அம்புஜம் மாமியின் US பயணம்
பல வருடங்களாக பிள்ளை கூப்பிட்டும் வரமறுத்த அம்புஜம் மாமி சமீபத்தில் பிறந்த பேத்தியை பார்க்க, மாமாவை அம்போன்னு விட்டுவிட்டு கிளம்பிவிட்டாள். மாமாவிற்கு அத்தனை நாட்கள் லீவு கிடைக்காதே, மேலும் வீடு, நாய், தோட்டம் என்று பார்த்துக் கொள்ள ஆள்வேணுமே. ஏதோ பேத்தியை பார்க்கும் ஆர்வம் மாமி தைரியத்தில் கிளம்பி விட்டாள். மாமியின் அதிர்ஷ்டம் தமிழ் பேசும் இந்திய குடும்பம் யாரும் தன்னுடன் வராதது!

தன்னுடன் பயணித்தவர்கள் பின்னாடியே வந்து இமிக்ரேஷன் க்யூவில் நின்றாள். மாமியின் ஆங்கிலம் INS இன்ஸ்பெக்டருக்கு புரியவில்லை. அவரின் இங்கிலீஷ் மாமிக்கு புரியவில்லை. எதற்கு US வந்திருக்காய் என்று கேட்க..., குழந்தையை பார்க்க என்று சொல்ல, பேபி ஸிட்டிங்கா என்று அவர் கேட்க, இல்லை இல்லை குழந்தையை பார்க்க என்று மறுபடி மாமி சொல்ல, ஆறுமாத அனுமதி பெற்று வெளியே வந்தாள்.

கன்வேயர் பெல்டில் பெட்டிகளுக்காக காத்திருந்தாள். மாமா பெட்டியின் ஒரு இடம் பாக்கி இல்லாமல் கொட்டை எழுத்தில் எழுதிய லேபிள்களுடன், வடம் வடமாக சுற்றிய கயிற்றுடன் கர்ப்பிணி பெண் போல் பிதுங்கிக்கொண்டு பெட்டிகள் அசைந்து வந்து கொண்டிருந்தன. அவசர அவசரமாக தன் டிராலிடியல் எடுத்து வைக்க பெட்டியை தூக்க முயன்றாள். முடியவில்லை. மாமியின் பக்கத்தில் கடோத்கஜன் மாதிரி ஒரு ஆள் ''கேன் ஐ ஹெல்ப் யூ'' என்று கேட்க, ''நீ நன்னா இருப்போடாப்பா ஹெல்ப், ஹெல்ப் என்று கூற, ஒரே தம்மில் பெட்டிகள் டிராலியில் ஏறின. மாமிக்கு ஒரே சந்தோஷம், தலைகால் புரியவில்லை.

இந்தியாவில் அதுவும் சென்னையில் போர்டர்களுடன் பேரம் பேசி தொண்டை வறண்டு விடும். இந்த USல் இந்த மாதிரி ஹெல்ப் செய்ய ஆள் வைத்திருக்காங்களே, நல்ல சிஸ்டம் என்று வாயார வாழ்த்திக்கொண்டே அவன் பின்னாலேயே கஸ்டம்ஸீக்கு ஓடினாள். மாமியின் கலைந்த முகத்தையும் தளர்ந்த நடை உடைகளையும் பார்த்த கஸ்டம்ஸ் பெண் ஆபீஸர் ஒருத்தி அதிகமாக ஏதும் கேள்வி கேட்கவில்லை. 'எனி புட் ஐட்டம்' என்ற ஒரே கேள்விக்கு மட்டும் ''நோ நோ'' என்று வேகமாக தலையை ஆட்டிக்கொண்டே சொன்னாள். ஆனாலும் மாமியின் வயிற்றில் புளியை கரைத்தது. ஒருபெட்டியில் பூராவும் உறுகாய் வகைகள், பொடி, பக்ஷணங்கள்தான். வேக வேகமாக வெளியே வந்தாள்.

கடோத்கஜன் ''டயம் டயம்'' என்று சொல்ல, மாமி ''தேங்ஸ் தேங்ஸ்'' என்று பதில் சொன்னாள். இந்த இருவரின் அவஸ்தையை பார்த்த ஒரு இந்தியர் ''அந்த ஆள் நேரமாகிவிட்டது, பணம் கொடுங்கள் என்று கேட்கிறான்'' என்று புரிய வைத்தார். மாமிக்கு தூக்கிவாறிப் போட்டது. ''பணமா? நான் ·ப்ரின்னு நினைத்துக் கொண்டேனே, எவ்வளவு கொடுக்கிறதுன்னு புரியல்லையே'' என்று புலம்பினாள். அப்போது மகனும் மருமகளும் கொஞ்சம் தாமதமானதால் வேகமாக ஓடிவந்தார்கள். குழந்தை பேத்தியை கையில் வாங்கி கொண்டு, மகனிடம் ''ஏண்டாப்பா, இவன் ஏதோ கேட்கிறானே, எனக்கு ஒரு இழவும் புரியலை'' என்றாள். மகன் கடோத்கஜனுடன் ஏதோ பேசி டாலரை கொடுத்து அனுப்பினான். மாமி அந்த டாலருக்கு கணக்கு போட்டு பார்த்து, ரூபாய்க்கு 250க்கு மேலே என்று தெரிந்து கொண்டு, ''ஐயோ, சென்னை போர்டர்கள் தங்கம்'' என்று புலம்பிக் கொண்டாள்.

விமலா பாலு

© TamilOnline.com