19 மாதத்தில் 10 முறை அமைச்சரவை மாற்றம்
நவம்பர் மாதத்தில் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா மூன்று அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பி 5 பேருக்கு பதவியும் கொடுத்து அமைச்சர வையில் மாற்றம் செய்திருந்தார். அதில் பலருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் டிசம்பர் 13இல் இரண்டு அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பி உள்ளார்.

அமைச்சரவையில் சீனியரான கல்வி அமைச்சர் மு. தம்பிதுரையும் கட்சியின் சீனியர் தலைவர்களுள் ஒருவரான வருவாய்த் துறை அமைச்சர் தளவாய் சுந்தரமும் அமைச்சரவையில் இருந்து நீக்கப் பட்டுள்ளார்கள். மேலும் இந்த இருவருக்கான கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் கூட நீக்கப்பட்டுள்ளார்கள்.

அமைச்சரவையில் 27 பேர் இருந்தனர் தற்பொழுது அமைச்சர்களின் எண்ணிக்கை 25 ஆக குறைந்து விட்டது. 19 மாதத்தில் 10 முறை அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் என்ற அடை மொழிக்கு 23 பேர் பலியாகி உள்ளனர்.

இது இன்னும் தொடரும் என்றே எதிர்பார்க்கலாம்.

******


சந்தனக் கடத்தல் வீரப்பன் தரப்பினரால் கடத்தப் பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா 106 நாட்களுக்கு பின்னர் பிணமாக மீட்கப்பட்டார். நாகப்பாவை விடுவிப்பதில் தமிழக கர்நாடக அரசுகளுக்கிடையே ஒருமிந்த முடிவு இருக்க வில்லை.

நாகப்பாவை வீரப்பன் தரப்பு சுட்டதா? தமிழக கர்நாடக அதிரடிப்படையினர் சுட்டனரா என்பதற்கு இன்று வரை பதில் இல்லை. வீரப்பன், தான் சுட வில்லை என்றும் தமிழக அதிரடிப் படை தான் சுட்டது என்றும் வீரப்பன் தரப்பு கூறுகிறது ஆனால் தமிழக அரசு இதை மறுக்கிறது. ஆக மொத்தத்தில் நாகப்பாவை சுட்டது யார்? இந்தக் கேள்வி மர்மமாகவே உள்ளது.

தற்போது தமிழக கர்நாடக அரசு வீரப்பனை பிடிக்க கூட்டு நடவடிக்கையில் கிளப்பி உள்ளனர்.

******


மாநகராட்சி கமிஷனர்களின் மாற்றத்தில் புதிய சாதனை படைத்த தமிழக அரசு தமிழகச் செயலாளர் மாற்றத்திலும் புதிய சாதனை படைத்துள்ளது.

18 மாதங்களில் நான்காவது தலைமைச் செயலாளரை நியமித்திருக்கிறது தமிழக அரசு. இந்த முறை நியமிக்கப்பட்டிருக்கும் லஷ்மி பிரானேஷ் தமிழகத்தின் முதல் பெண் தலைமைச் செயலாளர் என்பதைத் தவிர இந்த நியமனத்தில் சொல்லிக் கொள்வது போல் ஏதும் இல்லை.

******


மதமாற்றத் தடைசட்டம் எல்லா எதிர்க் கட்சி களையும் ஓரணியில் கொண்டு வந்துள்ளது. ஆனாலும் இந்த ஒற்றுமை சாந்தான்குளம் இடைத் தேர்தல் வரை நீடிக்குமா? என்பது சந்தேகம் தான்.

மதமாற்றத் தடை சட்டம் இரு துருவங்களாக பிரிந்திருந்த தலித் கட்சிகளான புதிய தமிழகத்தையும் விடுதலை சிறுத்தைகளையும் ஒருங்கிணைத்துள்ளது.

