கலைமகளின் நல்லாசியைப் பெற்ற திருமதி கோமளா வரதன், அருங்கலைகள் பலவற்றினைக் கற்றுத் தேர்ந்து கலையுலகில் தமக்கென ஒரு தனியிடம் பெற்றவர். பரத நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்ற கோமளா, 'கலைமாமணி' போன்ற பல விருதுகளை நாட்டியத்திற்காகப் பெற்ற கலைஞர். இந்தியாவிலும், பலவெளிநாடுகளிலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் பல நாட்டிய நிகழ்ச்சிகளை நிகழ்த்தியிருக்கிறார். 'ஸ்ரீராம் சரித மான்ஸ்', 'பிரக்ருதிம் வந்தே' போன்ற தலைசிறந்த நடன நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கிப் புகழ்பெற்ற இந்த நடனமணி, டெல்லியில் கலைகூடம் என்னும் கலைச்சாலையை (Kaliakoodam; Komala Varadan Institute of Art) 1983ஆம் ஆண்டு நிறுவி நடனம், இலக்கியம் போன்ற கலைகளைக் கற்பிக்கும் பள்ளியாக மட்மின்றி இந்திய நாட்டின் அருங்கலைகள் கலாசாரம், இலக்கியம் இவற்றைப் பற்றிய ஆராய்ச்சி நிறுவனமாகவும் திகழ்ந்து வருகிறது.
கோமளா வரதன் நடனம் மட்டுமல்லாமல், ஓவியம், புகைப்படம் ஆகிய கலைகளிலும் கைதேர்ந்தவர். இதுவரை சுமார் 17 ஓவியக் கண்காட்சிகளை நிகழ்த்தியுள்ளார். 5 புகைப்படக்கண்காட்சிகளை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வழங்கியுள்ளார். இந்தியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, கம்போடியா, ஜப்பான் முதலிய ஆசிய நாடுகளில் பயணம் செய்து அருமையான புகைப்படங்களை எடுத்திருக்கிறார். சீன அரசாங்கத்தின் 52ம் ஆண்டுவிழாவினையொட்டி சீன, இந்திய அரசுகளின் ஆதரவில் 'Glimpses of China' என்ற புகைப்படக் கண்காட்சியை சென்ற வருடம் புதுடெல்லியில் வழங்கினார்.
இவை தவிர, கோமளா வரதன் தமிழ் எழுத்துலகில் பிரபலமான எழுத்தாளராகவும் திகழ்ந்து வருகிறார். தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், இரண்டு நாவல்களையும் படைத்துள்ளார். ஆங்கிலத்திலும் கலையைப் பற்றிய கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.
நாட்டியக் கலைஞர், ஓவியர், புகைப்படக் கலைஞர் எழுத்தாளர் என்று பல கலைகளிலும் சிறந்து விளங்கும் திருமதி கோமளா வரதன் சமீபத்தில் சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதிக்கு விடுமுறைக்காக வந்திருந்தபோது Fremont நகரிலுள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் அவரைச் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. கோமளாவின் கலைத்தொண்டுகளை ஊக்குவித்து உற்றதுணையாக இருக்கும் கணவர் வரதன் அவர்களும், கோமளாவும் இன்முகத்துடன் வரவேற்று தமது பல்வேறு கலைப்பணிகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். அந்த உரையாடலிலிருந்து சில பகுதிகள்...
நீங்கள் நடனம், ஓவியம், புகைப்படம், எழுத்து என்று பலகலைகளிலும் ஈடுபட்டுப் புகழடைந்திருக்கிறீர்கள். முதலில் எந்தக் கலை பயில ஆரம்பித்தீர்கள்? யார் தூண்டுதலாக இருந்தார்கள்?
என் பெற்றோர்களுக்கு நாட்டியத்தில் நல்ல ஈடுபாடு இருந்தது. நான் நன்றாக நடனம் கற்று கமலா லக்ஷ்மண் மாதிரி வரவேண்டுமென்று ஆசை. ஆகையால் கமலா மாதிரியே வழுவூர் பாணியில் வழுவூர் ராமையா பிள்ளையவர்களிடம் நான் நடனம் பயில ஏற்பாடு செய்தனர். அவர்கள் சிங்கப்பூரில் வசித்தாலும், நான் சென்னையிலிருந்து கொண்டு நடனம் கற்றேன். நடனக்கலையை அடிப்படையாகக் கொண்டுதான் எனக்கு பல்வேறு கலைகளிலும் ஈடுபாடு ஏற்பட்டு, வாழ்க்கையை ஓவியம், புகைப்படம் என்று பல கோணங்களிலிருந்தும் காண முடிகின்றது.
