பேரா. பாலா பாலசந்திரன்
நிகழ்த்தியவர்: ரகுநாத் பத்மநாபன், வெங்கடராமன்.
ஒலிபெயர்ப்பு: லதா ஸ்ரீனிவாசன்
தொகுப்பு: மணி மு. மணிவண்ணன்

பத்மஸ்ரீ பேரா. பாலா பாலச்சந்திரன் உலகப் புகழ் பெற்ற ஜே. கே. கெல்லாக் மேலாண்மைக் கல்வி நிலையத்தில் கணக்குத் தகவல் தளங்கள் & தீர்வியல் துறையில் சிறப்புப் பேராசியர் (Distinguished Professor of Accounting Information Systems & Decision Systems, Kellogg School of Management). அண்ணாமலை, டேய்டன், கார்னகீ மெல்லன் பல்கலைக் கழகங்களின் பட்டதாரியான இவர் கடந்த 29 ஆண்டுகளாகக் கெல்லாக் மேலாண்மைக் கல்வி நிலையத்தில் பட்ட மேற்படிப்புப் பேராசிரியராய்ப் பணியாற்றியிருக்கிறார். மேலாண்மைத் துறையில் தலை சிறந்த இந்திய அமெரிக்க நிபுணர்களில் ஒருவராக மதிக்கப்படும் இவர், தமது திறமையையும் ஆற்றலையும் இந்தியாவுடனும் பகிர்ந்து கொள்வதில் சளைக்காது உழைத்து வருகிறார். சிகாகோவின் கடும் பனிக்காலத்தை இந்தியாவில் கழிக்கிறேன் என்று நகைச்சுவையாகக் கூறும் இவர் ஆண்டுக்கு நான்கைந்து முறையாவது இந்தியாவுக்குப் பயணம் செய்கிறார். இந்தியக் குடியரசுக்கு மேல்நிலை ஆலோசகராக மட்டுமல்லாமல் இஸ்ரேல், பெரு, மலேசியா நாடுகளுக்கும், ஆந்திரா, குஜராத், மகராஷ்ட்ரா, பஞ்சாப், ராஜஸ்தான், கர்நாடகா மாநில அரசுகளுக்கும் ஆலோசகராய் இருக்கிறார். இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப ஆர்வலராகிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வற்புறுத்தலால், ஆந்திர மாநில அரசு அலுவலர்களுக்கு மின்னாளுமைப் பயிற்சி அளித்தது மட்டுமல்லாமல், ஹைதராபாதில் கெல்லாக் நிலையம் போல உலகத்தரத்துக்கு இணையான மேலாண்மைக் கல்விநிலையம் ஒன்றை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கிறார். தென்றல் சார்பில் அவரோடு மின்னரசு, பொருளாதார மந்தநிலை, சிலிகன் பள்ளத்தாக்கில் இந்திய அமெரிக்கர்கள் நிலை, இந்தியாவில் அவர் செய்து வரும் பணி போன்ற பல செய்திகள் பற்றி அவரோடு தொலைபேசியில் உரையாடினோம்.

வணக்கம் பத்மஸ்ரீ பாலச்சந்திரன் அவர்களே! முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் தாய்நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்று விட்ட பின்பும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவுக்கு ஏதாவது செய்து கொண்டிருக்கிறீர்கள். அமெரிக்காவில் பல வெற்றிகளை அடைந்த பின்னரும் இந்தியா ஏன் உங்களுக்கு அவ்வளவு முக்கியமாகத் தோன்றுகிறது?

இந்தியா என்னைப் பெற்ற தாய். ஜென்ம பூமி. அமெரிக்கா என்னை வளர்க்கும் தாய். கர்ம பூமி. அதனால் நான் வளர்த்த தாயைப் புறக்கணிக்கிறேன் என்ற அர்த்தமில்லை. அவளால்தான் நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். பெற்ற தாய்க்கு எவ்வளவு செய்தாலும் பெற்ற கடன் தீராது அல்லவா? இந்தியாவுக்குத் தொண்டாற்றுவது தார்மீகக் கடமை. நான் சாதாரணக் கிராமப் பின்னணியில் வளர்ந்தவன். இறையருளால் எனக்கு அறிவும் அதைப் பயன்படுத்தும் வாய்ப்பும் கிட்டியது. என்னைப்போல் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அவா எனக்கு எப்போதும் இருந்தது. அதற்கேற்ற சூழல் 1991இல் இந்தியாவின் “பொருளாதார தாராள மயமாக்கல்” கொள்கை பிறந்த போது வாய்த்தது. எனக்கு நன்கு தெரிந்த துறையில் இந்தியாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். செய்து கொண்டிருக்கிறேன். என்னால் இயன்ற வரை செய்வேன்.

