பிப்ரவரி 2003 : வாசகர் கடிதம்
சாந்தா கிருஷ்ணமூர்த்தி எழுதி இருக்கும் சுந்தர ஹனுமான் என்கிற கட்டுரையை படித்த உடன் என்னையும் அறியாமல் உணர்ச்சி ததும்ப கண்ணீர் வந்துவிட்டது. அந்த பெண்மணி நீடுழி வாழ்ந்து மக்களுக்கு இந்த தென்றல் மூலம் சேவை செய்ய வேண்டிக் கொள்ளுகிறேன். நான் ஒரு ஆஞ்சநேய பக்தன். ஆஞ்சநேயருக்கு ஓர் கோவில்கட்ட பிரயத்தனம் செய்கிறேன். அதற்கு மக்களின் ஆசி மிகத் தேவை.

தவிர டாக்டர் அலர்மேலுரிஷி எழுதி வரும் ஒவ்வொரு தலைப்பும் மிகச் சிறந்ததாக அமைகிறது. மேற்கண்ட எழுத்தாளர்களின் குறிப்புடன் ஒவ்வொரு தலைப்பையும் வெளியிட வேண்டுகிறேன்.

ராஜன்
அட்லாண்டா.

******


உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். படித்து சந்தோஷமடைந்தோம். எல்லா இதழ்களையும் படித்து மகிழ்வுற்றேன். புதையலை கண்டமாதிரி உணர்வுற்றேன். உங்கள் பத்திரிகையில் எல்லா அம்சங்களும் நன்றாகவே உள்ளது. நன்றி. உங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்.

ஞானம் மகாலிங்கம்.

******


ஜனவரி 2003 தென்றல் இதழில் ரோகாந்த் அவர்கள் எழுதிய அக்கினிக்குஞ்சு சிறுகதை ஒரு அற்புதமான படைப்பு. பாரதியார் விழா நடக்கும் இந்த சமயத்தில் வெளிவந்த இந்த சிறுகதையின் ஒவ்வொரு வாக்கியமும் மிகவும் அருமை. வெந்து தணிந்தது காடு மட்டும் அல்ல; இந்த கதையை படிக்கும் ஒவ்வொருவரின் உள்ளமும் தான்.

அனுராதா,
சிகாகோ.

******


கடந்த ஒரு வருடமாக தென்றல் இதழ்களை அனுபவித்துப் படிக்கும் வாசகர்கள் பலரில் நானும் ஒருவன். இந்தியாவிலிருந்து அதுவும் கடுமையாக விமரிசிக்கும் சென்னைவாசிகளில் ஒருவனாக இருந்து, இங்கு வளைகுடாப்பகுதிக்கு குடி பெயர்ந்த பெற்றோர்கள் பலரில் நானும் அடங்கியுள்ளேன்.

தென்றலில் எனக்குப் பிடித்த பகுதி 'நிகழ்வுகள்'. நம் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த இளைய தலைமுறைகள் நம் நாட்டுக் கலாசாரத்தை வளர்த்து வருகிறார்கள் என்பதை கண்ணாடி போல் எடுத்துக் காட்டுகிறது.

அது தவிர, சிலருடைய கவிதைகளைக் கண்டு அதிசயிக்கிறேன்- தமிழ்மொழியில் இத்துணை ஆற்றல் உள்ளோர் இங்கு உளரே என்று. வாழ்க தென்றல்.

அம்பா ராகவன்,
ஸாரடோகா.

******


நவம்பர் 2002 தேதியிட்ட தென்றல் பத்திரிக்கையில் என் தந்தையாரைப் பற்றிய வாழ்க்கை சரித்திரத்தை மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் பிரசுரித்து பெருமைப்படுத்தியதற்கும் என் தந்தையாரின் புகைப்படத்தை முன் அட்டையில் வெளியிட்டதற்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மெ. சரவணன்,
சென்னை.

© TamilOnline.com