மருதம்.காம்
நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிற்றிதழ் களின் பங்கு குறிப்பிடத் தக்கது. சிற்றிதழ்கள் வெளியீட்டு, விநியோகச் சிக்கல்களைத் தாண்டி வாழ்வது கடினம் என்ற நிலையில் பெரும்பான்மையானவை கடல் மேற் குமிழிகள் போல் தோன்றி மறைந்திருக்கின்றன. பொருளீட்டும் நோக்கில் செயல்படும் இலக்கியச் செப்பிடு வித்தைக் காரர்கள் இடையில் மொழி, சமூகம், இலக்கியம் பற்றிய பொறுப்புணர்வுள்ள எழுத்தாளர்களையும், வாசகர் களையும் இணைக்கும் மையமாக இணையம் விளங்கத் தொடங்கி விட்டது. மணிக்கொடி, எழுத்து, என்று தொடங்கி, கணையாழி, காலச்சுவடு, சொல் புதிது என்று தொடர்ந்த சிற்றிதழ் மரபு இப்போது இணையத்திலும் படரத் துவங்கி உள்ளது. வட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் திண்ணை, பதிவுகள் என்ற வலையிதழ்களைத் தொடர்ந்து தாய்த் தமிழகத்திலும் சிற்றிதழ்கள் வலையேறத் தொடங்கி யிருக்கின்றன.

இவற்றுள் அண்மைக் காலத்தில் வலையேறிய இதழ்களில் குறிப்பிடத் தக்கது மருதம்.காம். அக்டோபர் 2, 2002-ல் தொடங்கப் பட்ட இந்த வலையிதழ் மாதம் இருமுறை புதுப்பிக்கப்படும். எழுத்தாளர் ஜெயமோகன் தொடர்புள்ள “சொல் புதிது” சிற்றிதழின் வலைவடிவமாகத் தொடங்கியது இந்த இதழ். பொருளாதார நெருக்கடிகளால் “சொல் புதிது” நிறுத்தப்படும் என்று ஜெயமோகன் அறிவித்த பின்னர், சொல் புதிதுவில் படைக்கப்பட்டு வந்த கருத்துகளுக்கு “மருதம்” நல்ல வடிகாலாக இருக்கும்.

“கலை இலக்கியம் அரசியல் வரலாற்றாய்வு அறிவியல் தத்துவம் ஆகிய தளங்களுக்கு அழுத்தம் தரக்கூடிய இதழாக இது இருக்கும். ஆன்மீகத் துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால் மதம் தவிர்க்கப்படும். மைய ஓட்டத்துக்கு வெளியே உள்ள ஆன்மீக நீரோட்டங்களை மட்டுமே கணக்கில் கொள்வோம்” என்றார் ஆசிரியர் சரவணன். “விரிவான தமிழாராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவரும். தமிழ் இசை, தமிழியக்கம் ஆகியவற்றை முன்னிறுத் தும். பொதுவாக தீவிரமான வாசகர்களுக்கு உரிய இதழாக இது இருக்கும்” என்று இதழின் அடிப்படைத் தன்மையை அறிமுகக் கடிதத்தில் விளக்கினார். தமிழாராய்ச்சியாளர் குமரிமைந்தன், வளவ துரையன், விமரிசகர் வேத சகாயகுமார், அறிவியல் எழுத்தாளர் தி ஸ்ரீனிவாசன், எழுத்தாளர் பாவண்ணன், போன்ற பலர் தொடர்ந்து எழுதுகிறார்கள்.

பேரா. நா. கா. பெருமாள் அவர்களின் நாட்டார் தெய்வங்கள் பற்றிய தொடர், தொன்மைக் காலத்திலிருந்து தொடர்ந்து வந்திருக்கும் நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகளும், அதன் தொடர்பான கலைகளும் அண்மைக்காலத்து “மேல்நிலை” ஆக்க முயற்சிகளில் திட்டமிட்டு அழிக்கப் படுகின்றன என்கிறார் இவர். “குறிப்பிட்ட சாதியினா¢ன் நாட்டார் கோவிலில் அச்சாதியினரே பூஜை செய்த நிலை மாறி, அதே சாதியினர் அக்கோவிலின் கருவறையில் செல்ல முடியாத நிலை வந்துவிட்டது” என்று குற்றம் சாட்டுகிறார்.

வேதசகாய குமார் எழுதி வரும் “வெங்கட் சாமிநாதனின் விமரிசனப் பயணம்” என்ற தமிழ் இலக்கிய விமரிசனம் பற்றிய தொடர் கட்டுரை, இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சி யில் விமரிசகர்கள் பங்கைத் தெளி வாக்குகிறது. “1948க்குப் பிறகு இலக்கியம் (தமிழைப் பற்றிய வரையில்) தேங்கிப் போனதற்குக் காரணம், வளத்தை அளவிடக் கூடிய தெம்பு படைத்த இலக்கிய விமர்சனம் தோன்றாமைதான் என்று எனக்குத் தோன்றுகிறது” என்ற க.நா.சு.வின் கருத்தை நாம் அசை போட முடிகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் ஆன்மீகம் குறித்த தன் சிந்தனைகளை வெளியிடுகிறார்.

சிற்றிதழ்கள் சில நேரங்களில் “கோட்டைக்குள் குத்து வெட்டுச் சண்டை” பாணியில் பிற சிற்றிதழ் களில் வரும் கருத்துகளைக் குறித்துத் தனி மனிதத் தாக்குதல்களில் இறங்கி விடுகின்றன. விமரிசனம் என்ற போர்வையில் சூரியா, “பதிவுகள்” வலை யிதழில் யமுனா ராஜேந்திரன் எழுதியதைக் காட்ட மாக எடுத்துக் கொண்டு அவரைத் தாக்கி எழுதியிருப்பது அலுப்புத் தட்டுகிறது. வெங்கட் சாமிநாதனின் பாணியிலேயே புதிய எழுத்துகளையும், புதிய எழுத்தாளர்களையும் அறிமுகப் படுத்துவதில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

சிற்றிதழ்களின் ஒரு தனித்தன்மை எழுத்து மட்டுமல்லாமல், இதழ் வெளியீட்டுக் கலையிலும் புதிய உத்திகளை அறிமுகப் படுத்துவதாகும். அதிலும், வலையிதழ் உத்திகள் வேகமாக மாறிக் கொண்டே வருகின்றன. இதில் இலக்கிய வலையிதழ்கள் பெரிதும் பின் தங்கி இருக்கின்றன என்றுதான் கூறவேண்டும். மருதத்தின் வலை வடிவமைப்பு குறைந்தது ஐந்தாண்டுகள் பின் தங்கி இருக்கிறது. வாசகர்களுடனான கருத்தாடல் வலையிதழ்களின் அச்சாணி. மருதத்தில் அது இன்னும் தொடங்க வில்லை என்பது தமிழ் இணையத் தொழில் நுட்பங்கள் இன்னும் தழிழகம் எங்கும் பரவவில்லை என்பதைக் காட்டுகிறதோ? தற்போதைக்கு, மருதம் சில எழுத்தாளர்களின் கருத்துகளை வெளிக் கொணரும் ஊடகமாக மட்டுமே இருக்கிறது. விளம்பரங்கள் ஏதும் இன்றி, புரவலர்களை நம்பி, இலக்கிய வளர்ச்சிக்கு வித்திடும் மருதம் போன்ற வலையிதழ்களின் வளர்ச்சி இலக்கிய ஆர்வலர்கள், குறிப்பாகப் புலம் பெயர்ந்த் தமிழர்கள் கையில் இருக்கிறது.

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com