தமிழ் மன்றம் தமிழ் மக்கள் கேளிக்கைக்காக மட்டும் விரும்பிக் கூடும் ஒரு இடமாக இல்லாமல், தமிழர்களின் கலை, பண்பாடு, இலக்கியம், பொதுத்தொண்டு ஆகிய எல்லாத் துறைகளிலும் பங்குவகிக்க வேண்டும் என்று விரும்புகிறது. இதன் காரணமாக, விரிகுடாப் பகுதியில் தமிழர்களுக்கு தொண்டு செய்யும் பிற அமைப்புக்களுடன் சேர்ந்து நிகழ்ச்சிகள் வழங்க முற்பட்டுள்ளது. அந்த முயற்சியின் முதற்படியாக, தமிழ் மன்றம் பாரதி கலாலயாவுடன் இணைந்து பாரதி விழாவினை நடத்தியது.
தமிழ் மன்றம் ஆண்டு தோறும் நடத்தும் பொங்கல் விழா இந்த ஆண்டு பாரதி விழாவுடன் இணைந்தது. நிகழ்ச்சி தமிழ்த் தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. பெர்க்கலி பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரி யராகப் பணிபுரியும் திரு. ஜார்ஜ் ஹார்ட் அவர்கள், பாரதியைப் பற்றி உரை நிகழ்த்தினார்கள். பாரதி தன் காலத்திற்கேற்பத் தமிழ் மொழியை எப்படிப் புதுப்பித்தான், அவன் சாதனை எப்படிப் பட்டது என்பதைப் பற்றி அவர் உரை அமைந் திருந்தது.
ராகவன் மணியன் குழுவினரின் இசை நிகழ்ச்சி செவிக்கும், கருத்திற்கும் விருந்தாக அமைந்ததது. பாரதி தமிழையும், இசையையும் இரு கண்களாகப் பார்த்தவன். ராகவன் அவர்கள், பாரதிக்கு இசையில் இருந்த ஈடுபாடு பற்றி சில வார்த்தைகள் பேசிவிட்டு, பாரதியின் குயில் பாட்டை எடுத்து அவர் அமைத்த இசை வடிவத்திலேயே வழங்கினார்கள்.
வித்யா பதானி அவர்களும் (கண்ணன் மன நிலையை), அனுராதா சுரேஷ் (சின்னஞ்சிறு கிளியே) அவர்களும் இசை நிகழ்ச்சிகள் வழங்கினார்கள். பாரதி கலாலயா மாணவ, மாணவிகளும், மற்றும் ரமா தியாகராசன் அவர்களின் மாணவ, மாணவியரும், ப்ரீதி மகேஷ் அவர்களின் குழுவும் இசை நிகழ்ச்சிகள் வழங்கினார்கள்.
நிருபமா வைத்தியநாதன் அவர்களின் மாணவி களும், மீனா லோகன் அவர்களின் மாணவிகளும் பாரதியின் பாடல்களுக்கு நடனம் செய்தார்கள். ‘வில்லினை ஒத்த புருவம்’, ‘சங்கே முழங்கு’ என்று வித விதமான உணர்ச்சி வெளிப்பாடுகள் உள்ள பாடல்களைத் தேர்ந்து எடுத்திருந்ததால், நடனங்கள் விறுவிறுப்பாகவும், மக்களைக் கவரும் வகையிலும் அமைந்திருந்தன. ஆடவிருக்கும் பாடல்களைப் பற்றி சில விளக்கங்களைத் தந்து மாணவிகள் நிகழ்ச்சிக்குச் சுவை கூட்டினார்கள். பல இசை நிகழ்ச்சிகளுக்கு நடுவில் நடன நிகழ்ச்சிகள் அமைந்தது கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருந்தது.
பாடல்கள் எதுவும் மறுமுறை ஒலிக்காமல் அனைவரும் வெவ்வேறு கவிதைகளைத் தேர்ந்து எடுத்திருந்தது ஒரு சிறப்பாகும்.
திரு. மணிவண்ணன் குழுவினர் வழங்கிய "அக்னிக்குஞ்சு" நாடகம் நிகழ்ச்சியின் திலகமாய் விளங்கியது. எப்பொழுதும் தயாரிப்பாளராக மட்டும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் மணிவண்ணன் இம்முறை நாடக ஆசிரியராகவும் பணியாற்றி யிருக்கிறார். பாரதியைப் பற்றி யார் எழுத முற்பட்டாலும் அது யானையைப் பார்க்கச் சென்ற குருடர்கள் கதையினைப் போல் மாறிவிடும் அபாயம் இருக்கிறது. பாரதியார் ஒரே சமயத்தில் தேச விடுதலைப் போராட்ட வீரராகவும், கவிஞராகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், பத்திரிக்கை ஆசிரியராகவும், இசைக் கலைஞராகவும், ஆன்மீக வாதியாகவும், புராண தத்துவ நிபுணராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், அரசியல் வாதியாகவும், தீர்க்க தரிசியாகவும் இருந்திருக்கிறார். ஒவ்வொரு துறையிலும் அவருடைய சாதனைகளை உணர அந்தந்தத் துறை வல்லுனர்களால் மட்டுமே முடியும்.
