தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், சிறந்த தமிழ் இலக்கியவாதியுமான திரு குமரி அனந்தன் அவர்கள் சான்·ப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் அழைப்பை ஏற்று வந்திருந்தார். அவரைத் தென்றல் இதழுக்காகச் சந்தித்த போது:
வணக்கம் திரு குமரி அனந்தன் அவர்களே! தென்றல் வாசகர்களின் சார்பில் முதற்கண் உங்களை வரவேற்கிறோம்.
அரசியலுக்கு முதன் முதலில் தாங்கள் எப்படி வந்தீர்கள்? ஆரம்ப கால அரசியல் அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது?
என்னுடைய தந்தை காந்தியின் வழியில் வந்தவர். மகாத்மா காந்தி இரண்டு விதமான தொண்டர்களைத் தேர்ந்தெடுத்தார். ஒன்று தேசத்திற்காக நேரடியாய்ப் போராடுவது, சிறை செல்வது.மற்றொன்று நிர்மாணப் பணிகள் என்று நமது நாட்டுப் பணிக்குத் தொண்டர்களைத் தயார் செய்வது. என் தந்தைக்கு இட்ட பணி, இளைஞர்களுக்குக் கதர்த் துணி நெய்யக் கற்றுக் கொடுப்பது. எங்கள் வீட்டில் பதினெட்டு கதர் கைத்தறிகள் இருந்தன. சுமார் பத்து வயதிலேயே நான் கிராமங்களுக்குச் சென்று கைத்தறிகளுக்குத் தேவையான நூல்களை வாங்கி வருவேன். அப்படிப்பட்ட ஒரு தேசியவாதியின் குடும்பத்தில் இருந்ததினால் நான் சுதந்திரப் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டேன். சிறு வயது - உள்ளத்தில் ஊக்கம் இருந்ததால் காந்தியிடம் ஈடுபாடு ஏற்பட்டு, பதினெட்டு வயதிலேயே காங்கிரசில் உறுப்பினராக ஆகிவிட்டேன்.
சிறு வயதிலேயே பெருந்தலைவர் காமராசரிடம் பெரும் பக்தி கொண்டவராக இருந்துள்ளீர்கள். அவருடன் உங்களுக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களைப் பற்றிச் சொல்ல முடியுமா?
நான் இப்போது “நல்லாட்சி கண்ட நாயகன்” என்ற நூல் எழுதிக் கொண்டு இருக்கின்றேன். அவரோடு பத்து ஆண்டுகள் மிகவும் நெருக்கமான தொண்டும், தொடர்பும் எனக்கு உண்டு. அவை அனைத்தையும் கூறுவது என்பது இயலாத காரியம். பெருந் தலைவரைப் பொறுத்த வரையில் அவரது குண நலன்கள் ஒன்றிரண்டாவது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன். இப்பொழுது அவரது நூற்றாண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எதையும் சமுதாய நோக்கிலே பார்ப்பது அவர் இயல்பு. ஒருமுறை நானும், E.V.K. சம்பத்தும் அவரோடு பேசிக்கொண்டிருந்தோம். அவர் சம்பத்திடம், “ஏன் நம் ஊர் கோயில்களில் கோபுரம் வெகு உயரமாக இருக்கிறது?” என்றார். அதற்கு சம்பத் “நம் மன்னர்கள் கலையை வளர்ப்பதற்காகவும், சிற்பக் கலை உயரவும், கல்லிலே கலை வண்ணம் காணவும் இவ்வாறு செய்திருக்கின்றனர்” என்றார். தலைவரும் விடாது, “இருக்கலாம், ஆனால் அதைக் கீழேயே வரிசையாய் வைத்திருக்கலாமே! ஏன் உயரே வைக்க வேண்டும்?” என்றார். பின்பு அவரே சொன்னார். “முன்பெல்லாம் சாலை வசதி கிடையாது. போக்குவரத்து வசதியும், உணவும் தங்குமிடமும் கிடைப்பதும் அரிது. அதனால்தான் கலங்கரை விளக்கம் போல் வெகு தூரத்தில் இருந்து வருபவர்கள்கூட கோபுரத்தைக் கண்டு அங்கு உணவும், தங்குமிடமும் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளத்தான் இருக்குமோ”, என்றார். இப்படி எப்பொழுதும் அவரது சிந்தனை மக்களின் நலனை நோக்கியே சென்று கொண்டிருந்தது. அதனால்தான் அவரது இலட்சியம் “ஆறாத சோறும், கிழியாத ஆடையும், மூழ்காத வீடும் மக்களுக்கு என்றும் கிடைக்க வேண்டும்” என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
தமிழ் நாட்டில் கடந்த 35 ஆண்டுகளாக மாநிலக் கட்சிகளே ஆட்சி அமைக்கின்றன. ஒரு தேசியக் கட்சியின் தலைவராக இருந்த நீங்கள் ஏன் தேசியக் கட்சிகள் ஆட்சி அமைக்கவில்லை என்று கூற முடியுமா?