தாராள மயமாக்கல், இணைய வளர்ச்சி போன்றவற்றால் இந்தியாவில் நல்ல பல மாற்றங்கள் ஏற்படும், நம்மாலும் ஏதாவது செய்ய முடியும் என உங்களைப் போல் பலருக்கும் தோன்றியுள்ளது. இணையம் வழியாக மின்னரசு (e-government) அமைக்கத் துணை புரிந்து வருகிறீர்கள். மின்னாளுமை (e-governance) வந்தால் லஞ்சம், ஊழல், சிவப்பு நாடா எல்லாம் அழிந்து விடும் என்ற மக்களின் நம்பிக்கை கைகூடுமா? இதற்கு இந்திய அரசியல்வாதிகளிடம் வரவேற்பு இருக்கிறதா? எதிர்ப்பு இருக்கிறதா?

மின்னரசு என்பதன் பெரிய வலிமையே அதன் வெளிப்படைத் தன்மைதான். அதை SMART (Simple, Morally correct, Accountability, Reliability and Transparent) government என்று சொல்வோம். இதன் மூலம் பொதுமக்கள் அரசுக்கு விண்ணப்பிக்கும் போது அந்தப் படிவம் ஒவ்வொரு நொடியும் எங்கிருக்கிறது, யார் அதற்குப் பொறுப்பு என்பது எல்லாமே பதிவாகி விடுகிறது. இதனால் விண்ணப்பத்தைப் பரிசீலிப்பதில் தில்லுமுல்லுகள் செய்தால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க முடியும். மின்னாளுமையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, மத்தியப் பிரதேசத்தின் திக்விஜய் சிங் போன்றோர் மிகவும் வரவேற்றுள்ளனர். மின்னரசால் ஊழல் இல்லாத அரசை நடத்த முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள். அதேசமயம் ஊழல் தலைமையின் கீழ் இருக்கும் மாநிலங்களில், மின்னரசு நடைமுறைக்கு வந்தால் லஞ்சமே வாங்க முடியாது என்று அஞ்சும் அரசியல்வாதிகள், மக்களைத் திசை திருப்ப, வேலை வாய்ப்புகள் குறைந்து விடும் என்று தூண்டி விட்டு மறைமுகமாக எதிர்க்கிறார்கள்.

மின்னாளுமை மிக எளிதானதுதான். எல்லா மாநிலங்களிலும் மின்னரசு அமைக்க வேண்டும் என்றுதான் நான் டி.சி.எஸ். நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றி வருகிறேன். கர்நாடகா, ஆந்திரா மட்டுமல்லாமல் தமிழ்நாடும் மைய அரசின் பிரமோத் மகாஜனும் மின்னரசின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டுகிறார்கள். வாய்ப்புகள், பணவசதி, கணினிக் கல்விவளம் இருந்தால்கூட, ஊக்கத்துடன் இதைச் செயல்படுத்துவது இறுதியில் அரசியல் தலைமையிடம் தான் இருக்கிறது. ஏதாவது ஒரு மாநிலத்தில் மின்னரசு வளரவில்லை என்றால் அதைத் தடுப்பது தனக்கு ஆதாயம் தேடும் அரசியல்வாதியாகத்தான் இருக்கும்.

நாலைந்து மாநிலங்கள் மின்னரசை நல்ல முறையில் அமைத்து அதனால் அந்த மாநிலங்களுக்குப் பெருமையும், பண வளர்ச்சியும், மன வளர்ச்சியும் தந்து, மக்களை மகிழ்வித்தால், ஊழல் மலிந்திருக்கும் மற்ற மாநிலங்களும் இந்த முன்னுதாரண மாநிலங்களைப் பார்த்துத் திருந்தலாம். இன்னும் ஐந்து அல்லது பத்தாண்டுக்குள் சில குறிப்பிட்ட ஆறு மாநிலங்களில் இது அமையும் என நினைக்கிறேன். அதாவது, ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப்...

