''தமிழின் புது இலக்கிய சகாப்தத்தில் கு.ப.ரா வின் ஸ்தானத்தைப் பற்றி எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை. அவர் இடம் முன்னணியில்.'' இவ்வாறு கு.ப.ரா. பற்றி ந. பிச்சமூர்த்தி சொல்கிறார்... பிச்சமூர்த்தியின் இந்தக் கூற்று மிகைப்படுத்தப்பட்டது அல்ல.
தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் புதுமைப் பித்தனுக்கு அடுத்த முக்கிய இடத்தைப் பெறத் தக்கவராகவே கு.ப.ரா. கணிக்கப்பட்டார். அவரது படைப்பாளுமை வாழ்வியல் அனுபவ தெறிப்பின், ஆண்-பெண் உறவின் மையச் சரமாகவே இருந்தது.
கு.ப.ராஜகோபால் என்ற கு.ப.ரா 1902 ஜனவரியில் பிறந்தார். இவரது தந்தை பட்டா பிராமய்யர் தென்னிந்திய ரயில்வேயில் தொழில் பார்த்து வந்தார். திருச்சி கொண்டையம் பேட்டை யில் கடைசியாக வேலைபார்த்த போது தந்தை யார் இறந்தார். அப்போது கு.ப.ரா. திருச்சி நேஷனல் காலேஜில் இண்டர் மெடியட் படித்துக் கொண்டிருந்தார். தந்தை இறப்புக்கு பின்னர் பிஏ படிக்க கும்பகோணம் வந்தார்.
கும்பகோணத்தில் சொந்தமான வீடு இருந்தது. இங்கு வசிக்கத் தொடங்கினார். இவரது வீட்டுக்கு அருகில் ந.பிச்சமூர்த்தியினுடைய வீடு இருந்தது. கல்லூரியிலும் வாழ்விலும் இலக்கிய ரசனையிலும் 20 ஆண்டுகாலம் இணை பிரியா தவர்களாய் கும்பகோணம் இரட்டையர்கள் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தனர்.
கல்லூரி படிப்பின் போதே கு.ப.ரா இலக்கியத் தில் ஈடுபாடு கொண்டார். ஆங்கிலம், சமஸ் கிருதம், வங்காளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி களில் தேர்ச்சி பெற்று இலக்கியச் செல்வங்களை நேரடியாகப் படித்து அனுபவித்தார். கும்பகோணம் கல்லூரியில் படித்த போது அங்கே ஷேக்ஸ்பியர் சங்கம்' என்ற அமைப்பு இருந்தது. அதில் ந.பிச்சமூர்த்தியும் கு.ப.ரா வும் முக்கியமான பங்குவகித்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர், தாலூகா அலுவலகத் தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். பிறகு ரெவென்யூ இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். ஆனால் அப்போது குபராவுக்கு திடீ ரென்று கண்பார்வை போய்விட்டது. இதனால் வேலையிலிருந்து விலகவேண்டி ஏற்பட்டது.
ஆனாலும் இலக்கிய ஆர்வமும் படைப்பு மன நிலையும் குபராவை சூழ்ந்து கொண்டிருந்தது. அவர் கதை கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார். குபரா சொல்ல அவரது சகோதரி கு.ப. சேது அம்மாள் எழுதுவார். ந.பிச்சமூர்த்தியுடன் இணைந்து பாரதி சங்கம் எனும் அமைப்பை கும்பகோணத்தில் உருவாக்கி தீவிரமாகவும் செயற்பட்டு வந்தார்.
மணிக்கொடி, சுதந்திரச் சங்கு உள்ளிட்ட பல் வேறு இதழ்களிலும் கு.பராவின் படைப்புகள் வெளிவரத் தொடங்கின. கிராம ஊழியன் இதழின் ஆசிரியராகவும் பணி புரியத் தொடங்கினார். எழுத்தை நம்பி வாழ்க்கை நடத்துவது என்னும் நம்பிக்கையில் வாழ்ந்தவர் கு.ப.ரா.
சிறுகதை வரலாற்றில் கு.ப.ரா முக்கியமானவராக விளங்குமளவிற்கு கு.ப.ராவின் படைப்புக்கள் தனிக்கவனம் பெறத் தொடங்கின. அவர் கையாண்ட பொருளும் கதை சொல்லலும் பல எழுத்தாளர் களிடமிருந்து தனித்து விலக்கி வைத்துப் பார்க்க வைத்தது.
''என் கதைப் புத்தகத்தை விமரிசனம் செய்த யாரோ ஒருவர், நான் உடைந்த மனோரதங்கள், நிறை வேறாத ஆசைகள், தீய்ந்த காதல்கள் - இவற்றைப் பற்றித்தான் எழுதுகிறேன். என்று எழுதிய ஞாபகம். இது குற்றச்சாட்டானால் நான் குற்றவாளிதான். நான் கவனித்தவரையிலும் என் அனுபவத்திலும் வாழ்க்கையிலும் அவை தாம் எங்கே திரும்பினாலும் கண்ணில்படுகின்றன'' இவ்வாறு கு.ப.ரா குறிப் பிடுவார்.
