பாரதி கலாலயாவில் மாதம் தோறும் ஒரு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் வழங்கப்படுகிறது. சென்ற மாதம் திருமதி.பத்மா ராஜகோபால் என்ற ஆசிரியை ஒரு மணி நேரம் இசைக்கச்சேரியும், ஒரு மணி நேரம் இசையைப் பற்றிய சொற்பொழிவும் நிகழ்த்தினார்.
வேங்கிட மஹி என்பவர் மத்யம பேதங்களை அடிப்படையாகக் கொண்டு, ராகங்களை இரண்டு பிரிவாகப் பிரித்து, 72 தாய் ராகங்களை அட்டவணைப் படுத்திக் கொடுத்திருக்கிறார். இந்த 72 ராகங்களில், 15வது மேளமாகிய மாயாமாளவ கெளளை என்கிற ராகம் கர்நாடக சங்கீதப் பயிற்சியில் முதற்பாடமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. மாயாமாளவ கெளளை ராகத்திலிருந்து பிறந்த ஜன்ய ராகங்கள் நூற்றுக்கும் மேல் உள்ளன. இந்த அடிப்படை ராகத்திலிருந்து வருகின்ற மற்ற ராகங்கள் எப்படி ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டு, இசைக்கலை எப்படி வளர்ந்திருக்கின்றது என்பது பற்றித்தான் அவர் சொற்பொழிவு நிகழ்த்தினார். கச்சேரியில் மாயாமாளவ கெளளை ராகத்தின் ஜன்ய ராகங்களிலிருந்து, முதலில் கீர்த்தனைகள் பாடினார். திருமதி.மைதிலி ராஜப்பன் அவர்கள் வயலினும், செல்வன்.அர்ஜுன் மிருதங்கமும் வாசித்து கச்சேரிக்கு மெருகூட்டினர். அதன் பிறகு சொற்பொழிவு நிகழ்ந்தது. சொற்பொழிவில் தெளிவாகப் பேசியப்பட்ட ராகங்களை, வீணையில் வாசித்துக் காட்டி நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்தார் திருமதி.ராஜலக்ஷ்மி ஐயர். வினாக்கள் எழுப்பியும், மலஹரி, சாவேரி போன்ற எளிய ராகங்களைப் பாடச் சொல்லியும் பார்வையாளர்களைப் பங்கு பெறச் செய்து சொற்பொழிவைக் கலகலப்பாக்கினார் பத்மா ராஜகோபால். மேலும் அவர் பேச எடுத்துக் கொண்ட ராகங்களில், கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை மற்றும் தமிழ் மரபுப் பாடல்களையும் பாடிக் காட்டினார்.
திரு.குமார் அவர்கள் அட்டவணையில் கொடுக்கப் பட்ட செய்திகளுக்கு விளக்கங்கள் கூறி உதவினார். மிகவும் ஆர்வத்துடன் கலைப்பயிற்சி செய்யும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் திட்டத்தின் முதல்படியாக, திருமதி.அனுராதா சுரேஷ், நாட்டியப் பள்ளி மாணவிகளான செல்வி.ஸ்மிரிதி, மற்றும் செல்வி.ரபி இருவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் திருமதி.அனுராதா சுரேஷ் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
பாகீரதி சேஷப்பன் |