கெங்கோபதேசம்
கெங்கம்மாவுக்கு அன்று இரவு முழுதும் தூக்கம் வரவில்லை. எப்போது சூரியனப் பார்ப்போம் என்றே மனது துடித்துக்கொண்டு இருந்தது. அவள் பேரன் தங்கராசு நாளைக்கு வருகிறான். "என் ராசாவைப் பார்த்து எத்தனை வருஷம் ஓடிடுச்சி. எப்படி இருக்கானோ? இன்னும் வளர்ந்து இருக்கானா? உடம்பு பெருத்திருக்கிறானா. தாயில்லாக் கொழந்தை. தாய்ப்பால் இல்லாம, தண்ணிப்பாலை கொடுத்தாவது வளர்த்து இந்த கெங்க கரை சேர்த்துட்டா" என்றெல்லாம் நினைத்துக் கொண்டே அந்த இரவைக் கழித்து விட்டு, விடியற்காலை சிறிது தூங்க ஆரம்பித்தாள்.

"ஆயா... ஆயா... என்ன இன்னும் தூங்கிகிட்டு இருக்கீங்க. இன்னிக்கு என்ன நாளுன்னு தெரியுமில்ல" என்று கேலி செய்துக் கொண்டே கெங்கம்மாவை எழுப்பினாள் பவானி.

"ஆமா, ஆமா... கொஞ்சம் கண்ணு அசந்திட்டேன். நல்ல வேளை வந்து எழுப்பின. எம்மா வேலை இருக்கு. உம் பையன் நான் சொன்ன சாமானெல் லாம் வாங்கிட்டு வந்தானா?."

"நேத்தைக்கே வாங்கியாந்துட்டான். ஆரஞ்சு ஜீஸ் மட்டும் புதுசா வந்திருக்க எஞ்சினியரு ஊட்டு ஐஸ் ¦ட்டியிலே வக்க சொல்லியிருக்கேன். பாக்கறீங் களா." பவானி தான் கொண்டு வந்த பையைத் திறந்தாள். ஒரு பெரிய 'ப்ரெட்' பாக்கெட். ஒரு 'ஜாம்' பாட்டில். ஒரு 'சீரியல்' பாக்ஸ். ஆப்பிள் பழங்கள். ஒரு காபி. எல்லாம் சேர்த்து 360 ரூவா ஆச்சு. ரொம்ப வெலை. எனக்கு மனசே ஆகலே"

அந்த 'சீரியல்' டப்பாவை பிரித்துப் பார்த்த கெங்கம்மா, "என்ன செய்யறது. நம்ம ஊர் பொடியை டப்பாவிலே போட்டு இப்படி அம்மாம் வெலப் போடறாங்க. போகட்டும். என் பேரனுக்கு இது தான் சாப்பிட்டு பழக்கம்னா, பணம் என்ன பணம்".

"ஆயா ஊடு ஒழுகுதுன்னு கூரை போட வச்ச காசை இப்படி செலவு பண்ணுகிறீர்களே. ஒங்களுக்குக அப்படி என்ன வாரி, வழங்கிட்டான், ஒங்க பேரன்". பவானி கடிந்து கொண்டாள்.

"பவானி, அவனை ஒண்ணும் சொல்லாதே. போன எடத்தில என்ன கஷ்டமோ. ஏதோ என்னை ஞாபகம் வச்சுக்கிட்டு 'போஸ்ட் ஆபிஸீக்கு' போன் போட்டு கூப்பிடறானே. அதுவே போதும். ஆயி, அப்பன் பாசம் என்னான்னே தெரியாம வளர்ந்த பிள்ளே. ஒரு கல்யாணம் செஞ்சு வச்சுட்டேன்னா, நிம்மதியா கண்ண மூடுவேன்" என்றாள் கங்கம்மா.

"சரி, நான் வாரேன். ஒங்க பேரன் எந்த நேரத்துக்கு வந்தாலும் சொல்லியனுப்புங்க. நான் வந்து சமைச்சு வக்கறேன்" என்றாள் பவானி.