பெருந்தலைவர் காமராசர் சொன்னதை நான் உட்படப் பின்பற்றாததே காரணம் என்று சொல்வேன். காமராசர் 1963ம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி முதலமைச்சராக ஒன்பது வருடம் இருந்தபின் போதும் என்று பதவி விலகினார். அப்பொழுது அவர் மற்றக் கட்சிகள் மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு விரோதமாகச் செயல்படுகின்றனவே என்று மனம் வருந்தினார். எனவே மக்களுக்கு அதைப் புரியவைக்க வேண்டுமானால் தான் ஜனநாயக ரீதியாகச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். “ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தால் அவர்களை நெருங்கமுடியாதா கையால் நான் பதவி விலகி வெளியே இருந்து காங்கிரசை வளர்க்க விரும்புகிறேன்”, என்றார். எங்களுக்காகவும் ஒன்று சொன்னார். “உங்களை எல்லாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்தக் காலக் கட்டத்திலும், மாநிலக் கட்சிகளின் கூட்டணிகளில் நுழைந்து விடாதீர்கள்.” அந்த ஆணையை நாங்கள் யாருமே பின்பற்றவில்லை. இல்லையென்றால் அவர் மறைந்தவுடன் நாங்கள் வெற்றி பெறாமல் இருந்திருந்தாலும், ஒவ்வொரு தோளாக மாறி மாறி ஏறியதால் எங்கள் கால்கள் நடைப் பழக்கத்தை இழந்துவிட்டன. நம்மை நாமே வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை நாம் இழந்துவிட்டதால் இத்தனைக் காலமும் தேசியக் கட்சிகளால் ஆட்சியை அமைக்க முடியவில்லை.
சினிமாக்காரர்களால் தமிழக அரசியலுக்கு நன்மையா, தீமையா? தீமை என்றால் சிலர் கூறுவது போல் சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது சரியா?
சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறும் உரிமை யாருக்கும் கிடையாது. அப்படிக் கூறுவது நியாயமும் ஆகாது. யார் வேண்டுமானாலும் மக்களுக்குத் தொண்டு செய்யலாம். இன்னும் சொல்லப் போனால் கலைஞர்கள் ஒரு காலத்தில் தேசத்திற்குச் செய்திருக்கும் தொண்டு சாமானிய மானதல்ல. “கதர்க் கொடி கப்பல் பூணுதே” என்று மேடையில் பாடும் பொழுது பல்லாயிரக் கணக்கான மக்கள் அந்தக் கதர் கொடிக் கப்பல் வரவேண்டும் என்று ஆசைப் பட்டனர். விசுவநாத தாஸ் என்ற பெருங்கலைஞர் 29 முறை சிறை சென்றிருக்கிறார். ஏனென்றால் நாடக மேடையில் வள்ளித் திருமணத்தில் முருகனாக வந்தும்கூட “வெள்ளைக் கொக்கு பறக்குதடி பார்” என்று பாடுவார். “ஆலோலங்கிளி சோ” என்று தினைப்புலத்தில் வள்ளி கிளிகளை விரட்டும்போதும் “வெள்ளை வெள்ளை கொக்குகளா, வெகு நாளாய் இங்கிருந்து கொள்ளை அடிச்சீங்களா?” என்று பாடி கொக்குகள் தானியங்களைத் தின்றுவிடுவது போல் வெள்ளையர் நம் செல்வங்களைக் கொள்ளையடிக் கின்றனர் என்ற உணர்வை மக்களிடையே பாடிப் பரப்புவர். அவ்வழியில் வந்த கலைஞர்களை அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்ல முடியாது. அவர்கள் சொல்வது நியாயமாய் இருப்பின் ஏற்றுக் கொள்ளலாம். இல்லையென்றால் அதை ஏற்க வேண்டாம். அவ்வளவுதான் செய்ய இயலும்.
நடிகர்களுக்கு ஒரு mass media கவர்ச்சி இருப்பதால் அவர்களால் எளிதில் பதவிக்கு வர முடியும். அப்படி வருவதால் நிர்வாகத் திறமையும், அனுபவமும் இல்லாத ஒருவரால் எப்படி நல்லாட்சியைக் கொடுக்க முடியும்?
மக்கள்தான் ஒருவருக்கு கவர்ச்சியுடன்கூட நிர்வாகத் திறமையும் இருக்கிறதா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஆக மக்களுக்கு நீங்கள் அறிவூட்ட மட்டுமே முடியும். இன்னொரு அரசியல்வாதி இதை முடிவு செய்ய முடியாது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சமீபத்திய நடவடிக்கைகள் ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் நடவடிக்கை போல் உள்ளது. பலமுறை கேட்கப் பட்ட கேள்வியாய் இருந்தாலும், ரஜினி அரசியலுக்கு வருவாரா? வந்தால் அவரின் வெற்றி வாய்ப்புக்கள் எப்படி இருக்கும்?
1995-ஆம் ஆண்டு தமிழகத்தில் அவருக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. வெளிப்படையாகப் பேசியதால் ஆளுங்கட்சியின் விரோதத்தை அவர் சம்பாதித்துக் கொண்டார். அப்பொழுது தமிழ் நாட்டு காங்கிரஸ் தலைவரான நான் மத்திய ஆளுங்கட்சியின் உதவியுடன் அவருக்கு எல்லாவிதமான பாதுகாப்புக் களும் செய்து தருவதாக உறுதி அளித்தேன். ரஜினிகாந்த் அவர்கள் மூன்று முறை டில்லிக்கு வந்து மூன்று முறையும் அன்றையப் பிரதமர் திரு. நரசிம்மராவிடம் கோரிக்கைகள் வைத்தார். நான், மூப்பனார், சிதம்பரம், அருணாசலம் எல்லோரும் அதை ஏற்குமாறு கூறினோம். ஆனால் நரசிம்மராவ் ஒப்பவில்லை. அதனால் மூப்பனார் கட்சியிலிருந்தே பிரிந்து சென்றார். உண்மையிலேயே இதயபூர்வ மாய்ச் சொல்கின்றேன் - அன்று ரஜினி சொன்னதை நரசிம்மராவ் ஏற்றிருந்தால் காங்கிரஸ் உடனே ஆட்சிக்கு வந்திருக்கும். அந்த அளவுக்கு ரஜினி அவர்களின் சொல்லும், செயலும் இருந்தது. அதைக் காரியக் கமிட்டி ஏற்றுக் கொள்ளாததால் தமிழ் மாநிலக் காங்கிரஸ் உருவானது. நாளைக்குத் தேர்தல் வரும் பொழுது என்னைத் தலைவனாக்கி கட்சி களம் காணும் நேரத்தில் அவர்களை விட்டுப் பிரியக் கூடாது என்பதால்தான் நான் அதிலேயே தொடர்ந்து இருந்தேன். இன்று பிரிந்து சென்றவர்களும் திரும்பி வந்து சேர்ந்து விட்டனர்.
