தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் நன்கு புலமை மிக்கவராகவே இருந்தார். இசையின் நுணுக்கங்களை ஆழ்ந்து ரசித்து மனமுருகி வெளிப்படுத்தும் பாங்கு சிவத்தின் தனித்தன்மை¨யானது. குறிப்பாக தமிழ் பக்தி மரபு பாபசநாசம் சிவத்தின் இசை ஆர்வத்துக்கும் இசைப் புலமை வெளிப்படுத்தலுக்கும் உரிய பயிற்சிக்களமாகவும் தக்க பின்புலத்தையும் கொடுத்தது.
திருவாரூர் தேர்திருவிழாவில் ''உன்னைத் துதிக்க அருள் தா...'' என்ற குந்தலவாரளி ராகக் கிருதியை உருவாக்கினார். சிமிழி சுந்தரமய்யர் என்ற மகாவித்துவான் இவரை 'தமிழ்த் தியாகய்யா' என்றே அழைத்தார். இவ்வாறு சிவத்தின் இசைப் பாடல்கள் கரைபுரண்டோடியது. 'ராமதாஸன்' எனும் முத்திரையோடு கிருதிகள் நூற்றுக்கணக்கில் தோன்றலாயின. ராகம், தாளம், பாவம் இசைக்கோவை மிகச் சிறப்பாகவே சிவத்திடம் வெளிப்பட்டது.
1912 முதல் 1957 வரை கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் திருவையாறு சமஸ்தான பஜனையில் கலந்து கொண்டு பாடியுள்ளார். சென்னை மயிலாப்பூர் மாடவீதிகளில் மார்கழி மாத பஜைனைகளில் இவர்தான் முன்னணியில் இருப்பார். காம்போதி ராகத்தில் கபாலீசுவரர் பங்குனி உற்சவ பவனியின் போது, ''காணக் கண்கோடி வேண்டும். கபாலியின் பவனி...'' என்று பாடியதை யாரும் மறந்துவிடமாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சியுடன் ஈடுபாடு கொண்டவராகவும் சிவன் இருந்தார். பல கூட்டங்களில் கலந்து கொண்டு பாடியும் வந்துள்ளார். திருவிக இயற்றிய ''மலைகளிலே உயர்மலையே...'' என்ற பாடலை நெஞ்சமுருகி பாடினார். ஜாலியன் வாலாபாத் படுகொலை நடந்த போது ''அன்னையின் கால்களில் விலங்குகளோ...'' என மனமுருகிப் பாடினார். ஆக நாட்டுப் பற்று நிரம்பியவராகவும் அதனை இசை மொழியில் வெளிப்படுத்துபவராகவும் சிவன் இருந்து வந்துள்ளார்.
1930களில் சென்னைக்கு சிவன் குடிபெயர்ந்து சென்னைவாசியானார். சென்னை மயிலாப்பூர் வக்கீல் வி. சுந்தரமய்யர் இவரது நெருங்கிய நண்பரானார். வக்கீல் தனது மூத்த மகன் ராஜத்திற்கு இசைப்பயிற்சி அளிக்க சிவத்தை நியமித்தார். பின்னர் அவரது மகள் ஜெயலட்சுமிக்கும் இசையை பயிற்றுவித்து வந்தார்.
ஜெமினி ஸ்டூடியோவின் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த. ஜி.கே. சேஷகிரி. இவர் வக்கீல் சுந்தரமய்யருடன் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். 1933 ஆம் ஆண்டு இந்திப்பட இயக்குநர் வி. சாந்தாராமின் பிரபாத் கம்பெனி தயாரித்த சீதாகல்யாணம் எனும் படத்தில் சுந்தரமய்யரின் மகன் எஸ். ராஜம் ராமனாகவும் மகள் எஸ். ஜெயலக்ஷ்மி சீதையாகவும் நடிக்க காரணமாக இருந்தவர் சேஷகிரி தான். இவருடன் சுந்தரமய்யர் குடும்பம் கல்கத்தாவிற்கு பட ஷ¥ட்டிங்கிற்காக சென்றது. அப்போது தனது நண்பரான பாபநாசம் சிவனையும் கூடவே அழைத்துச் சென்றார்.
சீதாகல்யாணம் என்ற தமிழ்ப்படத்தின் இசையமைப்பாளராக பாபநாசம் சிவன் திரை உலகப்பிரவேசம் செய்தார். இப்படத்தில் தசரதனின் மனைவி கெளசல்யா தேவியை துதித்துப் பாடுவதாக அ¨ந்த 'தாயே ஏழைபால் தயவு செய்வாயாக...'' என்ற பைரவி ராகப் பாடல் மிகவும் புகழ் பெற்றது. இப்படமும் பாடல்களும் அமோக வரவேற்பை பெற்து.
இந்தத் தொடக்கம் திரையுலக இசை வரலாற்றில் பாபநாசம் சிவன் தன்னிகரற்று திகழ்வதற்கு சாதகமான சூழல்களை உருவாக்கிக் கொடுத்தது. சிவன் பாடல்களை தானே எழுதி அதற்கு தானே மெட்டமைத்து பாடினார். இது திரையிசை வளர்ச்சிக்கு புதிய அடித்தளம் அமைத்தது. சிவன் எழுதிய பாடல்களும் மெட்டுகளும் புதிய இசை அனுபவ பகிர்வுக்கு வித்திட்டது. 'திருநீலகண்டர்', 'தியாகபூமி', 'சிவகவி', 'நந்தனார்', 'சத்யசீலன்', 'பக்தசேதர்', 'அம்பிகாபதி' போன்ற படங்களில் மதுரகீதங்களை இசைத்தார். அவை இன்றுவரை ஜனரஞ்சகமான கேட்பதற்குரிய இசைப் பாடல்களாக அமைந்துவிட்டன.