ஓவியத்துறைக்கு எப்போது வந்தீர்கள்?
ஓவியம், புகைப்படக்கலை இரண்டுமே திருமணத்திற்குப் பிறகுதான் மேற்கொண்டேன். பெங்களூரில் வசிக்கும் போது திரு வி.என்.ராவ் என்கிற ஓவியரிடம் பயில சந்தர்ப்பம் கிடைத்தது. முதலில் portrait படங்கள் வரையவும் landscape வரையவும் ஆரம்பித்தேன். பிறகு என் மனத்திற்குப் பிடித்த பொருளான நடனத்தை ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்தேன். பல்வேறு நடன அசைவுகள் ஒவ்வொன்றையும் ஓவியமாக்குவதில் ஈடுபட்டேன்.
புகைப்படக் கலையைப் பற்றி...
எனது தாயாரின் உறவினர் சுதேசமித்திரன் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். அவர்தான் எனக்குப் புகைப்படம் எடுப்பதன் அடிப்படைகளைக் கற்றுக் கொடுத்து என்னை ஊக்குவித்தார். மைசூரில் நான் எடுத்த முதல் ரோலிலிருந்தே 2 புகைப்படங்கள் கல்கி பத்திரிகையில் பிரசுரமாயின. சிங்கப்பூரிலிருந்த பெற்றோர்களைக் காண அங்கு சென்றபோதும், மற்றும் தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான் முதலிய நாடுகளில் பயணம் சென்ற போதும் நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். bangkok நகரில் 3 மாதம் தங்கியிருந்தபோது தாய்லாந்து நாட்டிய அமைப்பை நன்கு கவனிக்க முடிந்தது. தாய் ராமாயணம் நாட்டியத்தின் மூலம் இந்த ஆசிய நாடுகளில் பழகி வரும் நடனக்கலைகளுக்கும் இந்திய நடனங்களுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை அறிய முடிந்தது. அவற்றைப் புகைப்படங்கள் மூலம் வெளியிட முடிந்தது. ஓவியத்தைப் போலவே புகைப்படக் கலையிலும் என் மனதிற்கு உவந்த நடனத்தையே பொருளாகக் கொண்டு பல படைப்புகளை உருவாக்கியுள்ளேன். தவிர இந்தியாவின் பல்வேறு இடங்களிலுள்ள கோவில்களை அவற்றின் சிற்ப அமைப்பாடுகளின் சிறப்புகள் தெரியும் வகையில் புகைப்படங்கள் எடுத்துள்ளேன். இந்த புகைப்படங்கள் பல கண்காட்சிகளில் இடம் பெற்றுள்ளன.
எனது ஓவியங்களயும் புகைப்படங்களையும் கண்காட்சியாக San Francisco Museaum of Modern Art (SFOMOMA) இல் வைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போலிருக்கிறது.
நீங்கள் நடன நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல பயணங்கள் மேற்கொண்டிருக்கிறீர்கள். அந்த சமயங்களில் ஏற்பட்ட சுவையான அனுபவம் ஏதாவது பற்றிச் சொல்லுங்களேன்?
