ஜனவரி 2003 : வாசகர் கடிதம்
தங்கள் டிசம்பர் மாத தென்றல் இதழ் பார்த்தேன். படிக்க மிகவும் நன்றாக இருந்தது. பத்திரிக்கை இரண்டு ஆண்டுகள்தான் நிறைவடைந்திருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. இருபது ஆண்டு களுக்கான வளர்ச்சி இருக்கிறது. மூன்றாவது ஆண்டின் முதற்பதிப்பே முத்திரை பதித்து வந்திருக்கிறது.

V.R. சேஷன்,
பெங்களூர்

******


டிசம்பர் மாத தென்றல் இதழில் கீதா பென்னட் பக்கம் இல்லாதது மணப்பெண்ணை அழகாக அலங்கரித்து திலகம் இட மறந்தது போல் இருந்தது. ஆனால் புழக்கடைப் பக்கம் அதை ஈடு செய்ய அருமையாக இருந்தது, திரு மணிவண்ணன் உபயோகமான கருத்துக்களை தெளிவாக சொல்வது பாராட்டத்தக்கது. அதற்கு எதிர்மாறாக அட்லாண்டா கணேஷ், விமலா ரமணி பக்கங்கள்... விஷயமும் இல்லை, கிச்சுகிச்சு செய்தாலும் சிரிப்பும் வரவில்லை. புத்தக விமர்சனங்களுக்கு இத்தனை பக்கங்கள் ஒதுக்குவது தேவைதானா?

வெகுஜனங்கள் மத்தியில் பிரபலமாகாத மொளனியை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. பல ஆங்கில சிறுகதை எழுத்தாளர்களை தோற்கடிக்கும் நடை, படிக்க படிக்க ஆனந்தமாய் இருந்தது. பாபநாசம் சிவன் அவர்களைப் பற்றிய கட்டுரையில் ''அம்பா நீ இறங்க எனில் புகல் ஏது'' போன்ற பிரபலமான பாடல்களை குறிப்பிட்டிருக்கலாமே? பாலா பாலசந்திரன் பேட்டி ''உன்னால் முடியும் தம்பி'' என்று எழுப்பி உட்கார்த்தி வைத்தது.

இருமொழி காக்கா கதை அருமையான யோசனை. இந்த பகுதி தொடரும் என நம்புகிறேன்.

மீரா சிவா,
கலிஃபோர்னியா

******


எனது மகளையும் மருமகனையும் சந்திக்க நான் அமெரிக்கா வந்திருக்கிறேன். மார்க்கன் ஹில்லில் இருக்கும் எனது மைத்துனரின் தயவால் ஏப்ரல் 2001 முதல் மாதா மாதம் தென்றல் இதழ்களை இலவசமாகக் கிடைக்கப் பெற்றேன். இதழின் தரம் மட்டுமல்ல, அதில் இடம்பெற்றுள்ள எழுத்துக்களின் தரமும் பிரமாதம். சென்னையில் இருந்து கொண்டு எனக்குப் பிடித்தமான மாத இதழைப் படித்து மகிழும் எண்ணத்தைத் தோற்றுவித்தது தென்றல். உங்களது இந்தச் செயலால், அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் பண்பாட்டையும் கலாச்சாரத் தையும் இன்னும் மறக்காமல் இருக்கிறார்கள் என்று உணர முடிகிறது. இந்தத் தொண்டினை இடை விடாது செய்வீர்களாக. கடவுளின் ஆசி உங்களூக்குக் கிடைக்கட்டும்.