"என் தங்கம்டி நீ. அவன் வரட்டும். பாத்துக்கிட்டே செய்யலாம்" என்று பவானியை வழியனுப்பினாள் கெங்கம்மா. பிறகு வாசலிலேயே தவம் கிடந்தாள், பேரன் வரவுக்காக. தங்கராசு வரவில்லை. துக்கம் விசாரிக்க வந்தவர்கள் போல, அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரும் கெங்கம்மாவை அவ்வப்போது வந்து விசாரித்துவிட்டு, தேற்றுவதாக நினைத்துக் கொண்டு, வேதனையைக் கிளறிவிட்டு சென்றார்கள்.

பசி, தாகம் கூட இல்லாம அந்த நாளைக் கழித்த கெங்கம்மா, சோர்ந்து போய் படுக்க சென்றாள். "அப்பன் குடிகாரன். கள்ள சாராயத்தைக் குடிச்சி ஒரு நாள் "டப்புன்னு போயிட்டான். ஆத்தா, அதான் என் பொண்ணு செங்கமலம் கொத்து வேலை செஞ்சி இந்தப் புள்ளையை வளர்த்தா. அவளும் வியாதியிலே போய் சேந்தா. 3 வயசிலே மலங்க, மலங்க எங்கிட்ட வந்து ஒட்டிண்ட பையன் அந்த காட்சி என் கண்ணு முன்னாலேயே நிக்குது. எப்படியோ ஏதோ கஷ்டப்பட்டு, பெரிய 'கம்ப்யூட்டர்' படிப்பு படிக்க வச்சேன். வெளி நாட்டுக்கு போக 'ஆர்டர்' வந்துது. 'ஆயா போயி 2 வருஷத்திலே வந்துடுவேன். நல்ல காசு. உனக்கு மாடி வீடு கட்டித் தரேன்; மோட்டார் காரு வாங்கித் தரேன்னு" குழந்தைக்கு விளையாட்டுக்காட்ற மாதிரி பேசிட்டு கிளம்பி போயிட்டான். இந்த 'தை' வந்தா 27 வயசு முடியுது. 22லே கிளம்பிப் போனான். அந்த ஊர்லே என்ன பண்றான்னு தெரியலே. இவன் காசு அனுப்பாட்டி பரவாயில்லே. போனப்போ 2, 3 முறை யாரோ கொண்டு வந்து கொடுத்துட்டு போனாங்க. அவ்வளவுதான். அதை விடு. இந்தக் கிழவியை வந்து பாக்கணும்ணு தோணலியே என் ராசாவுக்கு". கெங்கம்மா தனக்குத் தானே உரக்கச் பேசிக் கொண்டு, புலம்பிக் கொண்டே, அந்த அலுப்பில் தூங்கிப் போனாள்.

"டொக். டொக்" என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது. "யாரு. யாரு." கெங்கம்மாவால் எழுந்திருக்க முடியவில்லை. அப்படி ஒரு அசதி, தூக்கம். "அதுக்குள்ள விடிஞ்சுடிச்சா. பால்காரி கதவைத் தட்டறாளே" என்று மெல்ல, தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்து வந்து கதவைத் திறந்தாள். "இன்னும் விடியலையே. என்ன சிவகாமு இவ்வளோ சீக்கிரம்" என்று சொல்லிக் கொண்டே பாத்திரத்தை நீட்டியவளுக்கு முன்னால் நின்றுக் கொண்டிருந்தான் அவன்.

"ஆயா. நா என்ன பாக்கறதுக்கு பொம்பளைப் போலவா இருக்கேன்" என்று கேலி செய்து கொண்டே உள்ளே நுழைந்தான் தங்கராசு.

"அட. என் ராசா., நீயா. நீயா. இருட்டிலே கண்ணே தெரியலே. நேத்தைக்கு, என் ராசாவ எதிர்பார்த்து, கண்ணே பூத்து போயிடுச்சு. எப்படி ஐயா வந்தே. வண்டி கிண்டி எதுவும் இருக்காதே இந்த விடியற்காலையிலே." கெங்கம்மாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

"ப்ளேன்" லேட்டு. பேசமா, சென்னையிலேந்து 'டாக்ஸி' புடிச்சு வந்தேன். பாதை சரியில்லேன்னு 'மார்க்கெட்' பக்கமா உட்டுட்டு போயிட்டானுக. 2 கிலோ மீட்டருதானேன்னு நடந்தே வந்துட்டேன்."