"பாரத புண்ணிய பூமி...", "அம்மா மனம் கனிந்து...", "இனி ஒரு கணம்...", "உனையல்லால் கதி...", "பதிபதம் பணிவது..." இப்படி எண்ணற்ற கீர்த்தனைகளைத் துணிந்து திரைப்படத்தில் புகுத்தி மாபெரும் சாதனை நிகழ்த்தினார். கர்நாடக இசையின் அடிப்படைகளை மீறாமல் ஆனால் தமிழ்மரபு வழி வந்த பக்தி இசை மரபின் செழுமைக் கூறுகளையும் உள்வாங்கி புதிய தமிழ்க் கீர்த்தனைகளாக வழங்கி வந்தார். இது பாபநாசம் சிவத்தின் தனித்தன்மை என்றே கூறலாம்.
கே.சுப்ரமணியம் 1934ல் இயக்கிய 'பவளக்கொடி', 'நவீன சாரங்கதாரா' (1935), 'பாலயோகினி' போன்ற படங்களுக்கும் சிவன் தான் இசை அமைத்தார். தொடர்ந்து பாடலாசிரியராக இசையமைப்பாளராக இருந்த சிவன் நடிகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
கே. சுப்பிரமணியம் இயக்கிய 'குலேசா' (1936) எனும் திரைப்படத்தில் எஸ்.டி. சுப்புலட்சுமியுடன் பாபநாசம் சிவன் குசேலராக நடித்தார். கல்கியின் 'தியாகபூமி' (1939) படத்திலும் நெடுங்கரை சாம்பு சாஸ்திரிகளாக சிவன் நடித்திருந்தார். இப்படத்துக்கு தனது சகோதரர் ராஜகோபாலய்யருடன் இணைந்து இசை அமைத்திருந்தார்.
தொடர்ந்து கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் 'பக்த சேதா' (1940) ல் ஜி. சுப்புலட்சுமியுடன் பக்திப் பரவசமாக பாடி நடித்திருந்தார். 'குபேர குசேலா' (1943) வில் குலேசர் வேடம் ஏற்று நடித்திருந்தார். இப்படத்தை ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இத்துடன் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு பாடல்களை மட்டும் எழுதி வந்தார்.
1937-38 க்குப் பிறகு தமிழ் திரைப்படத் துறை ஒரு தொழில் துறையாக இயங்கத் தொடங்கியது. அதன் பிறகு ஏற்பட்ட வளர்ச்சிக் கட்டங்களில் ஜி. ராமநாதன், பாபநாசம் சிவன், எம்.கே. தியாகராஜ பாகவதர் காலம் செழிப்பு மிக்கதாக இருந்தது. அதாவது திரை இசை முறைப்படுத்தப்படுவதற்கு அடித்தளம் அமைத்தது. 1950கள் வரை சிவனது திரைப்படப் பணி தொடர்ந்தது.
இக்காலத்தில் சிவன் எழுதிய பாடல்கள் 800க்கும் மேல். அவர் எழுதிய பாடல்கள் அக்காலத்தில் புகழின் உச்சியைத் தொட்டன. கர்நாடக இசையின் பரிமாணங்களும் அனுபவ பகிர்வும் சாதாரண மக்களை சென்றடைய பாபநாசம் சிவனால் இசைக்கப்பட்டது. தமிழிசை மரபு வேறொரு வடிவில் திரை இசை மரபில் தொடர்வதற்கு சிவன் காரணமாக இருந்துள்ளார். திரை இசைக்கு ஓர் கெளரவத்தை கர்நாடக இசை வல்லுநர்களும் பாராட்டும் வகையில் தனியான மவுசை ஏற்படுத்திக் கொடுத்தார்.
தமிழ்த்திரைப்பட வரலாறு தமிழக மக்களின் வாழ்வியல் நடத்தைக் கோலங்களுடன் பின்னிப்பிணைந்து வளரத் தொடங்கியது. இந்த வளர்ச்சி திரை இசை மரபாகவும் தொடர்ந்தது. இந்த இசைமரபு செழித்து கர்நாடக இசைமரபின் அடிப்படை ராகங்களையும் உள்வாங்கிக் கொண்டு இசையின் கூறுகள் புதிய வடிவில் வெளிப்பட்டன. இது இன்றுவரை தொடர்கிறது. இந்த மரபு பேணுகையின் இசைப் படைப்பாளியாகவும் முன்னோடியாகவும் திகழ்ந்தவர் தான் பாபநாசம் சிவன்.
சிவன் 1.10.1973 இல் இறந்தாலும் அவரது இசைத்தல்கள், பாடல்கள் யாவும் பாபநாசம் சிவனின் இசைப் புலமையை எடுத்துப் பேசுபவையாகவே உள்ளன. ஒவ்வொரு இசையும் ஒவ்வொரு நினைவின் பதிவைக் கொண்டிருப்பவை. இந்த பதிவுகளில் பாபநாசம் சிவனின் சாயல் இழையோடிய வண்ணமே உள்ளன.
பாபநாசம் சிவம் பல்வேறு விருதுகளுக்கும் பாராட்டுகளுக்கும் சொந்தக்காரர்தான். இந்திய குடியரசுத் தலைவர் விருது (1960) பத்மபூஷன் (1972), மியூசிக் அகாதமியின் சங்கீத கலாநிதி விருது (1972) உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஒருநல்ல இசை மனதை மெழுகாக உருக்கிவிட வேண்டும். அதற்குள் நாம் புகுந்து வரும்போது நாமாக இல்லாமல் போக வேண்டும். பாபநாசம் சிவனின் பாடல்களும் இசையும் அத்தகைய பண்புகளை கொண்டவை தான்.
தெ. மசுசூதனன் |