மனிதாபிமானம் மிக்கவர்; வாழ்க்¨யை நேசித்தவர்; காந்தீயக் கொள்கையில் நாட்டம் கொண்டவர்; கல்கி இதழை உருவாக்கியவர்; வரலாற்று நாவல் படைத்தவர்; இசைப்பிரியர்; தமிழ்ப்பாடலாசிரியர்; சிறந்த விமர்சகர்; பரதம், சிற்பம், ஓவியம் ஆகிய நுண்கலைகளைப் நேசித்து வியந்தவர். அவர்தான் கல்கி கிருஷ்ணமூர்த்தி என்னும் மாமனிதர். அவரது பேத்தியும் (திரு கி. இராஜேந்திரனின் மகள்) கல்கி இதழின் இன்றைய ஆசிரியருமான திருமதி சீதாரவி அவர்களை 'தென்றல்' பத்திரிகை வாசகர்கள் சார்பில் சந்தித்து மேலும் சுவையான பல செய்திகளைத் தெரிந்து கொள்வோம்.
திருமதி சீதாரவி அவர்களே! வைரவிழாக் கண்ட கல்கி இதழுக்கு முதலில் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள். பத்திரிகைக்கு 'கல்கி' என்று பெயரிட்டதற்கு காரணம் ஏதேனும் உண்டா?
கலிமுற்றிப்போய், கலியுகத்தின் முடிவில் உலகைப் புத்துயிர் பெறச்செய்ய திருமால் கல்வி அவதார மெடுப்பார் என்பதுபோல, பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் அல்லல்பட்டுக் கொண்டிருந்த இந்தியத் திருநாட்டை வாழ்விக்க, தமது எழுத்து பயன்பட வேண்டும் என்று கருதி அப் புனை பெயரை ஏற்றார் கிருஷ்ணமூர்த்தி. அவரது பெயரே பத்திரிகையின் பெயர் ஆயிற்று. தேசநலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஆரம்பிக்கப் பட்டது.
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் இளமைக்கால வாழ்க்கை பற்றிச் சுருக்கமாக.
கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பிறந்தது மாயவரம் அருகே புத்தமங்கலம் கிராமத்தில் நிலபுலன்களைக் கவனித்து வந்த தந்தையை இளம் வயதிலேயே இழந்தார். தமையனால் மாயவரத்திலும், திருச்சி யிலும் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார். வளர்ந்து கொஞ்சம் பெரியவனான பிறகே பள்ளியில் சேர்க்கப்பட்டதால் பள்ளிக்கூடத்தில் மற்றவர்களை விட வயதில் சற்று மூத்தவர். ஆனால் பள்ளிக்குச் செல்லும் முன்பே வீட்டிற்கருகிலிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டிருந்தார். படிப்பில் இவருக்கு ஆர்வம் அதிகரிக்கச் செய்தவர் வீட்டுக்கருகே வசித்த அய்யாசாமி அய்யர். வெற்றிலை வாங்க அனுப்பினால் ஒரு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு படித்தபடியே போய் வாங்கிக் கொண்டு வருவார். வரும் போது வெற்றிலையைத் தலைமேல் வைத்துக் கொள்வார். காரணம் இரண்டு கைகளால் புத்தகத் தைப் பிரித்து வைத்துக் கொண்டு படித்தப்படியே வருவாராம். காற்றில் வெற்றிலை பறந்து விழும். பின்னால் வரும் ஆடுகள் அவற்றைத் தின்றுவிடும். இதை என் பாட்டி சொல்லி நாங்கள் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். சிரித்திருக்கிறோம்...
அவருக்கு புராண இதிகாசங்களில் நல்ல ஈடுபாடு உண்டு. காலில் சலங்கை கட்டிக்கொண்டு, தமையனுடன் ஹரிகதை செய்திருக்கிறார். சாப்பிடும் போதும் கற்பனையில் சஞ்சரித்துவிடுவார். ''ருக்குமணி, நான் ரசம் சாதம் சாப்பிட்டேனோ?'' என்று பாட்டியைக் கேட்பாராம். 54 வயதே வாழ்ந்து மறைந்த அவருடன் வாழ்ந்த காலத்தைவிட, அவர் இல்லாமல் எங்கள் பாட்டி வாழ்ந்த காலம்தான் அதிகம். எங்களில் கெளரி ஒருத்தியைத் தவிர பேரன் பேத்திகள் யாருமே அவரைப் பார்த்ததில்லை. ஆனால் பாட்டி சொல்லிச் சொல்லி அவரைஎங்கள் வாழ்க்கையின் ஓர் அம்சமாகவே ஏற்றிருக்கிறோம்.