இன்றைய சூழ்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா?
சொல்லமுடியாது! என்ன காரணமென்றால், அவர் ஒரு தனிச் சிந்தனையாளர். அதற்கேற்ப அவர் என்ன முடிவெடுப்பார் என்று யாராலும் சொல்லமுடியாது. மேலும், அவர் ஒரு ஆன்மீகவாதியும்கூட. திரு ரஜினி அவர்கள் தன் உள்ளுணர்வுப் படியே அதிகம் நடப்பவர். அது எப்படி இருக்கும் என்பதைக் கணிக்கவே முடியாது. அதனால் அவர்தான் முடிவெடுக்க வேண்டும்.
அப்படி வந்தால் அவருக்கு எப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும்? M.G.R. போன்ற ஒரு சக்தியாய் இருப்பாரா?
அது அவர் யாரோடு சேர்ந்து செயல்படப் போகிறார் என்பதைப் பொறுத்தது. ஏனென்றால் நம்மிடம் சக்தி இருந்தாலும், நம்முடன் இருப்பவர் அதை ஒரு கழிக்கும் சக்தியாக நினைத்துவிடக் கூடாது. கூட்டு சக்தியாக நினைக்கும் ஒருவரோடு இணைந்து செயல் பட்டால் நிச்சயம் சக்தி வாய்ந்தவராய் இருக்க முடியும்.
இந்தியாவில் அடுத்தப் பிரதமராக வரும் வாய்ப்புக்கள் அதிகமாக யாருக்கு இருக்கிறது?
இன்றைய சூழ்நிலையில் நிச்சயம் திருமதி. சோனியா காந்திக்குத்தான் இருக்கிறது. அவர் தலைமை ஏற்ற பொழுது இரண்டே இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியாக இருந்தது. இன்று 15 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது. யாரும் எதிர்பாராத நிலையில் காஷ்மீரிலே கூட காங்கிரஸ் நல்ல முறையில் ஆட்சி அமைத்துள்ளது. குலாம் நபி ஆசாத் அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக இருந்தவர். நல்ல முறையில் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். வெற்றிவாய்ப்புகள் கூடி இருக்கின்றன.
பொதுவாக இந்தியாவில் ஜனத்தொகை அதிகமாக இருந்தும், நல்ல தலைவர்களுக்கு பஞ்சம்தான். அது ஏன்?
நல்ல தலைவர்களை அடையாளம் காட்ட வேண்டியது பத்திரிகையாளர்களின் கடமை. ஊடகமாக பத்திரிகையாளர்தான் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பெருந்தலைவர் காமராசர் போலவே வரவேண்டும் என்று பலரும் ஆசைப் படுகின்றனர். அவர் போலவே சட்டை போட எவ்வளவு துணி தேவைப்படும்? அவர் சட்டை மிகப் பெரியது. உதாரணமாக 1967-ஆம் ஆண்டு தேர்தலில் தோற்றபின் அவர் திருச்சி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். நாங்களும் மூன்று நாட்களுக்காக ஒரு திட்டம் வகுத்துக் கொடுத்த போது, பலதரப்பட்ட மக்களையும் சந்திக்க அது போதாது என்பதால் ஒன்பது நாட்களுக்கு அதை மாற்றி அமைக்குமாறு கேட்டார். அப்படி ஒவ்வொரு ஊராட்சியிலும், நகராட்சியிலும், ஏன் ஒதுக்குப் புறமாய் உள்ள கிராமங்களிலும்கூடச் சென்று மக்களைச் சந்திக்க விரும்பினார். அதனால் காமராசர் போலவே வர, அவர் போல் தொண்டு செய்ய வேண்டும்.
அரசியல் என்பது மிகப் புனிதமான ஒன்று அல்லவா? ஆனால் இன்று சில அரசியல்வாதிகள் எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு, அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று சொல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அது ஏன்?
பெருந்தலைவர் காமராசர் மறைந்தவுடன் அப்போதைய முதலமைச்சராக இருந்த திரு. மு. கருணாநிதி அவர்கள் அப்போதைய தொழில் அமைச்சராக இருந்த திரு. ராஜாராமை அழைத்துக் காமராசர் வீட்டுக் கதவுகள் அனைத்தையும் பூட்டி அரசாங்க முத்திரை வைக்கச் சொன்னார். ஏனென்றால் காமராசர் ஒன்பது வருடங்கள் முதலமைச்சராய் இருந்ததவர். இரு பிரதமர்களைத் தேர்ந்தெடுத்தவர். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராயும், நாடறிந்த ஓர் அரசியல்வாதியாகவும் இருந்ததால், அவர் வீட்டுப் பொருட்களுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது அல்லவா? அவர் ஈமச் சடங்குகள் முடிந்து பத்து நாட்களுக்குப் பின் அவர் வீட்டைத் திறந்து வீட்டில் இருந்த பொருட்களைச் சோதனையிட்ட பொழுது கிடைத்தது 132 ரூபாய் 50 காசுகள் மட்டுமே. அவர் போல எத்தனையோ பேர் அரசியலில் இன்றும் இருக்கலாம். ஒரு சிலர் செய்யும் ஊழல்களை வைத்து எல்லா அரசியல்வாதிகளும் அப்படித்தான் என்பதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். இதனால் நல்ல அரசியல்வாதிகளை மக்களும், ஏன் நீதிமன்றங்களும்கூட அடையாளம் காண மறுத்துவிடுகின்றன.
