எந்த புத்தகத்திலேயோ படித்த ஒரு விஷயம் அல்லது யாரோ சொல்லி காற்று வாக்கில் காதில் விழுந்தது. ஒரு மனிதனின் குணத்தை மாற்ற முடியுமா? மாற்றிக் கொள்ள நினைப்பது ஒன்று. ஆனால் நிஜமாகவே மாறுவது என்பது வேறு பெரிய விஷயம் தானே!
அப்பா எஸ். ராமநாதனைப் பற்றி அறிந்தவர்கள் அல்லது அவருடன் பழகியவர்கள் அனைவருடைய கருத்தும் ஒரே மாதிரிதான் இருக்கும். மிகவும் சாத்வீகமானவர். கோபமே வராது. அமைதியே உருவானவர். இப்படித்தான் சொல்வார்கள். ஏன்? அவருடைய வாரிசுகள் நாங்கள் கூட அப்படிதான் அவரை அறிவோம். ஆனால் எங்களால் கூட நம்ப முடியாத விஷயம் அவர் தன்னுடைய சின்ன வயதில் படு கோபக்காரராக இருந்தாராம். முரட்டுத் தனமும், பிடிவாதமும் நிறையவே உண்டாம். இதை அவரே சொல்லியிருக்கிறார்.
தன்னுடைய ஏழாவது வயதிலேயே எங்கள் பெரியப்பாவை - அப்பாவின் மூத்த சகோதரரை திருமணம் செய்து கொண்டு அவர்கள் வீட்டிற்கு வந்த பெரியம்மாவும் இதை ஆமோதிப்பார். ''அந்த காலத்தில் உங்கள் அப்பாவுக்கு முன் கோபம் ரொம்பவே உண்டு. அவருடைய பென்சிலையோ புத்தகத்தையோ தொட்டு பார்த்தால் கூட போதும். அசாத்திய கோபம் வந்துவிடும். நான் சிறுமிதானே! ஒரு ஆர்வத்தில் அவருடைய பெட்டி, புஸ்தகங்களைத் திறந்து பார்த்து விடுவேன். எனக்கு தலையில் குட்டு கூட விழுந்திருக்கிறது'' என்று சிறு வயது நாட்களை பெரியம்மா நினைவு கூறும்போது பக்கத்தில் அப்பாவின் முகத்தில் ஒரு இளம் புன்சிரிப்பு மலரும்.
எப்படியப்பா தலைகீழாக மாறினீர்கள்? என்று ஆச்சரியமாக கேட்டோம்.
டெல் கார்னகீ எழுதிய ''ஹெள டு வின் ·பிரண்ட்ஸ் அண்ட் இன்ப்ளுயன்ஸ் பியூபிள்'' என்ற புத்தகத்தை அப்பா தன்னுடைய டீன் வயதில் படிக்க சந்தர்ப்பம் கிடைத்ததாம்.
''ஏன் என்பது எனக்கே புரியாத விஷயம். முதன் முறையாக படித்து முடித்தவுடனேயே என்னையும் அறியாமல் அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டதை கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டேன். மற்றவரிடம் கோபம் கொள்ளாமல் காரியத்தை சாதிக்க முடியும் என்று தெரிய ஆரம்பித்துவிட்டது. நான் படிப்படியாக மாறிவிட்டேன். ஒரு புத்தகம் என்னை மாற்ற முடியுமா என்று கேட்கலாம். ஒருவேளை என் கோப குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே உள் மனதில் நான் தீர்மானித்திருக்கலாம். கார்னகீயை என்னுடைய சரியான நேரத்தில் சரியான மன நிலையோடு படிக்க நேர்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன்'' என்றார்.
அப்பா எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் ஆராயாமல் யோசிக்காமல் பேச மாட்டார். அதனால்தான் ''என்னுடைய சரியான நேரத்தில் சரியான மனநிலையோடு'' என்று சொல்லியிருக்கிறார். ஏனென்றால் அதே புத்தகத்தை நான் படித்தபோது என்னுள்ளே எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
''இம்பல்ஸிவ்'' என்று ஆங்கிலத்தில் சொல்லு வார்களே அந்த மாதிரியான குணம் எனக்கு. நினைத்த உடனேயே ஒரு காரியத்தை முடிக்க வேண்டும். சட்டென்று செயல்பட ஆரம்பித்துவிடுவேன். இரண்டு வாரங்களுக்கு முன்னிலிருந்து எனக்குள் இப்போது ஒரு மாற்றம். நானே எனக்கு விதித்துக் கொண்டிருக்கும் 'டெட்லைன்'களை செய்ய துவங்கு முன்னே, அல்லது எழுத, கச்சேரி வாசிக்க, கூட்டங்களில் பேச எனக்கு வாய்ப்புகள் வரும்போது ''இதை ஏன் செய்ய வேண்டும்'' என்று என்னை நானே கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறேன். பதில் தெளிவானால் தான் தொடர்கிறேன்.
இது மாதிரி கேள்வி கேட்க எனக்கு யார் சொல்லிக் கொடுத்தது? இரண்டு வாரங்களுக்கு முன்னால் தான் ஆரம்பித்தேன் என்பதால் வெகு சமீபத்தில் நான் படித்த அல்லது காதில் விழுந்த ஒன்றுதான் அதற்கு காரணமாக இருக்க வேண்டும் அல்லவா? அது என்னவாக இருக்கும்?
பதில் அடுத்த மாத பக்கத்தில்!! |