வைத்த மாநிதிப் பெருமாள்
தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் இருக்கும் திருக்கோளூர் என்னும் திருத் தலத்தில் உள்ள இறைவனுக்கு "வைத்த மாநிதிப் பெருமாள்" என்று பெயர். பெருமாளுக்கு இப்பெயர் வரக் காரணமான நிகழ்ச்சி மிகவும் சுவையானது.

ஒரு காலத்தில் தன்னுடைய நவநிதி காரணத்தால் செருக்குற்றிருந்த குபேரன் பார்வதி தேவியின் சாபத்தால் தன் நவநிதியையும் இழக்கின்றான். அதே தேவியின் கருணையாலும் அறிவுரையாலும் திருக்கோளூரில் ஓடும் தாமிர பரணி நதியில் நீராடி அங்குள்ள இறைவனை வழிபட்டு சாபவிமோசனமும் பெறுகிறான்; இழந்த நவ நிதிகளை மீண்டும் பெறுகிறான். குபேரனுடைய நவ நிதிகளைக்

காப்பாற்றிய வரலாற்றின் அடிப்படையிலேயே இiறைவனும் "வைத்தமாநிதிப் பெருமாள்" என்று அழைக்கப்படுகிறார். இவ்வரலாற்றின் உண்மையை உணர்த்துவதுபோல் குபேரனின் நவநிதியைக் கள்ளர் கூட்டம் அபகரித்து விடாதிருக்க காவல் காக்கும் அடையாளமாக தூரத்தே தன் பார்வையைக் குவித்து நோக்குவதுபோல் கண்ணருகில் உள்ளங்கையைக் குவித்தவண்ணம் ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் கோலத்தில் எட்டடி உயரப் பெருமாளின் தோற்றம் பார்ப்பவரைப் பரவசப்படுத்தும் அற்புதக் கோலமாகும். நவநிதியை முகந்து அளக்கும் மரக்கால் (முகத்தல் அளவையின் பெயர்) ஒன்றும் அருகில் வைக்கப்பட்டிருக்கிறது.

ஆபத்துக் காலத்தில் எல்லாம் இழந்த நிலையில் "சர்வமும் அவனே" என்று சரணடைவோருக்கு சகாயம் செய்பவன் என்பதால் மூலவரின் குணவிசேஷம் ஆபத்சஹாயத்வம் எனப்படுகிறது. மூலவர் உருவம் கல்லினால் செதுக்கப்படாமல் வண்ணக் கலவையில் உருவாக்கப் பட்டிருக்கிறது.

நம்மாழ்வார் திருவாய்மொழியில் தம்மைத் தாயாகப் பாவித்து தம் மகள் பெருமாள் மீது கொண்ட மையலால் பெற்றார் உற்றார் எல்லாம் துறந்து பெருமாளைத் தேடி திருக்கோளூர் நோக்கி விரைந்ததாகப் பாடுகையில்

"உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன்சீர் வளம் மிக்கவன் ஊர்வினவி
திண்ணம் என்இளமான் புகுமூர் திருக்கோளூரே"

என்று தம் உள்ளக் கிடக்கையை நாயகி பாவத்தில் கூறுகிறார்.

நம்மாழ்வாரின் பிரதம சீடராகப் போற்றப்படும் மதுரகவி ஆழ்வார் பிறந்த ஊர் இத்திருக்கோளூர் என்பதும் இன்னொரு சிறப்பாகும். இதனால் இக்கோயிலில் மதுரகவி ஆழ்வாருக்கும் தனியாக ஒரு சன்னிதி அமைந்திருப்பது ஒரு விசேஷமாகும். இவை தவிர குமுதவல்லித் தாயாருக்கும் கோளூர்வல்லித் தாயாருக்கும் தனித் தனி சன்னிதிகள் உள்ளன.

குரு பகவானுக்குரிய தலமாகப் போற்றப்படுகிறது இத்தலம். "குரு பார்க்க கோடி நன்மை" என்பார்கள். நவநிதிகளைப் பாதுகாக்கும் பரமன் எழுந்தருளியுள்ள கோயில் பார்ப்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் கம்பீரமான தோற்றத்துடன் காட்சி அளிக்கின்றது என்றால் குருவின் பார்வைதான் காரணமோ!.

இங்கு வைகுந்த ஏகாதசியும், புரட்டாசியில் வரும் பிரம்மோத்சவமும் மிகச் சிறப்பான விழாவாகும். தாமிரபரணியின் தென் கரையிலுள்ள மற்றொரு கோயிலைத் தை மாத தரிசனமாகக் காணலாம்.

டாக்டர் அலர்மேலு ரிஷி

© TamilOnline.com