கவியரசு கண்ணதாசனின் எண்பதாம் ஆண்டு பிறந்த நாளை கண்ணதாசன் கலைமன்றமும், தமிழ்நாடு அறக்கட்டளையும் டெக்ஸாஸ் மாநிலத்தில் பாலஸ் அருகில் உள்ள கார்லெண்டு நகரில் ஜனவரி 6ம் தேதி முழுநாள் விழாவாகக் கொண்டாடினார்கள். அண்மையில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிஞர் மு. மேத்தா, கவியரசுடன் பல்லாண்டு பணியாற்றிய திரைப்பட இயக்குநர் பஞ்சு அருணாச்சலம், 'சொல்லின் செல்வி' உமையாள் முத்து ஆகியோர் கவியரசுக்குப் புகழாரம் சூட்டினர்.
கவியரசுக்குப் பிறகு எத்தனையோ கவிஞர்கள் இருந்தாலும் அந்த சிம்மா சனத்தில் அவர்களால் அமர முடியவில்லை என மு.மேத்தா பாராட்டிப் பேசினார். கவியரசிடம் திட்டு வாங்கிய அரசியல் வாதிகள் இவ்வளவு அழகான தமிழில் திட்டுகிறாரே என்று மகிழ்ந்தனர் என கவியரசின் வாழ்வை மேத்தா நகைச்சுவை யோடு நினைவுகூர்ந்தார்.
கவியரசுக்குத் துணையாக 600 திரைப்பட பாடல்களில் பணியாற்றிய இயக்குநர் பஞ்சு அருணாச்சலம் தான் கண்ணதாசன் என்ற பல்கலைக்கழகத்தில் பயின்றதால்தான் இளையராஜா என்ற இசைஞானியை உலகிற்கு அறிமுகப்படுத்த முடிந்தது என் பெருமிதத்தோடு கூறினார்.
தமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பாக துணைத்தலைவர் சோமலெ சோமசுந்தரம் விழாவை சிறப்பாக நடத்திய கவியரசின் பேரன் சுப்பிரமணியத்தையும் அவருடைய மனைவி கீதா அருணாச்சலத்தையும் பாராட்டிப் பேசினார். டெட்ராய்டு மாநகரில் பேசியப் பிறகு கவியரசர் டெக்ஸாஸ் மாநிலம் புறப்படுமுன் உடல்நிலை காரணமாக சிக்காகோவில் மருத்துமனையில் அனுமதிக் கப்பட்டு காலமானார். அமெரிக்க மண்ணில் இருந்த போது டெக்ஸாஸ் மாநிலத்திற்கு கவியரசர் வரமுடியவில்லையே என்ற ஏக்கத்தை தற்போது விண்ணுலகில் இருக்கும் கவியரசை கார்லண்டு மாநகருக்கு அழைத்து புகழ்மாலை சூடுவதன் மூலம் டெக்ஸாஸ் தமிழர் நிறைவு செய்து கொண்டுள்ளனர் என்றார் சோமசுந்தரம்.
கவியரசின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் அவருடைய காதல் பாடல்களா? அல்லது தத்துவ பாடல்களா? என்ற காரசாரமும் நகைச்சுவையும் கலந்த பட்டிமன்றத்தில் உமையாள் முத்து நடுவராக வும், சாம் கண்ணப்பன், பிரகாஷ் சுவாமி, விஜிராஜன், கரு. மாணிக்கவாசகம், சோமரில் சோமசுந்தரம், குமார் கணேசன் ஆகியோர் பேசினர்.
நாள்தோறும் நடந்த இந்த விழாவில் டாலஸ் பகுதியைச் சேர்ந்த தமிழர்களின் கலை நிகழ்ச்சிகள் பலவும் இடம் பெற்று முத்தமிழ் விழாவாக வழங்கி, வந்தோரை மகிழ்வித்தனர். |