இந்திய தொழில்நுட்பக் கழகங்களின் (ஐஐடி) பொன் விழா
அண்மையில் சிபிஎஸ் நிறுவனத்தின் "அறுபது நிமிடங்கள்" நிகழ்ச்சி அமெரிக்கர்கள் கேள்விப் பட்டிராத முக்கியமான பல்கலைக்கழகம் என்று ஐஐடி தொழில் நுட்பக் கழகங்களின் சாதனையை விவரித்தது. ஹார்வர்ட், எம்.ஐ.டி., பிரின்ஸ்டன் என்ற தலைசிறந்த அமெரிக்கப் பல்கலைக்கழகங்களோடு ஒப்பிட்டுப் பின், ஐஐடியில் இடம் கிடைப்பது ஐவி லீக் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைப்பதை விடக் கடினமானது என்று கருத்து தெரிவித்தது. அப்படிப் பட்ட ஐஐடி தொழில் நுட்பக் கழகங்கள் இந்த மாதம் பொன் விழா கொண்டாடுகின்றன.

ஜனவரி 17, வெள்ளி மாலை கூப்பெர்ட்டினோ டி ஆன்சா கல்லு¡ரி வளாகம் ஒரு ஐஐடி வளாகம் போல காட்சி தந்தது. ஆறு மணியளவில் ·பிலின்ட் கலையரங்கு நிறைந்து வழிந்தது பில் கேட்சின் வரவை எதிர்நோக்கி. முதல் ஐஐடியான கரக்பூர் ஐஐடியின் ஐம்பதாவது பிறந்த நாள் விழா அனைத்து ஐஐடி பொன் விழாவாக உலக மகா செல்வர் பில் கேட்சின் சொற்பொழிவுடன் தொடங்கியது.

கனியென்றால் மூன்று, சுரமென்றால் ஏழு என்பது போல் ஐஐடி என்றால் ஐந்து என்றுதான் பரவலாக மக்கள் எண்ணி வந்திருக்கிறார்கள். பல ஆண்டுகளாக ஐந்தாக இருந்த ஐஐடிகள் தற்போது ஏழாகியுள்ளன. இவற்றில் அனைவருக்கும் அண்ணன் கரக்பூர் ஐஐடி 1952இல் தொடங்கியது.

கடந்த முப்பது ஆண்டுகளாக, ஐஐடி என்றால் அமெரிக்கா செல்ல விசா என்ற நிலை நிலவி வந்ததால் முன்னாள் மாணவர் சங்கங்கள் பிறந்த நாட்டை விட புகுந்த நாட்டில் விறுவிறுப்பாக செயல்பட்டு வந்தன. அண்மையில் அனைத்து ஐஐடி முன்னாள் மாணவர் சங்கம் பிறந்தது. பொன் விழாக் கொண்டாட்டம் இச்சங்கத்தின் ஏற்பாடு. சங்க உறுப்பினர் பலர் தொழில்நுட்பத்துறையில் பெயர் பெற்றவர்கள். வினோத் கோஸ்லா, தேஷ் தேஷ்பாண்டே, நாராயணமூர்த்தி, ரஜத் குப்தா, விக்டர் மெனஸெஸ், அருண் சரண் என எண்ணிக்கொண்டே போகலாம்.

பொன்விழாக் கொண்டாட்டத்தை ஒட்டி, சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனர்களுள் ஒருவரான வினோத் கோஸ்லா, தான் படித்த டெல்லி ஐ.ஐ.டி.க்கு 5 மில்லியன் டாலர் நிதி வழங்கினார். டெல்லி ஐஐடியில் தகவல் தொழில் நுட்ப நிலையம் ஒன்றை நிறுவ இந்த நிதி பயன்படும். ஐஐடி டெல்லிக்கு அளிக்கப் பட்ட தனியார் கொடைகளில் இது முதன்மை வகிக்கிறது. திரு. கோஸ்லாவின் தலைமையைப் பின்பற்றி ஏனைய ஐஐடி முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த நிலையங்களுக்கு நிதி வழங்குவார்கள் என்பதில் ஐயம் இல்லை என்றார் முன்னாள் டெல்லி ஐஐடி மாணவரும், மெக்கின்சி நிறுவனத்தின் இயக்குநருமான ரஜத் குப்தா.

பில் கேட்சின் பேச்சு முடிந்ததும் இரவு உணவு. வந்திருந்ததோ இரண்டாயிரத்தும் மேல். அவைருக்கும் ஒன்றரை மணிக்கூற்றில் பந்தி நடத்தி முடித்ததே ஒரு சாதனை. அதைத்தொடர்ந்தது பிரசன்னா குழுவினரின் இசை நிகழ்ச்சி.

மறுநாள் சனிக்கிழமை முழுநாளும் கொண்டாட்டம் தொடர்ந்தது சான் ஹோசே §·பர்மான்ட் ஓட்டலில். கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள், பொது அறிவுப்போட்டிகள், ஐஐடிகள் பற்றிய கண்காட்சி என நாள் முழுவதும் இடை விடாது நிகழ்ச்சிகள். அமெரிக்காவின் இந்திய து¡தர் பிலாக்வில் அன்றைய முக்கிய சொற்பொழிவாளர்.

ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் வரலாறு காணாத அளவில் ஒன்று திரண்டு இந்த விழாவைச் சிறப்பாக நடத்தினர். இந்தச் சங்கம் தொடர்ந்து ஐஐடிகளின் வளர்ச்சிக்கும், தங்கள் சக மாணவர்களின் வெற்றிக்கும் ஆணி வேராக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் திரு. மோனிஷி சன்யால்.

இந்த நிகழ்ச்சி மூலம், புதிய ஆராய்ச்சிகள், புதிய நிறுவனங்கள், புதிய வேலைவாய்ப்புகள் இவற்றிற்கு அடிகோலுவது மட்டுமல்லாமல், இந்தியச் சமூகத்துக்கு ஐஐடி மாணவர்கள் நன்றிக்கடன் தீர்க்கவும் ஆவன செய்ய இயலும் என்றார் திரு முரளி சுப்பாராவ்

ஐஐடிகளின் சாதனைகள், முன்னாள் மாணவரின் சாதனைகள் எல்லாம் உளம் குளிர வைத்தாலும் பல வாடிய முகங்களும் தென்பட்டன. பொருளாதார நிலை குலைவால் வேலையிழப்பு, வேலை நிலையின்மை என்ற சிக்கல்கள் ஐஐடியில் படித்தவர்களையும் விட்டு வைப்பதில்லையே?

செய்தி - பேரா. பொன்னருள், ஐஐடி50 அமைப்பாளர்கள்.

© TamilOnline.com