நான் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் என் கட்சியில் நிர்வாகக் குழுவில் இருந்தவர்க்கு என்ன கூறினேன் என்றால் தேர்தலுக்கு மனு போடுபவர்கள் பத்திரிகையாளர்களை அழைத்துத் தன் சொத்துக் கணக்கைக் காட்ட வேண்டும். பின் ஐந்து ஆண்டுகள் கழித்துத் தன் பணிக்காலம் முடிந்த பின்னும் அவ்வாறே செய்ய வேண்டும் என்றேன். அப்படிச் செய்தால் மக்களுக்கு நாம் அரசின் பொதுச் சொத்தை நல்ல முறையில் காத்து, தன் சொந்த செலவில்தான் தொண்டு செய்தோம் என்ற நல்லெண்ணமும், நம்பிக்கையும் வளரும். இதை அனைவரும் வரவேற்றனரே அன்றி பின்பற்றவில்லை. ஆனால் இன்று வரை ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும் பின்னும் நான் இப்படித்தான் செய்து வருகிறேன். அதற்கு மக்கள் எனக்குக் கொடுத்த பட்டம் பிழைக்கத் தெரியாத ஆள் என்பதே. எனவே, இப்படிப்பட்ட எண்ணத்தை மாற்றினால், மக்களுக்கு அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை வரும்.
இதுவரை தாங்கள் அரசியல் மூலமாகத் தமிழ் மக்களுக்கு என்னென்ன செய்துள்ளீர்கள்?
1997-ஆம் ஆண்டு நான் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அன்றைய நிலையில், பிரதமராக இருந்தாலும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் ஆங்கிலத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆனால் நம்மூரில் இருந்து வந்தவர்கள் ஹிந்தியோ, ஆங்கிலமோ அறியாத காரணத்தால் கேள்விகள் கேட்காமல் இருப்பதைக் கண்டித்து, ஒவ்வொரு முறையும் நான் தமிழிலேயே கேட்டு பலமுறை தூக்கி வெளியேற்றப் பட்டேன். பின் அதற்கென ஒரு குழு அமைத்து, தமிழிலும், அரசியலிலும் முதுகலைப் பட்டம் பெற்ற ஒருவன் ஏன் இவ்வாறு செய்கிறான் என்று உணர்ந்து தமிழிலும் கேள்வி கேட்க அனுமதி வழங்கினர். தமிழில் மட்டும் அல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, வங்காளம் ஆகிய அனைத்து மொழிகளிலும் கேள்விகள் கேட்க அனுமதி வாங்கிக் கொடுத்தேன்.
பணவிடைத்தாள் என்ற money order ·பாரத்தை ஒரு கிராம விவசாயியும் பட்டணத்தில் படிக்கும் தன் மகனுக்குப் பணம் அனுப்ப உதவும் வகையில் அதைத் தமிழிலும் மொழி பெயர்த்து அச்சிட வேண்டும் என்று உரிமையையும் பெற்றுத் தந்தேன். இவ்வாறு ஒன்றிரண்டு தொண்டுகளைச் செய்ய இறைவனும், தமிழன்னையும் எனக்கு வாய்ப்பு அளித்துள்ளார்கள்.
இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டியதன் அவசியம் பற்றிக் கூற முடியுமா?
எப்பொழுதும் மக்களை நல்வழி நடத்தி, அழைத்துச் செல்ல இளைஞர்கள் அரசியலுக்கு வரத்தான் வேண்டும். மதத் தலைவர்கள் துறவறம் பூண ஒரு உந்துதல் எப்படி அவர்களுக்குத் தேவைப் படுகிறதோ அது போல சொத்து, புகழ் இவற்றுக்கல்லாது உண்மையாய் நாட்டுக்குத் தொண்டு செய்யும் எண்ணத்துடன் இளைஞர்கள் முன்வர வேண்டும். ஆனால் ஒன்றை நாம்தான் அவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும். நன்கு மத்தினால் கடைந்தாலே ஒழிய வெண்ணை கிட்டாது. அதுபோல உழைப்பின்றி பலன் கிடைக்காது என்று உணர்த்த வேண்டும். அது மட்டும் போதாது. நல்ல முன்னுதாரணமாகவும் இருந்து காட்ட வேண்டும். இதோ இவன் இருந்தான், உயர்ந்தான் என்று அவர்கள் நம்பும்படி செயல் மூலமும், சிந்தனை மூலமும் செய்து காட்ட வேண்டும். அப்படிச் செய்தால் இளைஞர்கள் அரசியலுக்கு வருவர். நமக்கும் நல்ல அரசாங்கம் கிடைக்கும்.
Unity in diversity என்பது இந்தியாவின் தாரக மந்திரம். இருந்தும், தமிழ் நாட்டுக்கும் கர்நாடகாவுக் கும் இடையே எப்பொழுதும் ஏன் காவிரிப் பிரச்சினை பூதாகரமாகத் தலை தூக்குகிறது? அதை எப்படிக் களைய முடியும்?
காவிரிப் பிரச்சினை தீர நாட்டில் உள்ள நதிகளை தேசிய உடைமையாக்க வேண்டும். இதற்கென தேசிய நீர் ஆணைத்திட்டம் ஒன்றை அமைக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் நதி நீர் தனக்குத்தான் சொந்தம் என்ற எண்ணத்தை விட வேண்டும். சொல்லப் போனால் ஒரு நாளைக்கு பிரம்மபுத்திரா நதியிலிருந்து கடலில் கலக்கும் நீரின் கன அளவு 18,142 TMC. கங்கையில் இருந்து கடலில் கலக்கும் நீரின் கன அளவு 7,500 TMC. ஒரிசாவில் உள்ள மகாநதியில் இருந்து 104 TMC கன அளவு கலக்கிறது. ஆனால் வருடம் பூராவுக்கும் சேர்த்து தமிழ் நாடு காவிரியில் இருந்து கேட்பது 250 TMC மட்டுமே. அதாவது ஒரிசாவில் மகாநதியில் இருந்து 2 நாள் கடலில் கலக்கும் நீரைத்தான் நாம் கேட்கிறோம். அதனால்தான் கூறுகிறேன் நதிகள் இணைந்து நதி நீர் தேசிய மயமாக்கப்பட்டால் எல்லா மாநிலத்துக்குமே அதிக நீர் கிடைக்கும். கடலுக்குக் கிடைக்கும் நீர் மனித குடலுக்கும் கிடைக்கட்டுமே என்று நான் அடிக்கடி கூறுவேன். இப்படிச் செய்தால் நாடும் சிறப்படையும். பஞ்சமும் வராது. பக்கத்து மாநிலத்துடன் பகைமையும் வராது.