கல்கி அவர்கள் பத்திரிகை உலகில் அடியெடுத்து வைத்ததெப்படி?
முதலில் திருவிக நடத்திய 'நவசக்தி' பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். விடுதலைப் பேராட்டத்தில் இறங்கி பள்ளித் தேர்வைப் புறக்கணித்து சிறை சென்றவர். பிறகு நவசக்தியில் வேலையில் இருந்து கொண்டே ஆனந்தவிகடன் இதழுக்கு அவ்வப்போது எழுதி வந்தார். 'ஏட்டிக்குப் போட்டி' என்கிற இவரது கட்டுரை விகடன் ஆசிரியர் வாசன் அவர்களை மிகவும் கவர்ந்தது. தன் தாயாருக்கு அதைப் படித்துக்காட்டி மகிழ்ந்தார் வாசன் அவர்கள்.
நாவல் எழுதத் தொடங்கிய காலம் எது?
ஆனந்தவிகடனில்தான் 'கள்வனின் காதலி', 'தியாகபூமி' வந்தன. இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் திரைப்பட இயக்குநர் காலங்சென்ற திரு.கே.சுப்ரமணியம் அவர்கள் தியாகபூமியைத் திரைப்படமாக இயக்கிக் கொண்டிருந்தார். வாரவாரம் ஆனந்தவிகடனில் திரைப்பட ஸ்டில் களோடு தொடர்கதையை பிரசுரித்தார்கள். அக்காலத்தில் இது ஒரு மிகப் பெரிய விஷயமாகப் பாராட்டிப் பேசப்பட்டது.
கல்கி பத்திரிகை ஆரம்பித்தது குறித்து...
ஆனந்தவிகடனில் பணியாற்றிய போது சுதந்திரப் போராட்டத்தில் சுதந்திரமாக ஈடுபட முடியாத நிலையில் இருந்ததால் இவரும் இவரோடு கூட விகடன் விளம்பர இலாக்காவில் பணியாற்றிய திரு. சதாசிவமும் வெளியேறினார்கள். எம்.எஸ். சுப்புலட்சுமி நாரதராக நடித்த 'சாவித்திரி' எனும் திரைப்படத்தில் கிடைத்த வருமானத்தை மூலதன மாகவும், நிர்வாகம் விளம்பரம் இவற்றில் அனுபவ மிக்க சதாசிவத்தின் துணையையும் கொண்டு கல்கி எனும் இதழைத் தொடங்கினார்.
கல்கி அவர்களுக்கு பத்திரிகை நடத்துவதில் இருந்த கொள்கை பிடிப்பு வாழ்க்கையிலும் இருந்திருக்கிறது. கதர் ஒன்றை மட்டுமே அணியும் இவர் தன் திருமணத்தின் போது கதர் உடைதான் அணிந்து கொண்டாராம் இதனால் இவர் 'கதர் மாப்பிள்ளை' என்றும் அழைக்கப்பட்டார்.
நாவல் எழுதுவதென்பதே பெரிய விஷயம். சரித்திர நாவல் எழுதுவது மிகப்பெரிய விஷயம். கல்கியின் சரித்திர நாவல்களுக்கு இலக்கிய உலகில் தனியொரு சிம்மாசனம் உண்டு. இந்தத் துறையில் அவரது வெற்றி பற்றி...
நிறைய படிப்பார். மற்றவர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்வார். பல்லவர், சளுக்கியர், சோழர் வரலாறுகளையெல்லாம் விரிவாக ஆழமாகப் படிப்பார். அவர்களுடைய காலத்தில் இயற்றப்பட்ட இலக்கியங்களைத் தேடி எடுத்துப் படிப்பார். சிற்பம், ஓவியம், பரதசாஸ்திரம் எல்லாக் கலைகளையும் தெரிந்து கொள்வார். அஜந்தா ஓவியங்கள், மாமல்லபுரக் கோயில்கள், கோட்டைகள், அரண் மனைகள் எல்லாவற்றையும் நேரில் சென்று கண்டறிந்து வருவார். இத்தகைய ஆழ்ந்த அனுபவங் களை அடிப்படையாகக் கொண்டு பிறந்தவைதான் இவரது சரித்திர நாவல்கள். முதலில் எழுதிய வரலாற்று நாவல் பார்த்திபன் கனவு. அதையடுத்து வரிசையாக சிவகாமியின் சபதம், பொன்னியன் செல்வன் போன்றவை. இவரது அலைஓசை சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. அமரதாரா என்ற நாவலை எழுதிக் கொண்டிருந்தபோதுதான் அதை முடிப்பதற்குள் காலமாகிவிட்டார். அவர் மகள் ஆனந்தி அதை எழுதி முடித்தார்.
