நாஞ்சில் நாடன்
நவீன தமிழ் இலக்கியத்துக்கு தனி தன்மைகளுடன் கூடிய கலைச் செழுமை கொண்ட கலைஞர்கள் ஒவ்வொருவரும் வளம் சேர்த்து வருகின்றார்கள். இலக்கியத்தின் 'பிரக்ஞை" 'படைப்பாக்கம்" பல நிலைகளில் பல தளங்களில் மேலும் மேலும் பல் பரிமாணம் பெற்று வளர்கிறது. இந்த மரபிற்கு வளம் சேர்ப்பவர் தான் நாஞ்சில் நாடன்.

சுப்பிரமணியன் எனும் இயற்பெயரைக் கொண்ட நாஞ்சில் நாடன் 1947 இல் பிறந்தவர். சில காலம் தொழில் நிமித்தமாக பம்பாயில் வாழ்ந்தார். தற்போது கோயம் புத்தூரில் வசித்து வருகிறார். நாவல், சிறுகதை போன்றவற்றில் தனது முழுக்கவனத்தையும் குவித்திருப்பவர். தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை வெயில் காயும், மாமிசப் படைப்பு, மிதவை, சதுரங்கக் குதிரை, எட்டுத்திக்கும் மதயானை என்பவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்கள். தெய்வங்கள்-ஒநாய்கள்-ஆடுகள் என்ற தலைப்பிலும் வாக்குப் பொறுக்கிகள், உப்பு என்ற தலைப்பிலும் சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

1977 ஆம் ஆண்டில் தலைகீழ் விகிதங்கள் எனும் முதல் நாவல் வெளிவந்தது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தைக் களமாகக் கொண்டு அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறைகள், பொருளாதாரம், குடும்ப உறவுகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளை இந்நாவல் பரிசீலனைக்குட்படுத்துகிறது. மாறி வரும் சமூக மதிப்பீடுகள் முன் மனிதாயம், உறவுகள் எவ்வாறான சுழற்சியில் இருக்கும் என்பதனை நுட்பமாகவும் அழகாகவும் எடுத்துரைக்கும் பாங்கு பலமாக நாஞ்சில் நாடனிடம் உள்ளது. இக்கதையே 'சொல்ல மறந்த கதை" எனும் திரைப்படமாக வெளிவந்தது.

"நாஞ்சில்நாடனின் கதாபாத்திரங்கள் மரபு, பண்பாடு குடும்பம் சார்ந்த பழம் பெருமைகளுக்கு ஆளான உயர் சாதி விவசாயிகள், காலத்தின் புதிய கோலங்களில் மருண்டு தாங்கள் பிடிக்கும் ஏருக்கு அடியில் நிர்த்தாட்சண்யமாக நழுவி ஓடும் பூமியைக் கண்டு இவர்கள் சங்கடப்படுகிறார்கள். இவர்களுடைய சங்கடத்தைச் சொற்சிக்கன மின்றிப் பதிவு செய்கிறார்" நாஞ்சில்நாடன் என்று சுந்தரராமசாமி குறிப்பிடுவது கூட நாஞ்சில் நாடனின் சிறுகதைகள் எத்தகைய தரிசனத்தை முன்வைக்கின்றது என்பதற்கான ஓரு வாசகப் பார்வையாக எடுத்துக் கொள்ளலாம். நாம் அவ்வாறு புரிந்து கொள்ளும் பொழுதுதான் அவரவர் தமக்கான வாசிப்பு அனுபவத்தை முழுமையாக எட்டமுடியும்.