"இம்மா பெரிய பெட்டியையும் தூக்கிட்டு வந்திருக்கியே, என் ராசா. தெரிஞ்சிருந்தா நான் மார்க்கெட் பக்கம் வந்து காத்து கிடப்பேனே" அங்கலாய்த்தாள் கெங்கம்மா. "ஆயா. ஒனக்கு இருக்கிற மனோபலத்திலே, அனுமார் மாதிரி, என்னையே கூட நீ தூக்கிட்டு வந்தாலும் வந்திருப்பே. சரி. சொல்லு. நல்லாயிருக்கியா. எப்படியிருக்கே. இளைச்சுப் போயிட்டே ஆயா. தலை முடியெல்லாம் நிறைய, நரைச்சுப் போயிடுச்சே." அக்கறையுடன் விசாரித்தான் பேரன்.

"ஆமா. கல்யாண வயசுலே நிக்கறேன் பாரு. தலை நரைச்சு, கறுத்து, இளைச்சுப் போனா யாரும் கட்டிக்க மாட்டாங்க. போடா. போக்கத்தவனே. நீ நல்லாயிருக்கியா சொல்லு. ஒன்னை பார்த்துட்டேன், ஐயா. எங்கே பாக்காம அந்த சாமி என்னை தங்கிட்டே கூப்பிட்டுக் கொள்வாரோன்னு உள்ளுக்குள்ளே ஒரு பயம். இனிமே, எனக்கு எதுவும் வேணாம். என் ராசா, ராசா மாதிரியே இருக்கே. இந்தக் கிழவியை பார்க்க கஷ்டப்பட்டு வந்திருக்கியே, இம்மாந் தூரம். அத நெனச்சால எனக்கு உள்ளுக்குள்ள பொங்கி வருது. சரி, நல்லா இருக்கியா. அந்த ஊரு புடிச்சிருக்கா. என்ன சாப்பிடறேன்னு சொல்லு. நான் பவானியை கூட்டியாரேன்", கெங்கம்மா கிளம்ப ஆரம்பித்தாள்.

"ஆயா, ஆயா நீ யாரையும் கூப்பிட வேணாம். இப்போ மணி என்னத் தெரியுமா, இரண்டு. நாளைக்கு காலையிலே பார்க்கலாம். நீ போய் தூங்கு. பாய் எங்க இருக்கு. நானும் படுக்கறேன்." என்றான் தங்கராசு.

"அடப்பாயாவது... ஒனக்காக நல்ல கட்டிலு, மெத்தை வாங்கிப்போட்டிருக்கேன். இதோ பாரு. இதுலே படு" என்று உள்ளே ஓரமாகப் போட்டிருந்தக் கட்டிலைக் காட்டினாள் கெங்கம்மா. சிரித்தான் தங்கராசு. "நான் இருக்கப் போறது கொஞ்ச நாலு. எதுக்கு ஆயா, இதெல்லாம். சரி. எனக்கு ரொம்ப அலுப்பா இருக்குது. 40 மணி நேரப் பயணம். காலையிலே பேசிக்கிடலாம். நான் தூங்கப்போறேன். நீயும் கொஞ்சம் தூங்கு" என்று சொல்லி, அப்படியே கட்டிலில் சாய்ந்தான்.