நான் 1975 இல் நடனநிகழ்ச்சி நடத்துவதற்காக லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரில் ஒரு நண்பரின் இல்லத்தில் தங்கியிருந்தேன். திடீரென KNBC TV Channel இல் எனது ஓவியக்கலையையும், நடனத்தைப் பற்றியும் நிகழ்ச்சி ஒன்று தயாரிக்க விரும்புகிறோம் என்ற Tay Duncan என்பவர் தொடர்பு கொண்டார். திடீரெனத் தீர்மானமாகியதால் ஓவியம் தீட்டுவதற்கான பொருட்கள் எதுவுமே கைவசமில்லை. அவசர அவசரமாக அலைந்து பொருட்களைச் சேகரித்தபின், நண்பர் இல்லத்தில் ஓவியம் வரைவதைப் படமெடுத்தனர். 'இரண்டு நிமிடங்களுக்கு நடனமாடுவதைக் காட்டுவதாக உத்தேசம்' என்றனர். ஆனால் அதைப் படமெடுப்பதற்குள் ஏழெட்டு தடவை நடனமாட வேண்டியதாயிற்று! ஏனென்றால் காமிரா இயக்குபவர் எனது வரப்போகும் ஒவ்வொரு அசைவையும் நினைவில் பதித்துக் கொள்ள விரும்பினார். நான் ஆடும்போதே கூடஓடிஓடி தான் விரும்பிய கோணங்களில் என் அசைவுகளைப் படம் பிடித்துக் கொண்டார். அன்று மாலையே New magazine நிகழ்ச்சியில் India Painting comes Alive என்கிற தலைப்பில் ஒளிப்பரப்பினார்கள. இந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. சின்னசின்ன அசைவுகளையும் உன்னிப்பாக கவனித்து, நேரம் செலவிட்டு அக்கறையுடன் அவர்கள் படமெடுத்தவிதம் அவர்களின் profesional அணுகுமுறையைக் காட்டுகிறது. இந்தியா திரும்பிய பின் இந்நிகழ்ச்சியின் காப்பி ஒன்றை அடைய முற்பட்டேன். 16 எம்.எம். ப்லிம் ஆக அனுப்பினார்கள், ஏனென்றால் அப்போது இந்தியாவில் டிவி கிடையாதே.
நீங்கள் நடனநிகழ்ச்சிகளுக்காக வெளிநாடுகளில் பயணம் செய்யும் போது அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டால் புகைப்படங்களும் எடுத்துவிடுவீர்களோ?
அப்படியில்லை.. பொதுவாக நடனநிகழ்ச்சிகள் நடத்தச் செல்லும்போது பெரும்பாலும் என் கவனம் நிகழ்ச்சிகள் நடந்தேறுவதிலேயே இருக்கும். இது மாதிரி vacation என்று பரபரப்பில்லாமல் வரும்போதுதான் புகைப்படத்தில் கவனம் செலுத்த முடிகிறது.
நடன அமைப்பு, ஓவியம் தீட்டுதல் இவை யாவற்றிற்றும் உங்களுக்கு inspiration ஆக அமைவது எது?
நம்மைச் சுற்றியுள்ள இயற்கையும், மனிதர்களுமேதான் real art is an impression of what you have absorbed ஒரு சமயம் கர்நாடகாவில் ஒரு பெரிய ஏரியைப் பார்த்த மாதிரி இருக்கும் ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது, நான் கேட்ட கன்னடப் பாட்டும் அங்குள்ள இயற்கைச் சூழலும் மனதை மிகவும் பாதித்தன. அந்தப் பாட்டின் மொழிபெயர்ப்பு ந்து:
''பறவையின் பாட்டுக்குத் தலைதூக்கிடும் மலராக ஆசை பசுவின் கழத்து மணியில் ஒலியாகிட ஆசை படரும் வானவில்லின் மேல் முகிலாகிவிட ஆசை''
அப்போது ஏற்பட்ட inspiration இல்தான் பிறகு நான் பிரக்ருதிம் வந்தே (இயற்கையைப் போற்றலும்) என்ற நடன நிகழ்ச்சியைத் தயாரித்துக் கலைக்கூடம் மூலமாக வழங்கினேன். எட்டுமொழிகளில் உள்ள பாடல்களுக்கு நடனம் ஆடும் போது, பின்னணியில் இயற்கைக் காட்சிகளை project செய்தோம். இந்நிகழ்ச்சியை 1994இல் தூர்தர்ஷனில் காட்டினார்கள். பிறகு பெங்களூரில் WWF ஆதரவில் நடைபெற்ற nature film festival - இல் இந்த நிகழ்ச்சியின் சில பகுதிகள் திரையிடப்பட்டன.
எழுத்துலகிற்கு வருவோம்... உங்கள் படைப்புக்கள் பற்றிச் சொல்லுங்களேன்...