தமிழ் இலக்கியத்தின்பால் தாங்கள் ஈர்க்கப் பட்டதின் இரகசியம் என்ன?
நான் தென் கோடியில் பிறந்தவன். அகஸ்தீஸ்வரம் என்ற ஊர் அது. தலைப்பாகை கட்டக்கூட கட்டுப்பாடு உள்ள அவ்வூரில் என் தந்தை ஒரு வில்லிசைக் கலைஞராகத் திகழ்ந்தார். காந்தி கூறினார், “இசைகளில் சிறந்த இசை இராட்டினம் சுற்றும் போது எழும் இசையே” என்று. இராட்டின இசையும், சொல்லிசையும் கூடிய என் தந்தையின் வில்லிசையும் என்னிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவேதான் இலக்கியத்தின் பக்கமும் என்னை இழுத்து வந்தது.
தமிழ்க் காப்பியங்களில் தங்களைக் கவர்ந்தது எது? ஏன்?
எல்லாக் காப்பியங்களுமே சிறந்தவைதான். முதன் முதலில் என்னைக் கவர்ந்தது சிலம்பு. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் என் பாட நூல் அது. கம்பனும், வில்லிபுத்தூரானும் என்னைக் கவர்ந்தவரே. முதன் முதலில் மன்னனை விட்டு மக்களைப் பற்றிப் பாடியவர் இளங்கோவடிகள். புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து, பதினெண் கீழ்க்கணக்கு ஆகியவை மக்கள் காவியமாக இருந்தன. பாரதி சொன்னது போல நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்பதால் எனக்கு மிகவும் விருப்பமானது சிலப்பதிகாரமே.
சிலப்பதிகாரத்தின் நாயகியான கண்ணகியை நாம் தமிழ்ப் பண்பாட்டின் சின்னமாகப் போற்று கிறோம். கண்ணகி கணவனால் ஏமாற்றப்பட்டவள். தன் செல்வங்களையெல்லாம் அவனுக்காக இழந்தபின் கோபப் பட்டு மதுரையையே எரித்த கோபக்காரியும்கூட. இப்படிப்பட்ட ஒரு பெண்ணை நாம் போற்றிப் புகழ்வது சரியா?
கண்ணகி நம் தமிழ்ப் பண்பாட்டின் சின்னமாக இருக்கிறாளா என்பது கேள்வி அல்லவா? அவள் பண்பாட்டின் சின்னம்தான். அவள் தன் கணவனைத் தட்டிக் கேட்டிருக்கலாமே என்ற கேள்வி இன்று நேற்றல்ல, பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இருந்து வருவதுதான். நான் கூறுகிறேன் - ஒரு பண்பாடுடைய பெண் நமக்கும் வழிகாட்டி இதையும் செய்திருக்கலாமே என்று கூறும் வகையில்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். கண்ணகியைப் போற்றுகிறோம் - ஏனென்றால் அவள் நம் பாரம்பரியக் கலாச்சாரத்தைக் கட்டிக் காத்தாள். அவளைப் பின்பற்றுவதோடு, அவள் செய்யாமல் விட்ட அந்தக் காரியத்தையும் சேர்த்து நாம் செய்யலாமே என்கிறேன். அவளின் அற்புதமான பல காரியங்களை மட்டும் பின்பற்றி அவள் தட்டிக் கேட்டிருந்தால் அவள் கணவன் கொலையுண்டிருக்க மாட்டானோ என்ற எண்ணம் உங்களுக்கு வந்தால் நான் அதை வரவேற்பேன். அதனால் ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை நாம் பின்பற்ற வேண்டும். அவரிடம் இல்லாத அல்லது செய்யத் தவறிய ஒன்றைப் பிறரிடமிருந்தும் காலத்திற்கேற்ப நாம் சேர்த்துக் கொள்ளலாமே? நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அவளுடைய கால கட்டத்தில் வீட்டை விட்டுப் பெண்கள் வெளியே போக மாட்டர்கள். அதுவும் கண்ணகி கணவனுக்காகக் கூடக் கணவனைத் தவிர வேறு தெய்வத்தை வழி படாதவள். அப்படிப்பட்ட ஒருத்தி அவன் கொலையுண்டதைக் கேட்டு வீட்டை விட்டுக் கிளம்பி காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து பாண்டிய மன்னனிடம் சென்று நீதி கேட்டாள். அவள் துணிச்சலைத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நம் பெண்களும் வீட்டையும், நாட்டையும் நல்வழிப் படுத்த அவள் துணிச்சலைக் கொள்ளலாமே? அதைவிட்டுத் தட்டிக் கேட்கத் தவறினாள் அவள் என்று கண்ணகிமீது பழி போடுவது தவறு. அவளது சூழ்நிலைக்கும் சமுதாயத்திற்கும் ஏற்ப அவள் செய்தது சரியே. அதை நீங்கள் உங்கள் போக்கிற்கேற்ப செய்து கொள்ளலாம்.