தமிழ்நாடு?

தமிழ்நாடு... சொல்லப்போனால், ஆந்திரா, கர்நாடகாவை விடத் தமிழ்நாட்டில் கணினி வளர்ச்சி, மக்கள் திறமை கூடுதலாகவே இருந்தாலும், எல்லா ஆட்சியிலும் மின்னரசு வளர்ச்சி மந்தமாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் மக்களுக்குப் பல நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் எனத் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மின்னரசு குறித்து ஆசையும், ஊக்கமும், நாட்டமும் காட்டி வருகிறார். இதனால், தமிழ்நாட்டிலும் வளர்ச்சி வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் இந்திய அரசுகளின் உயர் அலுவலர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறீர்கள். ஒருபக்கம் இவர்கள் ஊழல் பேர்வழிகள் என்ற கருத்து மக்களிடையே நிலவினாலும் மறுபக்கம் அவர்கள் வெளிநாட்டு அறிஞர்களிடம் உயர்தரப் பயிற்சி பெறுவதையும் பார்க்கிறோம். அவர்கள் எந்த மாதிரிப் பயிற்சியை எதிர்பார்க்கிறார்கள்? நீங்கள் எந்த மாதிரிப் பயிற்சியை அளிக்கிறீர்கள்?

நான் இந்தப் பயிற்சிகளில் ஊழல் பற்றி அதிகம் பேசுவதில்லை. அப்படிப் பேசினால், நான் நல்லது செய்ய நினைத்தாலும் அவர்கள் என்னை ஒதுக்கி விடக்கூடும். (சிரிப்பு). நான் முதலில் நம்மிடம் இருக்கும் போக்குவரத்து, மின்சாரம், தண்ணீர், உணவு போன்ற வளங்களில் விரயத்தைக் குறைப்பது பற்றிச் சொல்வேன். விளைந்த நெல்லைப் பெருச்சாளி தின்ன விடாமல், வெள்ளத்தில் சேதமாகாமல், விரயத்தைத் தடுப்பதை ஒரு தனியார் நிறுவனம் எப்படிச் செயல்படும் என்பது போன்ற பாடங்களைச் சொல்லிக் கொடுப்பேன்.

எடுத்துக்காட்டாக பொதுத்துறையில் இருக்கும் மின்சாரப் பங்கீட்டைத் திடீர் என்று தனியார் மயமாக்கும்போது ஒரேயடியாக விலையைக் கூட்டி விட்டால் ஏழைகளுக்கும், கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மின்சாரம் கிடைக்காமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது. அதே சமயத்தில் காலை 8 மணி முதல் இரவு 9 வரை மின்சாரம் அதிகமாகப் பயன்படுத்தும் நேரத்துக்கு முழுக்கட்டணமும், மற்ற நேரங்களில் மலிவு விலையிலும் கொடுத்தால் தேவைப் பட்டவர்கள் தேவைப்பட்ட நேரத்தில் கொடுக்கக்கூடிய விலையில் பயன்படுத்திக் கொள்வார்கள். இது போல ஒரு நாளை ஆறு பங்காய்ப் பிரித்து அதிகமாய்ப் பயன்படுத்தும் நேரத்தில் முழுக்கட்டணம், மிகக் குறைவான நேரத்தில் 8% கட்டணம் என்ற முறையில் ஒரு திட்டத்தை முன்னாள் இந்திய மின்சாரத்துறை அமைச்சரும் நல்ல அறிவாளியுமான திரு சுரேஷ் பிரபு என் உதவியுடன் ஆந்திராவிலும் வட இந்தியாவிலும் செயல்படுத்தினார். தனியார் துறையின் வழிகளை வைத்துப் பொதுத்துறையில் திறமையான நிர்வாகம் செய்யலாம் என்ற என் சிந்தனையை அவரும் அவரது அலுவலர்களும் உடனே புரிந்து கொண்டு செயல்பட்டனர். எப்படித் தனியார் துறைக்கு லாப நோக்கு இருக்கிறதோ அது போலவே பொதுத்துறைக்கு மக்களுக்கு நன்மை செய்வது நோக்கமாக வேண்டும் என்பதையும், அதிலும் மக்களின் தேவைக்கு ஏற்ற படியும் வசதிக்கு ஏற்றபடியும் நன்மை செய்வது எப்படி என்பதையும் கற்றுக் கொடுத்தேன்.

