போகி - கடலைப் பருப்பு போளி
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 1 1/2 கிண்ணம்
நல்லெண்ணை - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - சிறிதளவு
இந்தப் பொருட்களை நன்றாகக் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து வைக்கவும்.
கடலை பருப்பு - 1 கிண்ணம்
துருவிய தேங்காய் - 1/3 கிண்ணம்
தூள் செய்த வெல்லம் - 2 கிண்ணம்
ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்

செய்முறை

கடலைப் பருப்பை நன்றாகக் கழுவி, 1/2 கிண்ணம் தண்ணீர் விட்டு குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். பின்னர் தண்ணீரை முற்றிலும் வடிகட்டவும்.

மிக்ஸியில் வேகவைத்தப் பருப்பை நன்றாக அரைக்கவும். கனம் அதிகமான பாத்திரத்தில் வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீர் விட்டு மெல்லிய சூட்டில் வைத்து, வெல்லம் கரைந்து பாகு பதம் வரும் வரை வைக்கவும்.

துருவியத் தேங்காயைச் சேர்க்கவும். அரைத்தப் பருப்பைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். ஏலக்காய் பொடியைச் சேர்த்துக் கிளறி, சிறிது நேரம் ஆறவைக்கவும். இப்பொழுது பூர்ணம் தயார்.

பிசைந்து வைத்த மைதா மாவிலிருந்து சிறிதளவு எடுத்து சிறிது பரப்பிக்கொள்ளவும். எலுமிச்சை அளவு பூர்ணத்தை எடுத்து இதன் நடுவில் வைத்து மூடவும். சப்பாத்தி வடிவத்திற்கு இதனைக் கையினால் தட்டிக்கொள்ளவும்.

தோசைக் கல்லில் (தாவா) இதனை இட்டு இருபுறமும் நன்றாக வேகும் வரை வறுத்து எடுக்கவும் (எண்ணை சேர்க்காதீர்கள்). (சப்பாத்தி செய்வது போலவே).

கல்லிலிருந்து இறக்கி மேலே சிறிதளவு நெய் தடவி பரிமாறாவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com