ஒரு பத்திரிகையின் மூலம் நீங்கள் பாரதியார், பாரதிதாசன் எழுதிய புத்தகங்களைப் பாதுகாத்து வருவதாய் அறிந்தேன். பாரதியாரையும், பாரதி தாசனையும் பற்றி ஒரு சில வார்த்தைகள் கூற முடியுமா?
நான் பத்தாவது படித்தபோது தோற்றுப் போய்விட்டேன். சென்னைக்கு ஓடியும் போய் விட்டேன். சோற்றுக்காக என் தந்தை வாங்கித் தந்த தங்கமுனைப் பேனாவை விற்க முற்பட்டேன். கடைக்காரர் என் கையிலிருந்த பாரதியார், பாரதிதாசன் கவிதைத் தொகுப்பையும் கொடுத்தால் அதிகப் பணம் தருவதாய்ச் சொன்னார். மறுத்து விட்டேன். பின்னர் தமிழக அரசு பாரதி விருதும் எனக்கு அளித்துக் கெளரவித்தது. பாரதி நூற்றாண்டிலும், பாரதிதாசன் நூற்றாண்டிலும் 52 வாரங்கள் அறிஞர்களை வைத்து ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளியிட வைத்தேன்.
பாரதியைப் பொருத்தவரை மிக ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று அவர் கூறிய “கஞ்சி குடிப்பதற்கு இலார், அதன் காரணம் இவை என்னும் அறிவும் இலார்” என்பது. கஞ்சி இல்லாதது குற்றமில்லை, அதன் காரணத்தை அறியாமல் இருப்பதுதான் குற்றம் என்கிறார். அவர் பாடல்களில் “நான் சாகாமல் இருப்பேன் கண்டீர்” என்றும், “அச்சத்தைப் போக்கிவிடு, மிச்சத்தைப் பிறகு சொல்கிறேன்”, என்று அநியாயத்தை எதிர்க்க அச்சமே கூடாது என்றும் கூறுகிறார். எமனை எதிர்த்து சாவுக்கு அஞ்சாதவர் எவரும் உண்டோ? ஆனால் பாரதி “ஏய் காலா! உன்னை நான் சிறு புல்லென மதிக்கிறேன். என் காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன்” என்று துணிவோடு கூறினான். அன்றைய கால கட்டத்திற்குத் தேவையாக இருந்த ஒன்று அஞ்சாமை.
அதுபோல பாரதிதாசன் கூறுகிறார், “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை, தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ?”. மேலும் அவர் தமிழ் பற்றிக் கூறும் பொழுது, “மணக்க வரும் தென்றலிலே குளிரா இல்லை? தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தில் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை” என்று ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கிறார். தமிழைப் புறக்கணித்தோரைப் பார்த்து, “வணிகர்தம் முகவரியை வரைகின்ற பலகையில் ஆங்கிலமா வேண்டும்? வானுயர்ந்த செந்தமிழில் வரைகவென அன்னவர்க்குச் சொல்ல வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
பாரதியையும், பாரதிதாசனையும் இலக்கியக் கர்த்தாக்களாக நினைப்பதோடு நின்றுவிடாமல் நமக்கு இலட்சியப் பாதையைக் காட்டிய புனிதர்கள் என்று போற்ற வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் இங்கு பலத் தமிழ்த் தொண்டுகள் செய்து வருகின்றனர். பாரதி சொன்னது போல “சென்றிடுவீர் எட்டுத்திக்கும்” என்று இங்கு வந்தும் சிறப்புறத் தமிழைக் கட்டிக் காத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் அவர்கள் புலம் பெயர்ந்தவர்தானே அன்றித் தமிழர்தம் குலம் பெயர்ந்தவர் அல்லர்.
பண்டைய தமிழருக்கும், இன்றைய தமிழருக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளைப் பற்றிக் கூற முடியுமா?
ஒழுக்கம் என்பது சிறிது வித்தியாசப் படுவதாய்ச் சொல்லலாம். குறைந்துவிட்டது என்று நான் சொல்லமாட்டேன். அன்றைய தமிழருக்கு ஒழுக்கமின்மை என்பது அரிசியில் கலந்த கல் போல இருந்தது. இன்று ஒழுக்கம் என்பது கல்லுக்கு நடுவே அரிசி போல இருந்து வருகிறது. அக்கற்களை ஒதுக்கிவிட்டால் தமிழரின் வாழ்வு நிச்சயம் சிறப்புறும்.
புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழ்ச் சங்கங்கள் அமைத்தும், தமிழ்க் கல்விக் கூடங்கள் ஏற்படுத்தியும், இயல் இசை நாடகங்கள் மூலமாகவும் தமிழ் இணைய மாநாட்டை நடத்தியும்கூட தமிழை வளர்த்து வருகின்றனர். வேறு எந்த விதத்தில் இவர்கள் தமிழை வளர்க்க முடியும்?
உலகளாவிய அளவிற்கு ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் ஐயம் தீர்க்கும் மையம் என்று வரவேண்டும் என்றேன். இங்குள்ள தமிழர்கள் தன் குழந்தைகளோடு தமிழ் பேசியும், தமிழ்க் கற்பித்தும் வளர்ப்பது போல அவர்கள் வளர்ந்து தங்கள் குழந்தைகளிடமும் அப்படிச் செய்வார்களா என்பது கேள்வியே. ஆனால் இப்போது தமிழ் இணையம் போன்றவை வந்ததன் பலனாக தமிழை அனைவருமாகச் சேர்ந்து ஒருங்கிணைந்து வழி நடத்திச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. தவறுகளையும் திருத்த முடியும் என்றும் தோன்றுகிறது. வாழையடி வாழையாக வளர்ந்துவரும் இத்தமிழ்க் குலத்தை, செல்வத்தை வளர்க்கவும், பாதுகாக்கவும் என்ன செய்யவேண்டும் என்று தமிழ் மண்ணின் மூதறிஞர் களும், புலம் பெயர்ந்த தமிழ் அறிஞர்களும் சேர்ந்து பேசியும், ஆராய்ந்தும்தான் முடிவெடுக்க வேண்டும்.