நல்ல ஆழ்ந்த, இன்பமான தூக்கம். தங்கராஜ் கண்களை திறந்த போது சூரிய வெளிச்சம் பளீரென்று அடித்தது. "அடடே. நேரம் என்ன. எங்கே இருக்கிறேன்" என்று தெரியவில்லையே" என்று நினைத்துக் கொண்டே எழுந்தான். அந்த அறைவாசலில் ஒரு தட்டுடன், சிரித்துக் கொண்டே நின்றுக் கொண்டிருந்தாள் அவள் ஆயா. எத்தனை நேரமாய் அப்படி நின்று கொண்டிருந்தாளோ தெரியாது. "எழுந்துட்டியா ராசா. பலகாரம் கொணாந்து இருக்கேன். காலை மணி 10 ஆவுது. ஊர் சனம் பூர ஒன்னை பாக்க வாசல்லே காத்துக்கிட்டு கிடக்குது." வெட்கத்துடன் எழுந்தான் அவன். "ஸாரி ஆயா. நேர வித்யாசத்துல தூங்கி போயிட்டேன். இதோ வந்துடறேன்" என்று "Toilet kit" ஐ எடுத்துக் கொண்டு கிணற்றடிக்கு சென்றான். அவன் திரும்பி வந்தபோது அந்த கூடத்தில் 20-30 ஊர்க்காரர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். கெங்கம்மாவுக்கு ஒரே பெருமை.

தன் பேரனைப் பார்க்க அரசியல்வாதி போல இப்படி ஒரு கூட்டம். அந்த கூட்டத்தில் ஒருவர் "தம்பி நீங்கதான் நம்ப ஊர்லேர்ந்து மொத, மொரையா வெளி நாட்டுக்கு போயிருக்கீங்க. பெரிய படிப்பு படிச்சிருக்கீங்க. உங்களால இந்த கிராமத்துக்கு ஒரு அந்தஸ்து கிடைச்சிருக்கு. அதனால ஆசையா பாக்க வந்தோம். மொதல்ல, காபி, பலகாரம் சாப்பிடுங்க. நாங்க வெளியே காத்துக்கிட்டு இருக்கோம்" என்று சொல்லி, தங்கராசு தடுத்தாலும் கேட்காமல் அனைவரும் வெளித்திண்ணைக்கு போய் அமர்ந்து கொண்டார்கள். ஆயா தட்டை நீட்டினாள் பேரனிடம். Bread; Jam; Omlette; Butter என்று அமர்க்களமாக இருந்தது. பவானி காபியை சங்கோஜத்துடன் ஊற்றிக் கொடுக்க, அவள் மகன் ஆரஞ்சு ஜூஸை கையில் வைத்திருக்க, தங்கராசுக்கு தனக்கு கொடுக்கப்பட்ட இந்த முக்கியத்துவம் மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. ஒரு பழக்கமில்லாத அனுபவம்.

எதையோ சாப்பிட்டு விட்டு, வெளியில் சென்ற எல்லோரையும் உள்ளே வரவேற்று, உறவினர், நண்பர்கள் அடையாளம் கண்டு, குடும்ப நலன் விசாரித்து, தன்னுடைய அமெரிக்க வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்கு புரியும்படி விவரித்து, எல்லோரையும் வழியனுப்பிய போது, மாலை மணி நான்கு ஆகியிருந்தது. மழை ஓங்கியடித்து விட்டது போல, ஒரு இன்பமான தன்மையை அனுபவித்தாள் கெங்கம்மா. "மதிய சோறே சாப்பிடலியே ராசா. அவுங்களோட பேசி, பேசி தொண்டை கட்டிடுச்சி போல இருக்கே. இனிமே, இந்தக் கிழவியோடு எங்கப் பேச முடியும்?" அங்கலாய்ப்புடன் கேட்டாள் கெங்கம்மா. "அஞ்சு வருஷம் கழிச்சு, அரியமேடு கிராமத்துக்கு எதுக்கு வந்தேன்? எங்க ஆயாவை பாக்கத்தானே. இனிமே நீயும், நானும் தான். 2 வாரந்தான் லீவு. 4 நாள் பிராயணத்திலே போயிடுது. 3 நாள் சென்னைக்கு போயி 'Friends' பாக்கணும்.

'சரி மொதல்லே என்ன ஆக்கட்டும்னு சொல்லு. பவானிக்கு சொல்லியணுப்பனும். அவள் கோழி பிரியாணி நல்லா செய்வா. அப்புறம் பூரி, சப்பாத்தி நல்லா போடுவா. நீ இருக்கற மட்டும் அவளை உதவிக்கு கேட்டிருக்கேன்."