ஆந்திராவில் 4000 அரசு அதிகாரிகளுக்கு இந்தப் பயிற்சிகள் இந்திய மேலாண்மைக் கல்விநிலையம் (Indian School of Business, Hyderabad) வழியாகத் தொடர்கின்றன. நாங்களும், ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஹைதராபாத் சென்று பயிற்சி கொடுக்கிறோம்.

இந்த இந்திய மேலாண்மைக் கல்வி நிலையம் பற்றிச் சொல்ல முடியுமா?

1991-92 இல் ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்தியாவின் அரசு அலுவலர்களுக்குத் (I.A.S. officers) தொடக்க நிலைப் பயிற்சி தரும் பயிற்சி நிலையத்தின் (Management Development Institute, Gurgaon) பேராசிரியர்களை மேம்படுத்த 6,00,000 டாலர் நிதி அளித்தது. அந்த நிலையத்தின் பேராசிரியர்களை கெல்லாக் மேலாண்மை நிலையத்துக்கு வரவழைத்தும் நாங்கள் அங்கு சென்றும் பயிற்சியளித்தோம். தொடக்க நிலைப் பயிற்சி மட்டுமளித்துக் கொண்டிருந்தவர்களுக்குப் பதினைந்து ஆண்டுகள் அனுபவம் உள்ள உயர் அதிகாரிகள், மூத்த மேலாளர்களுக்கும் பயிற்சியளிக்கக் கற்பித்தோம். 1991 இலிருந்து 1995 வரை அமெரிக்காவிலிருந்து பேராசிரியர்கள் சென்று கொண்டிருந்தனர். இப்படிச் செய்து கொண்டிருப்பதை விட ஓர் “அமர்க்களமான” நிலையத்தை, இந்தியாவிலேயே ஏன் உருவாக்கக் கூடாது என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. மெக்கின்சி (McKinsey) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரஜத் குப்தாவும் உடனடியாக இதை ஆதரித்து ஐ.ஐ.டி. டெல்லியில் அமைக்கலாம் என்றார். ஆனால், இது தனித்து இயங்கும் மேலாண்மை நிலையமாக இருக்க வேண்டும், மும்பை போன்ற மைய இடத்தில் இருக்க வேண்டும் என்ற என் கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். டாட்டா, பிர்லா, மற்றும் கோல்ட்மன் சாக்ஸ், டைம்லர் பென்ஸ், மிட்சுபிஷி நிறுவனங்களின் தலைவர்கள், கிரெடிட் ஸ்விஸ் நிறுவனம், மற்றும் பல அமெரிக்க இந்தியர்களும் உலகத்தின் தலைசிறந்த 40 நிறுவனங்களின் தலைவர்களும் நிதி அளிக்க முன்வந்தனர். மொத்தம் 70-80 மில்லியன் டாலர் சேர்த்து பிரம்மாண்டமாக ஆரம்பிக்க நினைத்தோம். மும்பையில் நடத்துவதென்றால் 25% ஆசிரியர்கள், 25% மாணவர்கள் மராத்தியர்களாக இருக்க வேண்டும் என்று இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திரு. பால் தாக்கரே கோரினார். திறமைக்கும் அறிவுக்கும் மட்டும் மதிப்பளித்து எந்த நாட்டிலிருந்தும், எந்த மாநிலத்திலிருந்தும் வந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்ததால் மும்பையைக் கைவிட்டோம்.

நிலையத்துக்கு இடம் தேடி சென்னை, ஹைதராபாத், பெங்களூர், டெல்லி என்ற நான்கு நகரங்களுக்கு எங்கள் குழு சென்றது. திரு. சந்திரபாபு நாயுடு மட்டுமே விமான நிலையத்துக்கே வந்து மாலையுடன் எங்களை வரவேற்றார். 210 ஏக்கர் நிலத்தை அளித்து, நிலையம் அமைக்க வேண்டியதைக் கவனிக்க ஒரே அரசுத்துறையிடம் கொடுத்தார். 1998இல் அனுமதி அளித்து, டிசம்பர் 99ல் அடிக்கல் நாட்டி, மளமளவென்று ஒன்றரை ஆண்டில் முடித்து, 2001ல் திறக்கப் பட்டது இந்திய மேலாண்மைக் கல்விநிலையம் (Indian School of Business, www.isb.edu). பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை விடச் சிறப்பாகவும், கெல்லாக், ஹார்வர்டு பல்கலைக்கழகங்களுக்கு இணையான வசதியுள்ளதாகவும் கட்டப்பட்டுள்ள இந்த நிலையத்தின் முதல் மாணவர்கள் இந்த ஜூன் 2002 அன்று குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தலைமையில் பட்டம் வாங்கினார்கள்.