தமிழில் பிற மொழிகள் கலத்தல் பற்றித் தங்கள் கருத்து என்ன?
தேவையில்லாத அளவிற்குப் பிற மொழிகள் கலக்கக் கூடாது. ஈஸ்வரலால் என்பவர் பாரதியைக் காசியில் சந்தித்து தமிழில் சமஸ்கிருதம் இல்லாமல் தனித்து இயங்க முடியுமா என்றார். பாரதி அவரை அமரவைத்து உடனே “காற்று என்பது ஓர் ஆற்றல்” என்று 40 வரிகள் பாடினார். தமிழுக்குத் தனி ஆற்றல் உண்டு என்று நம்ப வேண்டும். தனித் தமிழ் துணையோடு மற்ற மொழி வார்த்தைகளை உபயோகிக்காமல் பேசிப் பழக வேண்டும். நானும் மணவை முஸ்தபாவும் நினைத் தோம். செல் ·போனை, செல் பேசி என்று ஏன் சொல்லக் கூடாது? செல்லும் இடமெல்லாம் பேச முடிகிறதே. அது போல முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும்.
தமிழ் மொழியும், தமிழன் வாழ்க்கை நிலையும் இனி எப்படி இருக்கும் என்று நம்புகிறீர்கள்?
ஏற்கனவே செய்யத் தவறியதற்கு வருந்தியும், தவறு செய்ததற்கு வருந்தி திருந்தியும், இனிமேல் இன்ன பாதைதான் சரி என்று தெரிந்து கொண்டு நடந்தால் தமிழனின் வாழ்க்கை முறை சிறக்கும். அரசியலிலும் சரி, சமூகத்திலும் சரி தமிழன் ஒழுக்கத்தையும், உழைப்பையும், நாணயத்தையும் கடைப்பிடித்து வர வேண்டும். 50 வருடங்களுக்குப் பிறகு நிச்சயம் உலகளவில் தலைசிறந்தும், நிமிர்ந்தும் நிற்பான் தமிழன் என்று என்னால் அடித்துக் கூற முடியும். மெய்ஞானமும், விஞ்ஞானமும் கைகோர்க்க ஆரம்பித்து இந்த இரண்டும் என்று சேர்கிறதோ அன்று தமிழ்க்குடி உயர்ந்துவிடும்.
ஈழத் தமிழர் பிரச்சினை நல்லபடியாக முடியும் வேளையில் தற்போதைய இந்திய அரசின் கருத்து என்ன?
பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் சுமுகமாய் முடிந்துவிடும். தமிழன் உரிமை பெற்றவனாக வாழப் போவதை நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். பல சோதனைகள் வந்தும், “விடுதலை தவறிக் கெட்டு” என்று பாரதி கூறியது போல் ஆங்காங்கே சிறு குறைகள் தென்பட்டாலும், அதையெல்லாம் மீறி இனிமேல் நல்ல முடிவுகள் ஏற்படும் என்று உறுதியுடன் எதிர்பார்க்கின்றோம்.
இதில் தமிழக அரசின் நிலை என்ன?
இப்பொழுது இதுவரை யார் என்னென்ன செய்தார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், இனி என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அதற்கேற்ப ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். ஒரு இந்தியக் குடிமகனாக நான் இன்று தமிழக அரசும், இந்திய அரசும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்றுதான் சொல்ல முடியும். தனிமனிதனாக வெளிநாட்டில் அமர்ந்து கொண்டு என் கருத்துக்களைக்கூற இயலாது.
தமிழ் மொழியைப் பொறுத்தவரை தங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
தமிழ்வழிக் கல்வியை எப்படித் தமிழ் நாட்டில் கொண்டுவர முடியும்? இப்பொழுது தமிழ் நாட்டில் தமிழ் மொழிக் கல்வியே இல்லை என்று நான் சொல்வதாக நினைக்க வேண்டாம். 1967-வரை medium of instruction என்று சொல்லப் படுகின்ற ஆங்கிலவழிக் கல்விக் கூடங்கள் 67. இன்று நான்காயிரத்துக்கும் அதிகம். ஏன் அவ்வளவு பல்கிப் பெருகின? தாய் மொழியில் ஒருவன் சிந்திக்கின்ற அளவு பிற மொழியில் நிச்சயமாகச் சிந்திக்க முடியாது. எனவே சிந்திப்பதற்கு, அதன் மூலம் பல கற்பனைகளை வளர்த்துக் கொள்வதற்கு, அக்கற்பனைகளைப் பிறகு காரியமாக்குவதற்குச் செயல்பட வேண்டும் என்று சொன்னால் அவன் தமிழ்வழிக் கல்வி கற்கவேண்டும். ஆனால் ஆங்கிலம் போன்ற உலகளாவிய மொழியாக இருக்கின்ற ஒன்றைப் புறக்கணித்துவிட முடியாது. என்னுடைய ஆசையெல்லாம் தமிழ்ச் சங்கங்கள் எல்லாம் கூடி கல்விக் கூடங்களை ஆரம்பித்து தமிழ் வழியிலே நாங்கள் பாடங்களைக் கற்பித்தாலும் ஆங்கில மொழிப் பாடத்தையும் கற்பித்து, மற்ற கல்விக் கூடங்கள் போல் தமிழ் மொழியில் மட்டும் வல்லவனாக அல்லாமல் ஆங்கில மொழியிலும் வல்லவனாக ஆக்க முன்வர வேண்டும். சென்னையில் கிட்டத்தட்ட 20 அமைப்புகள் இருந்தும், எல்லாம் சேர்த்து தமிழிலும், ஆங்கிலத்திலும் எங்கள் மாணவர்கள் சிறந்தவர்களே என்று நிரூபிக்க வேண்டும். அதற்கு உரிய வழி வகைகள் என்ன என்பது பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் இதுவரை எழுதிய தமிழ்ப் புத்தகங்கள் பற்றிக் கூற முடியுமா?