"ஆயா. ஒண்ணு சொல்றேன். கேக்கறயா"

"ஊம். சொல்லு."

"தயவு செஞ்சு எனக்கு பிரியாணி, கறீ, பூரி, ரொட்டி எதுமே வேணாம். இன்னிக்கு காலைலே இந்த பிரட், ஜாம் - ஐயோ சாப்பிட்டு, சாப்பிட்டு அலுத்துப் போச்சு. நான் சின்னப் புள்ளையா இருக்கச்சே, மாலையிலே தண்ணி ஊத்தி பழைய சோறை போட்டு வச்சிருப்பியே. மத்தா நாள் அந்தப் பானை வாசனையோடு, அந்த சோத்தை, ஊறுகாயை கடிச்சுகிட்டு சாப்பிட்டு, ஸ்கூல் போவேன். மாசத்துக்கு ஒரு மொறை கருவாட்டுக் கொழம்பு வச்சு, சோறு ஆக்கிப் போடுவே. அப்பா, அந்த பழைய பானைச் சோறும், அந்த ஊறுகாயும், மீன் கொழம்பும் - அந்த ருசியும், மணமும் - எத்தனை நாள் ஏங்கியிருக்கேன்னு உனக்கு தெரியாது. ஊர்க்காரங்க என்ன வேணா கேலி செய்யட்டும். எனக்கு அதுதான் வேணும். நீ தான் செஞ்சு போடணும்." குழந்தையைப் போல கெஞ்சினான் அவன். கண்களில் தண்ணீர் தலும்பியது ஆயாவுக்கு. "ஐயோ. இதுக்குப் போய் ஆசைப்படறியே. இதோ இப்பவே செஞ்சு எடுத்தாரேன்" என்று எழுந்தாள் கெங்கம்மா. "இப்போ வேணாம். பசியில்லே. அப்புறம் செய்யு. நாம நிறைய பேசணும்" என்று கட்டிலில் உட்கார வைத்தான் கெங்கம்மாவை.

மறுநாளிலிருந்து கெங்கம்மா தன் பேரனுக்கு தன் கையாலேயே எல்லாம் செய்து போட்டாள். பழைய சோறும் ஊறுகாயும் காலையில். மீன் கொழம்போ, கத்திரிக்காய் புளிக்கொழம்போ மத்தியானம். டிபனுக்கு வேக வைத்த பனங்கிழங்கு, வெள்ளிக்கிழங்கு, வேர்க்கடலை என்று அவன் ஆசைப்பட்டதையெல்லாம் செய்தாள். அவன் ரசித்து, ருசித்து சாப்பிடுவதை பெருமையுடன் பார்த்தாள். பிரட், ஜாம் எல்லாம் பவானியிடம் தூக்கி கொடுத்தாள்.

