காதலினால் மானுடர்க்கு.......
காதலின் புகழ்

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கான முண்டாஞ் சிற்பமுதற் கலைக ளுணடாம்;
ஆதலினாற் காதல் செய்வீர் உலகத் தீரே!
அ·தன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்!
காதலினாற் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.

ஆதி சக்திதனை யுடம்பி கோத்தான்
அயன் வாணிதனை நாவி லமர்த்திக் கொண்டான்
சோதிமணி முகத்தினளைச் செல்வ மெல்லாஞ்
சுரந் தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனு மேந்தினான்! வானோர்க் கேனு
மாதரின்பம் போற் பிறிதோ ரின்ப முண்டோ?
காதல் செயு மனைவியே சக்தி கண்டீர்
கடவு ணிலை யவளாலே யெய்த வேண்டும்.

கொங்கைகளே சிவலிங்க மென்று கூறிக்
கோக் கவிஞன் காளிதாஸனும் பூஜித்தான்
மங்கைதனைக் காட்டினிலு முடன் கொண்டேகி
மற்றவட்கா மதிமயங்கிப் பொன்மான் பின்னே
சிங்கநிகர் வீரர்பிரான் தெளிவின் மிக்க
ஸ்ரீதரனுஞ் சென்று பல துன்ப முற்றான்.
இங்கு புவி மிசைக் காவியங்க ளெல்லாம்.
இலக்கிய மெல்லாங் காதற் புகழ்ச்சி யன்றோ?

நாடகத்திற் காவியத்திற் காத லென்றால்
நாட்டினர்தாம் வியப் பெய்தி நன்றா மென்பர்;
ஊடகத்தே வீட்டிலுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே காதலென்றா லுறுமுகின்றார்
பாடைகட்டி யதைக் கொல்ல வழி செய்கின்றார்
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெல்லாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி யிட ரெய்திக் கெடுகின்றாரே.

காதலிலே யின்பமெய்திக் களித்து நின்றால்
வளமான மன்னவர்போ ரெண்ணுவாரோ?
மாதருடன் மனமொன்றி மயங்கிவிட்டால்
மந்திரிமார் போர்த் தொழிலை மனங்கொள் வாரோ?
பாதி நடக் கலவியிலே காதல் பேசிப்
பகலெல்லா மிரவெல்லாங் குருவி போலே
காதலிலே மாதருடன் களித் வாழ்ந்தால்
படைத்தலைவர் போர்த் தொழிலைக் கருதுவாரோ?

மகாகவி பாரதி

© TamilOnline.com