இந்த நிலையத்தின் துணைவேந்தர் தேர்வுக்குழுவுக்கும் முழுநேரப் பேராசியர்கள் தேர்வுக் குழுவுக்கும் தலைவராகப் பணியாற்றி வந்திருக்கிறேன். அங்கேயே தங்கி நிலையத்தின் தலைவராகப் பணியாற்றப் பலர் வற்புறுத்தினாலும், அமெரிக்காவில் இருந்து அவ்வப்போது அங்கே சென்று பணியாற்றுவதால் கூடுதலாக உதவ முடியும் என்று எண்ணுகிறேன். அமெரிக்க நிறுவனத் தலைவர்களுக்கு அந்த நிலையம் பற்றி என்னால் இங்கிருந்து எடுத்துச் சொல்லி அதன் மாணவர்களுக்கு உதவ முடியும். என் சிந்தனையில் உருவான இந்தக் கல்விக்கூடத்தை அமைப்பதில் என் பங்கு பற்றி பெருமையடைகிறேன். அதே நேரம் இந்தச் சிந்தனையைச் செயல்படுத்திய மெக்கின்சி நிறுவனத்தின் ரஜத் குப்தா, அதில் அவ்வப்போது சென்று பாடம் நடத்தி வளர்த்து வரும் அமெரிக்காவின் தலைசிறந்த மேலாண்மைப் பள்ளிகளின் பேராசிரியர்களும் எனது நண்பர்களுமான 70 பேர் என்று பலரின் பங்கு இருப்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். இது பிற்காலத்தில் நன்றாக வளர்ந்து புகழ் பெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

சிகாகோவில் இருந்து கொண்டே இந்தியாவுக்குத் தொண்டாற்ற முடியும் என்று முன்னொரு பேட்டியில் சொன்னீர்கள். செய்தும் காட்டியிருக்கிறீர்கள்! இந்தியாவில் படித்த திறமைசாலிகள் வெளிநாட்டுக்குச் செல்வதால் இந்தியாவின் நிலை என்ன ஆகும் என்று “Brain Drain” பற்றிச் சிலர் கவலைப்படுகிறார்கள். இந்தியாவிலேயே இவர்கள் இருந்து கொண்டு ஏதும் செய்ய முடியாதா?

ஒருவர் சொன்னார் “It is better to have a brain drain than brain in a drain” என்று! ஒரு காலத்தில், வெளிநாடு சென்றால்தான் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந்தியாவில் தொழிலோ, பெரிய ஆய்வுக்கூடமோ தொடங்குவது மிகக் கடினமாக இருந்தது. ஆனால், கண் பார்வையற்றவர்கள் மற்ற உறுப்புகளை நுட்பமாகப் பயன்படுத்திக் கொள்வதுபோல், இந்தியர்கள் தம்மிடம் பணவசதி இல்லாவிட்டாலும், தம் கணக்குத் திறமையை வளர்த்துக் கொண்டு முன்னேறியிருக்கிறார்கள். இந்தக் கணக்குத் திறமையின் அடிப்படையில் வளர்ந்தது தான் தகவல் தொழில் நுட்பத் தொழில். இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகின் எந்த நிறுவனத்துக்கும் ஈடாக இன்று நிற்க முடிகிறது. 15-20 ஆண்டுகளுக்கு முன் இந்த நிலை இல்லை. சீனப் பிரதமர் அண்மையில் இந்தியா வந்திருந்த போது அவர் அதிக நேரம் செலவிட்டது இன்·போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தியுடன் தானாம். சொல்லப்போனால் இப்போது Brain Gain ஆகிக் கொண்டிருக்கிறது என்பேன்.

மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருபது ஆண்டு வாழ்ந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்த நாளான ஜனவரி 9ஐ அடையாளமாகக் கொண்டு பிரவாசி பாரதிய திவாஸ் அல்லது புலம்பெயர்ந்த இந்தியர் நாளாக வரும் 2003 முதல் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாட இருக்கிறார்கள். வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினர் இந்தியாவின் வளர்ச்சியில் ஈடுபட வாய்ப்புகள் இனி வரும் ஆண்டுகளில் கூடும். இந்தியாவுடன் வணிகத் தொடர்புள்ள நிறுவனங்களில் பணியாற்றினால் அங்கும் இங்குமாய் மாறி மாறி வேலை செய்யலாம்.

தொழில்நுட்பத் துறையில் இந்தியர்கள் கெட்டிக்காரர்களாயிருந்தாலும், சந்தை மற்றும் விற்பனைத் திறமைகளில் பின் தங்கியிருக்கிறோம் என்று இந்தியர்களே நம்புகிறார்களே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

சந்தை மற்றும் விற்பனைத் திறமைகள் அமெரிக்கர்களுக்குக் கைவந்த கலை. அதை இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எங்கள் கெல்லாக் மேலாண்மை நிலையத்தின் சந்தைத் துறைத் தலைவர் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி. நிலையத்தின் டீன் பேரா. தீபக் ஜெயின் சந்தைத் துறைப் பேராசிரியர். பல தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சந்தை மற்றும் விற்பனைத்துறைப் பேராசிரியர்களாக இந்தியர்கள், குறிப்பாகத் தென்னிந்தியர்கள் இருக்கிறார்கள். இன்னும் கற்பிக்கும் நிலையில் மட்டும் இருக்கிறோம். செயலாக்குவதில் இல்லை. ஆனால் பெப்சி நிறுவனத்தின் தலைவியாகியுள்ள திருமதி இந்திரா நூயி போல் அடுத்த தலைமுறை இந்திய அமெரிக்கர்கள் இந்தத் துறைகளிலும் முன்னுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

அண்மையில் விரிகுடாப் பகுதியில் நடந்து முடிந்த தமிழ் இணைய மாநாட்டில் தமிழ் லினக்ஸ், தமிழில் கணினி மற்றும் இணையத் தொழில்நுட்பங்கள் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைக்கப் பட்டன. ஆனால், இங்கேயும் நன்கு படித்த சிலர் தமிழில் படிப்பதே தேவையில்லை, தமிழில் இணையம் எதற்கு என்றார்கள். தமிழ் இணையத்தால் என்னென்ன நன்மைகள் இருக்க முடியும் என்று நீங்கள் சொல்ல முடியுமா?

முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பில் கிளின்டன் இந்தியா சென்ற போது ஓர் ஆந்திரா கிராமத்தில் மூன்றாம் வகுப்பு வரைகூடப் படிக்காத ஒரு பெண் தன் படைப்புகளைப் பற்றி இணையத்தில் தெலுங்கில் விளம்பரம் செய்ததைப் பார்த்து அசந்து விட்டார். கிராமத்தில் வாழும் தொழிலாளியோ, நெசவாளியோ, விவசாயியோ தன் பொருளை விளம்பரப் படுத்த ஆங்கில இணையத் தொழில்நுட்பம் தேவை என்றால் மிரண்டு ஓடி விடுவார்கள். வணிக, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மொழி இடைஞ்சலாக இருக்கும்போது தாய்மொழிதான் தேவை. அதனால் தமிழ் இணையம் வந்துதான் ஆக வேண்டும். அது தேவைதான். அதை மிகவும் வரவேற்கிறேன். அதே சமயத்தில் உலகரீதியாய் இருக்க ஆங்கிலமும் கற்க வேண்டியது தேவை. தமிழுக்குப் பதிலாக ஆங்கிலம் கற்பதுதான் தவறே ஒழிய தமிழோடு ஆங்கிலமும் கற்பது நல்லதுதான்.

“Advantage India” என்ற தலைப்பில் உங்கள் கெல்லாக் நிலையத்தில் பாடம் நடத்துகிறீர்கள். அது மாணவர்களுக்கு மட்டுமா? இந்தியாவில் தொழில் தொடங்க எண்ணுபவர்களுக்கும் உதவுமா?

