அமெரிக்கா போர் முரசு கொட்டத் தொடங்கி விட்டது. பேரழிவு ஆயுதங்களை ஈராக் ஒளித்து வைத்திருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அமெரிக்காவின் படையெடுப்பை ஈராக் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்கிறது ஒரு லண்டன் நாளேடு. ஈராக் மக்கள் அமெரிக்க வெற்றியை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கு இன்னொரு அடையாளம் ஈராக்கின் பங்குச் சந்தையின் கிடுகிடு ஏற்றம் என்கிறது சி.பி.எஸ். வானொலி. அமெரிக்க வெற்றிக்குப் பின்னர் ஈராக்கின் நிறுவனங்கள் செழிக்கும் என்ற எதிர்பார்ப்பால் ஈராக்கின் பங்குச் சந்தை உயர்கிறதாம். பாகிஸ்தான், வடகொரியா போல் உண்மையிலேயே ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருந்தால் ஈராக்கின் மேல் யாரும் படையெடுக்க மாட்டார்கள். ஆனால், குவைத்தின் எண்ணைக் கிணறுகளைக் கொளுத்தவும் தயங்காத வர்கள், தங்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச அழிவு ஆயுதங்களையும் பயன்படுத்தத் தயங்குவார்களா என்ன? அதனால்தானோ என்னவோ, அமெரிக்கப் பங்குச் சந்தை சரியத் தொடங்கியிருக்கிறது.
******
அமெரிக்கா போருக்குப் போகும்போதெல்லாம், இனவெறியர்கள் தேசபக்திப் போர்வையோடு சிறுபான்மையினரை வேட்டையாடக் கிளம்பி விடுவார் கள். “ஏய் ஈராக்கி, உன்னுடைய நாட்டுக்குத் திரும்பிப்போ” என்று வசைமொழியில் அர்ச்சிப் பார்கள்; கல்லடிப்பார்கள்; அல்லது செப்டம்பர் 11க்குப் பின் சில இடங்களில் நடந்ததுபோல் வெறியாட்டம் போடுவார்கள். இந்தியர்களையும் ஈராக்கிகளையும் வேறுபடுத்திப் பார்க்கும் அக்கறை யில்லாமல், எல்லோரையும் சமமாக வெறுப்பார்கள். கோவில்களையும், வழிபடும் தலங்களையும், தாக்கு வார்கள். கார்கள், வீடுகள், தனி மனிதர்கள் என்று எதையும் விட்டு வைக்க மாட்டார்கள். நல்ல வேளை யாக, செப்டம்பர் 11க்குப் பின்பு குடியரசுத் தலைவர் புஷ் இனவெறியர்களின் தாக்குதல்களைக் கண்டித்ததால் இவை ஓரளவுக்காவது கட்டுக் கடங்கியது.
வெறியர்களின் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எல்லாச் சிறுபான்மையினரும் தங்கள் கார்களிலும் வீடுகளிலும் அமெரிக்கக் கொடியைப் பறக்க விடுவார்கள். இந்திய-அமெரிக்கத் தலைவர்கள் தாங்களும் அமெரிக்கர் களே என்பதைக் காட்ட அறிக்கை விடுவார்கள். கூட்டம் கூட்டுவார்கள். இரத்த தானம் கொடுப் பார்கள். முக்கியமாக, தங்களுக்கும் ஈராக்கியர் களுக்கும் உள்ள வேறுபாடுகளை தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்வார்கள். அமெரிக்காவில் வாழும் ஈராக்கியர்களைத் தாக்குவது சரியா தவறா என்ற தர்ம சங்கடமான விவாதங்களில் எல்லாம் ஈடுபட மாட்டார்கள். அமெரிக்காவில் வாழும் பெரும் பாலான ஈராக்கியர்கள் அங்கிருந்து தப்பி ஓடி வந்தவர்கள், அமெரிக்காவின் தீவிர ஆதரவாளர்கள் என்பதைப் பற்றியெல்லாம் யாருக்கும் அக்கறை இருக்காது. “நாங்கள் ஈராக்கியர்கள் இல்லை, எங்களை அடிக்காதே” என்பதை மட்டும் வலியுறுத்திச் சொல்வார்கள்.
******
எதிரிகளின் மதம் அல்லது இனத்தைச் சார்ந்த வர்கள் தம் நாட்டுக் குடிமக்களாக இருந்தாலும், பிழை ஏதும் செய்யாமல் இருந்தாலும், அவர்களைத் தாக்குவதும் கொன்று குவிப்பதும், கொளுத்துவதும், செல்வச் செழிப்புள்ள படித்தவர்கள் நிறைந்த அமெரிக்காவில் மட்டும் நடக்கும் செய்தியில்லை. தொன்மையான வரலாறும், பண்பாடும் கொண்ட பாரதத் திரு நாடும், அண்ணல் காந்தியடிகளார் பிறந்த குஜராத் மாநிலமும்கூட இதற்கு விலக்கில்லை. கோத்ரா கலவரங்களின் கொடுமை யைக் கண்டு இந்தியத் தலைமை அமைச்சர் வாஜ்பாயி “உலக அரங்கின் முன்னர் தலை குனிந்தேன்” என்று வருந்தினார். இருந்தாலும், கோத்ராவில் தன் கடமையைச் செய்யத் தவறிய அரசை பெருவாரியான வாக்குகளுடன் மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் குஜராத் மக்கள். உலக அரங்கின் முன்னால் மீண்டும் தலை குனிவா?