“கடவுளை நோக்கி” என்பதில் தொடங்கி “நீங்களும் பேச்சாளராகலாம்” என்பதுவரை, பல்வேறு பயணக் கட்டுரைகளும் எழுதியுள்ளேன். என் பயண நூல்களுக்குத் தமிழக அரசு விருது கிடைத்துள்ளது. என் பயணக் கட்டுரைகளை வைத்து ஒருவர் M.Phil பட்டம்கூடப் பெற்றுள்ளார். என்னுடைய சிறந்த படைப்பாக நான் கருதுவது “நீங்களும் பேச்சாளரா கலாம்” என்ற நூல்தான். அது சென்னை லயோலா கல்லூரியில் பேச்சுக் கலைப் பயிற்சிக்குப் பாடநூலாக வைத்துள்ளனர். இப்பொழுதும் ராஜ் TV-யில் ஒவ்வொரு வாரமும் நானும், என் மகள் Dr. தமிழிசையும் சேர்ந்து எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குப் பேச்சாளராவது எப்படி என்று சொல்லிக் கொடுக்கிறோம். அதன் ஐந்தாவது பதிப்பு வெளி வந்துள்ளது. ஆக 25 நூல்களில், என் அனுபவத்தில் எழுதியதால் அதைச் சிறந்த நூலாகக் கருதுகிறேன்.
நாங்களும் பேச்சாளராவது எப்படி என்று சுருக்கமாகக் கூற முடியுமா?
(சிரிப்பு) செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொல்வர். தமிழாசிரியர்கள் எளிய முறையில் சில விஷயங்களான லகர, ளகர, ழகரப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். மேல் வரிசைப் பல்லின் அடியில் நாவை வைத்துச் சொன்னால் அது லகரம். மேலண்ணத்தைத் தொட்டால் அது ளகரம். இன்னும் வளைத்து சற்றுத் தள்ளித் தொட்டால் அது ழகரம். இப்படிச் சின்னச் சின்ன வழியில் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். சொற்பொழிவு என்பது என் பார்வையில் நிறையப் படித்து, தன்வயப் படுத்திக் கொண்டு பிறகு பேச வேண்டும். ஒரு சின்ன சான்று. இக்கலையில் முக்கியமாய் பதற்றம் கூடாது. அது உரையாடலாக இருந்தாலும் சரிதான். ஒருமுறை நான் காகிதங்களை ஒருங்கிணைக்கவேண்டி “யாரிடமாவது ஒரு பின் இருக்கிறதா?” என்றேன். அதற்கு ஒருவர், “நீங்களே பின் வாங்கலாமா?” என்றார். அதற்கு நான், “நீங்கள் ஊக்குவித்தால் நான் ஏன் பின் வாங்குகிறேன்?” என்றேன். இப்படி அந்தந்த நேரத்தில் சூழலுக்கேற்பப் பேசத் தெரிய வேண்டும். டேல் கார்னகி என்ற அறிஞர் “சிறந்த பேச்சு என்பது எந்தத் தவறையுமே செய்யாதவனை ஓங்கி அறைந்தால் எழுந்தபின் அவன் பேசும் பேச்சுதான்” என்றார். அனுபவத்தில் வரும் பேச்சுதான் சிறப்பாக இருக்கும்.
அரசியல்வாதிக்குச் சொந்த ஊரில் சிறப்பு, இலக்கியவாதிக்கு உலகெங்கும் சிறப்பு. இரண்டில் உங்களுக்குப் பிடித்தவர் யார்?
இலக்கியக் கண்ணோடு அரசியலைப் பார்க்கின்ற ஒரு சமுதாயத் தொண்டனாக இருப்பதையே விரும்புகின்றேன். எனக்கு முதலில் சமுதாயத் தொண்டு. ஆனால் அதற்குமுன்னால் இலக்கியம் தான். அரசியல் என்பது பின்னால் வந்தது. அந்த அரசியல் சிறைக்குள் இருந்து ஷாஜகான் தாஜ் மகாலை எப்படிப் பார்த்தானோ, அப்படி அரசியலிலிருந்து இலக்கியத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்று வெளியே வந்து முழுவதுமாக தாஜ்மகால் அருகில் இருக்க முடியுமோ என்று தெரியவில்லை.
வட அமெரிக்கத் தமிழர்களுக்கு நீங்கள் ஏதாவது கூறவிரும்புவது?
தாங்கள் கற்ற கணினி போன்றவற்றை வைத்தும், இணைய மாநாடு போன்றவற்றின் மூலமும் சிறந்த தொண்டாற்றுவதை நான் மிகவும் பாராட்டுகிறேன். அதைப் பரவலாக்கி, மக்கள் எளிதில் இதைப் பயன்படுத்தும் வகையில் இதைப் பரப்ப வேண்டும். இங்கு “leap to land” என்று கூறுவதைக் கேட்டிருக்கிறோம். தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி தான் கண்ட சோதனைகளினால் ஏற்பட்ட வெற்றியை இந்தியர்களோடு பங்கிட்டுக் கொண்டார். அதுபோல இங்கு உள்ள தமிழர்களும் தாங்கள் கண்ட சோதனைகள் மூலம் கிடைத்த வெற்றியைத் தமிழ் கூறும் நல்லுலகத்துடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சந்திப்பு: கணேஷ் பாபு தொகுப்பு: சிவா சேஷப்பன், லதா ஸ்ரீனிவாசன் |