உதவும் கரங்கள்: 2006-ஆம் ஆண்டின் முன்னேற்ற அறிக்கை (மேலும், கலாட்டா-2007 வள்ளல்கள் மற்றும் தொண்டர்களுக்குக் கோரிக்கை)
தமிழ்நாட்டில் பல இடங்களில் பெரும் சமூக சேவை செய்து வரும் உதவும் கரங்கள் இயக்கத்தின் சான் ஃப்ரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதி வட்டம் மீண்டும் இந்த வருடம் தன் வசந்த விழாவான கலாட்டா-2007 என்னும் கலை நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்த வருட விழாவில் திரட்டப்படும் நிதி, உதவும் கரங்களின் தளராமல் தொடரும் சமூக நற்பணி முயற்சிகளுக்கு அளிக்கப்படும்.
உதவும் கரங்களின் சேவையைப் பற்றி ஏற்கனவே அறியாதவர்களுக்கு அந்த இயக்கத்தைப் பற்றியும் அதன் சான் ஃப்ரான்ஸிஸ்கோ விரிகுடா வட்டத்தைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பு:
இந்தியப் பொருளாதாரம் மேன்மேலும் வெகுவேகமாக வளர்ந்து, செல்வம் கொழிக்கும் இந்தக் காலத்திலும் கூட, பலரும் மிகவும் தாழ்ந்த நிலையில் அல்லாடி, மற்றவர்களின் கருணையையே நம்பியுள் ளார்கள். தமிழ்நாட்டில் மட்டும் ஒவ்வொரு வருடமும் ஏழ்மை, எயிட்ஸ், மனநோய் போன்ற பல காரணங்களால் பல்லாயிரக் கணக் கானோர் உயிர் இழக்கிறார்கள். இன்னும் பல்லாயிரக் கணக்கான குழந்தைகளும் பெண்களும் வயதானோரும் அனாதை களாகத் தவிக்க விடப்படுகிறார்கள். 24 வருடங்களாக உதவும் கரங்கள் அத்தகைய வர்களுக்கு கை கொடுத்து, இருக்க இடமும் உண்ண உணவும் அளித்து உதவி வருகிறது. அடைக்கலம் தருவது மட்டுமல்லாமல், அத்தகைய குழந்தைகள் படித்து முன்னேரு வதற்காக ராமகிருஷ்ணா வித்யாநிகேதன் என்னும் உயர்நிலைப் பள்ளியும் நடத்தி வருகிறது.
சமீப காலமாக சுனாமியால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கானோருக்கு நிவாரணம் அளித்து வருகிறது. தமிழ்நாட்டுக் கடற்கரைப் பகுதிகளில் வீடு இழந்தோருக்கு மீண்டும் வீடு கட்டிக் கொடுக்கும் பணி மிக்க முன்னேற்றம் அடைந்து, 2006-இல் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. 72 வீடுகளுக்கான சாவிகளை அளிக்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது! இப்பணி இன்னும் தொடர உள்ளது.
1983-ம் ஆண்டு வித்யாசாகர் உதவும் கரங்கள் இயக்கத்தை நிறுவினார். அவர், தானே அனாதையாக இருக்கையில் பராமரிக்கப்பட்டதால் சமூகத்துக்கு நன்றி கூறும் வகையில் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். அவருடைய வாழ்க்கையின் முழு ஆர்வமும் இந்த இயக்கம்தான். இவர் பல மதிப்புக்குரியவர்களால் 'தந்தை தெரஸா' எனப் போற்றப் படுவது குறிப்பிடத்தக்கது.
உதவும் கரங்கள் இயக்கத்தின் நற்பணியைப் பற்றியும் பல பத்திரிகைகளும், செய்தித் தாள்களும் விவரித்து வாழ்த்தியுள்ளன. உதவும் கரங்களுக்கு அளிக்கப்படும் நன்கொடைகள் முழுவதுமே சேவைப் பணிகளுக்காகவே செலவழிக்கப்படுவது மிக முக்கியமான அம்சமாகும். அதனால், உலக முக்கியத்துவம் வாய்ந்த ISO அமைப்பு உதவும் கரங்களுக்கு சான்றிதழ் (certification) அளித்துள்ளது.
