கண்ணன் பகவத் கீதையில் 'மாதங்களில் நான் மார்கழி" என்று கூறியிருப்பது ஒன்றே அம்மாதத்தின் பெருமைக்கு ஒரு நற்சான்று. கண்ணன் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்திற்கும் மார்கழிக்கும் கூட நெருங்கிய ஒரு தொடர்புண்டு. அதுதான் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி. அன்று எல்லா வைணவத் தலங்களிலும் வைகுண்ட வாசல் திறக்கப்படும். விடியற்காலையில் பக்தர்கள் அந்த வாசல் வழியாகச் சென்று இறைவனைத் தரிசிப்பதன் மூலம் வைகுண்டத்திற்கே சென்று திருமாலையே தரிசித்த மன நிறைவு பெறுவார்கள்.
ஒரே நாளில் ஒன்பது பெருமாள் கோவில்களுக்குச் சென்று பெருமாளை வழிபடலாம். நம்ப முடிகிறதா?! எங்கே? தமிழகத்தின் தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் தான். திருநெல்வேலி-திருச்செந்தூர் பாதையில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்த மூன்று கோவில்களும் வடகரையில் அமைந்த ஆறு கோவில்களும் ஆகிய இவைதான் "நவதிருப்பதி" என்றழைக்கப்படும் பாடல்பெற்ற வைணவத்தலங்கள்.
30 கிலோமீட்டர் தூரத்திற்குள் இந்த ஒன்பது கோவில்களையும் தரிசித்து விடலாம். நம்மாழ்வார் மங்களாசாசனம் [பாசுரம் பாடி வழிபடுவது] செய்துள்ள இத்தலங்களில் வைகுண்ட ஏகாதசி மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். நாராயணனைப் போற்றும் நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் நான்கில் ஒரு பங்கு அதாவது ஆயிரம் பாசுரங்களைப் பாடியிருப்பவர் நம்மாழ்வார். இவர் பாடியுள்ள திருவாய்மொழி சாமவேதமாகவும், திருவிருத்தம் ரிக்வேதமாகவும், திருவாசிரியம் யஜூர்வேத மாகவும், பெரிய திருவந்தாதி அதர்வணவேதமாகவும் கருதப்பட்டு தமிழ்வேதங்கள் என்று போற்றப் படுகின்றன. சடகோபன் என்ற இயர்பெயருடைய இவர் எம்பெருமான் திருவடிகளுக்கு மிகவும் அந்தரங்கமானவர் என்பதால் "நம்மாழ்வார்" என்று அழைக்கப் பட்டார். பெருமானின் பாதுகையும் "சடகோபம்" என்றே அழைப்படுகிறது. பெருமாள் கோவில்களில் சடாரி சாதித்தல் என்பதும் இந்த சடகோபத்தைத்தான் குறிப்பிடுகிறது.
நவதிருப்பதிகளில் ஒன்று திருக்குருகூர். இதுதான் நம்மாழ்வார் பிறந்த திவ்ய தேசம். இவர் பிறந்ததால் இவ்வூர் "ஆழ்வார்திரு நகர" என்று அழைக்கப் பட்டதுடன் இவரும் "திருக்குருகூர் நம்பி" என்று அழைக்கப்பட்டார். ஆழ்வார் பிறந்ததால் ஊருக்குப் பெருமை. இந்த ஊரில் பிறந்ததால் இவருக்கும் பெருமை.
திருக்குருகூர் பெருமை:
வராக அவதாரத்தில் பன்றிவடிவில் பூமியை வெளியே கொணர்ந்த திருமால் முதலில் இம்மண்ணில் காட்சி தந்த ஊர் இந்தத் திருக்குருகூர். பரத்வம் என்ற குணவிசேஷம் கொண்டவர் இங்குள்ள பெருமாள். அதாவது ஆரம்பம் முடிவு அற்ற "ஆதிபிரான்" என்று பொருள். அதனால்தான் இக்கோவிலில் எழுந்தருளி யுள்ள இறைவன் 'ஆதிநாத பெருமாள்" என்றும் தாயார் ஆதிநாதவல்லித் தாயார்" என்றும் அழைக்கப் படுகின்றனர். இவ்வூரில் அவதரித்த நம்மாழ்வார் பிறந்த 16 ஆண்டுகள்வரை வாய் பேசாமல் புளியமரம் ஒன்றின் அடியில் சடமாய் வீற்றிருந்தார். நவதிருப்பதி வரிசையில் வைத்து எண்ணப்படும் மற்றொரு தலம் "திருக்கோளுர்". இவ்வூரினைச் சேர்ந்த மதுரகவி என்பார் திருக் குருகூர் வந்தபோது புளிய மரத்தடியில் வீற்றிருக்கும் சடகோபனைப் பார்த்து "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்" என்று கேட்டதற்கு, பிறந்தது முதல் பேசாதிருந்த சடகோபன் முதன்முதலாக வாய் திறந்து 'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பேசினார். இதன் பொருள் பிறந்த