அவரது இசை அனுபவம் பற்றி...
இசையைப் பயின்றவரில்லை. ஆனால் ரசிக்கத் தெரிந்தவர். ரசிகமணி டி.கே. சிதம்பரநாதரின் நட்பால் கலைகளை ரசிக்கும் அனுபவங்கள் கிடைத்தன. நாட்டியக் கலை ஒரு கெளரவமான கலையாகக் கருதப்படாத காலகட்டத்தில் டி.கே.சி. அவர்கள்தான் அக்கலையின் மேன்மையை இவருக்கு உணர்த்தி, ஒர் உயர்ந்த ஒப்பற்ற பரதசாஸ்திரத்தை மேடையிலேற்றிப் பிரகாசிக்கச் செய்ய வேண்டியது நம் கடமை' என்று கல்கி அவர்களை உணர வைத்தார். எந்தக் கலையானாலும் அது மனித சமுதாயத்திற்கும், தேசநலனுக்கும் பயன்படவேண்டுமென்ற உன்னத சிந்தனை உடையவர் கல்கி. அதனால் நாட்டு பற்றுடைய பாடல்கள், பாரதியின் எழுச்சி மிக்க பாடல்கள் இவற்றிற்கு நாட்டியம் அமைக்கச் சொல்லி ராதா, ஆனந்தி இருவரையும் ஆட வைத்தார்.
தியாகபூமியில் 'தேச சேவை செய்ய வாரீர்' மற்றும் 'பாரத புண்ணிய பூமி' ஆகிய இரண்டு பாடல்கள் இவரால் இயற்றப்பட்டு சினிமாவில் இடம் பெற்றன. ஆனால் அவருடைய காலத்தில் அவர் கல்கியில் எழுதிய பாடல்களுக்குக் கீழ் இயற்றியவர் பெயராகத் தம்மை எங்குமே அவர் குறிப்பிட்டதில்லை. இதனால் இவரது பல பாடல்கள் இயற்றியவர் பெயர் தெரியாமலேயே பிரபலமாயின.
மெட்டுக்குப்பாட்டு எழுதுவார் இவர். ஹிந்தியில் சைகல் பாடிய 'டூட்டு கயே மன பீனா' (என் மனவீணை உடைந்து போயிற்று) என்ற பாடலின் மெட்டில்தான் இவருடைய அகில உலகப்புகழ் 'காற்றினிலே வரும் கீதம்' எழுதப்பட்டது. எம்.எஸ். அவர்கள் மீராவில் பாடியுள்ள இப்பாட்டு அழியாவரம் பெற்ற பாடல். தியாகையரின் 'உண்டே தி ராமுடு' என்ற பாடலின் மெட்டிலே அமைந்த பாடல்தான் இவரது 'வண்டாடும் சோலை தனிலே' என்ற ஹரிகாம்போதி ராகத்தில் அமைந்த பாடல்.
ஒரு தீபாவளி மலரில் கல்வி அவர்கள் இயற்றி பெயர் குறிப்பிடாமல் 'மாலைப்பொழுதினிலே' என்ற பாடல் பிரசுரமாகியிருந்தது. இப்பாடலை வெகுவாகப் பாராட்டிய ரசிகமணி டி.கே.சி. இத்தனை அழகான பாடலை இயற்றியவர் யார் என்று விசாரித்துத் தெரிந்து கொண்டராம். இப்பாடலை எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் இராகமாலிகையாகப் பாடி பிரபலப்படுத்தி, நாட்டிய நிகழ்சியில் இப்பாடல் நிலையான ஓர் அந்தஸ்தைப் பெற்றது. டி.கே. பட்டம்மாள் பாடி 'பூங்குயில் கூவிடும் சோலையில் ஒருநாள்' என்ற பாடலும், இன்பக் கனவொன்று துயலினில் கண்டேன்' என்ற பாடலும், 'குழலோசை கேட்டாயோ கிளியே' என்ற பாடலும், 'திரைக்கடல் தூங்காதோ' என்ற பாடலும் இவருடைய தமிழ்ப்பாடல் இனிமைக்குச் சான்றுகூறும்.