ஒரு வாரம் ஓடியே...... போய்விட்டது. மறுநாள் காலை தங்கராசு சென்னைக்கு கிளம்ப போகிறான். கெங்கம்மாவுக்கு துக்கம் பொங்கி வந்தது. தன் உயிரே தன் பேரனுடன் போய் விடக்கூடாதா என்பது போல ஒரு துடிப்பு. ஊரில் உள்ள நண்பர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டு, இரவில் வீடு வந்து சேர்ந்தான் தங்கராஜ். "நாளைக்கு 9 மணி பஸ்ஸிலே போறியா ஐயா?" என்று உடைந்த குரலில் கேட்டாள் கெங்கம்மா. "இல்லே ஆயா. விடியற்காலை 3 மணிக்கு டாக்ஸி ஏற்பாடு பண்ணியிருக்கேன். உன்னாலே எழுந்திருக்க முடியுமா ஆயா?" "ஏன். எழுந்திருக்கா? மொதல்லே தூங்கினாத்தானே. நீ திரும்பிப்போற துக்கத்திலே எனக்கு தூக்கம் வருமா ராசா. ஒரு வாரம், ஒரு நிமிசமா போயிடுச்சு... இனிமே எப்போ பார்ப்பேனோ? 2 வருஷத்திலே வரேன்னு சொல்லி 5 வருஷம் ஆயிடுச்சி. திடீர்னு வரேன்னு சொல்லிப்புட்டே. ஒரு பொண்ணு பாத்து, கல்யாணம் கட்ட நேரம் இல்லாம திரும்பிப்போற. ஊர் சனங்க கேலிப் பேசினாங்க. "உன் பேரன் எங்கே திரும்பி வரப்போறான். நீ தான் நம்பிக்கை வச்சுக்கிட்டு இருக்கே. அங்கேயே ஒரு வெள்ளைக் காரப் பெண்ண கட்டிக்கிட்டு குடும்பம் நடத்திகிட்டு இருப்பான்" னாங்க. அப்படி ஏதானும் இருந்திச்சின்னா சொல்லுடா ராசா. நீ சந்தோசமா இருந்தாப போதும்." கெங்கம்மாவுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. "அழாதே ஆயா அப்படி யெல்லாம் உன் பேரன் செய்ய மாட்டான். எனக்கு மொதல்லே உன்னை நல்லா வச்சிக்கணும். அப்புறம் தான் கல்யாணம். அமெரிக்காவுலே முதல் ஒரு வருஷம் தான் வேலையிருந்துச்சி. அப்புறம், அந்த நாட்டிலியே தங்கறதுக்காக மேற்படிப்பு படிக்க ஆரம்பிச்சேன். சேத்து வச்ச பணம் அதுலே போச்சு. படிப்பு முடிஞ்சு 3 மாசமாத்தான் வேலை பாக்குறேன். லீவு கூட அதிகம் கிடைக்கலே. அதனாலேதான் என் ஆயாவுக்கு எதுவும் செய்ய முடியலே. இனிமேப் பாரு. உன்ன மகாராணி மாதிரி வச்சுக்கப் போரேன்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே போய் ஒரு கவரை எடுத்துக் கொண்டு வந்தான். "இதோ பாரு. இதுலே எல்லாம் அந்த ஊரு டாலர் நோட்டு. இப்போ நான் ஒரு உண்மையை சொல்லப் போறேன். நாளைக்கு நான் மட்டும் போலே. நீயும் எங்கூட சென்னைக்கு வர. போன வருஷம் ஞாபகம் இருக்கா. என் 'friend' ஒருத்தன் ஒன்னை போட்டோ எடுத்து, உன் 'கை நாட்டும்' வாங்கிட்டுப் போனானே, உன் 'பாஸ்போர்ட்' அவன் அட்ரஸ்லே வந்து இருக்கு. நாம அதை எடுத்துகிட்டு ஒரு ஆபிஸ¥க்குப் போயி, உன் 'பாஸ்போர்ட்' லே முத்திரை போடணும். அதுக்கான பேப்பர் எல்லாம் தயார் பண்ணியிருக்கேன். டிக்கெட்டும் உடனே எடுத்துடணும். நீயும் என் கூட அமெரிக்கா வர. உன் கையாலே புளிக்கொழம்பும், வெல்லக்களியும் செஞ்சுப் போடற. என் கூட ஒரு 6 மாசமாவது இருந்தாத் தான், நான் கல்யாணத்துக்கு சம்மதிப்பேன். உன்னை தவிர்த்து ஊர்ல பாதிபேருக்கு இந்த 'ப்ளான்' தெரியும். பவானி கிட்டேயும் சொல்லிட்டேன். அவங்க இந்த வீட்லே தங்கி வீட்டை பாத்துக்குவாங்க. உன் புடவை ரெண்டை எடுத்துக்கிட்டு, பிரயாணத்துக்கு தயாரா இரு" என்றான். "என்னடா இது. இந்த புள்ள இம்மாம் பெரிய குண்டை தூக்கிப் போடுது". கெங்கம்மா ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து போய் நின்றாள். "ஆயா. ஏதானும் பேசு. ஏதானும் பேசு" தங்கராஜ் ஆயாவை உலுக்கினான். "எனக்கு பேசத் தோணலே. இவ்வளோ பாசம் எம்மேலே வச்சிருக்கயே என் ராசா. அது தெரியாம ஊர் மக்கள் எவ்வளவோ கேலி பேசினாங்க. இருக்கட்டும். ஆமா, இந்த டிக்கெட்டெல்லாம் சேர்ந்து எவ்ளோ ஆவும்?" "ரு. 30, 60 ஆயிரம் ஆகும். அதனாலே என்ன. எனக்கு அந்த வசதி இருக்குது. கவலைப்படாதே. அடுத்த வருஷம் வரச்சே இந்த வீடை மாடி வீடா மாற்றி கட்டிடலாம். எல்லா வசதியும் செஞ்சுக்குவோம். அப்போ நீ 'America Returned Aaya'வா இருப்பியே "தங்கராசு தன்னுடைய திட்டத்தை பற்றி பேசிக் கொண்டே போனான். அவன் பேசுவதையெல்லாம் நிதானமாக கேட்டு முடித்த கெங்கம்மா, "ராசா நா ஒண்ணு சொன்னாக் கேப்பியா?" என்றாள். "சொல்லு. கேக்கறேன்.""நீ வந்து எங்கிட்ட ஒட்டிக்கிட்ட போது உனக்கு 3 வயசு. அப்போ ஒன்ன எப்படி கரையேத்தப் போறேன்னு கவலை தான் நெஞ்சு முட்ட. உனக்கு சோறு போட்டு, மனுசனா, ஆக்கினது நீ வயல் வெளியிலே வேலை செஞ்சு வயத்தை கழுவிப்பேன்னு - ஒரே நினைப்போடத்தான் வளர்த்தேன். ஆனா, நீ நல்லா படிச்சே. ஸ்கூல் வாத்தியருங்களெல்லாம் 'காலேஜ்' சேர வழி சொன்னாங்க. 'ஸ்காலஷிப்பு' கிடைச்சு காலேஜிக்கு போன. இருந்த அரைக்கால் காணி நிலத்தை வித்து ஏதோ உங்கிட்ட கொடுத்தேன். நீ பெரிய ஆளா, நானே கண்ணு போடறமாதிரி வந்து நிக்கறே. ஊரே உன்னக் கொண்டாடுது. மனசுலே எவ்வளவோ சந்தோசம் தெரியுமா"