ஒருவன் பாசம் பற்று இவற்றிலிருந்து விடுபடாதவரை அங்கேயே கிடந்து உழலவேண்டியது தான் முக்திக்கு வழியேயில்லை என்பதாகும். இதைகேட்டு சடகோபன்பால் ஈர்க்கப் பட்ட துரகவி அன்றுமுதல்அவரின் பிரதம சீடரானார். நம்மாழ்வார் புகழ் பாடுவது ஒன்றையே தன் வாழ்நாளின் குறிக்கோளாய்க் கொண்டார். இதனால் இவர் பத்தே பாசுரங்கள் பாடியிருந்த போதிலும் பன்னிரு ஆழ்வார் வரிசையில் தாமும் ஒரு இடத்தைப் பெற்றார். வைணவத் திருத்தலங்களில் இன்றும் மதுரகவி நம்மாழ்வாரை வாழ்த்திப் பாடிய 10 பாசுரங்களைப் பாடிய பின்னர்தான் நம்மாழ் வாரின் திருவாய்மொழியைப் பாடும் மரபு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. நம்மாழ்வார் பாடிய நான்கு வேதங்களுக்கீடான பாசுரங்கள் போல இவர் அமர்ந்திருந்த புளிய மரத்திலும் நான்கு கிளைகள் ஒன்றுக்கொன்று விநோதமான விதத்தில் பின்னிப் பிணைந்து கொண்டிருக்கின்றது. அது மட்டுமல்ல. அதிசயமாக இம்மரம் காய்ப்பதுமில்லை; மாலையில் கதிரவன் மறையும் நேரத்தில் இதன் இலைகள் கூம்புவதுமில்லை. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மாழ்வாரின் காலத்துப் புளிய மரம் இன்றைக்கும் அதே அதிசயமான பின்னிப் பிணைந்த நான்கு கிளைகளுடன் இருந்து கொண்டிருக்கிறது. மதுரகவியின் கனவில் அவர் கண்ட விதமாகவே நம்மாழ்வார் உருவம் சிலையாக வடிக்கப்பட்டு இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
நவதிருப்பதிகளில் ஒவ்வொன்றும் ஒரு நவகிரகத் துடன் தொடர்புடையது. அந்த வகையில் திருக்குருகூர் புதனுக்குரிய தலமாகக் கருதப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது. 32 வயதுவரை மட்டுமே வாழ்ந்த நம்மாழ்வார் திருமாலின் பாதுகையாக சடகோபம் என்ற பெயரில் வைணவத்தலங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
கல்நாயனம்:
கோவில்களில் மங்கள இசை ஒலிக்கச் செய்பவர்கள் நாயனக்காரர்கள். அவர்கள் வாசிக் கும் நாயனம் நாதஸ்வரம் என்றும் அழைக்கப்படும். பெரும்பாலும் இந்த இசைக்கருவி மரத்தால் செய்யப்பட்டிருக்கும். ஆனால் திருக்குருகூரில் உள்ள நாயனம் கல்லில் செய்யப்பட்டுள்ளது. தூக்கி எடுத்துக் கையில் பிடித்து வாசிக்க அலாதியான பலமும் திறமையும் வேண்டும். முக்கியமான விசேஷங் களிலும் திருவிழா நாட்களிலும் மட்டுமே இது வாசிக்கப்படும்.
அரையர் சேவை:
இது ஒரு வகை நாட்டிய நிகழ்ச்சி. திருக்குருகூர் கோவிலில் இந்த நிகழ்ச்சி இடம் பெறுகிறது. அலங்காரமான ஆடை அணிகளுடனும் தலையில் கிரீடமும் காலில் சலங்கையும் அணிந்து வைணவ பக்தர்கள் நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பாடிக் கொண்டு நாட்டியம் ஆடுவார்கள். இவை 1800க்குப் பிறகு வந்த வழக்கமாகும். இன்றும் சீரங்கம் போன்ற தலங்களில் அரையர் சேவை நடந்து வந்து கொண்டிருக்கிறது.
பிரம்மோத்சவம்:
வைகாசியில் இங்கு நடைபெறும் பிரம்மோத் சவத்தின் ஐந்தாவது நாளில் நவதிருப்பதிகளின் பெருமாளையும் இங்கு எழுந்தருளப்பண்ணி நம்மாழ்வாரை சிம்சவாஹனத்தில் அமர்த்தி அருகில் மதுரகவி ஆழ்வாரையும் அமர்த்தி நாலாயிர திவ்யபிரபந்தத்தைப் பாடி இறைவனைக் காது குளிரக் கேட்கச் செய்வார்களாம். தன்னைப் பாடி பரவசப் படுத்தும் பக்தனைத்தேடி இறைவன் அவன் இருக்கும் ஊருக்கே வருகின்றான் என்பது பொருத்தமாகத்தான் இருக்கிறது. "இறைவன் தொண்டர்தம் பக்தியில் அடக்கம்" என்பது பொய்யல்ல!!!
நவதிருப்பதிப் பயணம் மேலும் தொடரும்.
டாக்டர் ஆலர்மேலு ரிஷி |