மூன்றாமாண்டில் அடியெடுத்து வைக்கிறோம்......
ஆரம்ப காலத்தில் தென்றலின் வளர்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் எங்களது நன்றி. குறிப்பாக திரு. அப்பணசாமி மற்றும் திரு. அசோக் சுப்பிரமணியம் ஆகியோருக்கு. தென்றலில் விளம்பரம் செய்யும் ஒவ்வொருவரும் அதன் வளர்ச்சிக்குக் காரணமே. அவர்களது ஆதரவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. வாசகர்கள் அவ்விளம்பரதாரர்களை ஆதரிக்குமாறு வேண்டுகிறோம்.

இந்த இதழிலிருந்து தென்றல் சிகாகோ நகரில் வலம்வர உள்ளது. அதற்கு முழுமுதற் காரணம் மாலதி நரசிம்மன் அவர்கள். சிகாகோ பகுதி வாசகர்கள் தங்கள் பகுதி செய்திகளையும், நிகழ்வுகளையும் அவர்களுக்கு (maalti@yahoo.com) அனுப்புமாறு வேண்டுகிறோம். உங்களது படைப்புகளையும் தான்.

பல வாசகர்கள் பலமுறை கேட்ட ஒன்று - மேலும் அதிகமான (இளந்தென்றல்) சிறுவர் பக்கங்கள். இந்த இதழிலிருந்து படக்கதையுடன் தொடங்குகிறோம். உங்களது எண்ணங்களையும் ஆலோசனைகளையும் எழுதி அனுப்புங்கள். அதற்கேற்ப மாற்றவோ அதிகரிக்கவோ முயல்கிறோம்.

நமது பாரம்பரியக் கதைகள் பெரிதும் குறைந்துவிட்டன - பல அழிந்தும் விட்டன. பல ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியில் அஷ்டாவதானம் நிகழ்ச்சி ஒன்றை நடத்திய மூத்த கலைஞர் சொன்னார். எனக்கு பிறகு இக்கலையை செய்வதற்கு யாரும் இல்லை. சொல்லித் தருகிறேன் என்று அழைத்தாலும் கற்பாரில்லை என்றார்.

நமது பாரம்பரிய கலைகளில் எஞ்சியிருப்பனவும் சினிமாவின் தாக்கத்தால் தன்னுரு இழந்து கொண்டு இருக்கின்றன. வாய்வழி இலக்கியங்களுக்கும் அதே நிலைதான். பல ஆண்டுகளுக்கு முன் நா.வா. என்று அழைக்கப்பட்ட நா. வானமாமலை அவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து தொகுத்த கதைளை 'தமிழர் நாடோடிக் கதைகள்' என்ற பெயரில் ஒரு புத்தகமாக வெளியிட்டார். அப் பணி இப்பொழுது நினைவு கூறத்தக்கது. தெனாலிராமன், மரியாதை ராமன் சரித்திரங்கள் சித்திரக் கதைப் புத்தகங்களுக்கு வெளியே இருப்பதாகத் தெரியவில்லை.

நமது குழந்தைகளுக்கு நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியைக் காட்டும் பொருட்டும் அவர்களுக்குத் தமிழ் படிக்க/படிப்பிக்க சுவையான வழியாக இருக்கும் என்ற நம்பிக்கையிலும் இது போன்ற கதைகளைத் தொடர்ந்து பிரசுரிக்க இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் நாட்டார் வழக்காற்றியல் என்பது நாட்டுப்புற சமூகம், கலை, பாடல்கள், இலக்கியம் பற்றியதான ஒரு படிப்பு. ஒரு நூற்றாண்டு காலமாக கவனம் பெற்று வரும் இத்துறை ஆவணப்படுத்துதல் மற்றும் ஆய்வு போன்றவற்றில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் என வ. ஐ. சுப்பிரமணியம், நா. வானமாமலை, லூர்து, ஆர். அழகப்பன், ஆர். இராமநாதன், சரஸ்வதி வேணுகோபால் மற்றும் பலரையும் குறிப்பிட முடியும்.

கிருஸ்மஸ், ரமலான் வாழ்த்துக்கள்

மீண்டும் சந்திப்போம்,
பி. அசோகன்
டிசம்பர் 2002

© TamilOnline.com