என் தாய் இவள்
நான் உண்ட பாலை தந்த தாய் இவளோ
நீ கொண்ட எழில் மிஞ்ச வந்த இவள் யாரோ

கன்னி மயில் கற்பகமோ கனிரசமோ கற்கண்டோ
பொன்னி வயல் பூத்திட்ட புதுமலரோ நறுமணமோ

கயல் விழி அருள்மொழி கண்மணிதான் யாரோ
செயல் வழி வரும் தனி அருள் நிதி தான் இவளோ

மங்கை மேனி மயக்கும் பாணி மரகதம் இவள் அழகோ
கங்கை மேனி ஈசன் பாதி தங்கமேனிதான் இவள் உடலோ

கவி கொண்டு நான் பாடக் கனிந்துருகும் காரிகையோ
செவிக் கின்பம் தான் கிடைக்கச் சேர்ந்து வரும் செந்தமிழோ

இந்த வேலன் கண்ட கருவறையும் இவள் தானோ
சொந்தம் வேண்டும் எனைத் தொட்டு நின்றதும் இவள் தானோ

வந்து வந்து சொந்தம் சொல்லும் சொப்பனச்சாதி இவளோ
தந்து தந்து பந்தம் காக்கும் தயாபரியும் இவளோ

ஒதுக்கி வைத்த எனை உள்ளிழுத்த ஓய்யாரி இவளோ
செதுக்கி வந்த சிற்பமென சிரித்துவரும் சின்னவளோ

பருவத்தில் நான் சிலிர்க்க வந்த சிங்காரியும் இவளோ
உருவத்தில் நமை உருக்கும் ஓங்கார சக்தியும் அவளோ

அருள்வழி அம்பிகை அன்னை சக்தி அவள் இவளே
மருள்வீதி மாய்க்கும் வீதி மருவரசிதான் அவளே

போதும் உன் விளையாட்டு வா நீ என் முன்னே
வரட்டும் உன் அருள்நோக்கு நான் போகும் முன்னே

சக்திபித்தன்
சிசாகோ

© TamilOnline.com