"ஆமா. ஆயா. அதுக்குத்தான் ஒன்னை கூட்டிகிட்டு போனா. நான் எவ்ளோ வசதியா, எந்த நிலையிலே இருக்கேன்னு நீ பாக்க வேணாமா?" பேரன் கேட்டான்.

"அதை இங்கேயே பார்த்துட்டேன் என் ராசா. நான் என்ன சொல்ல வரேன்னா- உனக்காவது இந்த அரைக்காணி நிலம் இருந்திச்சு. இந்த பவானி இருக்காளே. அவளுக்கு ஒண்ணுமே இல்லை. வய வெளியில கூலி வேல செய்யறா. புருஷன் சரியில்ல. ஒரு பையன். கந்த குமாரு. நீ தான் பாத்தியே. நல்லா படிக்கிறான். அடுத்த வருஷம் காலேஜு போணும். இப்பல்லாம் பெரிய படிப்புக்கு லச்சக்கணக்கிலே கேக்ருங்களாம். அந்தக் குமார பாக்கும் போதெல்லாம், எனக்கு நீ சிறுபிள்ளையா இருந்த ஞாபகம் வரும். நீ எங்கேயோ வெளி ஊர்லே இருக்க. நல்லதுக்கும், கெட்டதுக்கும் தாயும், பிள்ளையும் தான் எனக்கு துணையிருக்காங்க. அவுங்களுக்கு ஏதானும் செய்யணும்னு மனசு அடிச்சுகிடுதுடா ராசா. நான் கிழவி. உன் ஊருக்கு வந்து என்ன செய்யப் போறேன். நீ "ஆயான்னு என் கையாலே இந்த ஆறு நாள் சாப்பிட்டு போன நினைப்பே இன்னும் 6 வருஷம் தாங்கும். இப்போ நீ கிளம்பிடுறயேன்னு துக்கம் நெஞ்சடைக்குது. அப்புறம் பழகிப்போயிடும். அதனலே என் 'டிக்கெட்டு'க்கு வச்சிருக்க பணத்தை அந்தக் கொழந்தைப் பேர்ல 'பேங்க்'ல போடு ராசா. அடுத்த வருஷம் அவனுக்கு உதவியா இருக்கும். வயத்திலே பொறந்தாத்தான் பெண்ணு, புள்ளை, அக்கா, தம்பிங்கறது இல்லே ராசா. நம்பள சேர்ந்தவங்க நல்லாயிருக்க வேண்டாமா. உனக்கு ஒரு தம்பி இருந்தா செய்ய மாட்டியா. தயவு செஞ்சு இந்த உதவியை எனக்கு செஞ்சுக் கொடு ராசா. அந்த பவானிக்கு யாருமே ஆதரவு இல்ல ஐயா." கிழவி கையெடுத்து கும்பிட்டுக் கொண்டு கெஞ்சினான்.

