அம்புஜம் மாமிக்கு USல் ரொம்ப பிடித்தமான விஷயம் காராஜ்சேல்ஸ்தான். மாமாவும் மாமியும் சேர்ந்து சனிக்கிழமை காலைவேளைகளில் டாலர் நோட்டுகளும் பையுமாக கிளம்பி விடுவார்கள். சில சமயம் நல்ல புதுசாமான்கள் ரொம்ப சீப்பாக கிடைக்கும். வெறும் கையுடன் திரும்பியதும் உண்டு. மாமிக்கு சில டாலர் கொடுத்து வாங்கும் சாமான்களைவிட free giftல் கிடைக்கும் பொருளை எடுப்பதில் ஒரு அல்ப சந்தோஷம்.
LAயில் பாலோஸ் வெர்டஸ் எஸ்டேட்டில் மாமிக்கு ஒரு சுகமான அனுபவம்...
ஒரு வீட்டில் எல்லா சாமான்களும் ரொம்ப நன்றாகவும் மலிவாகவும் இருந்தன. கல் வைத்த 10 காரட் செயின்கள், கல் பதித்த மோதிரங்கள், புதிய வாட்சுகள் என்று பல வகைகள். இந்த சேல்ஸை 80 வயதான அம்மாவும், அவரது மகளும் நடத்தினர்.
நிறைய கற்கள் பதித்த ஒரு அழகான மோதிரம் 5 டாலர் என்று இருக்கவே மாமா அதை எடுத்துக் கொண்டார். எல்லா சாமான்களும் கணக்கு பார்த்ததில் 45 டாலர் வந்தது. மாமா எடுத்த மோதிரத்தையும் சேர்த்து 50 டாலர்.
அந்த மோதிரத்தை பார்த்ததும் மகளுக்கு ஷாக். அம்மாவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவள் சிறிது நேரத்தில் திரும்பி வந்து, ''ரொம்ப சாரி , இது என் அப்பாவின் நினைவாக வைத்திருக்கும் மோதிரம். அம்மா தெரியாது சேல்ஸில் வைத்துவிட்டாள். சாரி, சாரி'' என்று திரும்ப திரும்ப சொல்லி வாஸ்தவமாகவே வருத்தப்பட்டார்கள். மாமாவும் மாமியும், ''அதனால் என்ன பரவாயில்லை, தெரியாமல் நடந்ததுதானே'' என்று மற்ற சாமான்களுக்கு பணத்தை கொடுத்தனர்.
மகள் மறுபடி உள்ளே சென்று 15 டாலர் பெறுமான சில சாமான்களை ஒரு பையில் போட்டு ''எங்களது அன்பளிப்பு'' என்று மாமியின் கையில் திணித்தாள். மாமி எவ்வளவோ மறுத்தும் அவர்கள் விடவில்லை.
மாமா, மாமிக்கு ஒரே ஆச்சரியம். பொருள் அவர்களது. விற்கப்பட்டு நம் கைக்கு வரவில்லை. இருந்தாலும் நாங்கள் விரும்பிய பொருளை தங்களால் கொடுக்க முடியவில்லையே என்று அவர்கள் தவித்தது வியப்பாக இருந்தது. சிறிது நேரம் மாமா மாமியுடன் இந்தியாவை பற்றி விசாரித்து, குளிர்பானமும் கொடுத்து உபசரித்தனர். மாமி உடனே தன் கைப்பையில் இருந்த மாமாவின் விசிட்டிங் கார்டை கொடுத்து, ''நீங்களும் இந்தியா வாருங்கள்... எங்கள் வீட்டில் தங்கலாம். நாங்கள் சுற்றிக் காண்பிக்கிறோம்'' என்ற உபசரிப்புடன் விடை பெற்றனர். |