******
அமெரிக்க செனட்டின் பெரும்பான்மைக் கட்சித் தலைவர் டிரெண்ட் லாட் அமெரிக்காவின் முன்னால் தலை குனிந்திருக்கிறார். 1948இல் இனவெறிக் கும் அமெரிக்காவின் தீண்டாமைக்கும் கொடிபிடித்த ஸ்ட்ராம் துர்மாண்டு அமெரிக்க அதிபராயிருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று சொல்லி நீறு பூத்த நெருப்பாயிருக்கும் இனவெறியை ஊதி விட்டார். ஆனால், இனவெறிக்கு இன்றைய அமெரிக்காவில் வேலையில்லை என்று அதிபர் புஷ் காட்டமாகச் சொல்லி, டிரெண்ட் லாட்டின் பதவிக்கே ஆட்டம் காட்டுவார் என்று அவர் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். இதனால், இனவெறியர்களின் ஆதரவு தம் கட்சிக்குத் தேவையில்லை என்று துணிச்சலாகத் தெளிவு படுத்தியுள்ளார் புஷ். ஆப்பிரிக்க அமெரிக்கர் களின் உரிமைப் போராட்டங்களின் வெற்றிகள் இல்லையேல் இன்று அமெரிக்காவில் பல சிறு பான்மையினர் தன்மானத்தோடு வாழ முடிந்திருக் குமா என்பது சந்தேகமே. அடிப்படை உரிமைகள் எல்லோருக்கும் பொது என்பதை நிலை நாட்டுவதில் அமெரிக்காவின் பெரும்பான்மையினரான ஐரோப் பிய அமெரிக்கர்களின் பங்கையும் மறக்க முடியாது. வந்தேறிகளாகப் புதிதாக வந்திருக்கும் பலருக்கும் இந்த உரிமைப் போராட்ட வரலாறு தெரிய வேண்டும்.
சிறுபான்மையினர் தம் மொழி, மரபு, பண்பாடு, மதம், இலக்கியம் இவற்றைத் தக்க வைத்துக் கொண்டே பெரும்பான்மை மக்களுடன் ஒத்து வாழ்வது எவ்வளவு சிக்கலானது என்பதை அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்து வந்துள்ள தமிழர்கள் ஓரளவுக்கு உணர்ந்திருப்பார்கள். தங்கள் சந்ததியினர் முழு உரிமையோடு அமெரிக்காவில் வாழ வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை. அதே போல், தங்கள் மூதாதையர்கள் நாடான இந்தியாவிலும் சிறுபான்மையினர் தன்மானத்துடன் வாழ வழி செய்ய வேண்டும் என்று புலம் பெயர்ந்தோர் வலியுறுத்த வேண்டும். வரும் ஜனவரி 9, 2003ல் புது டில்லியில் நடக்கவிருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் இதைச் சொல்ல வேண்டும். புலம் பெயர்ந்த இந்தியர்களின் உரிமைக்கு இந்தியா குரல் கொடுக்கும் போது இந்தியா தன் சிறுபான்மை யினரை எப்படி நடத்துகிறது என்பதைப் பார்த்துதான் உலகம் இந்தியாவின் குரலை மதிக்கும்.
******
50,000 ஆண்டுகளுக்கு முன்பு இராமன் இலங்கைக்குக் கட்டிய பாலம் நாசா எடுத்த புகைப்படத்தில் தெரிகிறது என்ற பரபரப்பான மின்னஞ்சல்கள் அண்மையில் கிடைத்தன. அது இயற்கையான மணல் மேடு, கட்டப் பட்ட பாலம் அல்ல என்று அறிஞர்கள் விளக்கினாலும் யாரும் நம்பவில்லை. அதே நேரத்தில், மகாபலிபுரம், பூம்புகார் பகுதிகளில், கடலுக்கடியில் தொன்மை யான நகரங்கள் இருந்ததற்கான சான்றுகளைப் படம் பிடித்துள்ளனர் என்ற செய்தியையும் யாரும் நம்பத் தயாராக இல்லை. நம் தொன்மை பற்றி நமக்குப் பெருமை சற்று அதிகம் என்றாலும், போதிய சான்றுகள் இல்லாமல் தொன்மையைப் பறை சாற்றுவது நம் நம்பிக்கையின்மைக்கு அடையாளமாகி விடுகிறது. சான்றுகளோடு அறிவியல் சாதனைகள் அனைத்தும் மேலை நாட்டு அறிஞர்கள் படைத்தவை என்ற நம்பிக்கை தவறு என்று காட்டும் நூலை அண்மையில் நியூ யார்க் டைம்ஸ் பாராட்டியிருந்தது. LOST DISCOVERIES: The Ancient Roots of Modern Science - From the Babylonians to the Maya, By Dick Teresi என்ற இந்த நூல் வரலாற்று ஆர்வம் உள்ளவர்களைக் கவரும். இது போன்ற ஆய்வுகள் கடலில் மூழ்கியவை என்று தமிழர்கள் நம்பும் பூம்புகார், குமரிக்கண்டம் போன்ற இடங்களில் செய்ய வேண்டும். ஆனால், நண்பர் “முரசு அஞ்சல்” புகழ் முத்து நெடுமாறன் சொல்வது போல, தமிழின் பெருமை அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் தான். தென்றல் வாசகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு, மார்ட்டின் லூதர் கிங் நாள் மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.
மணி மு. மணிவண்ணன் |