சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் சமூக சேவை
அதிகாலை சுமார் 4:00 மணிக்கு மண்டையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல இருக்க எழுந்தேன். கடியாரம் தான் என்னை எழுப்பியிருக்கிறது. டிசம்பர் மாதக் குளிரில் போர்வையை விட்டு விலக மனமில்லாமல் எழுந்தேன். அன்று சனிக்கிழமை, டிசம்பர் ஏழாம் தேதி. தமிழ் மன்றம், சன்னிவேலில் உள்ள ஆர்மரியில் காலை ஐந்து மணி அளவில் வீடற்றோருக்குச் சிற்றுண்டி வினியோகம் செய்ய ஒப்புக்கொண்டிருந்த நாள். குளித்துவிட்டு சூடாகத் தேநீர் அருந்திவிட்டு, நானும் என் வீட்டுக்காரரும் புறப்பட்டோம்.

ஆர்மரியில் சுமார் 50 - 60 பேர் காணப்பட்டனர். சிலர் வயோதிகர்கள், சிலர் கையில் தங்களின் ஒரே சொத்தாகிய ஒரு பையை வைத்திருந்தனர். சிலர் வாலிப வயதினர், சிலர் பெண்கள். இக்குளிரில் அவர்கள் நிலையைப் பார்க்கப் மிகவும் பரிதாபமாய் இருந்தது. சிலர் ஏதோ சிற்றுண்டியும் காப்பியும் அருந்திக்கொண்டிருந்தனர். விசாரித்ததில் முதல் நாள் இரவு உணவிலிருந்து மீந்து போன உணவு என்று தெரிந்தது. மன்றம் டோனட்ஸ், ம·பின்ஸ், க்ரொஸாண்ட்ஸ், சோளப்பொரி (சீரியல்), பால் ஆகியவற்றை வினியோகம் செய்ய, மிகவும் சந்தோஷத்துடன் பலர் பெற்றுக்கொண்டனர். ‘ஆகா இது கிடைக்கும் என்று தெரிந்திருந்தால், நேற்றைய பழையதை நான் சாப்பிடாமல் இருந்திருப்பேனே’ என்றார் ஒருவர். ‘நாங்கள் அன்றாடம் இரவு 7 மணிக்கு வருவோம். காலை ஆறு மணி வரை குளிருக்கு ஒதுங்க இந்த இடம் உதவுகிறது. இந்த இடம் யாருக்கும் நிரந்தரம் இல்லை. இடமிருந்தால் தங்கிக்கொள்ளலாம்.’ என்றார் அவர்.

ஒவ்வொரு வருடமும் தேங்க்ஸ் கிவிங்கைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை அன்று வீடற்றோருக்கு ஒதுங்குவதற்காக இவ்விடம் திறக்கப்படுகிறது. மார்ச் மாதம் வரையில் திறந்திருக்குமாம். இரவு நேரம் மட்டுமே வீடற்றோர் இங்கு தங்கலாம். இங்கு இவர்களுக்கு இரவு உணவு வழங்கப்படுகிறது. படுத்துக்கொள்ள ஒரு ரெக்ஸின் மாட்ரஸ் தரப்படுகிறது. காலை சரியாக ஆறு மணிக்குக் கிளம்பி விட வேண்டும். இளைஞர்கள் பலர் காலை 4 மணிக்கே கிளம்பி கூலி மற்றும் இதர வேலைக்குக் கிளம்பிச் சென்று விடுவராம். சில நாட்களில் 100 முதல் 150 பேர் தங்குவராம். "வேலைசெய்யும் சிலர் வெள்ளிக் கிழமை கூலிகிடைத்ததும் ஓட்டலில் அறை எடுத்து தங்குவர். ஆதலால் வார இறுதியில் இங்குத் தங்குவோரின் எண்ணிக்கை 80-90க்கு குறைந்து விடும்", என்கிறார் இங்கு பணி புரியும் கெல்ஸி ·ப்லெமிங்க் என்பவர். "இதுவரை நாங்கள் இங்கு சிற்றுண்டி விநியோகம் செய்ததில்லை. ஆதலால் அனேகருக்கு இவ்வளவு காலையில் உண்டு பழக்கமில்லை. சிலர் இது பற்றி தெரியாமல் முன்னதாகவேச் சென்று விட்டனர். அடுத்த முறை நாங்கள் முன்கூட்டியே அவர்களுக்குச் சொல்லி விடுகிறோம்", என்றார் அவர்.

சிற்றுண்டி அருந்திய வயிறுகள் தமிழ் மன்றத்திற்கு மனமார்ந்த நன்றியை கரகோஷமிட்டு தெரிவிக்க ஒருவர் எங்களருகில் வந்து ‘மீண்டும் வாருங்கள்’ என்றது மனதிற்கு சந்தோஷத்தையும் வேதனை யையும் ஒருங்கிணைத்து தந்தது. சுமார் 6:00 மணிக்குள் வினியோக வேலையை முடித்துவிட்டு காருக்கு வரும்போதும் குளிரும் காற்றும் மழையும் வீடற்ற இவர்கள் இனி இங்குத்தங்க இயலாது என்பதை சிறிதும் பொருட்படுத்தாமல் குளிர் காலத்தில் தங்களுக்குத் தரப்பட்ட பணியைச் செவ்வெனே செய்துக் கொண்டிருந்தன. அவ்விடத்திலிருந்து காருக்கு வருவதற்குள் உடம்பெல்லாம் குளிரில் நடுக்கமுற, இவ்வீடற் றோரின் நிலையை எண்ணி நெஞ்சு கனத்தது.

பி.கு: கெல்ஸி ·ப்லெமிங்கை அணுகி இவ்வீடற்றோருக்கு உதவ முன்வருவோர், இவரை 408-739-6980 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வித்யா நாராயணன்

© TamilOnline.com