கீதாபென்னட் பக்கம்
தென்றல் வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்கள். போன ஒரு மாதம் பக்கத்திலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்ட போது ஆசியரிடமும், என்னிடமும், அந்தப் பக்கத்தை காணாமல் உருகிவிட்டதாகவே சில வாசகர்கள் சொல்லிவிட, நானும் அந்த 'ஐஸ்'ல் உருகி திரும்பி வந்து விட்டேன்.

இந்த மாதப்பக்கம் சென்னை இசை விழாவிலிருந்து வருகிறது. சென்னையில் இந்த ஜூரம் வெகுவாக பரவி விட்டிருக்கிறது. இந்த வருடம் எழுபத்தி இரண்டு சபாக்கள் வரை விழா நடத்துகின்றன என்கிறது ஒரு புள்ளிவிவரம். முன்னணி கலைஞர் பலருக்கும் பதினெட்டு கச்சேரிகள்கூட இருக்கின்றன. சில நல்ல மனிதர்களின் உபயத்தில் தினம் எந்த இடத்தில் நேரத்தில் யார் கச்சேரி என்றோ, அல்லது உங்களுக்குப் பிடித்த கலைஞரின் அட்டவணை என்று முதலிலேயே பார்த்துக் குறித்துக் கொள்ள கச்சேரிகளில் இலவச புத்தகங்கள் கிடைக்கின்றன. இப்போதே அந்த புத்தகத்தைத் தலையணையாக வைத்துக் கொள்ளக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. இன்னும் அடுத்த வருடம் எப்படியோ?

இந்த சமயத்தில் 'வீணை கலைஞர்' என்ற முறையில் என் மனக்குறையை உங்களோடு பகிர வேண்டியிருக்கிறது. ஒரு இடத்தில் முப்பது கச்சேரிகள் என்றால் இருபத்தைந்து வாய்ப்பாட்டு கச்சேரிகள்தான். ஒரு வீணை, ஒரு புல்லாங்குழல் என்று வாத்திய விருந்து மிகவும் குறைவுதான்.

ஊர்வம்பு ஒன்று. பெரிய சதஸ் ஒன்றின் துவக்கவிழாவிற்கு ஜனாதிபதி திரு அப்துல்கலாம் வந்திருந்தார். ''அவருக்கு ஐந்து முப்பத்தைந்துக்குக் கிளம்ப வேண்டும். அதனால் உங்கள் உரையை பத்துநிமிடங்களில் முடித்துக் கொள்ளுங்கள்'' என்று விருது பெற்ற கலைஞருக்கு சொல்லப்பட்டது. அவரோ இருபத்தைந்து நிமிடங்கள் எடுத்துக்கொள்ள - சபா தலைவர் நெளிய - ஜனாதிபதி அவர்கள் பெருந்தன்மையுடன் போனால் போகிறது என்றுவிட - கடைசியில் திரு. கலாம் அவர்கள் விமானத்தைத் தவற விட்டாராம். இத்தனைக்கும் 'Time' அதாவது ''லயம்'' விஷயத்தில் இந்த கலைஞர் கெட்டி - அது சங்கீதத்தில் மட்டும் தான் என்று விளங்கிவிட்டது.

© TamilOnline.com