நாம் அன்றாடம் காணக்கூடிய உணர்ச்சிப் பிரவாகங்களின் மனநிலைகளை தனது எழுத்தில் மிகக் கூர்மையுடன் வெளிப்படுத்துவார் கு.ப.ரா. வாழ்க்கையினடியாகத் தோன்றும் அனுபவமும் உணர்ச்சிகளும் இலக்கிய உந்துதலாக வடிக்கப்படும் திறனை குபரா இயல்பாக்கிக் கொண்டார். அவரது மொழிநடை அவர் எடுத்துக்கொண்ட களத்தை கச்சிதமாக எடுத்துக் காடடியது. மேலும் கவிதையின் சாயலும், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் இருக்கும் ஏற்ற இறக்கம் அழுத்தம் யாவும் குபராவிடம் இயல்பாகவே கைகூடி வந்தது. இதுவே அவரது பலமாகவும் இருந்தது.
வாழ்க்கையின் உண்மைகளை சிறுகதை அப்படியே துணிவுடன் எடுத்துக்காட்ட வேண்டும் என்னும் கொள்கை உடையவர் கு.ப.ரா. ''கலைஞர் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் கொள்கைகளும் குறிக்கோள்களும் உண்டு. ஆகையால் அந்தக் கொள்கைகளும் குறிகோள்களும் எவ்வாறேனும் அவர்களின் கலைப்படைப்பில் இடம்பெற்று விடும்'' என்பதை தன்னளவில் புரிந்து கொண்டவர் கு.ப.ரா.
இதனை மெய்ப்பிக்கும் வகையில்தான் அவரது கதைக்களம், கதைமாந்தர், கதை பின்னப்படும் பாங்கு யாவும் அமைந்திருந்தது.
மனிதவாழ்க்கையில் ஆண்-பெண் உறவை இவ் வளவு சிறப்பாக, நுண்ணியதாக வெளிப்படுத்திய எழுத்தாளர் கு.ப.ராவாகத்தான் இருக்க முடியும். மனித உணர்ச்சிகள், மனவேதனைகளை மனித நேயத்தை ஆழ்ந்து உள்நோக்கி அதன் பல்வேறு பரிமாணங்களை இனங்காட்டும் வகையில் கு.ப.ராவின் எழுத்தாளுமை அமைந்திருந்தது.
சிறுகதையின் சோதனை முயற்சிகள் அவருக் கான முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்து கிறது. சிறுகதையில் உருவப்பரிசோதன செய்ய வும் குபரா பிரக்ஞையுடன் ஈடுபட்டு வந்தார். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். அதாவது தனது கதைக்களம் எத்தகைய உருவமைதி பெற வேண்டும் என்ற மீறலில் அறிவுப்பூர்வமாகவே ஈடுபட்டு வந்தார். எவ்வளவு குரூரமான மோசமான வாழ்க்கையையும் ஒரு அடங்கிய குரலிலேயே சித்தரிக்கும் நடையை கையாளக்கூடிய திறன் குபராவுக்கு வாய்க்கப் பெற்றிருந்தது.
நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். ஆனாலும் இலக்கியப் பரப்பில் குபராவின் இலக்கிய நோக்கு எழுத்து நடை அவருக்கான தகுதிப்பாட்டை தனித்துக் காட்டியது. 1944 ஏப்ரல் 27ம் தேதி குபரா மறைந்தாலும் அவர்விட்டுச் சென்றுள்ள இலக்கியத் தடம் ஆழமானது. நவீன தமிழிலக்கியப் போக்கின் வளர்ச்சிக்கு புதுவளம் சேர்த்தது.
1934 முதல் 1944வரை பத்தாண்டுகளில் குபரா தமிழுக்கு விட்டுச் சென்ற இலக்கியச் செல்வங்கள் தான் குபராவின் இலக்கியச் சாதனைக்கு அடித்தளமாகி உள்ளன.
கு.ப.ரா படைப்புகள்
சிறுகதை தொகுப்பு- புனர்ஜென்மம்
- கனகாம்பரம்
- காணமலே காதல்
- சிறிது வெளிச்சம்
நாடகம்- அகலியை
- வாழ்க்கை வரலாறு
- ஸ்ரீ அரவிந்த யோகி
- சிந்தனை
- எதிர்கால உலகம்
- ஆறு அறிஞர்களின் லட்சியம்
மொழிபெயர்ப்பு- இரட்டை மனிதன்
- தேவி செளது ராணி
- துர்க்கேசநந்தினி
- டால்ஸ்டாய் கதைகள்
திறனாய்வு
தெ.மதுசூதனன் |