2006-இல் உதவும் கரங்களின் சேவை முன்னேற்றம் பற்றிய சில குறிப்புக்கள்:
துளிர் என்னும் அனாதை இல்லத்தில் 21000-ஆம் குழந்தைகள் இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்டு மீண்டும் அவர்கள் குடும்பத்தாரிடம் சேர்க்கப் பட்டுள்ளனர், அல்லது அங்கேயே வளர்ந்து கல்விச் செல்வம் பெற்றுள்ளனர்.
சென்னைக்கருகில் சுனாமியால் அழிவடைந்த ஒரு மீனவர் குப்பத்தில் 72 வீடுகளைக் கட்டி பிரசாந்தி என்ற பெயரில் நிறுவி புதுப்பித்துள்ளது.
தங்களிடம் தஞ்சமடைந்து வளர்ந்தோருக்கு திருமணம் நடத்தும் திருப்பணியில், 29-ஆவது திருமணத்தை நடத்தியுள்ளது.
உதவும் கரங்களின் சான் ஃப்ரான்ஸிஸ்கோ விரிகுடா வட்டம் 2003-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
உதவும் கரங்களைப் பற்றிய விழிப் புணர்ச்சியை வளர்க்கவும், சேவை செய்வ தற்குத் தேவையான நன்கொடை நிதி திரட்டவும் அதன் 150-க்கும் மேலான தொண்டர்கள் மிக உற்சாகத்துடன் பாடுபட்டு வருகின்றனர். அதற்காக அவர்கள் பல நிதி திரட்டும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்கள். அவற்றில் சில:
கலாட்டா 2004-2006, எஸ்.வி.சேகர் குழு மற்றும் கிரேஸி மோகன் குழுவினரின் நாடகங்கள், 'நாடக்' (Naatak) குழுவின் "ரகசிய சிநேகிதியே" நாடகம், 'க்ரியா' (Krea) குழுவின் மாயா மற்றும் கடவுளின் கண்கள் நாடகங்கள். இந்த நிகழ்ச்சிகள் உதவும் கரங்களின் சமூக சேவை முயற்சிகளுக்காக இதுவரை பெருமளவில் நிதி திரட்டியுள்ளன!
பல சிறப்பு நிகழ்ச்சிகள் நிறைந்த கலாட்டா நிகழ்ச்சி, ஒவ்வொரு வருடமும் பலப் பொன்மன வள்ளல்களின் நன்கொடை யாலும், தொண்டர்களின் முயற்சியாலுமே சாத்தியாகிறது. அதற்காக, உதவும் கரங்கள் நன்கொடைகளையும் தொண்டர்களையும் மேலும் வரவேற்கிறது.
வள்ளல் நிலை (sponsor level) அளவில் நன்கொடை வழங்குவதின் பலன்களையும், வழங்கும் முறையைப் பற்றியும் மேலும் அறிய கீழ்க் குறிப்பிடப்பட்டிருக்கும் மின்வலைத் தளங்களில் அளிக்கப்பட்டுள்ள விவரங்களின் படி, உதவும் கரங்கள் விரிகுடாப் பகுதி இயக்கத்தினரை அணுகுங்கள். தென்றல் வாசகர்கள் கலாட்டா-2007 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும், பங்கேற்று உதவுவதும், சமூக சேவையாக மட்டுமல்லாமல் குதூகல மான நிகழ்ச்சியால் களிப்பாகவும் அமையும்!
நன்கொடை அளிக்கவும் கலாட்டா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், உதவும் கரங்களுக்காகப் பணி புரியவும் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:
மின்வலைத் தளங்கள் (web sites): http://www.udavumkarangal-sfba.org http://www.galaata.org
கதிரவன் எழில்மன்னன் |