உரல் புளியஞ்சாதம் (திடீர் புளிசாதம்)
திடீர் உணவுகள் பிரபலமான இந்த காலத்திற்கு முன்பே தஞ்சாவூர் ஜில்லாவில் பல திடீர் உணவுகள் தயாரிக்கப்பட்டன. சாமான்களை உரலில் இடித்து பொடி செய்ததால் இந்த புளியஞ்சாதத்தை உரல் புளியஞ்சாதம் என்பார்கள்.

தேவையான பொருட்கள்
புளி - எலுமிச்சம் பழ அளவு
மிளகாய் - 3-6
தேங்காய் - 1 மூடி
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
வேர்கடலை - 1 கைபிடி
நல்லெண்ணை - 1-2 கரண்டி
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
எள்ளு - 1 கரண்டி
பெருங்காயம் - 1 கட்டி
கறிவேப்பிலை - 1 கைபிடி
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

எள்ளை தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைத்து, களைந்து வெறும் வாணலியில் (சூடான ஆனால் எண்ணெய் விடாத) படபடவென பொறிக்கும் வரை வறுக்கவும்.

துறுவிய தேங்காய், எள்ளு, மிளகாய் வற்றல், புளி, பெருங்காயம் உப்பு சேர்த்து உரலில் இடிக்கவும். மன்னிக்க மிக்ஸியில் பொடி செய்யவும். தேவையானால் தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கலாம். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வேர்கடலை சேர்த்து வறுக்கவும்.

அரைத்த பொடி (அல்லது விழுது) போட்டு மஞ்சள் பொடி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். கறிவேப்பிலை போடவும். சூடான சாதத்துடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.

வழக்கமாக செய்யும் புளிக்காய்ச்சல் போல் அதிக நேரம் கொதிக்காமல் விரைவில் செய்து முடிக்கலாம்.

தேங்காய் சேர்ப்பதால் வித்தியாசமான ருசியுடன் இருக்கும். காணும்பொங்கலுக்கு கலந்த சாதங்கள் செய்யும் போது இந்த முறையில் செய்யலாம்.

ஜானகி சுப்ரமணியன்

© TamilOnline.com