அந்தப் பாடத்தின் குறிக்கோளே இந்தியாவில் தொழில் செய்வதின் ஆதாயங்களை எடுத்துச் சொல்வதுதான். இந்தியாவிலும் திறமை இருக்கிறது, தொழில் செய்யும் வாய்ப்புகள் இருக்கிறது என்பதை அமெரிக்காவில் பிறந்தவர்களும் அறிந்து கொண்டு, இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடன் தொழில்முறைத் தொடர்பு வைத்துக் கொண்டு வணிகம் செய்ய முடியும் என்பதை இந்த வகுப்பின் மூலம் காட்டுகிறோம். வகுப்பின் முடிவில் கடைசி இரு வாரங்கள் இந்த மாணவர்கள் இந்தியா சென்று இந்திய அமைச்சர்களையும், பெரும் தொழிலதிபர்களையும், மற்ற அரசு, பொதுத்துறைத் தலைவர்களையும் சந்தித்துப் பழக வைத்திருக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல ஹார்வர்டு, உவார்ட்டன் பள்ளிகளும் தங்கள் மாணவர்களுக்கு இது போலவே இந்திய வணிக வாய்ப்புகள் பற்றிக் கற்பிக்கின்றன. இந்த மாணவர்கள், வருங்காலத்தில் பெரும் நிறுவனங்களின் தலைவர்கள் ஆகும்போது இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்க மாட்டார்கள். அது போலவே இந்திய மாணவர்களையும் இங்கு கூட்டி வந்து தொழில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.

கல்வி, மட்டும் ஆராய்ச்சித் துறைப் பேராசிரியராய் இருப்பது மட்டுமல்லாமல், பெரும் நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரை வழிநடத்திச் சென்றிருக்கிறீர்கள். படிப்பறிவும், ஆய்வுத் திறனுக்கு மேலும் ஏதோ ஒரு குணம் இல்லாமல் உங்களால் இதைச் சாதித்திருக்க முடியாது. அது என்ன?
“சொல்வதைச் செய்து காட்டு” (Practice what you preach) என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான். இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றான BHEL நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்கும்போது வெறும் பாடங்கள் நடத்துவதோடு நிற்கவில்லை. தனியார் நிறுவனங்கள் போல் திறமையாகவும், லாபகரமாகவும் நடத்த முடியும் என்று உத்திரவாதம் கொடுத்தேன். வெறும் வாய்ச்சொல் வீரன் அல்ல, செய்து காட்டுவேன் என்பதற்கு அடையாளமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அங்கே சென்று அவர்களுடன் உழைப்பேன் என்று சொன்னேன். கடந்த இரண்டு வருடங்களாய் டி.சி.எஸ். நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றியதால் பி.எச்.இ.எல். ஒரே வருடத்தில் நூற்று அறுபது கோடி ரூபாய் சேமிக்க முடிந்திருக்கிறது.

பேச்சின் மூலம் கவனத்தை ஈர்க்க முடியும். எழுத்தின் மூலம் சிந்திக்க வைக்க முடியும். செய்து காட்டினால்தான் நம்பிக்கை பெற முடியும். மோசஸ் கடலைப் பிளந்த பின் தான் முன் நின்று வழி காட்டியதால்தானே மற்றவர்களும் பின் பற்றினார்கள்? நீங்கள் முன்னே போங்கள், நான் பின் தொடர்கிறேன் என்றால் மற்றவர்கள் போயிருப்பார்களா? அது போல, செய்து காட்டுபவர்கள்தான் பலரின் நம்பிக்கையைப் பெற முடியும்.

உங்கள் வாழ்க்கையின் வெற்றிப் பாதையில் இன்றைய இளைய சமுதாயத்துக்குப் பாடமாக அமையும் முக்கியமான அனுபவங்கள், பண்புகள் ஏதேனும் பற்றிச் சொல்ல முடியுமா?