விமர்சகர் கல்கி பற்றி...
இசைக் கச்சேரி பற்றி கர்நாடகம் என்ற புனைப்பெயரில் இவர் விமர்சனம் எழுதுவது வழக்கம். அப்படி எழுதும் விமர்சனத்தைப் படிப்பவர்களுக்கு கச்சேரிக்குப் போகாமலேயே அந்தக் கச்சேரியை அரங்கில் அமர்ந்து கேட்டது போன்ற உணர்வு தோன்றும். பாடல்கள் பற்றிய விமர்சனத்தோடு ஒரு கச்சேரியில் வேணுநாயக்கர் வாசித்த மிருதங்கம் பற்றிய விமர்சனத்தில் 'வேணுநாய்க்கர் மிருதங்கம் வாசித்தார்; அவர் வாசித்ததும் பிரமாதம், வாசிக் காமல்விட்ட இடமும் பிரமாதம்' என்று எழுதி யிருப்பார். பாட்டின் ஒலி மட்டும் கேட்க வேண்டிய இடத்தில் மிருதங்கத்தைத் தட்டக் கூடாது. எங்கெல்லாம் தட்டக்கூடாது என்று தெரிந்து வைத்திருப்பதும் அவருடைய திறமைக்கு எடுத்துக் காட்டு என்பதைத்தான் இப்படிப் பாராட்டியிருப்பார்.
மதங்கள் குறித்த அவரது கருத்து...
சிவகாமியின் சபதம் என்ற நாவலில் 'மகேந்திர பல்லவ சக்ரவர்த்தி நரசிம்ம பல்லவனிடத்திலே மாமல்லபுரத்துப் பஞ்சரதங்களைக் காட்டி, ஒவ் வொன்றிலும் ஒவ்வொரு கடவுளைப் பிரதிஷ்டை செய்வோம். கடைசியாக உள்ள ஒரு மண்டபத்தை அப்படியே காலியாக வைத்திருப்போம். மேலை நாட்டில் புதிதாக ஒரு மதம் தோன்றி உருவாகிக் கொண்டிருக்கிறது. அதற்குரிய கடவுளை அங்கு பிரதிஷ்டை செய்யலாம்' என்று மகேந்திர பல்லவன் சொன்னதாகக் கற்பனையில் தன் எண்ணங் களைத்தான் கல்கி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
பெண் சமுதயாத்திற்கு அவருடைய பங்கு...
அவருக்கு திருமணமான போது மனைவி தனக்கு எழுதப்படிக்கத் தெரியாததற்காக வெட்கப் பட்டாராம். அப்போது கல்கி மனைவியிடம் ஆறு தலாக ''தவறு உன்னுடையது இல்லை. உன்னைப் படிக்க வைக்கவில்லை'' என்று சொல்லி, அதன் பின் அக்கம்பக்கத்திலுள்ள குழந்தைகளோடு வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மனைவியையும் அவர் களோடு சேர்ந்து எழுதப்படிக்கக் கற்றுக் கொள்ள உதவியிருக்கிறார். அவரும் ஆனந்தவிகடன் கல்கி படிக்குமளவுக்குத் தேறினார். 91வது வயதில் இறக்கும்வரை பூதக்கண்ணாடி உதவியுடன் கல்கி, விகடன், தினமணி படித்திருக்கிறார்.
கல்கியி ஆரம்பித்த புதிதில் ஒரு வாசகி ''பெண் களுக்கென்றே உங்கள் கல்கியில் சில பக்கங்களை ஒதுக்கக்கூடாதா?'' என்று கேட்ட போது கல்கியின் எல்லாப் பக்கங்களையும் பெண்கள் படித்துப் பயன்பெறவேண்டும் என்று சொல்லி அதற்குரிய தகுதியுடையதாகத்தான் பத்திரிகை வெளிவருகிறது என்றாராம்
பெண்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு சிறுகதை எழுதினார். 'கடிதமும் கண்ணீரும்' என்ற தலைப்பில் வெளிவந்தது.