நான் தமிழில் நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். இவற்றிற்கான கரு நடைமுறை வாழ்க்கையிலேயே கிடைக்கிறது. என் அம்மாவின் தொலைந்து போன வைரமூக்குத்தி, தோழி ஒருத்தியின் திருமணம் இவற்றைப் பொருளாக வைத்துக் கொண்டு 'அவள் காட்டிய வழி' என்ற கதையை எழுதினேன். இதுதுதான் என் முதல் கதை. கலைமகள் பத்திரிகையில் பிரசுரமானது. 'எனக்கு நீ வேண்டும்' என்ற கதை ஹிந்தி, உருது உட்பட பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறேன். 'கோடுகள் கோலமாவதில்லை' மங்கையர் மலரில் தொடர்கதையாக வந்தது. விகடனில் வெளியான தொடர்கதை 'விழிக்கும் உணர்வுகள்' பிறகு இதை வானதி பதிப்பகத்தார் வெளியிட்டனர்.
இப்போது தென்றல் பத்திரிகைக்கும் கதை எழுதுங்களேன், இங்குள்ள ரசிகர்களுக்காக...
கண்டிப்பாகத் தென்றலுக்கு கதை எழுதி அனுப்பத் தீர்மானித்துவிட்டேன். ஒரு எழுத்தாளன் எங்கு சென்றாலும் சுற்றுப்புறத்தையும், நிகழ்வுகளையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். நண்பர் ஒருவர் இல்லத்திற்குசென்ற போது தென்றல் இதழ் ஒன்றைப் பார்த்தேன். பாயசம் சாப்பிட்ட மாதிரி கொள்ளை மகிழ்ச்சி. அமெரிக்காவில் இப்படியொரு நல்ல தமிழ்பத்திரிகை இருக்கிறதே என்று. கண்டிப்பாக தென்றலுக்காக கதை எழுதுவேன்.
அமெரிக்காவிலுள்ள நாட்டியம், நாடகம், மற்ற கலைநிகழ்ச்சிகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நல்லவிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் அமெரிக்கா வந்து பாருங்கள் என்று சொல்லலாம் போலிருக்கிறது. ஒரு நாட்டு மக்களைப் பற்றியும் அவர்கள் பண்பாடு பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் அவர்கள் கோவில்களை கவனியுங்கள். பிறகு அவர்களின் உணவு, கலை, முதலியவை. இந்த எல்லா விஷயங்களிலுமே அமெரிக்க மண்ணில் வாழும் நம்மவர்கள் இந்தியாவைப் பிரதிபலிக்கிறார்கள். அங்கு என்னடாவென்றால் MTV, MacDonald's Domino's pizza என்று போகிறார்கள் (சிரிக்கிறார்)
வளர்ந்து வரும் இளம் நாட்டியக் கலைஞர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
முதலில் அவர்களின் திறமையையும் முயற்சியையும் மனமாரப் பாராட்டுகிறேன். இங்குள்ள இளைஞர்களுக்கு இந்திய நடனம் பயில்வது ஒருவிதமான identity search. அரங்கேற்றமானவுடன் கைவிட்டுவிடாமல் தொடர்ந்து இந்தக் கலையைப் பழகி, புதுமைகளையும் கூட்டி மெருகேற்றுங்கள்.
ஒன்றிரண்டு கலைகளை உருப்படியாகப் பழகுவதே கடினம். நீங்கள் எப்படி பல கலைகளிலும் இப்படி ஈடுபாடு செலுத்த முடிகிறது? எல்லாவிஷயங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு ஒழுக்கம், கட்டுப்பாடு வேண்டும். மனத்தில் தோன்றுவதை செய்து முடிக்கும் உறுதி வேண்டும். அதற்கேற்ற மாதிரி உழைக்க வேண்டும். time management செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். இன்றும் எங்கு போனாலும் நடனப் பயிற்சி செய்வதை விட்டுவிடாமல் தொடர்கிறேன்.
தென்றல் வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது...?
நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் ஒரு நல்லெண்ணத்துடன், sincerity உடன் செய்ய வேண்டும். வாழும் தேசத்தோடு ஒத்துப்போகும் போதே நமது கலாச்சாரம், பண்பாடு, values இவற்றைக் காப்பாற்ற வேண்டும்.
சந்திப்பு : அருணா |