மணிவண்ணன் அவர்கள் இந்தச் சிக்கலை முழுவதும் உணர்ந்தவராக பாரதியின் பல்வேறு சாதனைகளையும் அவருடன் இருந்து, ஆதரித்துத் தோள் கொடுத்த பல்வேறு துறையைச் சேர்ந்த செம்மல்களின் வாயிலாக வெளிக் கொண்டு வந்திருக்கிறார். ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா ‘பாரதியை நேரில் பார்க்க முடியவில்லையே’ என்று ஏங்கி இருந்தவர்களின் ஏக்கங்களைத் தீர்த்து வைத்தார். வசனங்கள் ‘நறுக்’ கென்று இருந்தன. எல்லோரும் தனக்குத் தெரிந்த தமிழில் பேசிக் கொண்டு இருக்காமல், பாத்திரங்களுக்கு தகுந்த மொழியில் வசனங்களைக் கற்றுக் கொடுத்துப் பேச வைத்தது, தயாரிப்பின் சிறப்பு. நடிகர்களுக்குப் பாத்திரப் பொருத்தங்கள் நன்றாக அமைந்திருந்தன. விழாமலரின் அட்டையில் உண்மையான பாரதியின் குடும்பப் படம் என்று நினைத்திருந்தவர்கள் கவனத்திற்கு... அது நாடக நடிகர்கள் கொடுத்த விளம்பரம்!!. வசந்தி விஸ்வநாதன் செல்லம்மாளாக, கணபதிராமன் குவளைக் கண்ணனாக, ராம்கி ராமகிருஷ்ணன் கிருஷ்ணசாமி ஐயராக, M. S. கிருஷ்ணன் சுதேசமித்திரன் சுப்பிரமணிய ஐயராக, பாலாஜி ஸ்ரீனிவாசன் இந்தியா திருமலாச்சாரியாக, லலிதா நாதன் சிஸ்டர் நிவேதிதாவாக முக்கிய வேடங்களில் பங்கேற்று நடித்தார்கள். நடிகர்கள் நடித்தார்கள் என்று கூறுவதைக் காட்டிலும் அவர்கள் ஒவ்வொருவரும் அந்தப் பாத்திரத்தில் வாழ்ந்து காட்டினார்கள் என்பது தகும்.
திரு. மணியன் ராகவனின் இசைக்குழு பாரதியின் பாடல்களைப் பின்னணியாகப் பாடி நாடகத்திற்கு களையேற்றியது.
நேற்று, இன்று, நாளை என்பது போல், பாரதியின் நாட்களைப் பற்றி நாடகம் இருந்தாலும் காட்சிகளின் நடுநடுவே ‘மோஸ்ட்லி தமிழ்" சுதா அவர்கள் வானொலியில் இன்றைய அறிவிப்புக்கள் செய்து நாடகத்தில் புதிய உத்தியை வெளிப்படுத்தினார்.
பாரதியின் கற்பனைப் பாத்திரமான வேதவல்லியை நாடகத்தின் ஒரு பாத்திரமாகக் காட்டி, பாரதியின் புதுமைப் பெண்ணைக் கண்ணெதிரில் கொண்டு வந்தார் மணிவண்ணன். கெளரி சேஷாத்திரி அவர்கள் சூடு பறக்க வசனம் பேசி பலத்த கரகோஷத்தை தட்டிச் சென்றார். சிறுமி கீர்த்தனா ஸ்ரீகாந்தும் நுழைந்த மாத்திரத்திலேயே மக்களின் மனதைக் கவர்ந்து விட்டார் என்றால் மிகையில்லை.
காட்சிகளின் பின்னணியை மணிவண்ணன் முன்னுரையாகக் கூறினார்.
மேடை நிர்வாகம் செய்த ஆஷா மணிவண்ணன் அவர்களைப் பற்றி எழுதியே தீர வேண்டும். இந்தியாப் பத்திரிக்கை விளம்பர அட்டையை அவர்கள் எந்த சரித்திரக் கண்காட்சியிலிருந்து கழற்றி வந்தார் களோ எனக்குத் தெரியவில்லை. கல்கத்தாவும், பாண்டிச்சேரியும், கடையமும், திருவல்லிக்கேணியும் மேடைக்கு வர, மணிவண்ணன் அவர்கள் கொடுத்த அவகாசம் இரண்டு நிமிடம் மட்டுமே! திரை விலகும் பொழுது முற்றிலும் மாறியே இருந்தது!
அந்த அரங்கம் பற்றி ஒரு நல்ல செய்தி, அங்கே மாடிப்பகுதி குழந்தைகள் விளையாட வென்று ஒதுக்கப் பட்டதால், பெற்றோர்கள் நிம்மதியாக நிகழ்ச்சியை இரசிக்க முடிந்தது.
நிகழ்ச்சியை திரு.சிவசுப்பிரமணிய ராஜா அவர்களும், செல்வி. சிவகாமி அவர்களும் வழங்கினார்கள். திரு. மௌலி அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
பாகீரதி சேஷப்பன் |