தமிழிசை வளர்ச்சியில் கல்கியின் பங்கு:
கச்சேரி என்றாலே தெலுங்குக் கீர்த்தனை, சமஸ்கிருத கீர்த்தனை என்று பாடி முடிவில் துக்கடா என்ற பெயரில் ஒரு திருப்புகழோ ஒரு காவடிச் சிந்தோ பாடுவதுதான் மரபாக இருந்தது. கல்கி அவர்கள் அண்ணாமலைச் செட்டியாருடன் இணைந்து தமிழிசைச் சங்கம் தோன்ற ஆதரவும் உழைப்பும் தந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதல் மாநாடு கூடியது. அதில் தமிழ்ப்பாடல்களைக் கொண்ட முழுநேரக் கச்சேரி கள் இடம் பெற்றன. அந்தக் காலத்தில் அத்தகைய ஒரு தேவை இருந்தது. இப்போதெல்லாம் நிறைய தமிழ்ப்பாடல்கள் இடம்பெறுவதுடன் திருப்புகழில் பாடி முழுநேரக் கச்சேரி செய்யும் அளவுக்கு பலரும் முன் வருகின்றனர்.
பேத்தி என்ற உறவுமுறையில் அவர் வாழ்க் கையைப் பற்றிப் பாட்டியிடம் கேட்டும், இலக்கியங்களில் படித்தும், பிறர் கூறக் கேட்டும் நிறைய தெரிந்து கொண்டிருக் கிறீர்கள். கல்கியின் வெற்றிக்குப் பின்னால் உறுதுணையக இருந்ததாக நீங்கள் நினைப்பது எது?
காந்தியிடம் கொண்ட பக்தி, திரு.வி.க. வின் வழிகாட்டல், ஆசிகள், பாரதியின் எழுச்சி மிக்க பாடல்கள், சதாசிவத்தின் அலுவலக நிர்வாகத் திறமையின் ஊறுதுணை, ரசிகமணி டி.கே.சியின் ரசிகத்தன்மையின் பாதிப்பு, இராஜாஜியின் வாத்சல்யம் எம்.எஸ்ஸின் இசையும் பண்பும் விளைத்த மகிழ்ச்சி இந்தக் கூட்டணிதான் அவரது உண்மை யான பலம்.
எப்பேர்ப்பட்ட மகான்களின் கூட்டணி இது. எல்லோருக்கும் இதுபோன்ற மகத்தான வாய்ப்பு கிடைத்துவிடாது. கல்வி அவர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய பாக்கியம் என்றுதான் சொல்வேன்.
கல்கியின் இன்றைய ஆசிரியர் நீங்கள். உங்களுடைய பாதை...
மரபைக் காத்து வருவதில் கவனம் செலுத்து கிறோம். படிப்பவர் மனம் வக்கரித்துப் போக விடாமல் பண்பாட்டுடன் எழுதி வருவதை ஒரு கொள்கையாகக் கொண்டிருக்கிறோம். காலந்தோறும் மாற்றங்கள் நிகழ்வது என்பது இயல்பு. அதுதான் வளர்ச்சிக்கு அடையாளம். அதற்கேற்ப நாங்கள் மாற்றங்களை வரவேற்று நெறி பிசகாதபடி போய்க் கொண்டிருக் கிறோம். தொலைக்காட்சியுடன் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் பொழுது போக்கு அம்சத்தை விடமுடியாது. ஆனால் அதேநேரத்தில் நன்மையை நோக்கி, தேசநலனை நோக்கிக் போய்க் கொண்டிருக்கிறோம்.
மக்களும் பத்திரிகைத் தொழிலில் உள்ள கஷ்டநஷ்டங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். பத்திரிகை தர்மத்தையும் நிர்வாகத்தில் நேர்மையைக் கடைப்பிடிக்கும் எங்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவேண்டுமென்றால் காசு கொடுத்துப் பத்திரிகை வாங்கிப் படிக்கும் பழக்கம் வரவேண்டும். ஒருநாளைக்கு இரண்டு காப்பி அருந்துபவர்கள் ஓட்டலில் ஒரு காப்பிக்கு ஏழு ரூபாய் தரத் தயாராக இருக்கும்போது 7 நாட்களுக்கு ஒருமுறை ஆறே ரூபாய்க்குக் கிடைக்கும் தரமான ஒரு கல்கியை வாங்கிப் படிக்கலாமே.
முடிவுரை: இந்தியத் திருநாட்டின் ஓவியங்களும் சிற்பங்களும் கல்கி கிருஷ்ணமூர்த்தியை நினைவில் வைத்திருக்கும். வைரவிழாக்கண்ட கல்கி வார இதழ் மேலும் மேலும் தழைத்தோங்கி நூற்றாண்டுவிழாக் காண வாழ்த்துக் கள் கூறுவதுடன் தென்றல் வாசகர்கள் சார்பில் உங்களுக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதுடன் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
உரையாடியவர்: டாக்டர். அலர்மேலு ரிஷி |