கடந்த தேர்தலின் போது திமுக கூட்டணியில் இந்த இரு கட்சிகளும் அங்கம் வகித்து இருந்தாலும் ஒன்றாக பிரச்சாரம் செய்யவில்லை. இப்போது கட்டாய மதமாற்ற தடை சட்டம் இவர்களை ஒன்றாக போராட்டம் நடந்தக் கூடிய வாய்ப்பைக் கொடுத்துள்ளது.

******


மு.க. ஸ்டாலினிடமிருந்து மேயர் பதவி பறிக்கப் பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. மறு தேர்தல் நடத்தப்படுவதற்கான எந்த அறிகுறியும் தென்படாமல் இருக்க அப்பதவி காலியாகவே இருந்தது.

இந்த நிலையில் அந்தப் பதவியை மேயர் தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பாலகங்காவுக்கு தர வேண்டும் என்று உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அதிமுக எம்.பி. வா. மைத்ரேயன்.

ஆனால் உயர் நீதிமன்றமோ அது விஷயமாக மாநகராட்சித் தேர்தலை நடத்துவதில் அதிமுகவுக்கு என்ன சிக்கல் என்று கேள்வி எழுப்பியிருக்கிறது. இதற்கிடையில் மேயர் பதவிக்கு பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்திடம் சொல்லியிருக்கிறது மாநில தேர்தல் ஆணையம்.

******


தமிழக அரசின் விருதுகள் தொடர்ந்து ஜனரஞ்சக எழுத்தாளர்களுக்கே போகிறது. சீரியஸ் எழுத்தாளர் களுக்கு உரிய மரியாதை இல்லை என்று தீவிர இலக்கிய உலகத்திற்கு எப்போதுமே ஒரு ஆற்றாமை இருந்து வந்தது. ஆனால் இந்த அதிமுக ஆட்சியில் பல தீவிர எழுத்தாளர்களுக்கு அங்கிகாரம் கிடைத்து வருகிறது. முதலில் புதுமைப் பித்தனின் படைப்புகள் தேசிய மயமாக்கப் பட்டுள்ளன. இப்போது கு.ப. ராஜ கோபாலனின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடியிருக்கிறார்கள்.

தமிழக அரசு சார்பில் வருடந்தோறும் வழங்கப்படும் விருதுகளிலும் இதே போக்கு நீடித்தால் ஆரோக்கி மான தீவிர தமிழ் இலக்கிய வாசக வட்டம் உத்வேகம் பெறும்.

******


அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா முன்னிலை யில் சென்னை விஜயசேஷமஹாலில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டுள்ளன.

அதில் திமுக தலைவர் கருணாநிதி இந்துக்களை தொடர்ந்து புண்படுத்தி வருகிறார். அவரைக் கைது செய்யவேண்டுமென தீர்மானம் ஒன்று நிறைவேற்றப் பட்டுள்ளது.

திமுக தலைவர் தொடர்ந்து இந்துக்களைத் திட்டுகிற, இழிவுபடுத்துகிற , அவர்களின் உணர்வு களைப் புண்படுத்துகிற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். குங்குமம் இடுவது, தீ மிதித்தல் போன்ற இந்துசமய பழக்கவழக்கங்களை ஏளனம் செய்வதும், இந்து என்றால் திருடன் என்று பொருள் சொல்வதும் இந்துமதம் என்பது மதமே அல்ல என்று கூறுவதும் அவருக்கு வாடிக்கை யாகிவிட்டது.

பிறமதங்களைச் சார்ந்தவர்களைக் குளிர்விப்பதற் காகவே இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் கருணா நிதி ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டுமெனவும் கேட்கப்பட்டுள்ளது.

******


திமுக தலைவர் தொடர்ந்து இந்துக்களைத் திட்டுகிற, இழிவுபடுத்துகிற , அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இந்து என்றால் திருடன் என்று பொருள் சொல்வதும் இந்துமதம் என்பது மதமே அல்ல என்று கூறுவதும் அவருக்கு வாடிக்கையாகிவிட்டது.

துரைமடன்

© TamilOnline.com