அதிர்ந்து போனான் தங்கராசு. கண்களில் கண்ணீர் வெள்ளம். "ஆயா. என்னைப்போய் நீ கெஞ்சலாமா? செய்யுன்னு அதிகாரம் பண்ணு. எனக்கு சின்ன வயசிலே வெறும் சோற மட்டும் நீ ஊட்டலே. அந்த சோத்தோட பந்தம், பாசம், பரிவு, கருணை, நியாயம்னு விதவிதமான காயையும் சேர்த்து ஊட்டிருக்கே. அதெல்லாம் இன்னும் நீறு பூத்த நெருப்பா எங்கிட்ட இருக்கு. எவ்வளவோ படிச்சிருந்தும் எனக்கு இதெல்லாம் தோணாம, நீ சொல்லித்தர வேண்டியிருக்கேன்னு நான் அவமானப்படறேன். அதே சமயம், என் ஆயா, என்ன ஒரு அருமையான கடவுளின் படைப்புன்னு! நினச்சு சந்தோஷப்படறேன். கண்டிப்பா அந்தப் பையனுடைய மொத்த படிப்பு செலவையும் நான் ஏத்துக்கறேன். அது மட்டுமுல்ல. ஒன் பேர்ல ஒரு 'டிரஸ்ட்' ஆரம்பிச்சு நம்ம கிராமத்திலே இருக்கற ஏழைப்பசங்களுக்கு மேல் படிப்புக்கு உதவி செய்யப் போறேன். நான் 'ப்ளேன்'லே வரும்போது ஒரு பெருமிதத்திலே இருந்தேன். நான் எம்.பி. ஏ; நான் மேனேஜர்; நான் இந்தக்கார் வச்சிருக்கேன்; இப்படி 'ப்ளேன்' லே வரேன்னு. அதையெல்லாம் "show off" பண்ணிக்கனும்னு என்று நினைப்பிலே இருந்தேன். இப்போ உன் முன்னாடி அது எல்லாம் அழிஞ்சிப் போயிடுச்சு. நான் "என்ன சாதிச்சுட்டேன்? என்ன சாதிச்சிருக்க முடியும்? மத்தவங்க உதவி இல்லாம. நான் என்ன சாதிச்சிருக்க முடியும்?" சிறு குழந்தைப் போலத் தேம்பினான் தங்கராஜ். மெலிந்த கைகளால், அவனை தடவிக் கொடுத்தாள் கெங்கம்மா.

மறுநாள் கெங்கம்மா, பேரனுடன் பெருமையாக 'டாக்ஸியில் கிளம்பினாள். கூடவே பவானியும், கந்த குமாரும் அமெரிக்கா போக அல்ல. சென்னையை சுற்றி பார்க்க. கந்த குமாரின் பெயரில், பேங்க்கில் ரூ.50,000 போடப்பட்டது. அந்த இளம் கண்களுக்கு உலகமே ஒளி மயமாக தெரிந்தது.

© TamilOnline.com