S. ராமசாமி

******


முன்னாள் உறுப்பினர் ஆர்டினன்ஸ் ·பாக்டரி போர்டு, ராணுவ அமைச்சகம், ராணுவ தளவாடங்கள் தயாரிப்புத் துறை, இந்திய அரசு நல்லமுறையிலே வந்து கொண்டு இருந்த தென்றல் மூன்றாம் ஆண்டு ஆரம்பிக்கும் முன் தன் பாதையைவிட்டு விலகி வாசகர்களின் எண்ணங்களை மாற்ற வழிசெய்கிறதே என்கிற வருத்தம் வருகிறது. சாதாரணமாக ஒருவரின் அறிவு, ஆற்றல்களுக்கு பெரும் மதிப்பு கொடுத்து வந்தோம். அது மாறி தற்சமயம் ஒருவருடைய சொத்து மதிப்பிற்கு பெரிய முக்யத்துவம் கொடுக்கிறோம். ஒருவர் நன்றாக படித்தும், நிதிவசதி உள்ளவராகவும் சமூகத்தில் ஆதிக்யம் உள்ளவராகவும் இருக்கலாம். இதை வைத்து பிறரை தாழ்வாக பேசுவதோ, எழுதுவதோ கூடாது. சமீபத்தில் வந்த தங்கள் இதழில் 'காஞ்சிகாமகோடி ஜெயேந்திர சரஸ்வதியும்' என்று அவரை சாதாரண மனித பிறவியாக கருதி மரியாதை கொஞ்சமும் இல்லாமல் அவர் பெயரை எழுதி இருப்பது விசனிக்க வேண்டிய விஷயம். தவிர திரு வீரப்பனிடம் கர்நாடக அரசு 25 கோடி ரூபாயை பணமாக கொடுத்து இருக்கிறது என்றும் எழுதி இருக்கிறீர்கள். அப்பேர்ப்பட்ட வீரப்பனை மனமிரங்கி நாகப்பாவை விடுவிப்பானா என்று ஏகவசனத்தில் எழுதி இருப்பதும் வருந்தத்தக்க சமாசாரம். பொதுவாக பார்த்தால் இந்த மாத பத்திரிகை தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட கட்சியை மறை முகமாக ஆதரிப்பது தெரிய வருகிறது. ஒரு குடும்பத்திலே 5, 6 பேர்கள் இருந்தாலே கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது ஒரு மாநிலத்தை நல்லமுறையில் நடத்துவது என்பது சாதாரண காரியமல்ல. வெளியிலிருந்து குற்றங்கள் சாட்டலாம். நடைமுறையில் தான் கஷ்டங்கள் தெரியும்.

ராஜன்,
அட்லாண்டா

******


ஒவ்வொரு மாதத் 'தென்றலும்' கண்கவர் அட்டைப் படத்துடன், புதுமையான, சுவையான, பயனுள்ள பல சிறப்பு அம்சங்களைத் தாங்கி, அமெரிக்கத் தமிழ் நெஞ்சங்களில் உலா வருவது கண்டு மிகுந்த மகிழ்ச்சி.

பல்வேறு நிலையிலும் உள்ள வாசகர்களின் ஆர்வத்தை நிறைவேற்ற, ஒவ்வொரு பக்கத்தையும் மிகுந்த கவனத்துடன் ஆழ்ந்த அக்கறையுடன் உருவாக்கி, படித்து பின்னர் பாதுகாத்து வைக்கும் வண்ணம் 'தென்றலை' வெளியிட்டுவரும் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் குழுவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

டிசம்பர் இதழில் பத்மஸ்ரீ பேரா. பாலா பாலச் சந்திரன் அவர்களுடன் 'சந்திப்பு' மிக அருமை. வாசகர் தம்மைத் தாமே சுயபரிசோதனை செய்து கொள்ள ஒரு கருவியாகவும், தத்தம்துறையில் மேலும் முன்னேற விரும்புவோர்க்கு ஒரு தூண்டுகோலாகவும் அமைந்திருந்தன. ஆக்கபூர்வமான 'சந்திப்பை' நிகழ்த்தி 'தென்றல்' வாசகர்களை ஊக்கப்படுத்திய குழுவினருக்கு நன்றி!

பகையாளிகளாக இருந்த பங்காளிகளை மீண்டும் நல்உறவாளிகளாக்கிய 'பொம்மலாட்டம்' அருமை. ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்ட உணர்வை ஏற்படுத்திய திரு. Dr. என். சுவாமிநாதன் அவர்களுக்கு எம் பாராட்டுக்கள்.

சென்னிமலை P. சண்முகம்,
நியூயார்க்

******


இந்த டிசம்பர் மாத தென்றல் இதழில் என் தந்தை மௌனி பற்றிய கட்டுரை படித்தேன். இந்த அமெரிக்காவில் என் தந்தையாரின் கட்டுரை படித்து பெருமிதமும் மகிழ்ச்சியும் கொண்டேன். உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவர் நான் இறந்த பிறகும் வாழ்ந்து கொண்டிருப்பேன் என்று அடிக்கடி சொல்வார். அது உண்மை தன் அவர் இலக்கிய ஈடுபாடு உடையவ்ர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த இதழை என் நண்பர் எனக்கு கொடுத்தார். இந்த இதழ் ஒன்று அனுப்பிவைத்தால் நன்றியுடையவளாய் இருப்பேன்.

நாங்கள் இங்கு என் மகன் டாக்டர். சங்கர ராமன் உடன் வசித்து வருகிறோம்.

ஞானம் மஹாலிங்கம்.

******

© TamilOnline.com