இது சற்றுச் சிக்கலான கேள்வி. அப்படிப் பட்ட பெரிய ஆளாக என்னையே நான் வியந்து கொள்வதில்லை! இருந்தாலும், உங்கள் கேள்வி பற்றிய என் எண்ணங்களைச் சொல்கிறேன். “உன்னால் முடியும்” என்ற நம்பிக்கையும், தெளிவான திட்டமும், தளராத உழைப்பும் இருந்தால் வாய்ப்புகள் தானே தேடிவரும். நான் பிட்ஸ்பர்க்கில் டாக்டர் பட்டத்துக்குப் படித்துக் கொண்டிருந்த போது என் மனைவி அமெரிக்காவில் வேறோரிடத்தில் வேலை செய்ய மதுரையில் ஒரு மகன், புதுக்கோட்டையில் இன்னொரு மகன் என்று பிரிந்து வாழ வேண்டி இருந்தது. படிப்பை முடித்தே ஆகவேண்டும் என்பதால் பிரிவுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. தியாகங்கள் செய்யத் தயங்கக் கூடாது. நான் படித்தது மிகச் சாதாரணமான புதுக்கோட்டை குலபதி பாளையப் பள்ளியிலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும்தான். விடா முயற்சியும், தளராத உழைப்பும், குடும்பத்தின் ஆதரவும், இறைவன் அருளும் இருந்ததால் அமெரிக்காவிலேயே மிகச் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரை படைத்து டாக்டர் பட்டம் பெற முடிந்தது.

உங்களைப் பற்றிக் கூறினீர்கள். உங்கள் வெற்றியில் உங்கள் மனைவியின் பங்கு என்ன?

ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னரும் ஒரு பெண் இருக்கிறாள் என்பர். ஆனால், என் விஷயத்தில் அப்பெண்மணி என்னைவிட ரொம்பவும் முன்னே இருக்கிறாள் என்பேன். சுக துக்கங்களில் பங்கு போட்டுக் கொண்டு இன்று மகிழ்ச்சியோடு இருக்கிறோம். என் குடும்பம் என் வெற்றிக்கு என்றுமே உறுதுணையாக இருந்ததைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.

இந்தக் கடும் பொருளாதார மந்த நிலையால் வாடும் அமெரிக்க இந்தியர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

அமெரிக்கப் பொருளாதாரம் இன்னும் ஒராண்டு மந்தமாகவே இருக்கும். போர் வந்து விட்டால் நிலைமை இன்னும் மோசமாகலாம். பலர் வேலைகள் இழக்கக் கூடும். சில துறைகளில் வேலை வாய்ப்பு கூடும். இதில் என் அறிவுரை இதுதான்: மற்றவர்களுக்காக வாழாதீர்கள். பகட்டுக்காகச் செலவழிக்காமல் தன் தேவைக்காகத் தன் வரவுக்குள் செலவு செய்து வருங்காலத்துக்காகச் சேமித்து வைத்தால் நல்லது. பங்குச் சந்தையில் பொருள் ஈட்டி இருந்தால் தான தருமங்களுக்கும், கடவுள் பணிக்கும் ஓரளவாவது செலவழித்து, மீதியைச் சேமித்து வையுங்கள். “We possess something. We don’t own a darned thing. In the long run, You go; I go; Why Ego in between?” மாற்றங்களை எதிர்நோக்கித் தன்னைத் தயாரித்துக் கொள்ளும் மனப்பான்மை தேவை. இன்று Information Technology; நாளை Bio-Technology; பின்னர் Nano Technology என்கிறார்கள். அடுத்த நான்கு ஐந்து ஆண்டுகளில் என்ன நுட்பங்கள் வளரப் போகின்றன என்பதைப் பார்த்து, எதிர்காலத்துக்குத் தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும். புதிது புதிதாகக் கற்றுக் கொண்டு இந்த வேலை போனாலும் வேறு வேலைக்குச் செல்ல நம்மைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும். இல்லையேல் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று தொழில்களில் ஈடு பட்டிருக்க வேண்டும். நான் கூட அப்படித்தான் இரண்டு, மூன்று தொழில்களைக் கூடவே செய்து கொண்டிருக்கிறேன். ஒரு வேலை போனாலும் பரவாயில்லை, இன்னொன்று இருக்கிறது என்பதால் கவலை இல்லை. கடவுள் அருளும் வேண்டும். கடவுள் அருளுக்குப் பாத்திரமாக இருக்கக் கொடுக்கும் மனமும் வேண்டும். உலகில் எதுவும் நிலையானது இல்லை. எனவே எதற்கும் தயாராக இருங்கள்.

உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கித் தென்றல் வாசகர்களோடு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. வணக்கம்.

நிகழ்த்தியவர்: ரகுநாத் பத்மநாபன், வெங்கடராமன்.
ஒலிபெயர்ப்பு: லதா ஸ்ரீனிவாசன்
தொகுப்பு: மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com