தமிழ்ச் சிறுகதைகளின் குவியலிலிருந்து சிறந்த சிறுகதைகளைத் தேர்வு செய்வதற்காக நாம் கடும் பயிற்சியில் ஈடுபட வேண்டும். அப்பொழுது தான் இலக்கியம் சார்ந்த கலைத்துவத்தின் நுட்பங்களை அனுபவித்து புரிந்து கொள்ளமுடியும். நாஞ்சில்நாடனின் படைப்புலகம் அத்தகைய பின்புலத்தை இறுக்கமாகவே கொண்டிருக்கிடிறது. நாவல், சிறுகதை எதுவாக இருந்தாலும் அவர் வாசகர் நிலையில் தோற்றுவிக்கும் உணர்வுகள் அனுபவங்கள் மற்றும் வாழ்வியல் மீதான பரிசீலணைகள் நமக்கான மதிப்பீடுகள் யாவை என்பது பற்றிய கருத்தாக்கத் தெளிவு நோக்கி முன் நகர்த்தும் தன்மைகள் கொண்டவை. இவை வெறும் கருத்தாடல் சார்ந்த எத்திரத்தனமான பகிர்வு அல்ல. பல்வேறு உணர்வுகளில் விரியும் அனுபவத் திரள்களின் சேகரமாகவும் மோதுகையாகவும் உள்ளன. மண் சார்ந்தமனிதர்கள், மண் சார்ந்த உறவுகள் தான் நமக்கானது என்னும் பிடிமானம் தான், படைப்பு வெளிப்படுத்தும் பகிர்வு. புரிதல்.

விவசாயக் கலாசாரத்தில் ஊறிப் போயிருக்கும் மனிதன் தான் நாஞ்சில்நாடன். இதனால் இயற்கை மனிதர் சமூகம் பற்றிய நாஞ்சில்நாடன் பார்வையானது விவசாயக் கலாசாரத்தின் உள்ளீடுகளின் அடிநாத மாகவே இழையோடுகிறது. இதுவே இவரது படைப்பியல் கூறுகள் ஆகின்றது. படைப் பாளுமையின் திசைப்படுத்தலையும் தீர்மானிக்கின்றது.

கிராமம் சார்ந்த வாழ்வியல் அதன் மதிப்பீடுகள் மொழியின் பிரயோகத்தில் நேரடிப் பேச்சாக விரிகிறது. தனது அனுபவங்களை எடுத்துரைக்கும் மொழிதல் வெகு இயல்பாக கிராம மக்களின் உயிர்ப்பாக மையம் கொள்கின்றது. நாஞ்சில்நாடனின் நாவல், சிறுகதை உள்ளிட்ட படைப்புக் களுடன் உறவுகளை ஆழப்படுத்தும் பொழுது வாசக அனுபவம் மொழி சார்ந்த விடயங் களின் நுட்பங்களை தன்வயமாக்கும் திசை களில் பயணமாகும்.

கிராமங்களில் பிறந்து வளர்ந்து படித்து அதன் பண்புகளோடு பெரிய நகரங்களுக்குச் சென்று வேலை நிமித்தம் வாழும் இளைஞர் களின் தவிப்பை, கலாசார மோதலை, வேறுபாட்டை, எதிர் கொள்ளும் விதத்தை எல்லோருக்கும் உரிய விதமாக அனுபவத்தை முழுமைப்படுத்தும் தொற்றவைக்கும் எழுத்து-நடை இவரிடம் இயல்பாக உள்ளது. 'இழந்து போனவற்றை நினைவில் மீண்டும் படைப்பது, படைத்தவற்றை பகிர்ந்து தக்கவைத்துக் கொள்வது, இவை இழந்த வாழ்கையை மீட்டெடுப்பதுதான்" என்று சுரா கூறுவதில் முழு நியாயம் உள்ளது. இந்த நியாயத்தின் சாளரங்களில் நமக்கான உயிர்பெறும் வாழ்வை கண்டடையவும் நாஞ்சில் நாடன் வழிகாட்டுகின்றார்.

நாஞ்சில் நாடன் போன்ற படைப்பாளிகள் நமக்கு எடுத்துக்காட்டும் உலகம் நிஜமானது. ஆனால் நாம் அந்த நிஜங்களை எதிர் கொள்ளத் தயங்குகின்றோம். இதனை எச்சரித்து நமது உலகம் எங்கே? என்று எம்மைக் கைபிடித்துக் கூட்டிச் செல்லும் அன்பான செயல்தான் நாஞ்சில் நாடனின் படைப்புகள்.

தெ.மதுசூதனன்

© TamilOnline.com